R.Tharaniya / 2025 நவம்பர் 24 , பி.ப. 03:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
லக்ஸ்மன்
இனவாதமும் பௌத்த மேலாதிக்கமுமே ஆரம்பத்திலிருந்து இலங்கையின் இன
முரண்பாடுகளுக்கும் பெரும்பாலான பிரச்சினைகளுக்கும் மூல காரணம் என்பது
எல்லோருக்கும் வெளிப்படையாகத் தெரிந்ததே. இருந்தாலும் அதனை வெளிப்படையாக ஏற்றுக் கொள்வதற்கு அவர்களுக்கும்
துணிச்சல் இல்லை.
அதனாலேயே சுதந்திரமடைந்து 80 வருடங்களாகின்ற போதிலும், நிம்மதியற்ற இலங்கையே இருந்து வருகிறது.கடந்த வாரத்தில் உருவான திருமலை புத்தர் சிலை விவகாரத்தில் கருத்துவெளியிட்ட எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, “பிக்குகளைக் கொண்டே முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனா தமிழ் மக்களுக்கெதிராக அரசியல் செய்தார்.
திருகோணமலைப் பகுதியில் பிரதிஸ்ட்டை செய்யப்பட்ட புத்தர் சிலை
அகற்றப்பட்டமை தேசியப் பிரச்சினை ஆகவே சிலையை அதே இதத்தில்
வைக்கவேண்டும்” என்று தெரிவித்திருந்தார்.
இந்தக் கருத்தைத் தவறான கருத்தாகச் சுட்டிய பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் அவர், தமிழ் மக்களிடம் மன்னிப்புக் கோரவேண்டும் என்று கூறியிருந்தார்.
மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) தலைமையிலான தேசிய மக்கள் சக்தி
அரசாங்கத்தின் “இந்த நாட்டில் இனிமேலும் இன, மத வாதங்களுக்கு இடமில்லை. இனவாதிகளை சட்டம் சும்மா விடமாட்டாது.
இருக்கின்ற சட்டங்கள் போதாது என்றால் மேலும் சட்டங்களைக் கொண்டு வந்து இனவாதிகளை அடக்குவோம்” என்ற கருத்துக்கு சஜித்தின் கருத்து நேர் எதிரானது. திருகோணமலை புத்தர் சிலை விவகாரமானது தங்களால் சரியாகக் கையாளப்பட்டதாகவும் இனவாதிகளின் முயற்சிகள் முறியடிக்கப்பட்டதாகவும் தற்போது கதைகள் உலாவ விடப்படுகின்றன.
ஆனால், யார் முயற்சி செய்தாலும் அதன் பலாபலன் தமக்கே கிடைக்க வேண்டும் என்கிற முறைமையைத் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் கையாண்டிருப்பதையே காணமுடிகிறது.
வடக்கு கிழக்கானது தமது பாரம்பரிய தாயகம் என்று சொல்கின்ற தமிழர்களின் பிரதேசத்துக்குள்ளேயே இருக்கின்ற திருகோணமலையில் இந்த அரசாங்கத்தின் காலத்துக்குள் மாத்திரமல்ல கடந்த அரசாங்கங்களின் ஆட்சிக் காலங்களிலும் புத்தர் சிலைகள் பல முளைத்ததும் விகாரைகள் கட்டப்பட்டதும் நடைபெற்றே இருக்கிறது. ஆனால், அவற்றினை மக்கள் விடுதலை முன்னணி எதிர்த்ததில்லை.
அதே நேரத்தில், இந்தச் சிலை விவகாரத்தினைப் பார்த்தால், உள்ளுராட்சிச் சபைகள் அதிகாரத்தில் இருக்கின்ற வேளையில் திருகோணமலை நகர
சபையின் எல்லைக்குள் இந்தச் சிலை அனுமதியின்றி நிறுவப்பட்டிருக்கிறது.
சட்டத்திற்கு முரணான நடவடிக்கை உள்ளூர் அரசியல்வாதிகள், பொலிஸாரின் கவனத்திற்கும் கொண்டு வரப்பட்டபோது புத்தர் சிலை இரவோடிரவாக அகற்றப்பட்டிருக்கிறது.
அதனை அறிந்த தமிழ் மக்கள் சிறிது மகிழ்ச்சியடைந்தனர். அந்த மகிழ்ச்சி திருப்தியாக மாற்றமடைவதற்கு முன்னரே பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால பாதுகாப்பு காரணங்களுக்காகவே புத்தர் சிலை அகற்றப்பட்டது. அகற்றியவர்களால் மீண்டும் அதே இடத்தில் நிறுவப்படும் என்று நாடாளுமன்றத்தில் அறிவித்ததும் ஏமாற்றமாகிப் போனது. அவ்வாறானால் இப்போது அச்சிலை சட்டரீதியாகநிறுவப்பட்டிருப்பதாகவே கொள்ளலாம்.
