R.Tharaniya / 2025 ஒக்டோபர் 23 , பி.ப. 04:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
தெ.ஞாலசீர்த்தி மீநிலங்கோ
ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தின் (1965-70) காலத்தில், நெல் உற்பத்தியில் கவனம் செலுத்தப்பட்டதைக் கண்டோம். 1965-66ஆம் ஆண்டில் 45 மில்லியன் புஷல்களாக இருந்த நெல் உற்பத்தி, ஆண்டுதோறும் உயர்ந்து 1969-70ஆம் ஆண்டில் 77.4 மில்லியன் புஷல்களாக உயர்ந்தது.
இந்த அதிகரிப்புகள் முக்கியமாக ஏக்கருக்கான விளைச்சலின் அதிகரிப்பின் விளைவாகும். ஆனால் 1969-70 காலப்பகுதியில் உள்ளூர் உற்பத்தி நாட்டின் அரிசி தேவைகளில் 64% தன்னிறைவை ஏற்படுத்தியது.
1969இன் அரிசி இறக்குமதி (260,000 டன்) நாடு பல ஆண்டுகளாகக் கண்ட மிகக் குறைந்த அளவாகும். மேலும், 1970களின் நடுப்பகுதியில் இந்த உந்துதலைத் தக்க வைத்துக் கொள்ளவும், தன்னிறைவை அடையவும் முடியும் என்று எதிர்பார்க்கப்பட்டது.1970இல் சிறிமா தலைமையிலான ஐக்கிய முன்னணி ஆட்சிக்கு வந்த சிலகாலத்தில் உணவு உற்பத்தி வேகம் குறைந்தது.
தொழில் மயமாக்கலில் அதிகளவு அக்கறை கொண்டு, உள்நாட்டு உணவு உற்பத்தி முயற்சிகளுக்கு அரசாங்கம் வினைத்திறனான அணுகுமுறையைப் பின்பற்றவில்லை. இதன் விளைவாக, நெல் உற்பத்தி 1970இல் 77 மில்லியன் புஷல்களிலிருந்து 1971இல் 67 மில்லியனாகவும், 1972 மற்றும் 1973 இரண்டிலும் 63 மில்லியனாகவும் குறைந்தது.
ஏக்கருக்கு சராசரி மகசூல் 1970இல் 61.80 புஷல்களிலிருந்து 1973இல் 44.58 புஷல்களாக குறைந்தது. 1973ஆம் ஆண்டில், உலகளாவிய உணவுப் பற்றாக்குறை காரணமாக இறக்குமதி செய்யப்பட்ட அரிசி, மா ஆகியவற்றின் விலைகள் கிட்டத்தட்ட இரு மடங்காக அதிகரித்தன. இது அரசாங்கத்திற்குப் புதிய நெருக்கடியைக் கொடுத்தது.
அரிசியின் விலை பெப்ரவரி 1973இல் 1.00 ரூபாயிலிருந்து 1.60 ரூபாய் ஆகவும், ஒக்டோபரில் 2.00 ரூபாய் ஆகவும் அதிகரிக்கப்பட்டது. அதே நேரத்தில், மானிய முறையில் (ரேஷனில்) வழங்கப்பட்ட அரிசியின் அளவு பாதியாகக் குறைக்கப்பட்டது.
திறந்த சந்தையில் அரிசியின் விலை அதிகரித்ததால், குறிப்பாக நகர்ப்புற ஏழைகள், தோட்டத் தொழிலாளர் குடும்பங்களில் பட்டினி, நாளாந்த நிகழ்வாகியது. ஏழைகள் குப்பைத் தொட்டிகளில் என்ன பெற முடியும் என்பதைப் பார்க்கத் தொடங்கினர். மலையகப் பகுதியில் மக்கள் பட்டினியால் இறந்தனர்.
அரசாங்கம் அரிசிக்குப் பதிலாக மாற்றுப் பொருட்களுக்கு மாறுமாறு வலியுறுத்தியது. மரவள்ளிக் கிழங்கும் ஏனைய கிழங்கு வகைகளும் மக்களின் பிரதான உணவுகளாகின. அரசாங்கத்திடம் அரசி நெருக்கடிக்கு வேறு தீர்வுகள் இருக்கவில்லை.
இந்த நெருக்கடியின் மத்தியில் பிரதமர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க ‘உணவு உற்பத்திப் போரை” அறிவித்தார். மக்கள் தங்கள் பட்டினியை எதிர்த்து இந்தப் போரில் ஈடுபட்டு வெற்றி பெற்றனர். விளைச்சல் செய்யக்கூடிய ஒவ்வொரு அங்குல நிலமும் விதைக்கப்பட்டது.
மகா பருவகால நெல் உற்பத்தி 52.6 மில்லியன் புஷல்களாக இருந்தது. இது ஒரு மகா பருவகாலத்தில் உற்பத்தி செய்யப்பட்ட உச்சபட்ச அளவாகும். இதனால், முதல் விளைச்சலிலேயே, மக்களின் முயற்சிகளால் பட்டினியும் பஞ்சமும் தவிர்க்கப்பட்டது. அதைத் தொடர்ந்து,
வந்த சிறுபோக விளைச்சலும் 24.2 மில்லியன் புஷல்கள் விளைந்தது. 1973-74ஆம் ஆண்டில் இரண்டு பருவங்களுக்கும் விதைக்கப்பட்ட மொத்த பரப்பளவு இலங்கையின் விவசாய வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகமாகும். 1973-74ஆம் ஆண்டில் மொத்த விளைச்சல்; 76.8 மில்லியன் புஷல்களாக இருந்தது.
இதனிலும் முக்கியமான துணை உணவுப் பயிர்களின் விளைச்சலிலும் குறிப்பிடத்தக்க அதிகரிப்புகள் இருந்தன. மேலும் பயிர்செய்யப்பட்ட பரப்பளவு 50% அதிகரித்துள்ளது. இவை சிறிமாவோ அரசாங்கத்தின் முக்கிய சாதனையாகும்.
அரசாங்கம் கொள்கை சட்டங்களை இயற்றுவதன் மூலம் உற்பத்தியில் அதிகரிப்பைச் சாத்தியமாக்குவதற்குப் பங்களித்தது.
செப்டம்பர் 1972 இல் விவசாய உற்பத்தித்திறன் சட்டம் இயற்றப்பட்டது. இது விவசாய நிலத்தின் உரிமையாளர் அல்லது பயன்படுத்தினர். குறித்த நில நிர்வாகத்தின் தரத்தைப் பராமரிக்க உத்தரவிட்டது. தவறினால், அமைச்சர் நிலத்தைக் கையகப்படுத்தும் உத்தரவைப் பிறப்பிக்க முடியும்.
இது விவசாய உற்பத்தித்திறன் குழுக்களையும் அமைத்தது. அமைச்சரால் நியமிக்கப்படும் உறுப்பினர்கள் முக்கியமாக விவசாயத்தில் ஈடுபட்டுள்ளவர்களாக இருக்க வேண்டும்.
ஆனால், குத்தகைதாரர்கள் மற்றும் சிறு விவசாயிகளின் நலன்களைப் புறக்கணித்து, இக்குழு பெரும்பாலும் பணக்கார நில உரிமையாளர்கள் மற்றும் பெரிய விவசாயிகளைக் கொண்டதாக அமைந்தது என்பது விரைவில் தெளிவாகியது. சொத்துக்களை அகற்றும் உத்தரவுகள் தொடர்பாகவும், அவற்றுக்குக் குறிப்பிடப்படும் தகராறுகளை விசாரிக்கவும் விவசாய தீர்ப்பாயங்களை மேல்முறையீட்டு அமைப்புகளாகவும் இந்த சட்டம் இக்குழுக்களுக்கு அனுமதி வழங்கியது.
கடன் வழங்குதல், விவசாயத் தேவைகளை ஏற்பாடு செய்தல் முதல் சாகுபடி, சந்தைப்படுத்தல் வரை பல்வேறு செயல்பாடுகளை மேற்கொள்ளக்கூடிய விவசாய கூட்டுறவுச் சங்கங்களையும் அமைச்சர் அமைக்க முடியும்.
அடுத்த ஆண்டு, 1973ஆம் ஆண்டு விவசாய நிலச் சட்டம் என்ற
மற்றொரு சட்டம் இயற்றப்பட்டது.
இது 1958 ஆம் ஆண்டு நெல் நிலச் சட்டத்தில் விரிவான மாற்றங்களைச் செய்தது. இதில் மேட்டு நிலங்கள் மற்றும் நெல் நிலங்களையும் சாகுபடி குழுக்களின் அதிகார வரம்பிற்குள் கொண்டு வருவது அடங்கும். இறுதியாக, 1973ஆம் ஆண்டு அரசு நில விற்பனைச் சட்டமும் நிறைவேற்றப்பட்டது, இது அரசு நிலங்களை விற்பனை செய்வதற்கும், கொலனித்துவத் திட்டங்களில் குடியேறிகளுக்கு என்றென்றும் வாழ்வதற்குமான அனுமதியை வழங்குவதற்கும் வழிவகுத்தது.
ரேஷனில் விநியோகிக்கப்படுவதற்கு அதிக உத்தரவாதம் அளிக்க, நெல்லின் கொள்வனவு விலையை அரசாங்கம் தொடர்ந்து அதிகரித்து வந்தது. ஆனால், அது முற்றிலும் தோல்வியடைந்தது). 1970க்குப் பிறகு ஒவ்வொரு ஆண்டும், ஒரு வருடத்திற்குள் ரூ.14 இலிருந்து ரூ.34 ஆக உயர்ந்த போதிலும், அரசாங்கத்தின் கொள்முதல்கள் குறைந்தன.
விவசாயிகள் நெல்லை அரசுக்கு வழங்காமல் தனியாருக்கு வழங்கவே விரும்பினர். விரக்தியடைந்த அரசாங்கம் அப்போது நடைமுறையில் இருந்த அவசரநிலையைப் பயன்படுத்தி நெல்லை ஏகபோகமாக வாங்குபவராக மாற முயன்றது. ஜூலை 1973இல் புதிய விதிமுறைகள் அனுமதி இல்லாமல் நெல் கொண்டு செல்வதைத் தடை செய்தன. இந்த ஏகபோக கொள்முதல் முயற்சி தோல்வியடைந்தது.
1974ஆம் ஆண்டில், 76.7 மில்லியன் புஷல் பயிரில் 20.8 மில்லியன் மட்டுமே அரச கொள்வனவு திட்டத்தின் கீழ் நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு வழங்கப்பட்டது. ஆனால் அனுமதி இல்லாமல் அரிசியைக் கொண்டு செல்ல முடியாததால், திறந்த சந்தை விலை உயர்ந்தது. இதனால் இந்த படுதோல்விக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டியிருந்தது. 1975ஆம் ஆண்டில் இவ்விதிமுறைகள் இல்லாமல் செய்யப்பட்டன.
1975ஆம் ஆண்டில் நெல் உற்பத்தி 55.3 மில்லியன் புஷல்களாகக் குறைந்தது. அக்காலப்பகுதியில் நிலவிய பாதகமான காலநிலை முக்கிய காரணமாகும். 1975ஆம் ஆண்டில், கடுமையான வறட்சி, சாதகமற்ற வானிலை காரணமாக மகா பருவ காலத்தில் (1974-75) விளைச்சல் 52.7% வீழ்ச்சியும், சிறுபோகப் பயிர்ச்செய்கையில் 16.3% வீழ்ச்சியும் ஏற்பட்டது.
வறட்சி முக்கிய நெல் வளரும் பகுதிகளைப் பாதித்தது, இதனால் அந்த ஆண்டு நெல் உற்பத்தியில் கணிசமான குறைவு ஏற்பட்டது. அடுத்த ஆண்டு (1976), நெல் உற்பத்தி மீண்டும் 60 மில்லியன் புஷல்களாக அதிகரித்தது. 1977 ஆம் ஆண்டில் நெல் உற்பத்தி 80.4 மில்லியன் புஷல்களாக புதிய உயரத்தை எட்டியதன் மூலம் மேலும் முன்னேற்றம் ஏற்பட்டது. துணைப் பயிர்கள் பயிரிடப்படும் பரப்பளவும் கணிசமாக அதிகரித்தது.
1960களின் இறுதியில், 70% நெல் வயல்களில் மேம்படுத்தப்பட்ட புதிய நெல் வகை பயிரிடப்பட்டது. இது அதிக விளைச்சலைத் தந்தது. 1970 முதல், புதிய இன்னும் அதிக விளைச்சலைத் தரும் நெல் வகைகள் அறிமுகப்படுத்தப்பட்டன, மேலும் அவை பழைய நெல் வகைக்கு மாற்றாக வந்தன.
இந்தப் புதிய வகைகள் உள்ளூர் மரபணு வகைகளைப் பயன்படுத்தி உள்நாட்டில் உருவாக்கப்பட்ட சேர்க்கைகள் ஆகும். அவை, உகந்த உர பயன்பாட்டின் நிலைமைகளின் கீழ் மிக அதிக விளைச்சலைத் (ஏக்கருக்கு 120-140 புஷல்) தரும் திறன் கொண்டவை. இருப்பினும், கள நிலைமைகளின் கீழ், புதிய நெல் வகைகளின் செயல்திறன் ஏமாற்றமளித்தது. இதுவும் அரிசி நெருக்கடிக்கு முக்கிய காரணமானது.
4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago