Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 30, புதன்கிழமை
கே. சஞ்சயன் / 2019 டிசெம்பர் 22 , பி.ப. 02:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆட்சி மாற்றங்களுக்குப் பின்னர், அரசியல் பழிவாங்கல்கள் நிகழ்வது, இலங்கை போன்ற அரைகுறை ஜனநாயக நாடுகளில் வழக்கமான ஒன்றுதான்.
புதிய அரசியல் கலாசாரத்தை உருவாக்கப் போவதாக, வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்திருக்கும் தற்போதைய அரசாங்கமும் கூட, அரசியல் பழிவாங்கல், இராணுவ மயமாக்கல் கலாசாரத்தில் இருந்து விடுபடவில்லை. இதனையே, அதன் ஒரு மாதகால ஆட்சி உறுதிப்படுத்தி இருக்கிறது.
2010இல் மஹிந்த ராஜபக்ஷ, மீண்டும் ஆட்சிக்கு வந்த பின்னர் இடம்பெற்ற மிகப்பெரிய அரசியல் பழிவாங்கல் சம்பவமாக, ஜனாதிபதி தேர்தலில் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட சரத் பொன்சேகா, சிறையில் அடைக்கப்பட்டதைக் குறிப்பிடலாம். அப்போது, அவருக்கு ஆதரவாகச் செயற்பட்ட படை அதிகாரிகள் பலர், பழிவாங்கலுக்கு உள்ளாக்கப்பட்டனர்.
அத்துடன், ஷிராணி பண்டாரநாயக்க, பிரதம நீதியரசர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட விடயமும், மிகப்பெரிய அரசியல் பழிவாங்கலாக, அப்போது பார்க்கப்பட்டது.
இந்த இரண்டு அரசியல் பழிவாங்கல்களும், மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் ஜனநாயகம், நீதித்துறை சுயாதீனம் பற்றிய எதிர்மறையான விம்பம் ஒன்றை, வெளியுலகுக்குக் காண்பித்தன.
2015ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்துக்குப் பின்னரும், அரசியல் பழிவாங்கல்கள் இடம்பெற்றன. மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக்காலத்தில், இடம்பெற்ற முறைகேடுகள், ஊழல்களில் தொடர்புபட்டதாக இப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட ராஜபக்ஷ குடும்பத்தைச் சேர்ந்த பலருக்கு எதிராக, விசாரணைகள் நடத்தப்பட்டன. சிலர் சிறைகளிலும் அடைக்கப்பட்டனர்.
அத்துடன், மஹிந்த ராஜபக்ஷ அமைச்சரவையில் இருந்தவர்களும் அதிகாரிகளாக இருந்தவர்களும் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டனர். எனினும், அவர்களுக்கு எதிரான விசாரணைகளை, உரிய காலத்தில் நடத்தி, குற்றமிழைத்திருந்தால் தண்டனையைப் பெற்றுக் கொடுக்க, முன்னைய அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை.
வெள்ளை வான் கடத்தல் குற்றச்சாட்டுகளில் இருந்து, பல ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் செய்து, வெளிநாடுகளில் முதலீடு செய்தார்கள் என்று, ராஜபக்ஷ குடும்பத்தினர் மீதும், அமைச்சர்கள், அதிகாரிகள் மீதும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட, முன்னைய அரசாங்கத்தில் இருந்தவர்கள், செய்தியாளர் சந்திப்புகளில் நீண்ட கதைகளை அளந்தார்கள்.
அந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்த ராஜபக்ஷவினர், “எமக்கு எதிராக, அரசாங்கம் அரசியல் பழிவாங்கலை மேற்கொள்கிறது” என்றே கூறினர். அவ்வாறான நிலையில், ஆட்சியில் இருந்த அரசாங்கம், அந்தக் குற்றச்சாட்டுகள் அரசியல் பழிவாங்கல் அல்ல என்பதை, நீதிமன்றங்களில் நிரூபித்திருக்க வேண்டும். ஆனால், கடந்த அரசாங்கம் முறையாகவும் விரைவாகவும் விசாரணைகளை முன்னெடுத்து, குற்றவாளிகளைத் தண்டிக்கத் தவறியது.
புதிய அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர், பல வழக்குகள் தொய்வு காணத் தொடங்கி விட்டன. சிலவற்றுக்கு முற்றுப்புள்ளி வைத்து, தள்ளுபடி செய்யும் நிலை வந்து விட்டது. அந்த வழக்குகளும் விசாரணைகளும் காலத்தையும் உழைப்பையும் வீணடிப்பதற்காக நடத்தப்பட்டவையாகவே முடிந்து போயிருக்கின்றன.