அதே நேரத்தில், புத்தர் சிலை விடயத்தில் தமிழ், முஸ்லிம் மக்களுக்குத் தொடர்பில்லை என்று திருகோணமலை ஸ்ரீ சம்புத்த ஜெயந்தி போதிவர்த்தன விகாரையின் விகாராதிபதி கல்யாண வங்ச திஸ்ஸ தேரர் தெரிவித்திருந்தார்.
இந்தச் சிலை விவகாரத்தில் தமிழ் மக்கள் அக்கறையில்லாமல் இருக்கின்ற வேளையிலும் கூட அவர்களை இதற்குள் இழுத்துவிடும் செயற்பாடு நடைபெற்றிருக்கிறது என்பதனை இது காட்டுகிறது. அதே நேரத்தில், தமிழ் மக்களிடம் இருக்கின்ற ஆட்சிப் பொறுப்பைக் கொடுத்துவிட்டோம் அவர்கள் பார்த்துக் கொள்ளட்டும் என்கிற அசட்டை மனோநிலை இந்த விடயத்தில் தமிழ் மக்களின் கவனக் குறைவுக்குக் காரணமாக இருக்கலாம்.
அதற்கு ஜே.வி.பி. தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அல்லது ஜனாதிபதியின் கடந்த கால வார்த்தைகள் மீது கொண்ட நம்பிக்கை காரணமாக இருக்கலாம். ஆனால் அகற்றப்பட்ட சிலை மீண்டும் சட்ட ரீதியாகவே நிறுவப்பட்டமையானது சிறுபான்மை மக்கள் மத்தியில் கவலையையே ஏற்படுத்தியிருக்கிறது.
பொலிசாரால் அகற்றப்பட்ட அந்த சிலை அரசாங்க ஆசீர்வாதத்துடன் மீண்டும் அங்கு நிறுவப்பட்டமையானது எதனையும் சட்டரீதியாகச் செய்யுங்கள் என்று ஒரு தகவலை இனவாதிகளுக்குக்கொடுத்திருக்கிறது எனலாம். எதிர்க்கட்சித் தலைவர் சஜீத் பிரேமதாசா அரசியலமைப்பின் இரண்டாவது சரத்தைச் சுட்டிக்காட்டிப் பேசுகிறார். இனவாதம், மதவாதம் இனி இல்லை என்று சொன்ன தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அமைச்சர் பாதுகாப்பு காரணங்களுக்காகவே சிலை அகற்றப்பட்டதாகக் கூறி அதனை மீண்டும் நிறுவச் செய்கிறார்.
இது சஜித்தின் கருத்தை ஆதரித்து ஏற்றுக் கொண்டதாகவே பார்க்கப்படுகிறது.
மற்றொருவகையில் பார்த்தால், சிங்கள பௌத்த பேரினவாதத்திற்கு அரசாங்கம் அடிபணிந்தே சிலையை மீண்டும் நிறுவியிருக்கிறது என்று கொள்ளமுடியும். அதே நேரத்தில் அரசாங்கத்தின் கொள்கை தோற்றுவிட்டது.
இனவாதிகள் வெற்றிபெற்றிருக்கிறார் என்றும் கொள்ள முடிகிறது. மாறாக, சட்டரீதியற்ற முறையில் நிறுவப்பட்ட சிலையை பொலிஸார் அகற்றினர்.
அதற்கெதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டம், ஒழுங்கை நிலைநாட்டவேண்டிய பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் வாதாடியிருந்தால் அரசாங்கம் சொன்னதையே செய்கிறது என்று கொள்ள முடியும். ஆனால், நடைபெற்றிருப்பதோ வேறொன்று.
அத்துடன், மகிந்த கூட்டணியுடன் தொடர்புடையதே இந்த புத்தர் சிலை. அவர்களுடைய தரப்பினரே இந்தக் காரியத்தை நடத்தினர். பொதுஜன பெரமுன, ஐக்கிய தேசியக் கட்சி உள்ளிட்ட கட்சிகளின் ஏற்பாட்டில் நுகேகொடவில் நடைபெறவிருந்த பேரணிக்கு ஆதரவு திரட்டும் வகையில் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.
அந்தவகையில், எதிர்க்கட்சிகளின் இன, மதவாத சதி அரசியல் இது என்று
கூறும் அரசாங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கைகள் சரியானதா என்ற கேள்வி சிறுபான்மை மக்கள் மத்தியில் உருவாகியிருக்கிறது.
