Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 பெப்ரவரி 13 , பி.ப. 05:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
-இலட்சுமணன்
தமிழ்த் தேசிய அரசியல் சூழ்நிலையானது, மிகவும் மோசமானதொரு வரலாற்றுச் சிக்கலுக்குள் சிக்குண்டு போயுள்ளது. தமிழ்த் தேசியத்தின் அரசியல் விடுதலை தொடர்பாக, கடந்த 22 ஆண்டுகளாக அஹிம்சை வழியிலும் ஆயுத வழியிலும் பல்வேறு போராட்டங்களை நிகழ்த்தி, தனது உரிமையை நிலைநிறுத்தப் போராடி இருக்கிறது தமிழினம்.
இத்தகைய போராட்டச் சூழலில், எண்ணங்களில் தோன்றாததும் நினைத்துக் கூடப் பார்த்திருக்க முடியாத, ‘சுயநல அபிலாசைகள்’ தமிழ் அரசியலில் இன்று முனைப்புப் பெற்றுள்ளன.
தமிழரின் அரசியல் விடுதலை தொடர்பாக, பல்வேறு துயர்நிறைந்த அனுபவங்களை, வரலாற்று ரீதியாக அனுபவித்த இனத்துக்குச் சாபக்கேடானதோர் அரசியல் சூழல் தோற்றம் பெற்றுள்ளது.
இந்தத் தோற்றுவாய், தமிழ்த் தேசிய இனத்தின் விடுதலையின் பேரில், அதன் தியாகங்களையும் இழப்புகளையும் கொச்சைப்படுத்தும் இச்சை அரசியலின் விளைவே ஆகும்.
தமிழர் தாயகம், உரிமை, அபிலாசை, தீர்வு என்ற வெற்றுக் கோசங்களுடன், தமது நாடாளுமன்றக் கனவையும் அதன் சுகபோகங்களையும் அனுபவிப்பதற்கு, பலம் பொருந்திய ஓர் ஆயுதமாக, இந்த வெற்றுக் கோச அரசியல், தமிழ் மக்களிடையே வலம் வருகிறது.
தமிழரின் ஐக்கியத்தையும் அதன் அபிலாசைகளையும் அதன் பிரதிநிதித்துவத்தையும் சிதறடிக்கும் நோக்கில், எவ்வித அரசியல் ஞானமும் பகுத்தறிவும் பொதுஅறிவும் அற்ற, நடைப்பிணங்களாகப் நாடாளுமன்றப் பதவி வெறியுடன் இவை வலம்வருகின்றன.
இந்த வகையில், தமிழரின் ஐக்கியம் தொடர்பாக, உதட்டளவில் பேசிக்கொண்டு, மனதளவில் ஒருவரை ஒருவர் ‘பாம்பும் கீரியும் போல்’ பார்க்கின்றனர்.
போதாக்குறைக்கு, தங்கள் தங்கள் வசதிக்கேற்ப, ‘தடியெடுத்தவன் எல்லாம், தண்டக்காரன் போல்’, ஆளுக்கு ஒரு கட்சி ஆரம்பிக்கப்படுகின்றது.
அதுவும் தமிழ் மக்கள், தமிழ்த் தேசியம், தமிழ் ஐக்கியம், தமிழர் விடுதலை, தமிழ்க் கூட்டமைப்பு, தமிழர் முற்போக்கு, தமிழர் கூட்டணி என, தமிழையும் தமிழரையும் சின்னாபின்னப்படுத்தப்படுகிறது.
இதுமட்டுமல்ல, தமிழர் ஐக்கியத்துக்காகவும் பிரதிநிதித்துவத்தைக் காப்பாற்றவும் தமிழ்த் தேசிய விடுதலையை வென்றெடுக்கவும் எனவும் பல்வேறு கூப்பாடுகள், கோசங்கள், முழக்கங்களுடன் பல்வேறு கட்சிகள் வடக்கிலும் கிழக்கிலும் உதயமாகிக் கொண்டிருக்கின்றன.
இவ்வாறு கட்சிகள் ஆரம்பிக்கப்படுவதன் தத்துவம் யாது என்பது, இக்கட்சிகளை ஆரம்பிப்போருக்கோ, இக்கட்சிகளின் கொள்கை வகுப்பாளர்களுக்கோ புரியாது; புரியப்போவதும் இல்லை.
ஏனெனில், அவர்களுக்குத் தெரிந்ததெல்லாம், தமிழர்களின் வாக்குப் பலத்தால், தாம் நாடாளுமன்றப் பிரதிநிதியாக வந்தால் போதும் என்பதுதான். ஆயினும் அவ்வாறு வருவதற்குத் தனித்துச் செயற்பட முடியாது. எனவே, கூட்டுகள் அவசியம்.
எத்தனை கூட்டுச் சேர்த்தாலும், இந்தக் கூட்டுகள் சாதிக்க நினைப்பது, தமிழர் ஐக்கியத்தையும் தமிழ்த் தேசிய விடுதலையையும் அல்ல. மாறாக, அவர்கள் நாடாளுமன்ற ஆட்சி, அதிகாரம், சலுகைகள் போன்றவற்றை அனுபவிப்பதற்கே ஆகும்.
இதனால்தான், ஆயுதம் மௌனிக்கப்பட்டதன் பின்னர், தமிழ்த் தேசிய அரசியலை, தமது வியாபார உத்தியாக, இவர்கள் கையில் எடுத்துள்ளார்கள்.
தமிழர்களின் இருப்பைக் காப்பாற்றும் பொருட்டும், இழப்புகளில் இருந்து தப்பித்துக்கொள்ளும் பொருட்டும் செல்ல வேண்டியதும் தேட வேண்டியதும் எத்தனையோ பணிகளாகக் காத்துக்கிடக்க, அதற்காகக் குரல் கொடுக்காத, அந்தச் சூழலைத் துவம்சம் செய்யும், தமிழ் மக்களின் துயரங்களில் ஒருதுளியேனும் பங்கு எடுக்காத ‘பச்சோந்திகள்’, இன்று பேரினவாத கைக்கூலிகளுடனும் நேரடி, மறைமுக ஒப்பந்தங்களைச் செய்துகொண்டு, தமிழரின் அரசியல் களத்தில் உலாவருகின்றனர்.
உண்மையில், தமிழ் அரசியலில் தமிழ் மக்கள், ‘மேய்ப்பன்’ அற்ற மந்தைகளாக அல்லற்படுகின்றனர். எவரை நம்புவது, எவரை நம்பக் கூடாது என்ற நிலைக்குத் தள்ளப்படும் அளவுக்கு, இந்தத் தமிழ்த் தேசிய அரசியல் நொருங்குண்டு போயுள்ளது.
தமிழ்த் தேசிய இனத்தின் மேய்ப்பர்களாகத் தங்களைத் தாங்களே பிரகடனப்படுத்திக் கொள்ளும் தமிழ் அரசியல் கட்சிகள், தமிழர்களின் பிரதிநிதித்துவத்தைக் காப்பாற்றத் தம்மோடு இணையும் படி, ஏட்டிக்குப் போட்டியாக, உதட்டளவில் ஐக்கியம் பேசி, மனதளவில் கழுத்தறுப்புக்கு கங்கணம் கட்டி நிற்கின்றன. உண்மையில், இவர்கள் எல்லோருக்கும் நாடாளுமன்றக் கனவோ, சுயநலமோ, வியாபார நோக்கோ, சொகுசு வாழ்க்கையோ தேவையில்லை என்றால், தமிழினத்தின் உரிமைகளையும் அபிலாசைகளையும்தான் வென்றெடுக்கும் ஒரே நோக்கம் இருந்தால், ஏன் இத்தனை தமிழ்க் கட்சிகள் உருவாக்கப்பட வேண்டும்?
எல்லோருடைய குறிக்கோளும், தமிழ்த் தேசிய அரசின்பால் இருந்தால், ஏன் இந்த மோதல்? எல்லோரும் ஓர் அணியாகத் தேர்தலில் போட்டியிடலாமே!
உண்மையில், தமிழ்க் கட்சிகளும் இதன் தலைமைகளும் தமிழ் மக்கள் முன்வைக்கும் போலிக் கோசங்கள் இவைகளாகும். பதவி வெறியும் ஆட்சி அதிகார ஆசையும் இவர்களை, ஒருபோதும் ஓரணியில் ஒன்று சேரவிடாது. ஏனெனில், ஒவ்வொரு கூட்டிலும் இருப்பவர்களுக்கு இடையில், ஆசனப் பங்கீட்டில் மோதல், ஒரு கட்சியில் பிரதிநிதித்துவம் பெற ஆளுக்கு ஆள் போட்டி, வாக்குபலம், பணபலம், ஆட்சிப்பலம் இவை பற்றிய கணிப்புகள், பேரம்பேசல்கள், கழுத்தறுப்புகள், குழிபறிப்புகள், முதுகில் குத்துதல்கள், காலை வாருதல்கள் என எண்ணிக்கையற்ற படாடோபகாரச் செயற்பாடுகள், தமிழ்த் தேசிய அரசியல் என்ற பெயரில், வடக்கிலும் கிழக்கிலும் விசேடமாகத் தமிழர் பகுதிகளில் அரங்கேறி வருகின்றன.
ஏனெனில், இவர்களை எவருமே தமிழையும் தமிழ் இனத்தையும் அதன் அபிலாசைகளையும் நேசிக்கவில்லை. தமிழர் விடுதலைப் போராட்டம் பற்றியோ, அதன் அரசியல் வரலாறுகள் படிப்பினைகள் பற்றியோ அதிகம் அறியாதவர்களே இவர்கள். இவர்கள் அறிந்ததெல்லாம், நாடாளுமன்றம் சென்றால் கிடைக்கும் அனுகூலங்களைப் பற்றித்தான். உண்மையில், தமிழர் ஐக்கியத்தில் கரிசனை இருந்தால், “இத்தனை தமிழ்க் கட்சிகள் எதற்கு? இங்குள்ள தமிழர் ஒன்றாதல் கண்டே, எங்கோ மறைந்தனர் எம் எதிரிகள்” என்ற கோசம் நீறுபூத்த நெருப்பாக இருக்க, அந்த நீற்றில் சுழி ஓடுகிறார்கள் நம் அரசியல் எஜமானர்கள்.
இங்குள்ள கூட்டுகளுக்கும் இக்கூட்டுகளில் உள்ள கட்சிகளுக்கும் ஆசனப் பங்கீடே ஒருதறிகெட்ட பிரச்சினையாகப் பூதாகரம் பெற்றுள்ளது. இதன்போது, இத்தனை கட்சிகளினதும் வேட்பாளர்களினதும் சுயநல நோக்கங்கள், ஒரு கட்சியில் போட்டியிட வாய்ப்புக் கிடைத்து , எவ்வாறு ஈடேறப்போகிறது. எனவே, தமிழர் ஐக்கியம் என்பது, கலைந்து போன கனவே ஆகும். தமிழர் பிரதிநிதித்துவம் என்பதும் வாய் பேச்சே ஆகும். தமிழர் உரிமைகளையும் அபிலாசைகளையும் அதிபற்றிய தீர்வும் எமது வரலாற்றில் கனாக்காணும் காலங்களே.
தமிழினம் கற்பனையும் கனவும் கண்டு கொண்டு, வாழ்வதற்குப் பிறந்த பாவப்பட்ட இனமாகிப் போயுள்ளது. ஏனெனில், தமிழர் தம் எஜமானர்களாகத் தம்மைத் தாமே ஏக பிரதிநிதிகளாகப் பிரகடனப்படுத்தும் இந்த போலி வேடாதாரிகள் இருக்கும் வரை, தமிழ்த் தேசியத்தின் தலைவிதியை மாற்ற முடியாது.
எனவே, இங்கு தமிழர் தம் ஐக்கியம் என்பதற்குள், உதட்டளவிலும் மனதளவிலும் குழிபறிப்பும் குத்து வெட்டுகளுமே எஞ்சி இருக்கும்.
இந்த இருப்புகளில் இருந்து, உண்மை விடுதலை வேண்டுமாக இருந்தால், தமிழ் மக்கள் நின்று நிதானித்து, தாம் தொடர்ந்து பயணித்த பாதையைச் செப்பனிட்டு, முன்னோக்கி நகர வேண்டும். கானல் நீரையெல்லாம், தமிழர் விடுதலைத் தாகத்தைத் தீர்க்கும் நீராக நினைத்து விடக்கூடாது.
தமிழர் தம் அபிலாசைகள், பயணித்த ஒரே பாதையில் தீர்க்கதரிசனத்துடன் தீயதை அகற்றி, ஓரணியாய்ப் பயணிக்க, புல்லுருவிகளும் மழைக் காளான்களும் முளைத்திட அனுமதிக்கக் கூடாது. அவ்வாறு, நிராகரிக்காதுவிடின் இம்முறை தேர்தலில் தமிழர் பிரதிநிதித்துவமும் இல்லை; தமிழர் அபிலாசைகளும் நிறைவேறப் போவதும் இல்லை; தமிழருக்குத் தீர்வுமில்லை.
அரசியல் அநாதைகளாகத் தமிழர் தமது அரசியல் பயணத்தை மீண்டும் பூச்சியிலிருந்து ஆரம்பிக்க வேண்டும். எனவே ஐக்கியத்தின் பேரில் ஏமாற்ற வருபவர்களிடம், தமிழர் ஏமாறாது விட்டால், அதுவே போதும்.
20 minute ago
26 minute ago
42 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
26 minute ago
42 minute ago