கடந்த அரசாங்கம், அரசியல் பழிவாங்கல்களில் ஈடுபடவில்லை என்பதை நிரூபிக்கவில்லை. எந்தக் குற்றச்சாட்டுகள், நீதிமன்றங்களில் நிரூபிக்கப்படவில்லையோ, நிரூபிக்கப்படுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லையோ, அவையெல்லாம் அரசியல் பழிவாங்கல்களாகவே அர்த்தப்படுத்தப்படும்.
தாங்கள் ஆட்சிக்கு வந்தால், இவ்வாறான அரசியல் பழிவாங்கல்கள் இடம்பெறாது என்று, மஹிந்த ராஜபக்ஷ, கோட்டாபய ராஜபக்ஷ, நாமல் ராஜபக்ஷ போன்றவர்கள் அடித்துக் கூறியிருந்தார்கள்.
கடந்த சில நாள்களுக்கு முன்னர் கூட, ஹம்பாந்தோட்டையில் உரையாற்றிய நாமல் ராஜபக்ஷ, “நாங்கள் அரசியல் பழிவாங்கல்களில் ஈடுபடமாட்டோம்” என்று கூறியிருந்தார். ஆனால், இந்த அரசாங்கத்தின் ஒரு மாத கால ஆட்சி, அரசியல் பழிவாங்கல்கள் நிரம்பியதாக, இராணுவ மயப்படுத்தப்பட்ட ஒன்றாகவே மாறி வருகிறது என, ஐ.தே.கவினர் குற்றம்சாட்டுகின்றனர். ஊடகங்களுக்கு எதிரான வன்முறைகளும் அழுத்தங்களும் அதிகரித்து வருவதாகக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.
சுவிஸ் தூதரகப் பணியாளர் கடத்தப்பட்டு, அச்சுறுத்தப்பட்டதாகக் கூறப்பட்ட விவகாரத்தில், அரசாங்கத்தின் அணுகுமுறை தொடர்பாகப் பரவலான விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன. தூதரகப் பணியாளர் கைது செய்யப்பட்ட பின்னர், சுவிற்சர்லாந்து அரசாங்கம் வெளியிட்டிருந்த அறிக்கை, இலங்கை அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பான அதிருப்தியைப் பிரதிபலிப்பதாகவே இருந்தது.
இந்தநிலையில், நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர், ஊடகங்களின் சுதந்திரம் முற்றாக நசுக்கப்படும் என்று ஐ.தே.க நாடாளுமன்ற உறுப்பினர்கள் எச்சரிக்கை விடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஆட்சி மாற்றம் நிகழ்ந்தால், எவையெல்லாம் நடக்காது என்று ராஜபக்ஷவினரால் உறுதியளிக்கப்பட்டதோ, அவையெல்லாம் நடந்து கொண்டிருப்பதாகவே தெரிகிறது. அதுபோலவே, ஆட்சி மாறினால் என்னவெல்லாம் நடக்கும் என்று, ஐ.தே.கவினர் எச்சரித்தனரோ, அவையெல்லாம் நடந்து கொண்டிருப்பதையும் அவதானிக்க முடிகிறது.
அரசியல் பழிவாங்கல்கள் நடக்காது என்ற வாக்குறுதிகள், இப்போதும் அரசாங்கத் தரப்பில் உள்ளவர்களால் கொடுக்கப்பட்டுக் கொண்டிருந்தாலும், தற்போதைய அரசாங்கத்துக்கு எதிராகச் செயற்பட்டவர்கள், முறைப்பாடுகளைச் செய்தவர்கள், குற்றச்சாட்டுகளை முன்வைத்தவர்கள், விசாரணைகள், கைதுகள், அழுத்தங்களுக்கு முகம் கொடுத்துக் கொண்டிருக்கின்ற நிலையே காணப்படுகிறது. அரசாங்கத்தையும் ஜனாதிபதியையும் சுதந்திரமாக விமர்சனங்களைச் செய்யக்கூடிய நிலை கடந்த ஆட்சியில் இருந்தது.
அப்போது, ஜனாதிபதிக்கு எதிராகக் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்ட போதும், அவ்வாறான விமர்சனங்களை முன்வைத்தவர்கள் பழிவாங்கப்படவில்லை. தற்போதைய அரசாங்கத்துக்கு எதிராக, குற்றச்சாட்டுகளை முன்வைத்தவர்களும் விமர்சனங்களைச் செய்தவர்களும் பாதுகாப்பற்ற நிலையை எதிர்கொள்ளும் நிலை தோன்றியிருக்கிறது.
இது ஜனநாயக சூழலும், அதற்கான வெளியும் குறுகிக் கொண்டு வருவதற்கான அறிகுறியாகவே பார்க்கப்படுகிறது.
வெள்ளை வான் கடத்தல்கள் குறித்த தகவல்களை வெளிப்படுத்திய இருவர், கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட சம்பவம், கடத்தப்பட்டு அச்சுறுத்தப்பட்டதாகக் கூறப்பட்ட சுவிஸ் தூதரகப் பணியாளர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட சம்பவம், முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க கைது செய்யப்பட்டிருக்கின்ற சம்பவம், முன்னாள் அமைச்சர் ராஜித சேனரத்னவுக்கு எதிராக நடத்தப்படும் விசாரணைகள் எல்லாமே, ஒரு நேர்கோட்டில் நிகழ்ந்திருப்பவையாகவே உள்ளன.
நியாயமான விமர்சனங்களை முன்வைக்கலாம் என்றும், ஊடகங்களின் சுதந்திரத்துக்குப் பாதிப்பு வராது என்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உறுதியளித்துள்ளாராயினும், அவருக்கு எதிராக, அவரது அரசாங்கத்துக்கு எதிராகக் குற்றச்சாட்டுகளை முன்வைத்தவர்களின் நிலையைப் பார்த்து, ஊடகங்கள் மிரளத் தொடங்கியிருக்கின்றன. ஊடகங்கள் முன்னரைப் போல, சுய தணிக்கையுடன் செயற்படும் நிலைக்குத் தள்ளப்படுகின்றன.
இவ்வாறான நிலை, தேர்தல் காலத்தில் ராஜபக்ஷவினர் கொடுத்திருந்த வாக்குறுதிகளுடன், ஒருபோதும் ஒத்துப் போகக் கூடியவையல்ல. ராஜகிரிய விபத்து தொடர்பாக, சம்பிக்க ரணவக்கவுக்கு எதிராகச் சட்ட நெறிமுறைகளுக்கு அமைவாக நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்ற கருத்து, சிங்கள பௌத்த அடிப்படைவாத அமைப்புகள் மத்தியிலேயே காணப்படுகிறது.
அவர் கைது செய்யப்படுவதற்கு முன்னதாக, கொழும்பில் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில் கருத்து வெளியிட்ட ஓமல்பே சோபித தேரர், “அரசியல் பழிவாங்கலில் அரசாங்கம் ஈடுபடக்கூடாது” என்று கூறியிருந்தார். சிங்கள பௌத்த இயக்கத்தால் தான், கோட்டாபய ஜனாதிபதியாகி இருக்கிறார் என்பதையும் அவர் நினைவுபடுத்தியிருந்தார். சம்பிக்கவும் ஒரு தீவிர சிங்கள பௌத்த கொள்கையைப் பின்பற்றுபவர் தான். அவருக்கு, சிங்கள பௌத்த மதருமார் மத்தியில் கணிசமான செல்வாக்கும் இருக்கிறது.
ஆனால், அவர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக, மிகக்கடுமையான விமர்சனங்களை முன்வைத்தவர். அவரும் ராஜித சேனரத்னவும் தான், ராஜபக்ஷவினருக்கு எதிரான குற்றச்சாட்டுகளையும் விமர்சனங்களையும் தீவிரமாக முன்வைத்து வந்தார்கள்.
பொதுத்தேர்தலில் பெரும்பான்மை பலத்தைப் பெறுவதற்கு, சில ஆசனங்கள் போதாமல் இருந்தால் கூட, சம்பிக்க ரணவக்கவையும் ராஜித சேனரத்னவையும் சேர்த்து ஆட்சி அமைக்கமாட்டோம் என்று, பொதுஜன பெரமுனவினர் கூறுகின்ற அளவுக்கு, வெறுப்பைச் சம்பாதித்திருப்பவர்கள். இவர்கள் தான், இப்போதைய அரசாங்கத்தின் விசாரணைகள், சட்ட நடவடிக்கைகளை எதிர்கொண்டிருக்கிறார்கள்.
இன்னும் சில மாதங்களில், நாடாளுமன்றத் தேர்தலுக்குச் செல்ல வேண்டியுள்ள நிலையிலுள்ள அரசாங்கம், சர்ச்சைக்குரிய நடவடிக்கைகளால் தனது பெயரைக் கெடுத்துக் கொள்கிறதோ என்றே எண்ணத் தோன்றுகிறது.
அண்மையில், ஊடக பிரதானிகளைச் சந்தித்த ஜனாதிபதியிடம், ராஜிதவின் குற்றச்சாட்டுகள் குறித்துக் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், “பொய்கள் நிரம்பிய, அரசியல் கலாசாரம் தோல்வியடைந்து விட்டது” என்று கூறியிருந்தார். புதிய அரசியல் கலாசாரத்துக்குள் நுழைவதற்கான சமிக்ஞைகளைக் காண்பித்த ஜனாதிபதி, தானும் பழைய பழிவாங்கல் கலாசாரத்துக்குள், ஏன் நுழைய முனைகிறார் என்பது தான், பலருக்கும் புரியாத புதிராக உள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
3 hours ago
3 hours ago