Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 16, வெள்ளிக்கிழமை
Thipaan / 2016 மே 19 , மு.ப. 05:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
கனகலிங்கம் கோபிகிருஷ்ணா
தமிழ்ப் பண்பாட்டிலே, சுடலை ஞானம் என்றொரு சொற்றொடர் உண்டு. வாழ்க்கையில் எதையும் பற்றிக் கவலைப்படாமல், நல்ல எண்ணங்களின்றி, வெறுமனே நேரத்தைப் போக்கிக் கொண்டிருப்போர் கூட, ஒருவரின் மரண வீட்டுக்குச் சென்று, அவருக்கான இறுதிக் கிரியைகள் இடம்பெறும் சுடலைக்குச் செல்லும் போது, வாழ்க்கையின் நிலையில்லாத தன்மை பற்றி உணர்வார்களாம். ஆனால், மரண வீடு முடிந்து, வீட்டுக்குத் திரும்பி, ஒருமுறை குளித்துவிட்டுச் சாப்பிட்டு விட்டால், வந்த அந்த ஞானமும் போய்விடுமாம். அது தான் சுடலை ஞானம். அதாவது, காலங்கடந்து வந்த ஞானம், தற்காலிமாகக் கொஞ்சக் காலம் இருந்த பின்னர், காட்சிகள் மாறும்போது, ஞானமும் மாறிவிடும்.
இலங்கையில் தற்போது ஏற்பட்டிருக்கின்ற இயற்கை அனர்த்தங்களும் அவற்றின் காரணமாக ஏற்பட்டிருக்கின்ற 'ஞானங்களும்', இன்னுஞ்சில வாரங்களில், மறக்கப்பட்டிருக்கும். அடுத்த இயற்கை அனர்த்தம் வரும்வரை, இயற்கை அனர்த்தங்களைத் தடுப்பது அல்லது அவற்றின் பாதிப்புகளைக் குறைப்பது பற்றிய கலந்துரையாடல்கள் இடம்பெறாது. அடுத்த இயற்கை அனர்த்தத்தின்போது தான், இது தொடர்பான கலந்துரையாடல்கள் திரும்பவும் ஏற்படுத்தப்படும்.
ஒரு வகையில், இந்தப் பத்தியும் கூட, சுடலை ஞானம் தான்.
வங்கக் கடலுக்கு மேலாக ஏற்பட்ட தாழமுக்க நிலை காரணமாக ஏற்பட்ட கடும் மழை, ஏறத்தாழ இலங்கை முழுவதிலும் கோரத்தாண்டவம் ஆடியிருந்தது. இலங்கையின் 22 மாவட்டங்களில் இதன் காரணமாகப் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கும் அனர்த்த முகாமைத்துவ நிலையம், 3 இலட்சத்துக்கும்அதிகமானோர் இதன் காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.
கடுமையான மழை, வெள்ளம், மண்சரிவு, மரங்கள் முறிந்து வீழ்தல், மின்னதிர்ச்சி, மின்னல், காற்று என, இலங்கையில் ஏற்பட்ட பாதிப்புகள், சொல்லி மாளா. மக்களின் நாளாந்த வாழ்வு, இம்மழை காரணமாக முழுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தது.
இந்த இயற்கை அனர்த்;தத்தை எதிர்கொள்வதற்கு, இலங்கையின் அமைச்சுகளும் திணைக்களங்களும் அதிகாரசபைகளும் எவ்வளவு தயாராக இருந்தன என்பது முதலாவதும் முக்கியமானதுமான கேள்வியாகும். குறிப்பாக, அனர்த்த முகாமைத்துவ அமைச்சு என்ற ஓர் அமைச்சு இருக்கும்போது, அவ்வமைச்சின் முக்கியமான முதற்பணியே, இவ்வாறான அனர்த்தங்களின் போது ஏற்படும் விளைவுகளை முகாமை செய்வது தான் என்றிருக்கையில், தயாராக இருந்திருக்கவில்லையென்பது, ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. அனர்த்த முகாமைத்துவ அமைச்சென்றால், அனர்த்தங்கள் முடிந்த பின்னர், நிவாரணங்கள் வழங்கும் பணியை முன்னெடுப்பது என்றாகிவிடாது.
முப்படையினரும் பொலிஸாரும், தங்களாலியன்ற பணிகளை முன்னெடுத்து, பல உயிர்களைக் காப்பாற்றினார்கள் என்ற விடயத்தையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.
கடந்த சனிக்கிழமை முதல் தொடர்ந்த மழையாலும் அதனால் ஏற்பட்ட அனர்த்தங்களாலும், இலங்கை முழுவதுமே தடுமாறிக் கொண்டிருக்க, நேற்றுமுன்தினம் தான், அரசாங்கத்திடமிருந்து இதற்கான பதில்கள்ஃநடவடிக்கைள் குறித்துத் தகவல்கள் வெளியாகியிருந்தன.
