2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

இனவாதமாக மாறும் கொரோனா வைரஸ் அச்சம்

எம்.எஸ்.எம். ஐயூப்   / 2020 பெப்ரவரி 05 , மு.ப. 02:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

சீனாவில் பெருமளவில் பரவி, தற்போது ஏனைய சில நாடுகளுக்கும் பரவி வரும் கொரோனா வைரஸ், உலக சுகாதார அமைப்பால் 2019-CoV என உத்தியோகபூர்வமாக அழைக்கப்படுகிறது.   

இந்த நோயைப் பற்றி, தேசிய ரீதியிலும் சர்வதேச ரீதியிலும் பாரியதோர் ஊடகப் பரபரப்பு உருவாகி இருக்கிறது. இதில் நன்மையைப் போலவே, தீமையும் இருப்பதாகவே தெரிகிறது.  

இலங்கையில் தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய ஊடகங்களில், கடந்த நாள்களில், இந்த நோயைப் பற்றிய செய்திகளும் கட்டுரைகளும் பெருமளவில் வெளியாகியிருந்தன.   

சீ.என்.என், பி.பி.சி, அல் ஜெசீரா, டி.டபிள்யூ, சனல் நியூஸ் ஏசியா, ஏ.பி.சி, என்.எச்.கே, பிரான்ஸ் 24 போன்ற, சகல சர்வதேச ஊடகங்களும் இந்த நோயைப் பற்றிய செய்திகளுக்கு, ஏனைய உலகச் செய்திகளுக்கு வழங்குவதை விடக் கூடுதலான முக்கியத்துவம் கொடுப்பதையும் அதற்காக நீண்ட நேரம் ஒதுக்குவதையும் காணக்கூடியதாக இருக்கிறது.  

143 கோடி மக்கள் வாழும் சீனாவில், கடந்த இரு மாத காலத்தில், சுமார் 400 பேர் தான் 2019-CoV நோயால் உயிரிழந்துள்ளனர். சுமார், இரண்டு கோடி மக்கள் வாழும் இலங்கையில், சில காலங்களில், ஒரு மாத காலத்துக்குள், இதை விடக் கூடுதலான மக்கள், டெங்கு நோயால் மரணித்துள்ளார்கள்.   

2019-CoV நோயால் உயிரிழப்போரின் மரண விகிதாசாரம் 15 எனக் கூறப்படுகிறது. அதாவது, 100 பேரை அந்த நோய் தாக்கினால், அவர்களில், உயிரிழப்போரின் எண்ணிக்கை, சுமார் 15 ஆகும் என்பதாகும்.   

எனினும், நேற்றுவரை சீனாவில் 2019-CoV நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை, 20,000 க்குச் சற்றுக் கூடுதலாக இருக்க, உயிரிழந்தோரின் எண்ணிக்கை 425 ஆக இருந்தது. அதாவது, மரண விகிதாசாரம் இரண்டாகத்தான் இருக்கிறது.  

ஆபிரிக்க நாடுகளான லைபீரியா, சியரா லியோன், கீனி ஆகிய நாடுகளில், கடந்த சில வருடங்களுக்கு முன்னர் பரவிய ‘எபோலா’ நோயின் மரண விகிதாசாரம் 50 முதல் 90 வரையில் இருந்ததாகக் கூறப்படுகிறது.   

ஆயினும், டெங்கு நோய்க்கும் எபோலா நோய்க்கும் அச்சமடையாத உலகம், புதிய 2019-CoV நோயைக் கண்டு நடுங்குகிறது.  

இதற்கு முக்கியக் காரணம், டெங்கு, எபோலா நோய்களைப் போலல்லாது, புதிய வைரஸ் நோய் காற்றால் பரவுவதே ஆகும். அதாவது, நோயுள்ள ஒருவர் இருக்கும் இடத்தில் நடமாடும் அனைவரும், அவரது சுவாசத்தால் பாதிக்கப்படுவார்கள் என்பதல்ல; நோயாளியின் தும்மல், இருமல் போன்றவற்றால் அந்த நோயை ஏற்படுத்தும் வைரஸ் பரவலாம் என்பதே ஆகும்.   

அதேவேளை, சீனாவின் சனத் தொகையோடு ஒப்பிடுகையில், நோயால் பாதிக்கப்பட்டவர்களினதும் இறந்தவர்களினதும் எண்ணிக்கை மிகச் சிறியதாக இருந்த போதிலும், நோய் பரவிய வேகம், உலகம் முழுவதிலுமுள்ள சுகாதார அதிகாரிகளை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.  

சீனாவில் நூற்றுக் கணக்கான விமான நிலையங்கள் இருக்கின்றன. அவற்றின் ஊடாக, நாளாந்தம் பல்லாயிரக் கணக்கானவர்கள் அந்நாட்டிலிருந்து வெளிநாடுகளுக்குச் செல்கிறார்கள். உலகின் சகல நாடுகளும், சீனாவுடன் வர்த்தக உறவுகளைப் பேணி வருகின்றன. எனவே, நோய் பரவும் வழிகளும் அதிகமாக இருக்கின்றன.  

சீனா ஒரு வல்லரசு; சுகாதாரத் துறையில் மிகவும் முன்னேறிய நாடு. அந்நாடே நோய் பரவும் வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் தடுமாறுவதாக இருந்தால், நிலைமையின் பாரதூரத் தன்மையை ஊகித்துக் கொள்ளலாம்.   

அந்த வல்லரசே தடுமாறும் போது, உலக ஊடகங்களுக்கு அது பாரியதொரு செய்தியாக மாறுவதையும் புரிந்து கொள்ளலாம்.   

உலக அரசியலில், சீனா மிகவும் முக்கியமான நாடொன்றாகும். அந்நாட்டின் செய்திகள், மிக விரைவாகவும் முக்கியத்துவத்துடனும் உலக ஊடகங்களில் இடம் பெறுவதற்கு அதுவும் ஒரு காரணமாகும்.  

புதிய வைரஸ் நோயைப் பற்றி, ஊடகப் பரபரப்பால் ஏற்படக்கூடிய நன்மை என்னவென்றால், அதனால் உலகெங்கும் மக்கள் அறிவூட்டப்படுகிறார்கள்; எச்சரிக்கப்படுகிறார்கள்; நோய்த்தடுப்பு முறைகளைப் பற்றிய மக்களின் ஆர்வம் அதிகரிக்கிறது.   

ஆனால், மக்கள் அளவுக்கு அதிகமாக அச்சப்படுவது, இந்த ஊடகப் பரபரப்பின் தீய அம்சமாகும். இலங்கையில் மருத்துவர்கள், இப்போதைக்கு முகக்கவசங்கள் அவசியமில்லை என்று கூறும் போதும், மக்கள் முண்டியடித்துக் கொண்டு முகக்கவசங்களை விலைக்கு வாங்க முற்பட்டதால், அவற்றின் விலை ஒரு வாரத்துக்குள், சுமார் 10 மடங்காக அதிகரித்தது. இறுதியில், அரசாங்கம் அவற்றுக்குக் கட்டுப்பாட்டு விலையையும் விதிக்க நேரிட்டது.  

இந்த அச்சம் எவ்வாறானதெனில், கண்டியில் பாடசாலையொன்றின் மாணவி, திடீரென மயக்கமுற்று விழுந்த போது, அம்மாணவிக்கு உதவ ஆசிரியர்களும் சகமாணவிகளும் அஞ்சியதாகவும் இறுதியில் அம்பியுலன்ஸ் வண்டி அழைக்கப்பட்டாலும் அம்மாணவியை அதில் ஏற்ற, பாடசாலையில் எவரும் முன்வரவில்லை எனவும் கூறப்பட்டது.   

அம்மாணவி, காலையில் சாப்பிடாமல் பாடசாலைக்கு வந்தமையாலேயே மயக்கமுற்றதாக, மருத்துவர்கள் பின்னர் கண்டுபிடித்துள்ளனர்.  

கடந்த வாரம், கொழும்பில் உலக வர்த்தக மய்யத்தில் இடம்பெற்ற மற்றொரு சம்பவத்தில், ஒருவர் திடீரென மயக்கமுற்று கீழே விழுந்த போதும், பலர் அவருக்கு உதவத் தயங்கியதாகச் செய்திகள் கூறின. ஆனால், அவரையும் கொரோனா வைரஸ் தாக்கி இருக்கவில்லை. இது, ஊடகப் பரபரப்பின் விளைவாகும்.   

சீனாவில், கொரோனா வைரஸால் நோயுற்ற ஒருவர், மரத்தை வெட்டிச் சாய்த்ததைப் போல் கீழே விழும் காட்சியை, தொலைக்காட்சி மூலம் இலங்கையில் பலர் கண்டனர்.  

இந்த நோயால் பாதிக்கப்பட்ட சகலரும், அவ்வாறு திடீர் திடீரென கீழே விழவில்லை; விழுவதும் இல்லை. ஆனால், அந்தச் செய்தியோடு காண்பிக்கப்பட்ட காட்சியைப் பார்த்த பலர், கொரோனா நோயாளிகள் இவ்வாறுதான் திடீர் திடீரென விழுவதாக விளங்கிக் கொண்டார்கள் போலும்.   

எனவே தான், மேற்படி இருவருக்கும் உதவ எவரும் முன்வரவில்லை. உண்மையிலேயே, கொரோனா வைரஸால் நோயுற்றோர், அனேகமாக முதலில், காய்ச்சலினாலேயே பாதிக்கப்பட்டுள்ளனர்.  

இந்த அச்சம், இப்போது பல நாடுகளில், சீனர்களைப் பற்றிய அச்சமாக மாறியிருக்கிறது. அதனால், சீனர்களுக்கு எதிரான இனவாத வெறுப்பு, பல நாடுகளில் பரவியிருப்பதாகச் சர்வதேச செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. இலங்கையிலும் சில உணவுவிடுதிகளில் ‘சீனர்கள் வர வேண்டாம்’ என அறிவிப்புச் செய்யப்பட்டிருந்த படங்களை, ஊடகங்கள் சில நாள்களுக்கு முன்னர் வெளியிட்டு இருந்தன.  

இலங்கையில், பல ஹோட்டல்களிலும் வாடகை வாகனங்களிலும் சீனர்களுக்கு இடம் மறுக்கப்படுவதாக, கடந்த ஞாயிற்றுக்கிழமை (02) இலங்கையிலுள்ள சீனத் தூதரகம் கவலை வெளியிட்டு இருந்தது.  

உண்மையிலேயே, இலங்கையில் அச்சப்படுவதற்கு ஏதாவது காரணம் இருப்பதாகத் தெரியவில்லை. இரண்டு வாரங்களுக்கு முன்னதாகவே, விமான நிலையத்தில் நோய்த் தடுப்புப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.  

 இந்த வைரஸ், ஒருவரது உடலில் புகுந்தால், இரண்டு வாரங்களுக்குள் நோயின் அறிகுறிகள் வௌிப்படுவதால், அதற்கு முன்னர் வைரஸோடு எவராவது சீனாவிலிருந்தோ வேறு நாடொன்றில் இருந்தோ வந்திருந்தாலும், அவர் இப்போது நோயின் அறிகுறிகளை வௌிக்காட்டியிருக்க வேண்டும்.  

அவ்வாறு, சீனப் பெண் ஒருவர் மட்டுமே கொரோனா நோய் அறிகுறிகளை வௌிப்படுத்தி இருந்தார். அவர் ஒருவர் மட்டுமே, இலங்கையில் அடையாளம் காணப்பட்ட 2019-CoV நோயாளியாவார். அவரும் இப்போது குணமாகி, கொழும்பு ஐ.டி.எச் மருத்துவமனையில், மேலதிக மேற்பார்வைக்காகத் தங்கியிருக்கிறார்.   

அதேவேளை, இலங்கையில் தொழில் புரியும் சீனர்கள், அண்மையில் சீனாவுக்குச் செல்லவில்லை என்றும், சீனப் புத்தாண்டுக்காகச் சென்றவர்கள், இப்போதைக்குத் திரும்பி வரமாட்டார்கள் என்றும், சீனத் தூதுவர், திங்கட்கிழமை (03) கூறினார்.  

வூஹானிலிருந்து கடந்த வார இறுதியில் அழைத்து வரப்பட்ட இலங்கை மாணவர்கள் 33 பேரையும், வைரஸ் தாக்கி இருக்கவில்லை என்றே கூறப்படுகிறது. வூஹானிலிருந்து வந்தவர்களை நோய் தாக்காவிட்டால், இங்கு அச்சப்படுவதற்குக் காரணங்கள் இருப்பதாகக் கூற முடியாது.  

ஆனால், சீனர்கள் என்றால் பலருக்கும் அச்சம் தான். இந்த நிலைமை, அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், இத்தாலி போன்ற பல நாடுகளில், சீனர்களுக்கு எதிரான இனவாத வெறுப்பாக மாறியுள்ளது. சீனர்கள் மட்டுமல்லாது, அவர்களது நிறத்திலும்  சாயலிலுமான கொரிய, வியட்நாம் மக்களும் அந்நாடுகளில் இனவாத அச்சுறுத்தல்களுக்கு இலக்காகி இருக்கிறார்கள்.   

எனவே, இந்த விடயத்தில் மலேசியப் பிரதமர் மஹதீர் முஹம்மதும் கனடியப் பிரதமர் ஜஸ்டின் டுரூடோவும் தமது நாட்டு மக்களை எச்சரித்துள்ளனர்.  

விந்தை என்வென்றால், இந்த நோயால், வூஹான் மாநில மக்களை ஆரம்பத்தில், சீனாவில் ஏனைய மாநிலங்களின் மக்களே ஒதுக்கினர்.   

பின்னர், தென்கிழக்கு ஆசிய நாடுகளின் மக்கள், அனைத்துச் சீனர்களையும் ஒதுக்கினர். அதையடுத்து, ஐரோப்பிய, அமெரிக்கக் கண்டங்களிலுள்ள நாடுகளின் மக்கள், சீனர்களையும் தென்கிழக்காசிய மக்களையும் ஒதுக்க ஆரம்பித்தார்கள்.   

இது உண்மையான அச்சமல்ல; வெறும் இனவாதமே என்பதையும் இந்த இனவாதத்துக்கு அடித்தளமே இல்லை என்பதையும் புரிந்துகொள்வது கடினமானது அல்ல!    

கொரோனா வைரஸ் புதியதல்ல...

‘கொரோனா வைரஸ்’ என்பது, தற்போது சீனாவில் பரவியிருக்கும் நோயின் பெயரல்ல. அதற்கு 2019-CoV என்றே, உலக சுகாதார நிறுவனம் தற்காலிகமாகப் பெயரிட்டுள்ளது. சிலவேளை இதே பெயர் தொடரவும் கூடும்.  

கொரோனா வைரஸ் என்பது, 1960ஆம் ஆண்டு, அதாவது 60 ஆண்டுகளுக்கு முன்னர் கண்டு பிடிக்கப்பட்ட ஒருவகை வைரஸாகும்.   

தற்போது, சீனாவில் பெருமளவில் பரவியிருக்கும் நோயை தோற்றுவிப்பது இந்த வைரஸின் ஒரு வகையாகும். எனவே, கொரோனா வைரஸை, உலகின் பல பாகங்களில், குறிப்பாக, சீனாவிலும் மத்திய கிழக்கிலும் மக்கள் நீண்ட காலமாக அறிந்துள்ளனர்.  

ஜப்பான் போன்ற நாடுகளில், சுனாமியை பல தசாப்தங்களுக்கு முன்னரே, மக்கள் அறிந்திருந்த போதிலும், இலங்கையில் பெரும்பாலானவர்கள் அதன் பெயரை, 2004ஆம் ஆண்டு, ஆழிப்பேரலை எம்மைத் தாக்கும் வரை அறிந்திருக்கவில்லை.   

அதேபோல், கொரோனா வைரஸை, வேறு பல நாடுகளில் மக்கள் அறிந்திருந்த போதிலும், அந்த வைரஸால் பாதிக்கப்பட்ட ஒரு சீனப் பெண், இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட போதே, நாம் அதைப் பற்றி ஆர்வத்தோடும் அச்சத்தோடும் படிக்கின்றோம்.  

கொரோனா வைரஸானது, பாலூட்டிகளிலும் பறவைகளிலும் நோய்களை ஏற்படுத்தும் ஒரு வகை வைரஸாகும். மனிதனில், அது சுவாச நோய்களைத் தோற்றுவிக்கும்.   

அது, சிலவேளை சாதாரண தடிமல் போன்ற நோயாகவும் இருக்கலாம்; அல்லது, ‘சார்ஸ்’, ‘மேர்ஸ்’ போன்ற, ஏற்கெனவே சீனாவிலும் மத்திய கிழக்கிலும் பரவிய நோய்களைப் போன்ற பயங்கர நோய்களாகவும் இருக்கலாம். தற்போது பரவி வரும் நோயும், இவை போன்றதொரு பயங்கர நோயாகும்.  

மாடுகள், பன்றிகள் போன்ற கால்நடைகளை கொரோனா குடும்பத்தைச் சேர்ந்த வைரஸ் தாக்கினால், அவற்றுக்கு வயிற்றோட்டம் ஏற்படும். கோழிகளிலும் அவை, சுவாச நோய்களைத் தோற்றுவிக்கும்.   

இதுவரை, கொரோனா வைரஸின் எந்தவொரு வகைக்கும் மருந்தோ, தடுப்பூசியோ கண்டுபிடிக்கப்படவில்லை என, உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது.  

லத்தீன் சொல்லான ‘கொரோனா’, தமிழில் ‘கிரீடம்’ என்ற பொருளைத் தருகிறது. குறித்த வைரஸ், கிரீடத்தை போன்ற வடிவத்தைக் கொண்டமையாலேயே அந்தப் பெயர் அதற்கு சூட்டப்பட்டுள்ளது.  

1960களின் ஆரம்பத்தில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸின் ஒருவகை, கோழிகளைத் தாக்கியது. மேலும், இரண்டு வகைகள், மனிதர்களைப் பாதித்தன.   

மனிதர்களைப் பாதித்த வைரஸ்களால், தடிமல் போன்ற இரண்டு வகையிலான சுவாச நோய்கள் ஏற்பட்டன. அவற்றுக்கு, உலக சுகாதார அதிகாரிகள் 229E என்றும் OC43 என்றும் பெயரிட்டனர்.  

2003ஆம் ஆண்டு, மனிதர்களைப் பாதிக்கும் மற்றொரு வகை கொரோனா வைரஸ், சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டது. SARS-CoV என்றழைக்கப்பட்ட அந்த வைரஸாலும் சுவாச நோய்கள் ஏற்பட்டு, பெரும் எண்ணிக்கையில் மக்கள் உயிரிழந்தனர்.   

2004 ஆம் ஆண்டு HCoV NL63 என்ற வைரஸும், 2005 ஆம் ஆண்டு HKU1 என்ற வைரஸும், 2012 ஆம் ஆண்டு மத்திய கிழக்கில் MERS-CoV என்ற கொரோனா வைரஸும் கண்டு பிடிக்கப்பட்டன.   
கடந்த வருடம் டிசெம்பர் மாதம், 2019-CoV கண்டு பிடிக்கப்பட்டவை எல்லாம் கொரோனா வைரஸ்களே ஆகும்.  

சீனர்களின் உணவுப் பழக்கங்களே இவற்றுக்குக் காரணம் எனப் பலர் கூறுகின்றனர். ஆனால், சீன மக்களின் தற்போதைய உணவு பழக்கங்கள், 1960 ஆண்டுக்கு முன்னரும் இருந்தன.   

அதேவேளை, 2012 ஆம் ஆண்டு ‘மேர்ஸ்’ நோய், மத்திய கிழக்கு நாடுகளிலேயே உருவாகிப் பரவின. எனவே, சீனர்களின் உணவு பழக்கங்களை மட்டும் குறை கூற முடியாது.   

ஆனால், வெளவாலின் மூலமாகவே இந்த வைரஸ், முதன் முதலில் மனிதனுக்குப் பரவியது என்றும் சீனர்கள் வெளவால் இறைச்சியைச் சாப்பிடுவதால், அவர்களின் உணவுப் பழக்கத்துக்கும் இந்த வைரஸுக்கும் தொடர்பு இல்லை என்று அறுதியிட்டுக் கூறவும் முடியாது. எதுவாக இருந்தாலும், விஞ்ஞான பூர்வமாக இந்த விடயம், இதுவரை நிரூபிக்கப்படவில்லை என்றே கூறப்படுகிறது.  

உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் சிலர் இந்தப் பிரச்சினையை அரசியல் மயமாக்க முயல்கிறார்கள். 33 இலங்கை மாணவர்கள், சீனாவிலிருந்து அழைத்துவரப்பட்டமையும் அரசியலாக்கப்பட்டு வருகிறது.   

இந்தியா, ஏற்கெனவே இரண்டு விமானங்களை அனுப்பி, 647 இந்தியர்களைச் சீனாவிலிருந்து அழைத்து வந்துள்ளது. பல ஐரோப்பிய நாடுகளும் தமது பிரஜைகளை அழைத்து வந்துள்ளன.  

பாராட்டப்பட வேண்டியவர்கள், தமது தேசத்தவர்களை அழைத்து வரச் சென்ற விமானங்களின் ஆளணியினரே ஆவார்.   

வூஹானிலேயே பல இலட்சம் மக்கள் நோயால் பாதிக்கப்படாமல் இருக்க, பாதிக்கப்பட்ட சில ஆயிரம் மக்களை நினைத்து, உலகமே அச்சம் கொண்டுள்ள நிலையிலும், வாழ்நாளில் ஒரு நாளேனும் சீனாவுக்குச் செல்லாத பிரான்ஸில் வாழும் சீன வம்சாவழி மக்களைக் கண்டு, சில பிரான்ஸூக்காரர்கள் தலைதெறிக்க ஓடும் நிலையில், அந்த விமான ஊழியர்கள் வூஹானுக்குச் செல்லத் துணிந்தமை, பாராட்டுக்குரியது தான்.     


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X