2026 மார்ச் 24, செவ்வாய்க்கிழமை

ஆஸி. தேர்தலில் தமிழர்களின் நிலை என்ன?

Thipaan   / 2016 ஜூன் 21 , மு.ப. 03:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

தெய்வீகன்

அவுஸ்திரேலியா எனும் கண்டம், இலங்கையைப் பொறுத்தவரை மிக முக்கியமான கண்டமாகும். புலம்பெயர்ந்த சிங்கள மக்கள் மிகச்செறிவாக வாழும் நாடு அவுஸ்திரேலியாவாகும். அதிலும், மெல்பேர்ன் நகரத்தில் சிங்கள மக்களின் செறிவு எவ்வளவு என்பதை, மெல்பேர்ன் கிரிக்கெட் மைதானத்தில் இலங்கை கிரிக்கெட் அணி விளையாடும்போது பறக்கும் இலங்கையின் தேசியக் கொடிகளை வைத்தே கணக்கிட்டுக்கொள்ளலாம். அந்த வகையில், அவுஸ்திரேலியாவில் இலங்கையின் ஈடுபாடு மிகவும் விசாலமானது.

அதேவேளை, அவுஸ்திரேலியாவில் ஈழத்தமிழர்களை எடுத்து நோக்கினால், வரலாற்று ரீதியாக மிகப்பெரிய மாற்றங்கள் எதனையும் உண்டுபண்ணுமளவுக்கு அவர்கள் அரசியலில் எந்த செல்வாக்கையும் செலுத்தவில்லை. எழுபதுகளிலேயே புலம்பெயர்ந்த எத்தனையோ ஈழத்தமிழ் புத்திஜீவிகள், கல்விமான்கள் ஆகியோர் அவுஸ்திரேலிய சமூகத்தை கட்டியெழுப்புவதில் உதவிபுரிந்துள்ளனர்.

வளம் மிக்க புலம்பெயர்ந்த சமுதாயமாக வளர்ந்திருக்கின்றனர். ஆனால், இந்த வளர்ச்சிகளை எல்லாம் எவரும் அரசியல் ரீதியாக பயன்படுத்துவதில் நாட்டம் காட்டவில்லை. பிற்காலத்தில், அவ்வப்போது மேற்கொண்ட சிறிய சிறிய முயற்சிகளும் தனிப்பட்ட பிரபலத்துவத்தை பெற்றுக்கொடுத்தனவே தவிர, ஒரு கூட்டு வெற்றியை உருவாக்கவில்லை. புலம்பெயர்ந்த தமிழ்மக்களின் ஏகோபித்த ஆதரவுடனும் ஆணையுடனும் வெற்றியைப் பெற்றுக்கொள்ளும் சக்தியை இந்தப் போட்டிகள் கொண்டிருக்கவில்லை.

இன்னும் கூர்மையாக அவதானித்தால், பல்லின மக்கள் வாழும் அவுஸ்திரேலியாவில், அரசியல் ரீதியான வெற்றி ஒன்றை ஈட்டுவதற்கான பாரிய வாக்குப்பலத்தை ஈழத்தமிழர்கள் கொண்டிருக்கவில்லை. எண்ணிக்கையில், கனடா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் புலம்பெயர்ந்துள்ளது போல் அல்லாமல், ஒப்பீட்டளவில் மிகச்சிறிய குழுமமாகவே அவுஸ்திரேலியத் தமிழர்கள் வாழ்வதால், இந்த எண்ணிக்கை தமிழருக்கான பிரதிநிதிகளை தெரிவுசெய்யக்கூடியளவு பலத்தைக் கொண்டிருக்கவில்லை.

2011ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவில் மேற்கொள்ளப்பட்ட சனத்தொகை கணக்கெடுப்பின்படி, சுமார் ஒரு இலட்சம் இலங்கையர்கள் பதிவுசெய்யப்பட்டிருக்கின்றனர். இவர்கள் அனைவரும் தாங்கள் இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள் என்று கூறியுள்ளனர்.

அவுஸ்திரேலியாவில் பிறந்து வளர்ந்தவர்கள் இந்த எண்ணிக்கையில் வரமாட்டார்கள். அந்தவகையில், உண்மையாகவே இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள், இன்னும் சில ஆயிரங்களால் அதிகரித்திருப்பதற்கு இடமுண்டு. இவர்களில் எத்தனை பேருக்கு அவுஸ்திரேலியாவில் வாக்குரிமை உள்ளது என்பதும் அடுத்த கேள்வியாகும்.

இன்னும் இரண்டு மாதங்களில் - அதாவது, ஓகஸ்ட் மாதம் - ஐந்தாண்டுக்கு ஒரு தடவை நடைபெறும் நாடளாவிய சனத்தொகைக் கணக்கெடுப்பு நடைபெறவுள்ளது. இந்த கணக்கெடுப்பின் பிரகாரம், அவுஸ்திரேலியாவிலுள்ள இலங்கையர்களின் பிந்தைய எண்ணிக்கை தெரியவரும்.

இந்த மாதிரியான ஒரு பின்னணியில்தான், அவுஸ்திரேலியாவின் இரட்டைத் தேர்தலை சந்திப்பதற்கு தமிழ்மக்களும் தயாராக உள்ளனர்.

அவுஸ்திரேலியாவிலுள்ள இலங்கையர்கள் மத்தியில் எழுதப்படாத ஒரு விதி உண்டு. அதாவது, சிங்கள மக்கள், கூடுதலாக லிபரல் கட்சியின் பக்கமும் தமிழ் மக்கள் லேபர் கட்சியின் பக்கமும் சாய்ந்து கொள்வர் என்பதுதான் அந்தச் சம்பிரதாயம். இது ஓரளவுக்கு பின்னாளில், அதாவது எண்பதுகளுக்குப் பின்னர் உருவான விதி என்றும் கூறலாம். தாயகத்தில் ஏற்பட்ட அரசியல் வேட்கைகளின் அடிப்படையில், புலம்பெயர்ந்த தேசங்களிலும் இடதுசாரி கொள்கைகளில் தமிழ் மக்கள் அதிகம் நாட்டம் காண்பித்தமை, இந்தச் சம்பிரதாயம் பின்பற்றப்பட்டமைக்கு பொதுவான காரணமாகும். அத்துடன், அகதிகள் விவகாரத்துக்கு இடதுசாரிகளாலேயே சாதகமான தீர்வினை பெற்றுக்கொள்ளமுடியும் என்ற நம்பிக்கையும், தமிழ் மக்கள் இயல்பாகவே லேபர் கட்சிக்குத் தங்களது ஆதரவை வழங்கியமைக்கு இன்னொரு காரணம்.

இதில் உள்ள மிகப்பெரிய முரண்நகை யாதெனில், புலம்பெயர்ந்த தமிழ் மக்களில் பெரும்பாலனவர்கள், அகதியாக வந்து நாட்டின் குடியுரிமையை பெற்றுக்கொள்ளும்வரைதான் இடதுசாரிக்கொள்கைக்கான தமது ஆதரவினை முன்னிறுத்துகிறார்களே தவிர, அந்தந்த நாட்டின் குடிமக்களாக அங்கிகரிக்கப்பட் பின்னர் - பொருளாதார ரீதியாக வளம் பெற்ற பினனர் - நடைமுறை ரீதியில் பரிபூரண லிபரல் விழுமியங்களை விழுங்கிக்கொண்டவர்களாவே வாழ்கின்றார்கள். புலம்பெயர்ந்த தமிழ் மக்களின் பல்வேறு வாழ்வியல் சட்டங்களிலும் இந்த ஒற்றுமையைக் காணலாம். ஆனால், இதனை அவர்கள் ஏற்றுக்கொள்ளாமலேயே தமது அரசியல் கொள்கையாக இடதுசாரித்துவத்தை முன்னிறுத்திக்கொள்வர்.

அவுஸ்திரேலியாவைப் பொறுத்தவரை, கடந்த ஐந்து வருடங்களில், கணிசமானளவு தமிழ்மக்களின் ஆதரவு லேபரிலிருந்து கிறீன் கட்சி எனப்படும் பசுமைக் கட்சிக்குச் சென்றுள்ளமை கவனிக்கப்படவேண்டியது. அது வாக்களிப்பு ரீதியாக பிரதிபலிக்கப்படுகிறதா இல்லையா என்பதற்கு அப்பால், கொள்கை ரீதியில் அந்த மாற்றம் காணப்படுகிறது. இந்த மாற்றம் இந்தமுறை முக்கியமாக கவனிக்கப்படவேண்டியதாகும்.

லேபர் கட்சிக்கு தொடர்ச்சியாக ஆதரவை வழங்கி, இடதுசாரி தத்துவங்களுக்கு ஆதரவளிப்பதாக எண்ணிக்கொண்டாலும் இன்றைய காலகட்டத்தில், உலகளாவிய ரீதியில் எந்த நாட்டை எடுத்துக்கொண்டாலும் லேபருக்கும் லிபரலுக்குமான கொள்கை வேறுபாடுகள் எனப்படுவது மிகச்சிறிய நூலிழைதான். முதலாளித்துவ ஆட்சியதிகாரங்களின் கைகளில் உலகப்பொருளாதாரத்தின் அச்சாணிகள் அகப்பட்டிருக்கும் இந்த நூற்றாண்டில், இடதுசாரி தத்துவங்கள் எல்லாம் பெரும் சவால்களை எதிர்நோக்கி வருகின்றன.

இந்த நிலையில், அவுஸ்திரேலியாவை பொறுத்தவரை லேபரையும் லிபரலையும் கிட்டத்தட்ட சகோதரர்களாகப் பார்க்கும் தமிழ் மக்களில் பெரும்பகுதியினர், பசுமைக் கட்சியின் தத்துவங்களை நேர்மையுடையதாகக் கணிக்கின்றனர். இலஞ்சம் - ஊழல் - சுத்துமாத்துக்கள் செய்யாத அரசியல் ஒழுக்கம் உடைய கட்சியாக பார்க்கின்றனர். இப்படியான கட்சியின் ஊடாகத்தான் மக்களின் பிரச்சினைகளுக்கு உண்மையான தீர்வுகளைப் பெற்றுக்கொள்ளமுடியும் என்று நம்புகின்றார்கள். அதேபோன்று பசுமைக் கட்சியும் தமிழர்களது தாயகப்போராட்டம் முதல், அவுஸ்திரேலியாவில் தமிழர்கள் எதிர்கொள்ளும் அகதிகள் பிரச்சினைவரை அனைத்திலும் நேர்மையான கரிசனையை வெளிப்படுத்துகின்றனர். தமிழ்மக்களின் போராட்டம் என்றாலே பயங்கரவாதப் போராட்டம், இதில் முகம்காட்டினாலேயே தம்மீது பயங்கரவாத முத்திரை குத்தப்பட்டுவிடும் என்று பெரும்பான்மைக் கட்சிகள் எல்லாம் எட்டடி தள்ளிநின்று பேசுகின்ற நிலையில், பசுமைக் கட்சி வெளிப்படையாக தமது ஆதரவினை தெரிவிக்கும் துணிச்சல் மிகுந்த அமைப்பாக இருக்கிறது.

கடந்த தடவை, கீழ் சபையில் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை பெற்று வரலாற்று சாதனையை நிலைநாட்டிய கிறீன் கட்சியின் சார்பில், இம்முறை ஈழத்தமிழரின் தாயகத்தை பூர்வீகமாக கொண்ட சமந்தா ரட்ணம் என்பவர் போட்டியிடுகிறார்.

யாழ்ப்பாணம் மானிப்பாயை பூர்வீகமாக கொண்ட இவர், மானிப்பாய் என்ற நகரை ஒரு காலத்தில் கட்டியமைப்பதற்கு பெரும் பங்காற்றிய மேதர்ஸ் குடும்பத்தின் வம்சாவளி வந்தவர். எழுபதுகளில் இலங்கையிலிருந்து இடம்பெயர்ந்து லண்டன் சென்ற சமந்தாவின் பெற்றோருக்கு லண்டனில் சமந்தா பிறந்தார்.

பின்னர் எண்பதுகளில் அவுஸ்திரேலியாவுக்கு குடிபெயர்ந்தனர். மெல்பேர்ன் பல்கலைக்கழகத்தில், தனது முதுகலைமாணி பட்டப்படிப்பை நிறைவுசெய்த சமந்தா ரட்ணம், கடந்த வருடம் மோர்லண்ட் எனப்படுகின்ற மெல்பேர்னின் வடக்கு பிரதேசத்தின் கவுன்ஸிலில் தலைவராக, கிறீன் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.

தற்போது கிறீன் கட்சியின் ஏகோபித்த தெரிவாக அவுஸ்திரேலிய நாடாளுமன்ற ஆசனத்துக்காக போட்டியிடுகிறார். இவர் வெற்றிபெற்றால், அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்துக்குத் தெரிவான முதலாவது ஈழத்தமிழ்ப்பெண் என்ற பெருமையை இவர் பெற்றுக்கொள்வார்.

தற்போதைய நிலையில், அவுஸ்திரேலிய தேர்தல் நிலைவரம் லேபரின் பக்கம் ஆதரவு அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. லேபர் கட்சியைப் பொறுத்தவரை தமிழ் மக்களை மாத்திரமல்லாது அகதிகளாக இந்த நாட்டுக்கு வந்த பெரும்பாலான சமூகத்தினரை இலக்கு வைத்து தமது கொள்கைகளை பிரசாரம் செய்துவருகிறது.

அகதிகளின் கொள்கை தொடர்பாக அண்மையில் கருத்து தெரிவித்த லேபர் கட்சியின் தலைவர் பில் சோர்ட்டன், தமது கட்சி ஆட்சிக்கு வந்தால், வதிவிட உரிமை வழங்கப்படாமல் இழுத்தடிக்கப்பட்டுவரும் அகதிகளில் முப்பதாயிரம் பேருக்கு நிரந்திர வதிவிடஉரிமையை வழங்கப்போவதாக அறிவித்திருக்கிறார். அகதிகள் பிரச்சினையால் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ள தமிழ் மக்கள், ஆப்கானியர்கள் மற்றும் ஈரான் நாட்டவர்களுக்கு இது கவர்ச்சிகரமான அறிவிப்பாக அமைந்துள்ளது.

கிறீன் கட்சியின் வெற்றி என்பது மெதுவானதாக அமைந்தாலும் வலுவானதாக அமையும் என்ற நம்பிக்கையை வெளியிட்டுள்ள தமிழ் மக்கள், மறுபுறத்தில் உடனடிப் பலாபலன்களை வழங்கக்கூடிய லேபர் கட்சியின் ஆட்சியை, உடனடியாக எதிர்பார்க்கின்றனர் என்பதை, தமிழ் மக்கள் மத்தியில் நடைபெறுகின்ற அரசியல் சந்திப்புக்களின் ஊடாக அறியக்கூடியதாக உள்ளது.

எதிர்வரும் ஜூலை இரண்டாம் திகதி நடைபெறவுள்ள தேர்தல் இவை எல்லாவற்றுக்கும் பதில் சொல்லும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .