Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 மார்ச் 27 , பி.ப. 07:59 - 1 - {{hitsCtrl.values.hits}}
-ஜெரா
கடந்த 23ஆம் திகதி, ‘சர்வதேச வன தினம்’ கொண்டாடப்பட்டது. சமநேரத்தில் இலங்கையில் வன அழிப்புக்கு எதிரான கோஷங்களும் கேட்டுக்கொண்டிருந்தன. இந்தநாட்டில் அபிவிருத்தியின் பெயரால், குடியேற்றங்களின் பெயரால், பல்லாயிரக்கணக்கான ஏக்கர் காடுகள் அண்மை வரையில் அழிக்கப்பட்டிருக்கின்றன. அவ்வாறு அழிக்கப்பட்டிருக்கும் பாலை மரமொன்று, நேர்காணல் ஒன்றைத் தருகிறது.
வணக்கம் பாலையே,
வணக்கம்! என் வாழ்வில் முதல் தடவையாக, மனித வணக்கத்தை கேட்கின்றேன். எனக்கு உங்களைப் போல, வணக்கம் சொல்ல முடியாது. என் கிளைகள் அனைத்தும் உங்களுக்கு வணக்கம் தெரிவிக்கின்றன. (மரத்தின் கிளைகள் சமநேரத்தில் ஆறுதலாக அசைகின்றன).
உங்களைப் பற்றிய சிறு அறிமுகத்தைத் தரமுடியுமா?
நான் பாலை. இற்றைக்கு, மூவாயிரம் வருடங்களுக்கு முன், நிலவிய சங்ககாலம் எனும் பண்பாட்டு ஆக்ககாலத்தில் எனக்குப் பெயர் கிடைத்ததாக என் பாட்டனார் சொல்லித் தந்திருக்கின்றார். அதாவது, அந்தக் காலத்தில் வாழ்ந்த மனிதர்கள், தாம் வாழ்ந்த ஐவகை நிலத்துக்கும் அது கொண்டிருக்கும் சூழல், அவர்களின் தொழில் அடிப்படையில் மருதம், முல்லை, குறிஞ்சி, நெய்தல், பாலை எனப் பெயரிட்டனர்.
அதில் முல்லைக்கும் குறிஞ்சிக்கும் இடையில் என் பாலை நிலம் இருந்திருக்கின்றது. அது வரண்ட நிலமாக இருக்கும். அங்கே தான், எங்கள் பரம்பரை ஆரம்பமானது. எனவே, அந்த நிலத்தின் பெயர், என் பெயரும் ஆனது. உங்களைப் போல நாம், தனி அடையாளங்களை விரும்புவதில்லை. அதனால் தான், என் பாட்டனாரின் பெயரும் பாலை; எனது பெயரும் பாலை.
ஆம், நீங்கள் நன்றாக வளர்ந்திருக்கின்றீர்கள். பிரமிப்பாயிருக்கின்றது. உங்களிடம் இருக்கின்ற சிறப்பென்று எதனைக் குறிப்பிடுவீர்கள்?
நல்ல வினா. கட்டாயம் தேடலுள்ளோர் நலனுக்காகப் பதிலளித்தே ஆக வேண்டும். எங்கள் இனத்தவர் அனைவரும் கிட்டத்தட்ட 40-80 அடி உயரம் வரை வளர்வோம். எமது கால்பகுதியின் (அடி மரத்தை தொட்டுக் காட்டுகின்றார்) சுற்றுவட்டம் 1-4 மீற்றர்கள் வரை கொழுக்கும்.
ஆனால், நீங்கள் குறிப்பிடுவதை விட சிறுபாலைகளையும் நான் பார்த்திருக்கின்றேனே?
ஹா..ஹா (சிரிக்கின்றார்). உண்மைதான். நீங்கள் பார்த்திருப்பது உவர் நிலப்பரப்பில் வாழும் பாலைகளை. அங்கு கிடைக்கும் நீர்த்தன்மைக்கு ஏற்ப, அந்த நிலத்தில் வதியும் அனைத்துமே பறட்டை என்கிற அழகு; அவை சுந்தரமாகத்தான் வளரும். ஏன், நீங்கள் ‘தக்கன பிழைத்தல்’ பற்றிப் படித்ததில்லையா நண்பரே? ஆகவே, நாங்களும் அங்கு கட்டையாக இருப்போம்.
உங்களில் எத்தனை வகையான பிரிவுகள் உண்டு எனச் சொல்வீர்களா?
நாம் பிரதானமாக ஐந்து வகையினராகப் பிரிந்துள்ளோம். உலக்கைப் பாலை, குடசப்பாலை, வெட்பாலை, முசுக்கைப் பாலை, ஏழிலைப் பாலை. இவை ஒவ்வொன்றும் வளரும் சூழல், அதன் தன்மை மற்றும் தனித்துவங்களால் தம்மைத் தனிவகை என அடையாளப்படுத்திக் கொண்டன.
உங்களைச் சந்தித்த நபர்களைப் பற்றிக் குறிப்பிட முடியுமா?
ஆம். என் தந்தையர் காலத்தில் சில விஞ்ஞானிகள் அவரைச் சந்தித்ததாகச் சொல்வார். அவர்கள் எங்கள் இனத்துக்கு Manilkara hexandra என்ற புதுப் பெயரை (இரசாயனப் பெயரைக் குறிப்பிடுகின்றார்) சூட்டினராம். ஆனால், அது எம் மத்தியிலோ, உங்கள் மத்தியிலோ எடுபடவில்லை என்றே குறிப்பிட வேண்டும். கடைசி வரைக்கும் அது ஆய்வு கூடங்களுக்கு மட்டும் பயன்படும் பெயராயிற்று.
அதற்குப் பிறகு, பலர் என்னைத் தொட்டுத் தடவியிருக்கின்றனர். தறிப்பதற்காக வளம் பார்த்திருக்கின்றனர். பலர் மழைக்கும் வெயிலுக்கும் போருக்கும் தங்கிப் போயிருக்கின்றனர். பல ஆயிரக்கணக்கானோர் என் மீது ஏறி அட்டகாசம் புரிந்து, என்னைத் துன்பப்படுத்தி என் பிள்ளைகளைப் பறித்துச் சாப்பிட்டு இன்பம் அடைந்திருக்கின்றனர். நான் இலட்சக்கணக்கான என் பிள்ளைகளை உங்களுக்கு சாப்பிட தந்துவிட்டு, உங்களைப் பார்த்துக் கொண்டிருக்கின்றேன்.
உங்கள் பிள்ளைகளைப்பற்றி சொல்லுங்களேன்?
எங்களிலும் ஆண்-பெண் பேதமிருக்கின்றது. நான் பெண். ஆண்கள் காய்ப்பதில்லை. நாங்கள் தான் காய்களைப் பிரசவிப்போம். கிட்டத்தட்ட 2-4 சென்றி மீற்றர்களில் எம் காய்களின் அளவிருக்கும். மார்ச், ஏப்ரல் மாதங்களில் பூப்பூத்து, மே, ஜுன் மாதங்களில் கனிகளைத் தருவோம். அது எமது பரம்பரை விருத்தியைப் பேணுவதற்கானதாக இருக்கும். அந்தக் கனிக்குள் ஒரே ஒரு விதையிருக்கும். அது விதையாகி விழும் நிலத்தில் முளைக்க வாய்ப்பிருந்தால் முளைத்து எம் வம்சம் பெருகும்.
எனவே தான், அதனை என் பிள்ளை என்கின்றேன். என் பிள்ளைகள் சாப்பிடப்படும்போது, நல்ல இனிப்பாக இருப்பார்களாம். சாப்பிடுபவர்கள் எமக்குக் கீழ் இருந்து கதைக்கும் போது, சொல்லக் கேள்விப்பட்டிருக்கின்றேன். பிள்ளைகளின் இள இரத்தம் பால் நிறமானவை. ஒட்டும் தன்மை கொண்டது. சாப்பிடும்போது உதடுகள் ஒட்டிக்கொள்ளும். என்ன செய்ய? எம்மை அழிப்பவர்க்கு எம்மால் காட்டக் கூடிய ஒரேயோர் எதிர்ப்பு அது மட்டும்தான்.
நீங்கள் உலகத்தில் எங்கெல்லாம் பரந்து வாழ்கின்றீர்கள்?
இப்பொழுது நீங்கள் பார்ப்பது போல இந்த நாட்டின் (இலங்கையை குறிப்பிடுகின்றார்) வடக்கு, கிழக்கு, ஹம்பாந்தோட்டை ஆகிய பகுதிகளில் அதிகமாக எம் இனத்தவர்கள் வாழ்கின்றனர்.
இதைவிட இந்தியா குறிப்பாகத் தமிழகம், வங்காளதேசம், தாய்லாந்து, மியான்மர், கம்போடியா, சீனா, வியட்நாம் ஆகிய நாடுகளில் வாழ்ந்து வருகின்றோம். இப்படிப் பல நாடுகளில் வாழ்ந்தாலும் நாம் வெள்ளைக்காரர் வருகைக்குப் பின்னர், ஒருநாளும் சந்தோஷமாக இருந்ததில்லை.
ஏன் அப்படிச் சொல்கின்றீர்கள்?
பிரித்தானியர்கள் எனப்பட்ட வெள்ளைக் காரர்கள், இலங்கைக்கு வர முதல் இங்கு வாழ்ந்த மக்கள் எமக்கு நன்மையே புரிந்தனர். எம்மை வெட்டவில்லை. நாம் அவர்களுக்குப் பாதுகாப்பாகவும் உதவியாகவும் இருந்தோம்.
திடீரென இந்த நாட்டுக்குள் நுழைந்த வெள்ளையர்கள் எமது பலத்தைக் கண்டுபிடித்து, எம்மைப் பாலம் கட்டப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டார்கள். அந்தக் காலத்தில் அவர்களால் அமைக்கப்பட்ட தொங்கு பாலங்களுக்கு, வைரமான எமது தேகம் தேவைப்பட்டது. எம்மோடு எம் சகோதர இனமான முதிரைகளையும் பயன்படுத்தினர். என் பாட்டனார் பல இலட்சம் பேர் படுகொலை செய்யப்பட்டனர்.
எம் சிறப்பைப் பார்த்து வெள்ளைக்கார அதிகாரிகள் எம்மை Ceylon Steel or Ceylon Iron wood என செல்லப் பெயரிட்டு அழைத்தனர். அவர்களால் தொடக்கி வைத்த அழிவுப் பயணம், இன்றும் எம் உயிருக்கு அச்சுறுத்தலாகவே இருக்கின்றது.
இப்போது எந்த வகையான பிரச்சினைகளை எதிர்கொள்கின்றீர்கள்?
நம் இருப்பு, மனிதர்களுக்கு மிக அவசியம் எனப் பல்வேறு விஞ்ஞான விளக்கங்களுடன் மனித மாணவர்களுக்குப் பாடசாலைகளில் கற்பிக்கப் படுகின்றது. ஆனால், அவர்கள் நம்மை அழிப்பதை மட்டும் நிறுத்துவதாகத் தெரியவில்லை. பெருகிக்கொண்டே போகும் தேவைகளுக்காக எம்மை துரத்தி துரத்தி வெட்டுகின்றனர். இப்போது பாருங்கள், இந்த வீதியில் நின்றிருந்த எத்தனை ஆயிரம் எம்மவர்கள் தறிக்கபட்டு தெற்குப் பக்கமாக இழுத்துச் செல்லப்படுகின்றார்கள்.
நானும் இன்னும் சில நாள்களில் தறிக்கப்பட்டு விடுவேன். இந்த வீதியின் கரையில் நான் நிற்பதால் என்னை அடியோடு கிளப்புவதற்கான திட்டம் போட்டாயிற்று. சில வேளைகளில் நான் முதலும் கடைசியுமாய் உங்களுக்கு வழங்கிய நேர்காணல் வெளிவர முன்பே படுகொலை செய்யப்பட்டு விடுவேன். எனக்கான மரணம் முறிகண்டிப் பிள்ளையாரைக் கடந்து, மிக அருகில் வந்து விட்டது. எல்லா மனிதர்களையும் காக்கும் முறிகண்டியானால் கூட, என்னைக் காப்பாற்ற முடியாது என்பதுதான் விந்தை.
கடைசியாக ஒரு கேள்வி; வழமையானதுதான். உங்கள் வாழ்நாளில் மறக்க முடியாத தருணம் ஒன்றைக் குறிப்பிடுங்களேன்?
இரண்டு சம்பங்களை என் மரணத்தின் பின்பும் மறக்க முடியாது. கடுமையான எரிப்பந்தங்கள் வானிலிருந்து விழுந்து கொண்டிருந்த நாளில், மனிதன் ஒருவன் என் பாதுகாப்பில் பதுங்கிக் கிடந்தான். அவனை நோக்கி வரும் எரிப்பந்தங்களை நான் தாங்கி அவனைக் காப்பாற்றினேன். ஆயினும், அவனின் அவசரம் அவனை எரிப்பந்தின் தாக்குதலுக்கு உட்படுத்தியது. மோசமாகக் காயப்பட்டான். என் மடியில் கிடந்து அழுது அரற்றினான். என்னால் என்ன செய்ய முடியும். அவன் துடிதுடித்து மரணித்தான்.
பின்னொரு நாள், என்னில் ஏறி என் பிள்ளைகளை ஆசையாய் சாப்பிட்ட பாடசாலை சிறுவன் ஒருவன் தவறிக் கீழே விழுந்தான். வலிதாங்காது துடித்தான்; கதறினான். பல மனிதர்கள் வந்து வேடிக்கை பார்த்தனர். காப்பாற்றினால் சட்டச் சிக்கல் வருமாம். அம்புலன்ஸ் வரும் வரைக்கும் அனைவரும் காத்திருந்தனர். அம்புலன்ஸ் வர அவனின் உயிரும் என் மடியிலேயே பிரிந்தது. இரண்டு சந்தர்ப்பங்களிலும் நான் மனிதர்களுக்காக கண்ணீர் வடித்திருக்கின்றேன். அதனை எப்போதும் மறக்க முடியாது.
நன்றி பாலையே
நான் உங்களுக்கு நன்றி சொல்ல மாட்டேன். நீங்கள்தான் எமக்கு நன்றி உடையவராய் இருக்க வேண்டும்.
1 hours ago
2 hours ago
2 hours ago
3 hours ago
கணேசன் செல்வநாயகம் Saturday, 30 March 2019 05:11 PM
காலத்தின் தேவையை புதுமையான முறையில் சிந்திக்க வைத்துள்ளீர்கள் ! நன்றிகள்
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
3 hours ago