கடந்த காலத்தில் இனவாத அரசியலையே செய்து கொண்டிருந்த ஜே.வி.பி. தேசிய மக்கள் சக்தியாகத் தன்னை மாற்றிக்கொண்டபோது, முற்று முழுதாக மாறி விட்டது. என்று மனோநிலையை முழுமையாக மாற்றிக்கொள்ள முனைகின்ற தமிழ், முஸ்லிம் சிறுபான்மை மக்களும், தமிழ் மக்களின் உரிமை பற்றிச் சிந்திக்கின்ற சிறுதொகைச் சிங்கள மக்களும் இதிலிருந்தேனும் பாடம்
கற்றுக்கொள்ள வேண்டும்.
அதே நேரத்தில், ஒரு தலைமையின் கீழ் ஒரு கட்டளையாளரின் கீழ் மாத்திரமே தேசிய மக்கள் சக்தி இயங்க, செயற்பட வேண்டும் என்கிற நெறிமுறைக் கட்டுப்பாடுகள் அரசாங்கத்துக்குள் இருக்கிறதா? என்கிற கேள்வியை அவர்கள் கேட்டுக் கொள்ளவும் வேண்டும்.
அவ்வாறானால், பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைக் கொண்டுள்ள இடதுசாரிச் சிந்தனையாளர்களாக தம்மைக் காட்டிக்கொள்ள முனைகின்ற அரசாங்கம் பௌத்த மேலாத்திக்க வாதத்துக்குள் இருந்து வெளியில் வந்ததாக அறிவித்துக் கொள்வதற்குக் கிடைத்த வாய்ப்பினை தவறவிட்டிருக்கிறது, வீணடித்து விட்டது.
அவ்வாறானால், அது அரசாங்கத்தின் இயலாமையால் நடைபெற்றதா?, பலவீனமானதாக அரசாங்கம் இருக்கிறதா? என்பதே இப்போது ஆராயப்பட வேண்டும். இலங்கையைப் பொறுத்தவரையில் பௌத்த
தேசியவாதம், தமிழ்த் தேசியவாதம், இஸ்லாமியத் தேசியவாதம் என தங்கள் தங்கள் நிலைப்பாடுகளைக் கொண்டிருக்கின்ற சமூகங்கள் ஒவ்வொரு இனத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடவே செய்கின்றனர்.
ஆனால், சிங்களவர்களை அனுசரிக்கின்ற நிலைப்பாட்டைக் கொண்டிருந்தால் நாட்டில் வாழ முடியும் தங்களது இனத்தை நிலைநிறுத்திக் கொள்ள முடியும் என்ற கொள்கையை எடுத்துக் கொள்வதில் தமிழர்களுக்கு மனோநிலை இடம் கொடுப்பதில்லை.
இவ்வாறான நிலையில்தான் தங்களது தமிழ்த் தேசிய அரசியல்வாதிகள் எடுத்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியிலேயே முடிந்த கொண்டிருக்கின்ற சூழலை உணர்ந்து வெளிப்படுத்தப்பட்ட தோரணைகளைக் கண்ணுற்று தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்திருந்தனர். எது எவ்வாறானாலும், தமிழ் மக்கள் தங்களது இந்த முடிவினைத் தவறென்று எடுத்துக் கொள்வார்களா?, அப்படியே விட்டுவிடுவோம் என்று கொள்வார்களா? என்பது காலத்தின் கையில் விடப்பட்டதே.
இருந்தாலும், வடக்குக் கிழக்கில் நடைபெற்ற இனப் பரம்பல் குறைப்பு நடவடிக்கைகள், சிங்கள மயமாக்கல் குடியேற்றங்கள், பௌத்த மேலாதிக்க செயற்பாடுகள், தொல்பொருள் ஆதிக்கங்கள் நிறுத்தப்படப் போவதில்லை
என்பதனை மீண்டும் ஒருமுறை திடமாக உறுதிப்படுத்திய சம்பவமாகத் திருமலை சிலை நிறுவலைக் கொள்ளமுடியும் என்பதே நிச்சயம்.
ஆனாலும், ஆயுதத்தை ஆயுதத்தால் அணுகுகின்ற, இனவாதத்தை, இனவாதத்தால் அணுகுகின்ற நிலைப்பாடுகள் வலுத்துவருகின்ற இன்றைய சூழலில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு வேறுவழியுமில்லை என்று அமைதியடைந்து கொள்வதைத் தவிர வேறு வழியில்லை.
புத்தர் திருகோணமலையின் கடற்கரையோரப் பாதுகாப்பு வலயத்தில் தற்காலிகமாகக் குடியேற்றப்படவில்லை அவர் நிரந்தரமாகவே அமர்த்தப்பட்டார். அங்கு விரைவில் விகாரையும் அமையும் என்பது உண்மையானாலும், தமிழர்களைப் பொறுத்தமட்டில். இப்போது போன்று அப்போதும் அமைதியாகவே இருப்பர்.
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago