Thipaan / 2016 நவம்பர் 01 , மு.ப. 04:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
தெய்வீகன்
மைத்திரி - ரணில் அரசாங்கத்தின் இரண்டாவது வரவு - செலவுத்திட்டம் எதிர்வரும் 10 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. வழமை போலவே இம்முறையும் அதனை நோக்கிய எதிர்பார்ப்புக்கள், அரசியல் கருத்தாடல்கள் மற்றும் அதனை ஒரு கருவியாக வைத்து மேற்கொள்ளக்கூடிய பேரம்பேசுதல்கள் என்று சகல விடயங்களும் அரசியல் மட்டங்களில் பல்வேறு அதிர்வுகளை ஏற்படுத்தத் தொடங்கிவிட்டன.
2016 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் கடந்த 2015 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டபோது, அது 107 பெரும்பான்மை வாக்குகளால் வெற்றியடைந்தது. ஜே.வி.பியினர் உட்பட 52 பேர் இந்த வரவு செலவுத்திட்டத்துக்கு எதிராக வாக்களித்தாலும் 159 உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்து வெற்றிபெறச் செய்தனர்.
இலங்கையின் வரலாற்றிலேயே முதல் தடவையாக ஆளும் கட்சியால் கொண்டுவரப்பட்ட பட்ஜெட்டுக்கு எதிர்க்கட்சித் தலைவர் ஒருவர் ஆதரவாக வாக்களித்தார் என்ற சாதனையும் நாடாளுமன்றத்தில் நிலைநாட்டப்பட்டது.
ஆம்! கடந்த பட்ஜெட்டின்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது ஐக்கிய தேசியக் கட்சியுடன் சேர்ந்து ஆதரவாக வாக்களித்தது. நல்லாட்சி அரசாங்கத்தின் மீது தாங்கள் வைத்திருக்கும் அபரிமிதமான நம்பிக்கையின் வெளிப்பாடாக தாங்கள் இந்த ஆதரவை வழங்குவதாகவும் தமிழ் மக்களின் நலன்களில் அக்கறை கொண்டு இந்த அரசு தங்களது வாக்குறுதிகளைக் காப்பாற்றும் என்ற நம்பிக்கை தமக்கு உண்டென்றும் பட்ஜெட் ஆதரவுக்கான காரணங்களாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவிப்பு செய்தது.
தற்போது அடுத்த பட்ஜெட்டும் நாடாளுமன்றத்தில் அரங்கேறவுள்ள நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடந்த ஆண்டு பட்ஜெட் மீது சத்தியம் செய்த நம்பிக்கைகளை கொஞ்சம் சுய மதிப்பீடு செய்வது அவசியம் என்ற கருத்தினை இந்தப் பத்தி பேச விளைகிறது.
இலங்கையில் திறந்த பொருளாதாரக் கொள்கையை உருவாக்கிய பிதாமகனாகவும் மேற்குலகின் செல்லக் குழந்தையாகவும் தவழ்ந்து வளர்ந்து வருகின்ற ஐக்கிய தேசியக் கட்சியின் பட்ஜெட் என்றைக்குமே ஓர் எதிர்பார்ப்பை ஏற்படுத்தவல்லது. ஐக்கிய தேசியக் கட்சியின் பொருளாதார நோக்கு உள்நாட்டில் மட்டுமல்ல வெளிநாடுகளிலும் பரந்த எதிர்பார்ப்புக்களை ஏற்படுத்துவது வழக்கம். எதிர்க்கட்சியாக இருக்கும்போதுகூட ஆளும் கட்சியின் பட்ஜெட் தொடர்பான ஐ.தே.கவின் கருத்துக்கள் பல்வேறு தரப்பின் கவனத்தை ஈர்ப்பவையாக இருந்திருக்கின்றன.