இவ்வாறு, அரசாங்கத்தினால் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் மட்டுந்தான் தாமதமாகியிருந்தன. ஒருவரையொருவர் குற்றஞ்சாட்டும், பிண அரசியல் போன்றதொரு நிலைமை, அதற்கு முன்னரே ஆரம்பித்துவிட்டது.
முன்னாள் அரசாங்கத்துக்கு ஆதரவான தரப்பினரோ, 'இந்த அனர்த்தத்தைத் தடுக்க, இந்த நல்லாட்சி அரசாங்கம் தவறிவிட்டது. கோட்டாபய ராஜபக்ஷவின் காலத்தில், இவ்வாறானதொரு நிலைமை ஏற்பட்டிருக்காது' என்று சொல்ல, 'பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட மோசமான செயற்பாடுகளால் தான், இவ்வாறு வெள்ளம் ஏற்பட்டது. திட்டமிடப்படாத அபிவிருத்தியே இதற்குக் காரணம்' என, அரசாங்கத்துக்கு ஆதரவான தரப்புத் தெரிவித்தது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும், இது தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு கோரியதோடு, இது தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு, அனர்த்த முகாமைத்துவ அமைச்சு இருப்பது நிம்மதியானது எனத் தெரிவித்ததோடு, தனது காலத்திலேயே அவ்வமைச்சு உருவாக்கப்பட்டது என்பதையும் நினைவுகூர்ந்து, தன்பக்க அரசியலைக் கொண்டு சென்றார்.
இந்த அனர்த்தமாக இருக்கலாம், இதற்கு முன்னர் நாட்டில் அதிகரித்த வன்முறைச் சம்பவங்களாக இருக்கலாம், இரு தரப்பினரும் மாறி மாறிக் குற்றஞ்சாட்டி, தங்கள் அரசியல் நோக்கங்களை நிறைவுசெய்வதற்கு முயன்றனரே தவிர, மக்களின் அவலங்களுக்கு, உண்மையான அனுதாபத்தைக் கொண்டவர்களாகத் தங்களை வெளிப்படுத்தியிருக்கவில்லை. உண்மையில், மிகவும் கவலைதரக்கூடியதொன்றாகவே இந்நிலைமை காணப்படுகிறது.
இரு தரப்பினரதும் கருத்துகளை ஆராய்ந்தால், 'கோட்டா இருந்திருந்தால் எதுவும் நடந்திருக்காது' என்றால், அவரின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் கொழும்பில் மேற்கொள்ளப்பட்ட பாரிய திருத்தப் பணிகளின் பின்னரும்கூட, கொழும்பில் வெள்ளம் ஏற்பட்டமைக்கான காரணம் என்னவென்பதும், 20,000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் ஏன் பாதிக்கப்பட்டன என்பதற்குமான பதில்கள், அவசியமானவை. கொழும்பு நகரில் ஏற்படக்கூடிய வெள்ள நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்காக, உலக வங்கியுடன் இணைந்து ஆரம்பித்த அபிவிருத்தித் திட்டம், 2012ஆம் ஆண்டு மார்ச்சில் ஆரம்பிக்கப்பட்டது. 2015ஆம் ஆண்டு ஜனவரி வரை, ஓரளவு முன்னேற்றம் ஏற்பட்டிருக்க வேண்டும். கொழும்பின் சில நகரங்களில் ஓரளவு முன்னேற்றம் ஏற்பட்டிருந்தாலும், திருப்தியானளவு முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறதா என்பது சந்தேகமே.
மறுபுறத்தில், கோட்டாவின் செயற்பாடுகளால் தான் எல்லாம் நடந்தது என்றால், பாதிக்கப்பட்ட 22 மாவட்டங்களிலும் கோட்டாவினால் அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டனவா என்ற கேள்வி எழுகிறது. கோட்டாவின் திட்டங்களால் வெள்ளம் ஏற்படும் என்பது முன்னரே தெரிந்திருந்தால், பதவிக்கு வந்து 16 மாதங்களாகியும், அதற்கான நடவடிக்கைகளை எடுப்பதற்கு இந்த அரசாங்கம் ஏன் தவறியது என்பது, அவசியமாகக் கேட்கப்பட வேண்டிய கேள்வியாகும்.
