2025 மே 03, சனிக்கிழமை

இஸ்ரேல் - லெபனான் - ஹிஸ்புல்லா

Editorial   / 2019 மே 06 , மு.ப. 08:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனகன் முத்துக்குமார்

ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிகாக்கும் படை, ஹிஸ்புல்லாவுக்கு எதிராக மிகவும் கூடுதலான இராணுவ நடவடிக்கையை பேண வேண்டும் என ஐக்கிய அமெரிக்கா, இஸ்ரேல் ஐக்கிய நாடுகளைக் கேட்டுள்ளமை, லெபனானின் அண்மைக்காலத்தில் ஐக்கிய நாடுகளின் தனது பிரசன்னத்தை லெபனாலில் வைத்திருத்தல் - அதன் பிரதிபலிப்புக்களில் மேலதிக அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

வரலாற்று பின்னணியின் அடைப்படையில், 1978ஆம் ஆண்டு, இஸ்ரேல் தெற்கு லெபனானை ஆக்கிரமித்ததைத் தொடர்ந்து, பலஸ்தீனர்கள் இஸ்ரேல் மீது தாக்குதலைத் தொடங்கினர். இந்நிலையில் குறித்த தாக்குதல்களைத் தடுக்கும் முகமாகவும் விடையிறுக்கும் வகையிலும் ஐக்கிய நாடுகள், அமைதிகாக்கும் நடவடிக்கையை ஆரம்பித்திருந்தது.

லெபனானுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் இடைக்காலப் படை என அறிவிக்கப்பட்ட குறித்த அமைதி காக்கும் படையினர் சமாதானத்தை மீட்கவும், இஸ்ரேலிய இராணுவத்தை திரும்பப் பெறவும், லெபனானிய அரசாங்கத்துக்கு அப்பிராந்தியத்தில் தனது கட்டுப்பாட்டை மறுபரிசீலனை செய்வதற்கு உதவுவதற்குமாக பணிக்கப்பட்டிருந்தனர்.

இந்நடவடிக்கையில் 6,000 அமைதிப் படையினர் பணிபுரிந்தனர். 2006இல் மீண்டும் இஸ்ரேல் – லெபனான், இஸ்ரேல் - பலஸ்தீனப் போர் தொடங்கிய பின்னர், பாதுகாப்புச் சபையானது இடைக்காலப் படையினரின் எண்ணிக்கையை 13,000 க்கும் அதிகமான அதிகரித்திருந்தது. குறித்த இந்நடவடிக்கையில் தற்போது 41 நாடுகளில் இருந்து சுமார் 10,500 அமைதி காப்பாளர்கள் பங்குகொண்டுள்ளனர்.

எது எவ்வாறிருந்த போதிலும் அமைதிப்படை உருவாவதற்கு சுமார் 40 ஆண்டுகளுக்கு பின்னரும் அதே இலக்குகளை அடைய இன்னும் சர்வதேசம் முயற்சிகளை மேற்கொண்டுள்ளமையும், அதில் இன்னமும் முழுமையாக வெற்றியடையாமையும் துரதிர்ஷ்டவசமானதே.

இஸ்ரேலியப் படைகள் எல்லைப் புறத்தின் ஒரு பகுதியில் உள்ள இந்நிலையில், 11 ஆண்டுகளில் பெரும் மோதல்கள் இடம்பெறவில்லை என்பதே இடைக்கால அமைதி காக்கும் படையின் ஒரே ஒரு சாதனையாகும். இருந்தபோதிலும் இது நீண்ட காலத்துக்கு நிலைத்துநிற்கக்கூடிய அமைதியையோ அல்லது போர் மறுக்கப்பட்ட சூழ்நிலையையோ தோற்றுவித்ததாய் அமையவில்லை.

லெபனானின் அச்சுறுத்தலுக்கும் மேலதிகமாக இஸ்ரேலை அச்சுறுத்தும் மற்றொரு குழுவான ஹிஸ்புல்லாவின் கட்டுப்பாட்டிலேயே தெற்கு லெபனான் அமைந்திருப்பது தற்போதைய இடைக்கால அமைதிகாக்கும் படை மேற்கொண்டுள்ள முயற்சியை ஒரு மாயையாகவே காட்டுச்செய்கின்றது.

லெபனான் அரசாங்கம் அமைதிப் படைக்கான ஆணையை விரிவுபடுத்துவதை எதிர்க்கின்ற அதேநேரத்தில், சமாதானப் படையினரின் பிரசன்னம் அவசியம் என்பதான முற்றுமுழுதாக முரணான கருத்தை முன்வைக்கின்றது. லெபனான் அரசாங்கத்தைப் பொறுத்தவரை இடைக்கால அமைதி காக்கும் படையினரின் பிரசன்னம் தேசிய பாதுகாப்புக்கு அவசியமாகும் எனினும் அதிகப்படியான இடைக்கால அமைதிப்படையின் பிரசன்னமும் லெபனானின் லெபனான், ஹிஸ்புல்லா அரசாங்கத்தின் இருப்புக்கு அச்சுறுத்தலாகிவிடும் என்பதே குறித்த முரண்பாடான போக்குக்கு காரணமாகும். மறுபுறம் ஹிஸ்புல்லாவை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதற்கு அமைதிகாக்கும் படையினரின் பிரசன்னம் அவசியம் என்பதையும் லெபனான் உணரத்தவறவில்லை. ஏனெனில், சிரியா, ஈரானின் நேரடியான உதவிகளை பெற்றுக்கொள்ளும் ஹிஸ்புல்லா, லெபனான் அரசாங்கத்தை விடவும் இராணுவரீதியாக பலம்பொருந்தியது என்பது லெபனான் அரசாங்கத்துக்கு தெரிந்த விடயமாகும்.

மறுபுறத்தே, லெபனான்-இஸ்ரேலிய எல்லையில் இரண்டு தரப்பிலும் காணப்படும் மோசமான அரசியல் நிலைமை, சர்வதேச சமூகத்தால் தீர்த்துவைக்கப்படாத இந்நிலையில் அமைதிப் படையின் அரை பில்லியன் டொலர் வருடாந்திர வரவுசெலவுத் திட்டம் ஒருபோதும் நிரந்தரத் தீர்வை பெற்றுத் தரப்போவதில்லை என்பதே கணிப்பாகும். ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையானது ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிகாக்கும் படைகளுக்காக ஒதுக்கப்பட்ட நிதியாண்டு செலவில் 600 மில்லியன் அமெரிக்க டொலர்களை, அபிவிருத்திக்காக குறைத்திருந்தமையும், ஏற்கெனவே ஐக்கிய நாடுகள் ஆபிரிக்காவில் 15 நாடுகளில் அமைதி காக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளமையும் வரும் ஆண்டுகளில் அமைதிகாக்கும் படைகளுக்கான நிதிஒதுக்கீடு வெகுவாக குறைவதற்கான சாத்தியங்களையே ஏற்படுத்தியுள்ளது.

ஆதலினாலேயே குறித்த இஸ்ரேல் - லெபனான் - ஹிஸ்புல்லா தொடர்பில் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை பூகோள அரசியல் விருப்புக்களுக்கு அப்பால் ஐக்கிய அமெரிக்கா, இஸ்ரேல் என்பன மேற்கொள்ளத்தவறுமாயின், மேற்குறிப்பிட்டது போன்று, குறித்த அமைதிகாக்கும் இடைக்காலப்படையின் பிரசன்னம் என்பது வெறுமனே கண்துடைப்பே ஆகும்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X