அந்த வகையில் இம்முறையும் ஐ.தே.கவின் பட்ஜெட் அப்படியான பாரம்பரிய எதிர்பார்ப்புக்களை ஏற்படுத்தவுள்ளதற்கு அப்பால், உள்நாட்டு வெளிநாட்டு சிக்கல்களையும் அழுத்தங்களையும் எவ்வாறு சமாளிக்கப் போகிறது அல்லது சமரசம் செய்யப் போகிறது என்பது தொடர்பிலும் ஒரு பொதுக் கரிசனை உருவாக்கியுள்ளது.
பட்ஜெட் நெருங்கி வருகின்ற இந்தக் காலப்பகுதியில் தோட்டத்தொழிலாளர்களின் சம்பள உயர்வுப் பிரச்சினை மலையகத்தில் எழுந்து, தற்போது சற்றுத் தணிக்கப்பட்டிருந்தாலும் மறுபுறத்தில் பட்ஜெட்டை மையமாக வைத்து ஜே.வி.பியினர் மேற்கொள்ளும் எதிர்ப்புகள் பெரு வீச்சில் கிளம்பியிருக்கின்றன.
நாட்டின் உட்கட்டுமானம், சுகாதாரம், அபிவிருத்தி உட்படப் பல அத்தியாவசிய தேவைகள் குறித்து எந்த அக்கறையும் கொள்ளாமல் மக்களின் மீது மேலும் மேலும் சுமைகளை ஏற்படுத்தும் ‘வற்’ வரி போன்றவற்றை அறிமுகப்படுத்துவதுடன் வெறும் கண்துடைப்புக்காகப் பாதுகாப்பு செலவீன குறைப்பு போன்ற திருத்தங்களை மாத்திரமே இம்முறை பட்ஜெட்டில் அரசாங்கம் செருகியிருக்கிறது என்று ஜே.வி.பி குற்றம்சாட்டியுள்ளது. (நாட்டின் பாதுகாப்புத்துறைக்கான ஒதுக்கீடான 30 ஆயிரத்து 200 கோடி ரூபாயிலிருந்து வெறும் ஆயிரத்து 800 கோடி ரூபாய் மாத்திரமே குறைக்கப்பட்டுள்ளது)
இந்த பட்ஜெட் உருப்படியான உள்ளடக்கமும் இல்லாத ஒன்று என்றும் இது பட்ஜெட் அல்ல; வெறும் பகட்டு மட்டுமே என்றும் ஜே.வி.பி பொரிந்து தள்ளியுள்ளது.
அரசாங்கத்தினைப் பொறுத்தவரைக்கும் இதுபோன்ற வழக்கமான எதிர்ப்புகளை சந்திப்பது ஒருபுறமிருக்க, தங்களைப் பொருளாதார ரீதியில் தொடர்ச்சியாகத் தாங்கிவரும் சர்வதேச அமைப்புக்களான நாணய நிதியம், அபிவிருத்தி வங்கிகள் மற்றும் கடனளிக்கும் நிறுவனங்களையும் திருப்தி செய்துகொண்டு, ஆட்சியை தாங்கிக்கொண்டிருக்கும் மேற்குலகத்தையும் திருப்திப்படுத்திக் கொண்டு, உள்நாட்டுக் கூத்துகளுக்கும் அரிதாரம் பூசிக்கொண்டுதான் பட்ஜெட்டை தயாரிக்கவேண்டிய நிலையில் உள்ளது.
இவை எல்லாவற்றுக்கும் மேலாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உட்பூசல்கள் வேறு மகிந்த தலைமையிலான அணியின் கூடாரத்திலிருந்து மைத்திரியை நச்சரித்துக்கொண்டே இருக்கின்றன. அவர்கள் சமாளிக்கக்கூடிய விடயங்கள் பட்ஜெட் இல்லாவிட்டாலும் பட்ஜெட்டில் பப்படமாகிவிடும் அபாயம் உள்ளது.
இந்தக் குழப்பங்களின் பின்னணியில், எல்லோரையும் திருப்திப்படுத்தும் பட்ஜெட் என்பது சாத்தியமாகப்போவதில்லை என்று தெரிகிறது.
ஆக, இந்தப் புள்ளியில் கடந்த தடவை தமிழ்த் தரப்பிலிருந்து பட்ஜெட்டுக்கு வழங்கப்பட்ட ஆதரவையும் அதன் மீதான மீள்வாசிப்புக்களையும் சற்று ஆழமாக எடுத்து நோக்குவது இங்கு அவசியமாகிறது.
ஏனெனில், இன்றைய நிலையில் தமிழர் தரப்பின் ஏக பலமான அரசியல் சக்தியை அவ்வப்போது இப்படியான தருணங்களில் எடைபோட்டுக்கொள்வதும் அதனை நோக்கிய வியூகங்களைச் சரிபார்த்துக்கொள்வதும் மிகவும் முக்கியமானது.
கூட்டமைப்பு கடந்த தடவை பட்ஜெட்டுக்கு நிபந்தனையற்ற தனது ஆதரவை வழங்கியதற்கான காரணங்களை கேட்டபோது, புதிய ஆட்சியின் கீழ் வடக்கு, கிழக்குக்குப் பாரிய அபிவிருத்தித் திட்டங்களை அரசாங்கம் மேற்கொள்ளப்போவதாக உறுதியளித்திருப்பதாகவும் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 65 ஆயிரம் வீடுகளைக் கட்டுவதற்கான பணிகளை முன்னெடுக்கப்போவதாகவும் எல்லாவற்றுக்கும் மேலாகப் போரினால் பாதிக்கப்பட்ட தமிழர் பிரதேசங்களை மீளக்கட்டியெழுப்பும் வகையில் வடக்கில் பொருளாதார மாநாடு ஒன்றை நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
அபிவிருத்தி என்ற ஒற்றைச்சொல்லின் கீழ் அரசாங்கம் ஓதுகின்ற வழக்கமான மந்திரங்களைக் கேட்டுச் சரணாகதியடைந்துவிடாமல் பட்ஜெட்டைப் பயன்படுத்தி அரசியல் கைதிகளின் விடுதலையை நிபந்தனையாக முன்வைக்குமாறு எதிர்கட்சித் தலைவர் சம்பந்தனிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
அதனை முற்றாக நிராகரித்த சம்பந்தன், அரசாங்கத்துடன் இணைந்து தமிழர் தரப்பு நீண்ட தூரம் பயணம் செய்யவேண்டியுள்ள நிலையில் நாட்டின் மிகமுக்கியமான பட்ஜெட் விடயத்தில் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று முடிவெடுத்து உறவுகளை முறித்துக்கொள்ளக்கூடாது. நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று அவர் பதிலளித்திருந்தார்.
இவற்றின் பின்னணியில் இம்முறை பட்ஜெட்டுக்கு முன்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நம்பிக்கை வைக்குமாறு கோரிய தமிழர் தேச அபிவிருத்தி மற்றும் அரசியல் முயற்சிகள் ஆகியவை எவ்வளவு முன்னேற்றமடைந்திருக்கின்றன என்பதைச் சீர்தூக்கிப் பார்க்க வேண்டியது அவசியமாகிறது. ஒரே வருடத்தில் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டு, தமிழர் தேசமெங்கும் தேனும் பாலும் பாய்ந்தோடவேண்டும் என்று இங்கு யாரும் எதிர்பார்க்கவில்லை. ஆனால், எவ்வளவு விகிதாசாரத்தில் இந்த முன்னேற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன என்பதைப் பகுத்தாய்வது இங்கு அவசியமாகும்.
தற்போதைய அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் தமிழர் தேசம் முழுவதும் மக்களுக்கான அபிவிருத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதிலும் பார்க்க, இராணுவ மையங்களும் பௌத்த விகாரைகளும்தான் அதிகம் கட்டப்பட்டுள்ளன என்பது பல்வேறு தரப்பினராலும் குற்றம்சாட்டப்பட்டுள்ள விடயமாகும்.
“சுமார் 47 வீதமான பட்ஜெட்டை தனது குடும்ப உறுப்பினர்களின் கட்டுப்பாட்டிலிருந்த அமைச்சுக்களுக்கு ஒதுக்கிய மஹிந்தவின் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்திகள்கூட மைத்திரியின் காலத்தில் தமிழர் பிரதேசத்தில் மேற்கொள்ளப்படவில்லை” என்று அண்மையில் நண்பர் ஒருவர் உரையாடும்போது குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், “தமிழர் தரப்பின் ஆதரவினால் ஆட்சி பீடமேறிய மைத்திரியும் ரணிலும் உலகமெல்லம் சுற்றியடித்துச் சிறிலங்காவில் முதலீடுகளை மேற்கொள்ளுமாறு கோருகிறார்கள். ஆனால், கொன்றொழித்த இனத்தின் உறவுகளுக்கு இதில் ஏதாவது நன்மையைச் செய்யவேண்டும் என்ற எந்த கரிசனையையையும் வெளிக்காட்டுவதாகத் தெரியவில்லையே” என்றார். இந்த ஆதங்கத்தில் உண்மை இல்லாமலும் இல்லை.
கடந்த பட்ஜெட்டிலிருந்து இந்த பட்ஜெட் வரையான காலப்பகுதியில் இடம்பெற்ற தமிழர் சார்ப்பு விடயங்களை எண்ணிப்பார்த்தால், அவை விரல் மடித்து எண்ணக்கூடிய நிலையில்கூட இல்லை. இந்த யதார்த்தத்தை ஆளும் மைத்திரி அரசாங்கமும் அதற்கு ஆதரவளித்துக் கொண்டிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இனியும் புரியாத மாதிரி நடிக்க முடியாது.
மஹிந்த ஆட்சியிலிருந்து தப்பித்துக்கொண்டதே பெரிய விடயம் என்ற மிகப்பெரிய விம்பத்தின் நிழலின் அடியில் தமிழர் தரப்பின் அனைத்து தேவைகளும் அனைத்து உரிமைகளும் அனைத்து அபிலாசைகளும் அசட்டை செய்யப்படமுடியாது.
இப்படிப்பட்ட, இழுத்தடிக்கப்படுகின்ற, அரசியல் பெருவெளியில் இம்முறை பட்ஜெட்டின்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு என்னவாக இருக்கப்போகிறது?
அரசியலைப்புச் சீர்திருத்த சட்டமூலத்தை பட்ஜெட்டுக்கு முன்பாக நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்போவதாக முன்னர் அறிவித்திருந்தபோதும், அது தற்போது பட்ஜெட்டுக்கு பின்னரே சமர்ப்பிக்கப்படவுள்ளது. ஆக, பட்ஜெட்டுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவை பெற்றுக்கொள்வதற்காக, இந்த அறிவிப்பினை அரச தரப்பிலிருந்து மிகச்சுலபமாக மேற்கொள்ளக் கூடியதாக உள்ளது. ஏனெனில், எந்தக் கேட்டுக்கேள்வியும் இன்றி அதனை ஏற்றுக்கொள்ளக்கூடிய மெத்தனப்போக்குடன் தமிழர் தரப்புள்ளது என்று அவர்களுக்கும் அது தெரிந்திருக்கிறது.
ஆக, இம்முறை பட்ஜெட்டுக்கு முன்பாகத் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு கடந்த பட்ஜெட்டிலிருந்து சாதித்த விடயங்களைக் கூறாவிட்டாலும் பரவாயில்லை. அடுத்த பட்ஜெட்டுக்கு ஆதரவளிப்பதாக இருந்தால் என்ன அடிப்படையில் அந்த ஆதரவை வழங்கப்போகிறது என்று மக்களுக்கு தெளிவு படுத்துமா? அல்லது, ஆட்சித்தரப்புக்கள் அவ்வப்போது அரங்கேற்றும் பட்ஜெட் போன்ற அரசியல் அலங்காரத் திருவிழாக்களில் அரிதாரம் பூசிச்சென்று அவர்களின் தாளத்துக்கு ஆடிவிட்டுவரும் பொம்மைகள்போலத்தான் தமிழர் தரப்பு தொடரப்போகிறதா?
5 hours ago
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago
7 hours ago