உண்மையில், உலக வங்கியின் அனுசரணையுடனான கொழும்பின் அபிவிருத்தித் திட்டத்துக்கான முன்னேற்ற அறிக்கைகள், உலக வங்கியின் இணையத்தளத்தில் கிடக்கின்றன. அவற்றை ஆராய்ந்தால், டிசெம்பர் 2014ஆம் ஆண்டு வழங்கப்பட்ட அறிக்கையில், அச்செயற்றிட்டத்தின் அடைவை நோக்கிய முன்னேற்றம், 'திருப்திகரமானது' என்றும் ஒட்டுமொத்த அமுல்படுத்தல், 'ஓரளவு திருப்திகரமானது' என்றும் காணப்படுகிறது. இவ்வாண்டு ஏப்ரலில் வெளியிடப்பட்ட அறிக்கையில், செயற்றிட்டத்தின் அடைவை நோக்கிய முன்னேற்றம், 'ஓரளவு திருப்திகரமானது' என்றும் ஒட்டுமொத்த அமுல்படுத்தல், 'ஓரளவு திருப்திகரமானது' என்றும் காணப்படுகிறது. கோட்டாவினால் எல்லாம் தவறு எனில், இவ்விடயத்தில் இவ்வரசாங்கத்தின் திணைக்களங்களும் அதிகாரசபைகளும், முன்னேற்றத்தை வெளிப்படுத்தியிருக்க வேண்டாமா?
இதைவிடக் கவனிக்கப்பட வேண்டிய இன்னொரு முக்கியமான விடயம், கொழும்பிலும் இன்னுஞ்சில பகுதிகளிலும் ஏற்பட்ட வெள்ளம் தொடர்பாக அதிகம் கவலைப்படும் அரசியல்வாதிகள், மலையகப் பகுதிகளில் ஏற்பட்டுள்ள கோரமான மண்சரிவு பற்றி அதிகமாகக் கவனஞ்செலுத்துவதில்லை. உலக வங்கியிடமிருந்தும் ஏனைய நிறுவனங்களிடமிருந்தும், மலையகத்தில் மண்சரிவைத் தடுப்பதற்கான வேலைத்திட்டங்களுக்காகக் கிடைக்கும் கடனை விட, கொழும்பை அழகுபடுத்துவதற்கும் கொழும்பில் வெள்ளத்தைத் தடுப்பதற்கும் கிடைக்கக்கூடிய கடன் அதிகமானது, அத்தோடு, இலகுவாகவும் கிடைக்கக்கூடியது. ஆகவே தான், கொழும்பின் வெள்ளம் தொடர்பாக இத்துணை கரிசனை, இரு தரப்பிலிருந்தும்.
மக்களைப் பொறுத்தவரை, யார் குற்றினாலும் அரிசி வேண்டும் என்ற மனநிலையே காணப்படுகிறது. முன்பு அரிசி குற்றியவர் வேண்டாமென முடிவெடுத்து, புதியவரை அரிசி குற்ற அழைத்தால், பழையவர் எவ்வளவு மோசமானவர் என்பதைப் பற்றிய 'கதை'களைக் கேட்பதற்கு, மக்கள் விரும்புவதில்லை, மாறாக, புதிதாக வந்தவரால் எவ்வளவு சிறப்பான அரிசி குற்றப்படுகிறது என்பதைப் பார்க்கவே விரும்புகின்றனர்.
உலக வங்கியால் வெளியிடப்பட்டுள்ள ஆய்வறிக்கையின்படி, உலகில் ஏற்பட்டுவரும் காலநிலை மாற்றத்தின் காரணமாக, 2050ஆம் ஆண்டுக்குள், 1.3 பில்லியன் மக்கள் பாதிக்கப்படுவார்கள் எனவும் 158 ட்ரில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான சொத்துகளுக்குப் பாதிப்பு ஏற்படுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவற்றில் மக்கள் அதிகமாகப் பாதிக்கப்படுவதைத் தவிர்ப்பதற்காக, நகரங்களைத் திட்டமிட்டு அமைக்குமாறு அது கோரியுள்ளது. தவிர, நவீன தொழில்நுட்பங்களையும் புத்தாக்க முயற்சிகளையும் கருத்திற்கொண்டு, இயற்கை அனர்த்தத்தின் பாதிப்புகளைக் குறைக்க நடவடிக்கை எடுக்குமாறும் அது கோருகின்றது. அதற்கான, அரசாங்கங்களுக்கும் அமைப்புகளுக்குமாக, நவீன கருவிகளையும் தொழில்நுட்பங்களையும் வழங்குவதற்கும் அது தயாராக இருக்கிறது என்றும் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் தான், எதிர்காலத்தைத் திட்டமிட்டுக் கொண்டுசெல்லப்பட வேண்டிய தேவை, அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு இருக்கிறது. உலகில் ஏற்பட்டுவரும் காலநிலை மாற்றம் காரணமாக, இயற்கை அழிவுகளின் எண்ணிக்கை, எதிர்காலத்தில் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளனவே தவிர, குறைவதற்கு அல்ல. எனவே தான், அடுத்த அழிவு வரும்வரை காத்திருந்து, அதன் பின்னர் மீண்டும் ஞானம் பெறுவதை விட, இந்த அழிவைத் தொடர்ந்து ஏற்பட்ட ஞானத்தைப் பயன்படுத்தி, தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வது, அவசியமானது. இந்தப் பணி, அரசாங்கங்களுக்கும் அமைப்புகளுக்கும் மாத்திரமன்றி, பொதுமக்களுக்கும் உரியது தான் என்பது முக்கியமானது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
4 hours ago