2025 ஒக்டோபர் 10, வெள்ளிக்கிழமை

இரண்டு வருடம் கடந்த போராட்டம்

R.Tharaniya   / 2025 ஒக்டோபர் 06 , பி.ப. 03:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

லக்ஸ்மன்

மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதான மேய்ச்சல் தரையாக விளங்கும் மயிலத்தமடு, மாதவணை பிரதேசத்தில் பொலன்னறுவை,  மாவட்டத்தவரின் அத்துமீறிய சேனைப் பயிர்செய்கை செயற்பாடுகள் காரணமாக கால்நடைப் பண்ணையாளர்கள் கடந்த ஆட்சி காலங்களில் பெரும் சிரமங்களை எதிர்கொண்டனர். 

சிறிது சிறிதாக அத்துமீறிய செயற்பாடுகள் தணிக்கப்பட்டன. இருந்தாலும், இப்போதும் ஒருசிலர் அப்பிரதேசத்தில் தங்களது தவறான செயற்பாடுகளில் ஈடுபட்டே வருகின்றனர். அதற்கெதிரான போராட்டமும் நடைபெற்றுக் கொண்டே இருக்கிறது. 

மயிலத்தமடு - மாதவனை மேய்ச்சல் தரைப்பகுதியானது, இதுவரையில் வர்த்தமானியில் வெளியிடப்படுத்தப்படாதிருப்பதே அதற்கான முக்கிய காரணம் என்பது கால்நடை பண்ணையாளர்களின் நிலைப்பாடு. இருந்தாலும் அதற்குள்  வேறு சில விடயங்களும் இருக்கலாம் என்பது யதார்த்தம்.

யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்த காலங்களில் இல்லாத பொலன்னறுவை அம்பாறை மாவட்டங்களைச் சேர்ந்தவர்களின் அத்துமீறிய வருகை யுத்தம் முடிவுக்கு வந்தவுடன் ஆரம்பித்தது. அது முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவின் காலத்தில் உச்சத்துக்கு வந்தது.

அதன் பின்னர் ரணிலின் ஆட்சி காலத்தில் ஓரளவுக்குக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டாலும் முடிவாகாத நிலையில், பண்ணையாளர்கள் சித்தாண்டிச் சந்தியில் போராட்டத்தினை ஆரம்பித்தனர். சந்திப்புக்கள் பல நடைபெற்றிருந்தாலும் இப்போதும் முடிவுக்கு வரமலாம்.

எதிர்பார்த்தளவுக்கான எந்தவிதமான முன்னேற்றத்தையும் அடைந்து விடாத போராட்டத்தினை பண்ணையாளர்கள் தொடர்ந்து வருகின்றனர் என்பதே உண்மை. எந்தவொரு தீர்வும் கிடைக்காத நிலையில் மூன்றாவது வருடத்துக்குள் இந்தப் போராட்டம் சென்றிருக்கிறது.

பரம்பரை பரம்பரையாகப் பண்ணை வளர்ப்புக்கெனப் பயன்படுத்தி வந்த காணிகளை வர்த்தமானிப்படுத்தித் தாருங்கள் என்ற நியாயமான கோரிக்கைக்குப் பதில் கிடைக்கும்வரை தொடரும் என்பது பண்ணையாளர்களின் நிலைப்பாடு. 

2009 இற்கு பின்னர் மட்டக்களப்பு மாவட்டத்தின் மேய்ச்சல் தரைப்  பிரச்சினை தலையெடுக்கத் தொடங்கியது முதல் பல தடவைகளிலும் பலவாறும் தீர்வுக்காக முயற்சி செய்து பயனில்லாமல், பல பிரச்சினைகளை எதிர்கொண்டும் வந்திருந்த கால்நடை வளர்ப்பாளர்கள் இறுதியாக எடுத்த முயற்சியாக இந்த சுழற்சி முறையிலான உண்ணாவிரதம் அமைந்திருக்கிறது. 

மயிலத்தமடு, மாதவணை பிரதேசம் 1974இன் காலப்பகுதியிலிருந்து மேய்ச்சல் தரையாகப்  பயன்படுத்தப்பட்டு வருகின்றது. அத்துமீறிய குடியேற்ற சம்பவங்கள் இங்கு இடம்பெற்றபோது, அவற்றினைத் தடுப்பதற்குச் சரியான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.

இவர்களை வெளியேற்றுவதற்குக் கிழக்கு முதலமைச்சர்  மற்றும் ஆளுநரால் 2009களில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் அப்போது முழுமையான பயனைத் தரவில்லை. 

அதேநேரம், 2015இல் ஆட்சி மாற்றத்தையடுத்து, 2016இல் அத்துமீறலாளர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டதோடு, நீதிமன்றக் கட்டளையின் அடிப்படையில், அனைவரும் வெளியேற்றப்படுவார்கள் என்று மகாவலி அதிகார சபையினால் உறுதியளிக்கப்பட்டது.

இருந்தாலும், அது முழுமையாக நடைபெற்றிருக்கவில்லை. கிழக்கு மாகாண சபை 2017 செப்டெம்பரில் கலைக்கப்பட்டதையடுத்து, அத்துமீறலாளர்களது நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பித்தன.

கோட்டாபய ஜனாதிபதியானதும் இந்த அத்துமீறல்கள் பூதாகாரமானது. அதற்கு முழுமையான ஒத்துழைப்பையும் உந்துதல் உதவிகளை வழங்கியவர் முன்னாள் கிழக்கு ஆளுநர் அனுராதா ஜகம்பத் ஆவார்.

பெருந்தொகை கால்நடைகள் அத்துமீறி பயிர்ச்செய்கையில் ஈடுபடுவோரால் களவாடப்படுவதும், பிடிக்கப்படுவதும்,  இறைச்சிக்காகக் கொல்லப்படுவதும், பொறி வெடிக் குண்டுகளால் கொல்லப்படுவதும் வாய் மற்றும் உடற் பாகங்கள் பாதிக்கப்படுவதும் சம்பவங்களாக இருந்தன.

அவ்வாறு காணாமல்போன தமது கால் நடைகளைத் தேடிச் செல்லும்  பண்ணையாளர்கள் தாக்கப்படுல், கைது செய்யப்படுதல் போன்ற சந்தர்ப்பங்களும் நடைபெற்று வந்தன. இதனால் நூற்றுக்கணக்கான கால்நடைகள் மரணமாகியிருக்கின்றன. 

இன்னல்களை அனுபவித்தபடியே தங்களது கால்நடைகளைப் பாதுகாக்க வேண்டிய கட்டாயத்திலிருக்கின்ற பண்ணையாளர்களுக்கு ஏற்கனவே வாய் மொழி மூலமாக வழங்கப்பட்ட தீர்வுகள் எதுவும் பயனில்லாதவைகளாகவே இருந்துள்ளன. 

மயிலத்தமடு - மாதவணை பிரதேசத்தில் மேய்ச்சல் தரைக்கான பகுதி   அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. ஏறாவூர் பற்று பிரதேச செயலகப்பிரிவின் ஈரணைக்குளம் கிராம சேவையாளர்பிரிவில் 6383 ஹெக்டெயரும், கோரளைப்பற்று தெற்கு பிரதேச செயலாளர் பிரிவின் குடும்பிமலை கிராம சேவையாளர் பிரிவில் 9,969 ஹெக்டெயரும் முன்மொழியப்பட்டுள்ளன. இருப்பினும், அது வர்த்தமானி அறிவித்தலாக வெளியிடப்படவில்லை. 

அது நிறைவேறாமையினாலேயே இப்பிரச்சினை நீண்டகாலப் பிரச்சினையாக மாறியிருக்கிறது.கல்லோயா குடியேற்றம், அல்லை- கந்தளாய் குடியேற்றம் என பல குடியேற்றங்களைக் கிழக்கில் ஏற்படுத்தி கிழக்கில் தமிழர்களுடைய இனப் பரம்பலைக் குறைத்தது மாத்திரமல்லாமல், மட்டக்களப்பு மாவட்டம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு அம்பாறை மாவட்டம் தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்டது.

தமிழர்களுடைய இனப்பரம்பல் கிழக்கின் திருகோணமலை, அம்பாறை மாவட்டங்களில் குறைந்து கொண்டே வருகிறது. மட்டக்களப்பு மாவட்டம் மாத்திரமே பெரும்பான்மையாக தமிழர்கள், தமிழ் பேசும் மக்கள் வாழுகின்ற மாவட்டமாக இருந்து வருகிறது. அந்தவகையில், இனப்பரம்பலை மாற்றுகின்ற செயற்பாடாகவே மட்டக்களப்பு மாவட்டத்தின் மேய்ச்சல்தரைப் பிரதேசத்தில் முன்னெடுக்கப்படும் குடியேற்ற நடவடிக்கைகள் பார்க்கப்படவேண்டும் என்ற அச்சமும் வெளியிடப்பட்டது.

மேய்ச்சல் தரை பிரச்சினையில் எதிர்பார்த்த அளவு முன்னேற்றம் இல்லாவிட்டாலும் ஓரளவுக்கு முன்னேற்றம் கண்டுள்ளதாகப் பண்ணையாளர்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர். சிவில் தரப்பினர் பண்ணையாளர்களுடைய பிரச்சினைகளை சர்வதேச மட்டம் வரையிலும் வெளிப்படுத்தும் செயற்பாடுகளில் ஈடுபட்டுவருகின்றனர்.

அதற்கு மேய்ச்சல் தரைப் போராட்டக்காரர்களிற்கு வெற்றி கிடைக்கவேண்டும் என்பதே நோக்கமாக இருக்கிறது. இருந்தாலும் மகாவலி அபிவிருத்தி திட்டத்திற்குட்பட்ட பிரதேசமாக இந்தப்பிரதேசம் உள்ளதனால் மகாவலியினுடைய நடவடிக்கைகளுக்குட்பட்டதாகவே இருக்க வேண்டிய நிலைமையொன்றும் உள்ளது. 

மகாவலி பி வலயமானது அம்பாறை, பொலன்னறுவை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களை உள்ளடக்கியதாக இருக்கிறது. பெரும்பாலான நிலப்பகுதி மட்டக்களப்பு மாவட்டத்திற்குரியதாக இருக்கிறது.

மகாவலியினுடைய அபிவிருத்தி திட்டங்கள் பெரும்பான்மை மக்களைப் பிரதானமாகக் கொண்டு மேற்கொள்ளப்படுவது என்றவகையில், மட்டக்களப்பு மாவட்டத்தில் பெரும்பான்மை மக்களை அதிகளவில் உள்வாங்கி மேற்கொள்ளப்படும் நிலை ஏற்பட்டால் பாதிக்கப்படவுள்ளது கால்நடைப் பண்ணையாளர்களே. 

இந்த இடத்தில் வாழ்வாதாரத்திற்கு அடுத்தபடியாக, நில உரிமை மீறல், கால்நடைகளின் பாதுகாப்பு, பாரம்பரிய கால்நடை இனங்களின் அழிவு, நல்லிணக்கம் பாதிக்கப்படல், எதிர்கால சந்ததிகளுக்கான வாழ்வாதாரம் கேள்விக்குறியாதல், இயற்கை வள ஆக்கிரமிப்பு, பாரம்பரிய புல்லினங்களுக்குப் பாதிப்பு, இனப் பரம்பல் மாற்றம், அரசியல் பிரதிநிதித்துவப் பாதிப்பு என பல்வேறு விடயங்கள் கவனத்திற் கொள்ளப்பட வேண்டும். 

வடக்கில் மணலாறு பகுதி மகாவலி எல் வலயமாக உருவாகி வெலிஓயாவாக மாற்றம்பெற்றது. அதே ஒழுங்கில் கிழக்கில் கொண்டுவரப்பட்டுள்ள மகாவலி பி வலயம் அமையலாம் என்ற அச்சம் பெரும்பாலானவர்களிடம் உள்ளது. இதனால் ஏற்படவுள்ள பாதிப்பானது அனைவரையும் உள்வாங்கும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. 

இயற்கையாக அமைந்துள்ள கால்நடைகள் வளர்க்கப்பட்டு வருகின்ற இப்பிரதேசம், மகாவலி பிரதேசத்துக்குள் உள்வாங்கப்பட்டிருக்கிறது. இந்நிலைமை கால்நடை பண்ணையாளர்களின் நோக்கத்தினை சிதைக்கும் என்ற கவலை இருந்தாலும், அரசாங்கத்தின் திட்டம் என்றவகையில், அனைவரும் வாய்மூடிய பொம்மைகளாக இருக்கவேண்டிய சூழலே உருவாகியிருக்கிறது. 

முன்னைய ஆட்சிக்காலத்தில் தொடங்கப்பட்ட கால்நடைப் பண்ணையாளர்களின் மேய்ச்சல் தரைக்கான போராட்டம், தற்போதைய மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஆட்சியிலும்  
தொடர்ந்து கொண்டிருப்பது அரசுக்கு அபகீர்த்தியான ஒன்றேயாகும். அரசாங்கம் இதனைக் கண்டும் காணாத வகையிலிருந்து வருகின்றமையானது, இவ்விடத்தில் கவனிக்கப்படவேண்டும். 

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தமிழ் மக்களது விடயங்களில் பாராமுகமாக இருப்பது போன்ற நடத்தையைக் கைக் கொண்டிருப்பதை அவதானிக்க முடிகிறது. அதே போலவே கிழக்கின் மேய்ச்சல் தரைப் பிரச்சினையையும் கையாள்வது போலவே தெரிகிறது. 

அபிவிருத்தி என்ற போர்வையில் மேற்கொள்ளப்படுகின்ற செயற்பாடுகள் அரசியல் அதிகாரங்களுக்கு அப்பாற்பட்டதல்ல. என்றாலும் பிரதேசத்தின் அரசியல் தரப்பினர் கொடுக்கின்ற அழுத்தங்களின் போதாமை தற்போது வெளிப்படத் தொடங்கியிருக்கிறது.

அல்லது தேவையற்றதான ஒரு போராட்டம் நடத்தப்படுகிறதோ என்ற சந்தேகத்தையும் தோற்றுவிக்கிறது. எது எவ்வாறானாலும், திட்டமிட்ட வகையில் மேற்கொள்ளப்படும் மகாவலியின் அபிவிருத்தித் திட்டம் மேய்ச்சல் தரையை வர்த்தமானிப்படுத்தக் கோரும் பண்ணையாளர்களுக்கும் கால்நடைகளுக்கும் பாதகத்தை ஏற்படுத்தாதிருந்தால் சரி.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X