2025 மே 16, வெள்ளிக்கிழமை

இலங்கைக் கிரிக்கெட்: தேசம், கோசம், அரசியல்

Thipaan   / 2016 மார்ச் 16 , மு.ப. 04:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக் கிரிக்கெட்டினை முன்னிறுத்திய அரசியல் உரையாடல்கள், தமிழ் சமூக ஊடகப் பரப்பில் கடந்த சில நாட்களாக மீண்டும் முனைப்புப் பெற்றிருக்கின்றன. இந்தியாவில் தற்போது நடைபெற்றுவரும் இருபதுக்கு - 20 உலகக் கிண்ணப் போட்டிகளில் கலந்து கொள்ளும் இலங்கை அணி, 'ஒரே தேசம்- ஒரே அணி (One Nation- One Team)' என்கிற மகுட வாசகத்தோடு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் வழியனுப்பி வைக்கப்பட்டது. அத்தோடு, இலங்கை அணியின் ஆதரவாளர்களில் ஒருபகுதியினர் 'ஒரே தேசம்- ஒரே அணி' என்கிற மகுட வாசகத்தினை தமது ஆதரவு நிலைப்பாட்டின் பிரதிபலிப்பாக சமூகத் தளங்களில் பகிர்ந்து கொள்ள ஆரம்பித்தனர். அங்கிருந்துதான் கிரிக்கெட் முன்னிறுத்தும் அரசியல் பற்றிய உரையாடல்கள் மீள ஆரம்பித்தன.

இறுதி மோதல்களுக்குப் பின்னர், மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் 'ஒரே நாடு- ஒரே தேசம் (One Country- One Nation)' என்கிற வாசகத்தை தன்னுடைய அனைத்துப் பிரசார நடவடிக்கைகளின் போதும் முன்வைத்தது. குறிப்பாக, வடக்கு, கிழக்கில் பல சுவர்களையும் மதில்களையும் 'ஒரே நாடு- ஒரே தேசம்' நிறைத்துக் கொண்டிருந்தது. இந்த நிலை, இன்னமும் மாறிவிடவில்லை. புதிய சுவர்களிலும் அந்த வாசகங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக எழுதப்படுகின்றன. அந்தப் பிரசாரப் போக்கின் அடுத்த கட்டத்தையே இலங்கைக் கிரிக்கெட் அணிக்கான 'ஒரே தேசம்- ஒரே அணி' என்கிற மகுட வாசகமும் வலியுறுத்தி நிற்கின்றது.

இலங்கையில், கிரிக்கெட் விளையாட்டானது, மேல்தட்டு வர்க்கத்திடமிருந்து 1980களுக்கு பின்னர் மெல்ல நகர்த்தப்பட்டு, 1990களில் சாதாரண மக்களின் விளையாட்டாக மாறியது. குறிப்பாக, சனத் ஜெயசூரிய போன்றவர்கள் தென்னிலங்கைக் கிராமங்களிலிருந்து வருகை தர ஆரம்பித்ததும் அந்த நிலை வீச்சம் பெற்றது. அர்ஜுன ரணதுங்க தலைமையிலான இலங்கைக் கிரிக்கெட் அணி, 1996ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தை வென்ற பின்னர் அது, தென்னிலங்கை மக்களின் தனிப்பட்ட கௌரவமாகவும் மாறியது.

இலங்கை முதலாவது தடவையாக உலகக் கிண்ணத்தை வென்ற தருணத்தில், யாழ்ப்பாணத்திலிருந்து பெருமளவான மக்கள் வன்னிப் பெருநிலப்பரப்பினை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தார்கள். அல்லது நகர்த்தப்பட்டார்கள். பெரும் அலைக்கழிப்பொன்றுக்குப் பின்னரான நாட்களிலும் இலங்கைக் கிரிக்கெட் அணியின் வெற்றி, ஓலைக் குடிசைகளுக்குள் தமிழ் மக்களின் ஒரு பகுதியினால் சந்தோசமாக வரவேற்கப்பட்டது. இந்தியக் கிரிக்கெட் அணியின் இரசிகர்களாக இருந்த தமிழ் மக்களில் குறிப்பிட்டளவானர்கள், அதன்பின்னர் இலங்கைக் கிரிக்கெட்டின் இரசிகர்களாக மாறிப்போனார்கள்.

கிரிக்கெட் அணியொன்றின் மீதான அபிமானம் என்பது பல்வேறு காரணங்களுக்காக எழலாம். அது, தனியொரு வீரரின் மீதான பிடித்தத்தின் போக்கிலும், (முரண்பாடுகளால் நிறைந்திருந்தாலும்) சொந்த நாட்டுக்காரர்கள் என்கிற எண்ணப்பாட்டினாலும், அசாத்திய திறமையாளர்கள் என்கிற உணர்நிலையாலும் ஒருமித்த கண்ணியமான ஆட்டக்காரர்கள் என்கிற ரீதியிலும்  அபிமானமாகவும் ஆதரவாகவும் மாறலாம். இதுதான், கிரிக்கெட்டுக்குள் அதிகமாக நிகழ்வது. இப்படியான நிலைகளுக்குள் அரசியல் காரணங்கள் அவ்வளவாக உணரப்படுவதில்லை. அது, உணர்நிலை என்கிற பக்கத்துக்கே வருவதில்லை. ஏனெனில், தெற்காசியாவில் கிரிக்கெட் என்பது ஒருவகைப் போதை. சினிமாவையும் மதத்தையும் போன்றது.

ஆக, அரசியல் உணர்நிலையை பின்தள்ளி அபிமானத்தினை முன்னிறுத்தும் போதை மனநிலையை எந்தவொரு தரப்பும் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும். அது, இயல்பானது. அதன் ஒரு கட்டத்தையே இலங்கைக் கிரிக்கெட் அணியினை முன்னிறுத்தி, இலங்கை அரசாங்கம் கடந்த காலங்களில் முன்னெடுத்து வந்திருக்கின்றது. எதிர்காலத்திலும் முன்னெடுக்கும்.

இந்த இடத்தில் இன்னொரு விடயத்தினைத் தொட்டுச் செல்ல வேண்டியிருக்கின்றது. தமிழ் சமூக ஊடகப் பரப்பில் எழுந்திருக்கும் கிரிக்கெட் பற்றிய அரசியல் உரையாடல்களில் குறிப்பிட்டளவானவை, இலங்கை எதிர் இந்திய கிரிக்கெட் அணி ஆதரவு மனநிலையின் போக்கில் எழுந்தவை.

குறிப்பாக, 2009களுக்குப் பின்னர் 'இலங்கையைப் புறக்கணிப்போம்' என்கிற முனைப்பில் தமிழ்த் தரப்புக்குள்ளிலிருந்து சில கோசங்கள் வைக்கப்பட்டன. அதன்போக்கில், இலங்கைக் கிரிக்கெட் அணிக்கு எதிராகவும் சர்வதேச ரீதியில் தமிழ்த் தரப்பினால் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. அப்படியான நிலையில், 2011ஆம் ஆண்டு உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டியின் இறுதி போட்டியில்; இலங்கையும் இந்தியாவும் விளையாடின. அப்போதும், இலங்கைக் கிரிக்கெட்டினை அரசியலின் காரணத்தினால் எதிர்ப்போம் என்கிற கோசம் முன்வைக்கப்பட்டது. அன்றைக்கு கோசங்களை முன்வைத்தவர்களில் ஒரு பகுதியினர், இந்தியாவை ஆதரித்துக் கொண்டிருந்தனர்.

இன அழிப்பொன்றை செய்த நாடொன்றின் அணியினை எதிர்ப்பதாகக் காட்டிக் கொண்டிருந்தவர்கள், இந்தியாவை என்ன எண்ணப்பாட்டில் ஆதரித்தார்கள் என்று புரிந்து கொள்ள முடியாமல், என்னைப் போன்ற சிலர் முழித்துக் கொண்டிருந்தார்கள். இன அழிப்பின் பங்காளிகளின் அணியை ஆதரிப்பதிலுள்ள அரசியல் என்னவென்று புரியாமல் பலரும் குழம்பிப் போனார்கள். 

எமக்கு எதிரான அரசியல் முனைப்புக்கள் எந்த வடிவில் வந்தாலும் அதனைப் புரிந்து கொண்டு எதிர்க்க வேண்டும் என்பதும் களமாட வேண்டும் என்பவும் தமிழ்த் தேசிய விடுதலைக்கான தேவைகளாகும். ஆனால், அந்தப் போராட்டங்களின் மீது மிகவும் சீரான அறியும், முனைப்பும் இருக்க வேண்டும். மாறாக, அணியொன்றின் மீதான அபிமானத்தினையோ, எதிர்ப்பையோ நியாயப்படுத்துவதற்கான இரசிக மனநிலை வெளிப்பாடுகளை, அரசியல் எனும் போக்கில் முறையற்று உளறுவது அர்த்தமற்றது. அதனால், எந்தவித பயனும் இல்லை. அது, எதிரிகளை பலப்படுத்தும்.

2011ஆம் ஆண்டு ஜூலை மாதம் எம்.சி.சி.யில் குமார் சங்ககார 'கௌட்ரி சொற்பொழி'வை ஆற்றினார். அந்தச் சொற்பொழிவின் இறுதிப் பகுதி கீழ்க்கண்டவாறு இருந்தது, 'எமது நாட்டின் எதிர்காலத்தில், கிரிக்கெட் முக்கியமான பங்களிப்பை செய்ய வேண்டியிருப்பதால், சந்தர்ப்பத்தை நாம் பயன்படுத்திக் கொள்வோம். இப்போது யுத்தம் முடிவடைந்துவிட்டது. இலங்கை சமாதானம் மற்றும் சௌந்தர்யம் நிறைந்த புதியதொரு எதிர்காலத்தினை நோக்கி நிற்கின்றது.

பல்வேறு சாதிகள், குலங்கள், இனங்கள் மற்றும் மதங்களைச் சேர்ந்தவர்கள் பொதுவான தேசிய நோக்குக்காக ஒன்றிணைந்து தம் பல்முகத்தன்மையைக் கொண்டாடுகின்றார்கள். அவர்களே எனது அடித்தளம், அவர்களே எனது குடும்பம். அவர்களுக்காக நான் என் கிரிக்கெட்டை விளையாடுவேன். அவர்களின் உணர்வு கிரிக்கெட்டின் உண்மையான உணர்வாகும். எனது மக்கள் அனைவரும் என்னுடனேயே இருக்கின்றனர். நானொரு தமிழன், சிங்களவன், முஸ்லிம் மற்றும் பறங்கியன். நானொரு இந்து, பௌத்தன், இஸ்லாமியன், கிறிஸ்தவன். இன்றும் என்றும் நான் பெருமையுடன் இனங்காணும் இலங்கையன்' என்றார்.

இந்தப் பகுதி, இலங்கைக் கிரிக்கெட் அணியின் ஆதரவாளர்களில் ஒரு பகுதியினரால் புளகாங்கிதத்துடன் வரவேற்கப்பட்டது. இலங்கைக் கிரிக்கெட்டின் ஆதரவாளராக இருப்பதால் தமக்கு பெருமையென்று, இந்த  உரையை முன்னிறுத்தி தமிழ் சமூக ஊடகங்களில் பலரும் எழுதிக் கொண்டிருந்தார்கள்.

ஆனால், அந்த உரையின் ஆரம்பப் பகுதியில், '1980களில் வடக்கில் தீவிரவாதம் மும்முரமடைந்து, 30 வருடங்களை இருள்மயமாக்கிய சிவில் யுத்தத்துக்கு அது வழிகோலியது.' என்றும் 'தெற்கில் இளைஞர்களிடையே தோன்றிய புரட்சி மனநிலை பெரும் குற்றங்களுக்கு வழிவகுத்தது' என்றும் மிகத் தெளிவாக தமிழ் இளைஞர்களின்  போராட்டத்தையும் தெற்கு இளைஞர்களின் சமநீதிக்கான கோரிக்கைகளையும் புறந்தள்ளினார் குமார் சங்ககார. அந்த உரை இலங்கை அரசாங்கத்தின் உயர்பீடத்தினால் மிகவும் வரவேற்கப்பட்டது. கோட்டாபய ராஜபக்ஷ மகிழ்ச்சியோடு பாராட்டினார்.

தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டங்கள் முன்வைக்கும் கொள்கைகள், கோட்பாடுகள் சார்ந்து, நாம் தொடர்ந்தும் சில கட்டுறுதிகளுடன் இருக்க வேண்டியிருக்கின்றது. எமக்கான உரிமைகளை நோக்கிய பயணத்தை முழுமையாக புரிந்து கொள்ள வேண்டும். அது, 'ஒரே இலங்கை' என்கிற கோட்பாட்டை புறந்தள்ளி 'ஒன்றிணைந்த இலங்கை' என்கிற விடயத்தை முன்வைக்கின்றது என்பதை இளையோரிடம் எடுத்துச் செல்ல வேண்டும்.

குமார் சங்ககார, எம்.சி.சி. சொற்பொழிவில் முன்வைத்ததும், தற்போது 'ஒரே தேசம்-  ஒரே அணி' என்கிற வாசகத்துக்குள் வைக்கப்படுவதும் 'ஒரே நாடு- ஒரே தேசம்' என்கிற கோட்பாடாகும். அதனை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

தமிழ் மக்கள், தம்மை ஒரு தேசமாக அங்கிகரிக்கக் கோருகின்றார்கள். தமது பாரம்பரிய பூமியான வடக்கு, கிழக்கினை அதன் போக்கில் தக்க வைத்துக் கொள்ளப் போராடுகின்றார்கள். இலங்கை எப்போதுமே ஒரே தேசமாக இருந்ததில்லை. இருக்கவும் முடியாது. அது, தேசங்களின் கூட்டாக மாத்திரமே இருக்க முடியும். அதுதான், இனங்களிடையே சமத்துவத்தையும் உரிமையையும் பாதுகாப்பினையும் உறுதி செய்யும். அதனை நோக்கிய பயணத்தில், எங்களை நோக்கிய அரசியலை இரசிக மனநிலைகளுக்காக விட்டுக் கொடுக்க முடியாது. அது, ஆபத்தானது.

 (இந்தக் கட்டுரை, இலங்கைக் கிரிக்கெட் அணியின் இரசிகரொருவரினால் எழுதப்படுகின்றது. கிரிக்கெட் மீதான ஈடுபாட்டுக்காகவும் அணுகுமுறைக்காகவும் குமார் சங்ககாரவை இரசித்துக் கொண்டாடிய ஒருவரினால் எழுதப்படுகின்றது. ஆனால், அரசியல் ரீதியான அணுகுமுறையில் இரசிக மனநிலை முழுமையான ஆளுமை செலுத்த அனுமதிக்க முடியாது. அது, எம்மை அறியாமல் பலவீனமாக பக்கம் நகர்த்தும்.)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .