2025 ஒக்டோபர் 28, செவ்வாய்க்கிழமை

இன, மத அடையாளங்களுடன் இயங்கும் அரசியல் கட்சிகளுக்கு தடை

R.Tharaniya   / 2025 ஒக்டோபர் 23 , பி.ப. 04:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

முருகானந்தம் தவம்

இலங்கையில் இன, மத அடிப்படையில்  அரசியல் கட்சிகளை உருவாக்குவதைத் தடை செய்யும் வகையிலும்,  தற்போது மதம், இனத்தை அடிப்படையாகக் கொண்டு செயற்படும் அரசியல் கட்சிகளில் மாற்றம் ஏற்படுத்தும் வகையிலும் ஐ.தே.கவின் முன்னாள் அமைச்சரும் புதிய ஜனநாயக  முன்னணியின்

தற்போதைய தேசியப் பட்டியல் எம்.பியும் கொழும்பு மாவட்டத்தில் தேர்தல்களில் போட்டியிடும்போது, தமிழ் முஸ்லிம் மக்களின் வாக்குகளைப்  பெறுபவருமான ரவி கருணாநாயக்க கடந்த வெள்ளிக்கிழமை முன்வைத்த தனிநபர் பிரேரணைக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் மற்றும் தமிழ், முஸ்லிம், மலையகக்  கட்சிகள்  கடும் எதிர்ப்புத் தெரிவித்ததால் அப் பிரேரணையை ஒழுங்குப்பத்திரத்தில் இருந்து  சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன  நீக்கினார்.

விஜயதாச ராஜபக்‌ஷ நீதி அமைச்சராக இருந்தபோது, இதே பாராளுமன்றத்தில் வைத்தே “இலங்கையில் இன, மத அடிப்படையில்  அரசியல்  கட்சிகள் இருக்கும் வரை நாட்டில்  ஜனநாயகம் தலைதூக்க முடியாது.

எனவே,  இன, மத  ரீதியில்  கட்சிகள்  இருப்பதனை, உருவாக்கப்படுவதனை  தடை செய்ய வேண்டும் .அத்துடன் புனர்வாழ்வு சட்டத்தில் திருத்தம் மேற்கொண்டு இனவாத, மதவாத,  அடிப்படைவாத நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களை புனர்வாழ்வளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்’’ என வலியுறுத்தியிருந்தார்.

மதத் தீவிரவாதத்தினை தடுப்பதன் அவசியம் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தி  எம்.பியான   ஹேஷா விதானகே பாராளுமன்றத்தில் கொண்டுவந்த தனிநபர் பிரேரணைக்குப் பதிலளித்து   உரையாற்றிய   போதே நீதி அமைச்சர் இவ்வாறான கருத்தை வலியுறுத்தியிருந்தார்.

இலங்கையில் இன,மத ரீதியிலான அரசியல் கட்சிகள், அமைச்சுக்கள், பாடசாலைகள்,  அனைத்தும் தடை செய்யப்பட வேண்டுமென்ற இனவாதக் குரல்கள் சிங்கள  கடும்போக்குவாத அரசியல்வாதிகளிடமிருந்து  ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ என்ற கோஷத்துடன் கோட்டாபய அரசில் பலமாக ஒலித்திருந்தன.

இலங்கையில்  இன, மத ரீதியான தாக்குதல்கள் இடம்பெறுவதனாலும் இலங்கையர்கள் இனம், மதம், மொழி எனப் பிரிந்து கிடப்பதனாலும் இவை தடை செய்யப்பட வேண்டுமென்ற வாதம் இவர்களினால் முன் வைக்கப்பட்டது.

இலங்கையில் பௌத்தம், இந்து, முஸ்லிம், கிறிஸ்தவம் என ஒவ்வொரு மதத்துக்கும் ஒவ்வொரு அமைச்சு தேவையில்லை. எல்லா மதங்களுக்கும் ஒரு அமைச்சர் இருந்தால் போதும். ஒவ்வொரு இனத்துக்கும் மதத்திற்கும் பாடசாலைகள் தனித்தனியே தேவையில்லை. அனைத்தையும் ஒன்றாக்க வேண்டுமென்பதே  ‘ஒரே நாடு ஒரே சட்டம் ‘ என்ற போர்வையில்   சிங்கள கடும்போக்குவாதிகளினால் கோட்டாபய அரசில் வலியுறுத்தப்பட்டது.

அதன்பின்னர், அந்த விடயம் அடங்கியிருந்த நிலையில்தான் தற்போது ஐ.தே.கவின் முன்னாள் அமைச்சரும் புதிய ஜனநாயக  முன்னணியின் தற்போதைய தேசியப் பட்டியல் எம்.பியுமான ரவி கருணாநாயக்க இலங்கையில் இன, மத அடிப்படையில்  அரசியல் கட்சிகளை உருவாக்குவதைத் தடைசெய்ய வேண்டும்.

தற்போது மதம், இனத்தை அடிப்படையாகக் கொண்டு செயற்படும் அரசியல் கட்சிகளில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டுமென்ற தனி நபர் பிரேரணையைக் கொண்டு வந்து சிறுபான்மையினக்  கட்சிகளான  தமிழ், முஸ்லிம் கட்சிகளுக்கு  ஒரு அச்சுறுத்தல் நிலையை ஏற்படுத்த முயன்றுள்ளார் .

எனினும் இந்த முயற்சிக்கு உட்டியாகவே உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு ஒன்றை உதாரணமாக வைத்து தமிழ், முஸ்லிம் கட்சிகளின் தலைவர்கள் தற்காலிகத் தடைபோட்டுள்ளனர்.

இன,மத,மொழி, சமூக அடையாளங்களோடு அரசியல் கட்சிகள் இயங்குவதைத் தடை செய்ய  மஹிந்த ராஜபக்‌ஷ அரசில்  சட்டம் மூலம் ஒன்று 2009ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் கொண்டு வரப்பட்டபோது, எதிர்க்கட்சியிலிருந்த மங்கள சமரவீர ஒரு வழக்கையும்  தமிழரசுக் கட்சியின் செயலாளராக விருந்த மாவை சேனாதிராஜாவும் இலங்கைத் தமிழ் காங்கிரஸ் கட்சியின் செயலாளர் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் இணைந்து ஒரு வழக்கையும் இதற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த நிலையில், அப்போதைய சட்டமா அதிபர்   தேர்தல் திருத்தச் சட்டத்தில் மேற்படி மத, மொழி, சமூக பெயர் அடையாளங்களோடு அரசியல் கட்சிகள் இயங்கக் கூடாது என்ற விடயம் சட்ட மூலத்திலிருந்து விலக்கப்படுமென உயர் நீதிமன்றுக்கு வாக்குறுதி வழங்கினார்.

இவ்வாறு  மஹிந்த ராஜபக்‌ஷ அரசு  விலக்கிக்கொண்ட விவகாரத்தை மீண்டும் சட்டமாக்கவே ரவி கருணாநாயக்க முயற்சித்த நிலையில், அந்த உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை வைத்தே தமிழ்,முஸ்லிம் தலைவர்கள் அதனை தாற்காலிகமாகத்   தடுத்துள்ளனர்.

அதுமட்டுமல்ல, இனம் அல்லது மதம் என்பவற்றின் அடையாளத்தை வெளிப்படுத்தும் வகையில் காணப்படும் அரசியல் கட்சிகள், தமது பெயர்களை மாற்றாவிடின், அவற்றின் பதிவுகளை ரத்து செய்யத்  தேர்தல்கள் ஆணையாளருக்கு உத்தரவிடுமாறு கோரி 2015ஆம் ஆண்டு ஜனாதிபதி சட்டத்தரணி பிரசாந்த லால் டி அல்விஸ்  அடிப்படை உரிமை மனுவொன்றை   உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார்.

இனம், மதம் என்பவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்திப் பெயரிடப்பட்டுள்ள 20 கட்சிகள் ஏற்றுக்கொள்ளப்பட்ட அரசியல் கட்சிகளாகப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் இன மற்றும் மத ரீதியாக கட்சிகள் அடையாளப்படுத்தப்படுவதால், பொது மக்களின் அடிப்படை உரிமைகள் மீறப்படுவதாகவும் அவர் தனது மனுவில் சுட்டிக்காட்டியிருந்தார்.   

ஜனாதிபதி சட்டத்தரணி பிரசாந்த லால் டி அல்விஸ் தாக்கல் செய்த இந்த மனுவை, உயர் நீதிமன்றத்தின் மூன்று நீதியரசர்கள் கொண்ட குழு பரிசீலித்தது.இந்த மனுவில் தேர்தல் ஆணையாளர், சட்ட மா அதிபர் மற்றும் 20 அரசியல் கட்சிகளின்
செயலாளர்கள் ஆகியோர் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டிருந்தனர்.

குறிப்பாக, இலங்கை தமிழரசுக் கட்சி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், பொதுஜன முன்னணி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், அகில இலங்கை தமிழ் மகாசபை, அகில இலங்கை  மக்கள் காங்கிரஸ், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை கட்சி, தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி, ஜனநாயக மக்கள் முன்னணி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளைத் தடை செய்யுமாறு கோரப்பட்டிருந்தது.

இந்த மனுவை 01-08-2016ஆம் ஆண்டு   உயர் நீதிமன்றம் விசாரணைக்கெடுத்து இரத்துச் செய்தது.எனவே இன, மத அடையாளங்களுடன் இயங்கும் அரசியல் கட்சிகளைத்  தடை செய்வதென்பதனை உயர் நீதிமன்றம் கூட ஏற்றுக் கொள்ளவில்லை.

பிரித்தானிய ஆட்சியுடன் ஆரம்பிக்கும் இலங்கையின் அரசியற் கட்சிச் செயற்பாடுகள் சுதந்திரத்தின் பின்னர் இன, மத ரீதியான காரணங்களுடன் முனைப்புப் பெற்றன. இலங்கையின் பிரதான கட்சிகளும்  சிங்கள தேசியவாத கட்சிகளும் பௌத்த மதத்துக்கு முதன்மை வழங்க வேண்டும் என்ற சிந்தனையோடு செயற்படுகின்றன.

தேரவாத பௌத்த தலைமைகள் மதத் தலைவர்களாக மட்டுமல்லாது, பெரும்பான்மை இன அரசியல் கட்சிகளை வழிநடத்தும் சக்தியாகவும் இயங்கி வருகின்றனர். அதேபோல், சிறுபான்மையினக் கட்சிகள் தமது இன, மத சுதந்திரத்தைப் பாதுகாக்கும் நோக்கில் இன, மதத்தினை தமது கட்சியின் கொள்கைகளில் உள்வாங்குகின்றனர்.

இலங்கையின் தேர்தல் செயலகத்தில்  முறையாகப்  பதிவு செய்யப்பட்டுள்ள அரசியல் கட்சிகளில்   15 க்கு மேற்பட்ட கட்சிகள்  தமிழ், முஸ்லிம், மலையக இன, மத அடையாளங்களுடனும் மூன்று வரையான கட்சிகள் சிங்கள இன அடையாளங்களுடனும் உள்ளன. 

குறிப்பாக,  அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், இலங்கை தமிழ் அரசு கட்சி, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி, தமிழ் மக்கள் தேசிய கூட்டணி, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் ஆகிய கட்சிகள் தமிழின அடையாளத்துடனும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், முஸ்லிம் தேசியக் கூட்டமைப்பு ஆகிய கட்சிகள் முஸ்லிம் இன அடையாளத்துடனும் உள்ளன.  இதேவேளை, தமிழ் முற்போக்கு கூட்டணி, மலையக மக்கள் முன்னணி என்பவை பங்காளிக் கட்சிகளாகவும் உள்ளன. சிங்களக் கட்சிகளிலும் இன, மத அடையாளங்கள் கொண்ட  கட்சிகள்  உள்ளன. 

இவ்வாறு இலங்கையின் அரசியற் கட்சிகளின் தோற்றதிலும் வளர்ச்சியிலும் இனம். மதம் செல்வாக்குச் செலுத்தி வருகின்றது . இது  இலங்கையில்  இன, மத  முரண்பாடுகளைத் தோற்றுவிக்கும்  காரணியாகவும் மாறியுள்ளது. சுதந்திரத்திற்குப் பின்னரான இலங்கையில் ஆட்சி அதிகாரத்தினை பெற்றுக் கொள்வதோடு அதனைத் தக்கவைத்துக் கொள்ளும் பொருட்டான அரசியல் ஆதாயத்திற்கு  இன, மத அடையாளங்கள்  அரசியற் கட்சிகளின் தோற்றத்திலும் வளர்ச்சியிலும் செல்வாக்குச் செலுத்தி வருகின்றன.

இவ்வாறான நிலையில், இலங்கையில் இன, மத அடையாளங்களுடன்  இயங்கும் அரசியல் கட்சிகள் தடை செய்யப்பட்டால்  தமிழ், முஸ்லிம், மலையக மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சிறுபான்மையினக் கட்சிகள்தான் பாதிக்கப்படும் .

அதேவேளை, இன,மத அடையாளங்களுடன் இயங்கும் இந்த சிறுபான்மையினக் கட்சிகள் இந்த இன,மத அடையாளங்களுடன் இல்லாத அரசியல் கட்சிகள் செய்யாத எதனை செய்து விட்டன  என்பதற்காகத் தடை செய்யப்பட வேண்டும்  என்ற கேள்வியும் பலமாக எழுகின்றது.

இன அடையாளம் இருந்தால் இனவாதம் பேசுவார்கள், மத அடையாளம் இருந்தால் மதவாதம் பேசுவார்கள் என்றால் இவ்வாறு இன அடையாளம் இல்லாத கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி 1983 ஜூலை 23ஆம் திகதி தமிழ் மக்களுக்கு எதிராக   இனக் கலவரம் செய்யவில்லையா?அதனைத் தொடர்ந்து, பல வருடங்களாக இனப்படு கொலைகள் செய்யவில்லையா?ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அல்லது ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு என்ற பெயரைக்கொண்ட கட்சிகள் நடத்திய யுத்தத்தில் தமிழ் மக்கள் கொல்லப்படவில்லையா?

ஏன் தற்போது ஆட்சி பீடத்தில் உள்ள மக்கள் விடுதலை முன்னணி என்ற பெயரைக்கொண்ட கட்சி (ஜே .வி.பி.)  அரசுக்கு எதிராக ஆயுதப் போராட்டத்தில் ஈடுபடவில்லையா?

தம்மினத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கானவர்களைப் படுகொலை செய்யவில்லையா?அல்லது இந்தக் கட்சிகள் இனவாதம்,மதவாதம்தான் பேசவில்லையா? தேசிய சுதந்திர முன்னணி என்ற கட்சியின் கொள்கையே இனவாதம்தானே? எனவே,  இலங்கையில் இன, மத அடையாளங்களுடன் இயங்கும் அரசியல் கட்சிகள் தடை செய்யப்பட வேண்டுமென்பதும் ஒரு இன, மத வாதம் தான் என்பதே தமிழ், முஸ்லிம் அரசியல் கட்சிகளினதும் மக்களினதும் கருத்தாகவுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .