2026 மார்ச் 24, செவ்வாய்க்கிழமை

உளவியல் நெருக்கடியும் திட்டங்களின் அவசியமும்

Thipaan   / 2016 ஜூலை 05 , மு.ப. 03:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

கருணாகரன்

வற்றாப்பளை கண்ணகி அம்மன் கோவில் உற்சவம் அண்மையில் நடந்தது. இதில், பக்தர்கள் மிகக்கடுமையான நேர்த்திக்கடன்களைச் செய்தனர்.

தூக்குக்காவடி, தீ மிதித்தல் என்று தங்களை மிகவும் வருத்திக் கொள்ளும் நேர்த்திகள். இவை தனியே வற்றாப்பளை அம்மன் கோவிலில் மட்டும்தான் நடக்கின்றன என்றில்லை. வன்னியின் பல கோயில்களிலும் இப்படித்தான் நடக்கின்றன. வன்னிக்கு அப்பால், மட்டக்களப்பின் படுவான்கரையிலும் வாகரையிலும் இந்த மாதிரிக் கடுமையான நேர்த்திச் சடங்குகளைக் காணலாம். போருக்குப் பிறகே, இந்த மாதிரி நேர்த்திக்கடன்கள் அதிகமான அளவில், உக்கிரமான முறையில் நடக்கின்றன. முன்னர் இந்த மாதிரியான நேர்த்திக்கடன்கள் நடந்தாலும், இந்தளவுக்குத் தொகையாக நடப்பதில்லை.

இதைப்பற்றி உளநல வைத்தியர் சிவதாஸ் பல இடங்களிலும் விரிவாகப் பேசியிருக்கிறார்.

யுத்தத்தினால் ஏற்பட்ட உள நெருக்கடிக்கு (Depression) மன அழுத்தத்துக்கு ஆறுதல் தேடியே, இந்த நேர்த்திகளில் பலரும் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுடன் தானும் இணைந்து இந்த நேர்த்திச் சடங்குகளில் பங்குபற்றிய அனுபவத்தைக் கொண்டு அவர், இதைச் சொல்லியிருக்கிறார்.

கடந்த ஆண்டுகளில், உளச்சிகிச்சை Trauma, Collective trauma, wounded trauma பேறுவோருடன் ஒன்றாகச் சேர்ந்து, இந்த நேர்த்திகளை வற்றாப்பளையிலும்

புதூர் நாகதம்பிரான் கோவிலிலும் அவர் செய்திருந்தார். போர், மனிதர்களை ஆட்டம் காண வைக்கிறது. அவர்களுடைய எல்லா நம்பிக்கைகளையும் சிதறடித்துச் சின்னாபின்னமாக்கி எறிந்து விடுகிறது. அதனால், நம்பிக்கை சிதறிய மனிதர்கள் வேறு வழியின்றிக் கடவுளிலும் கோயில்களிலும் தங்களை ஒப்படைக்கின்றனர். இதன்விளைவே இந்த நேர்த்திகளும் வழிபாடுகளும்.

இதைத் தவிர அவர்களுக்கு, அப்போது வேறு வழிகளில்லை. ஆனால், இதுவோர் எல்லைவரையிலான ஆறுதலே தவிர, பிரச்சினைக்கான தீர்வல்ல. இதனால்தான், இன்னும் உளக்காயங்களோடு வைத்தியசாலைகளை  நோக்கி ஆயிரக்கணக்கானவர்கள் சென்று கொண்டிருக்கின்றனர்.

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களிலும் வாகரை, படுவான்கரை வைத்தியசாலைகளிலும் உளநலச் சிகிச்சை மையங்களுக்கு, பெண்களே அதிகமாக வருகிறார்கள். இப்படி வருகின்றவர்களில் பெரும்பாலானவர்கள், யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்கள். குறிப்பாக, ஆண் துணையை இழந்தவர்கள். இவர்களில், அநேகமானோர், 25 தொடக்கம் 45 வயதுக்குட்பட்டவர்கள். உளநலச்சிகிச்சைக்கு இவர்கள் வருவதற்கான பிரதானமான காரணம், வறுமை. வறுமைக்குக் காரணம், உழைப்பாளிகளை இழந்தமையும் தொழிலின்மையுமே. உழைப்பாளிகளை இழந்த குடும்பங்களில் இயல்பாகவே வறுமை குடிகொண்டு விடுவதுண்டு. ஆண்துணை இழப்பு என்பது, உழைப்பின் பாதியையும் குடும்பத்தினுடைய பாதுகாப்பின் பாதியையும் இழப்பதற்குச் சமம்.

வறுமையும் பாதுகாப்பின்மையும் உள்ள குடும்பங்களில், பிள்ளைகளின் கல்வி சீராக இருக்காது. அநேகர், இடைவிலகும் மாணவர்களாகவே இருப்பர்.

போஷாக்கில்லாத காரணத்தினால் குடும்பத்தில் நோய்த்தாக்கங்கள் அதிகரித்திருக்கும். வீடும் சூழலும் குலைந்திருக்கும். யாரும் யாரையும் கவனித்துக் கொள்ளாத ஒரு நிலை அங்கு உருவாகியிருக்கும். இப்படி அந்தக் குடும்பங்கள், இயல்புநிலையை இழந்திருக்கும். இது, ஒரு தலைமுறையை மட்டுமல்ல இரண்டு மூன்று தலைமுறைகளில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய விளைவுகளைக் கொண்டிருக்கும். இந்தப் பாதிப்புகள், நிச்சயமாகச் சமூகத்தையே பாதிப்படையச் செய்யும். ஏனென்றால், சமூகத்தின் ஓர் அங்கம் இவர்கள். இதெல்லாம் ஏதோ இன்னொருவர் பிரச்சினை என்று, சுலபமாக யாரும் ஒதுங்கி விட முடியாது.

யுத்தம் நடந்த வடக்கு, கிழக்குப் பகுதிகளில் இந்த நிலையும் இந்தப் பாதிப்பும் அப்படியே அப்பட்டமாக உள்ளன. இந்தத் தீர்வும் காணப்படாமல் ஆறாத காயத்தின் இறைச்சியைப்போல. அதிலிருந்து வடியும் குருதியையும் சீழையும் கெட்ட நாற்றத்தையும்போல.

யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கென்று அரசாங்கத்தினால் குறிப்பிடத்தக்க திட்டங்கள் எவையும் இன்றுவரை உருவாக்கப்பட்டதில்லை. பொதுவாக சில உதவிகள் கிடைத்திருக்கின்றன. வீடு, காணியில்லாத குடும்பங்களுக்குக் காணி, மின்சாரம் போன்றவை. இவை அடிப்படையானவைதான். ஆனால், அவை குடும்பத்தின் அடிப்படைப் பிரச்சினைகளைப் போக்கக்கூடியனவாக இல்லை. குறிப்பாக  குடும்பத்தின் பொருளாதாரத்தைச் சிறப்பாக்கக்கூடிய வகையில் ஒரு திட்டமும் உருவாக்கப்பட்டது கிடையாது.

தொண்டு  நிறுவனங்களும் அரசாங்கமும், வாழ்வாதாரமும் என்று சொல்லிக்கொண்டு சிறு தொகை உதவிகளைச் செய்தன. குடும்பத்துக்கு 35,000 ரூபாயிலிருந்து

60,000 வரை. இந்தத் தொகைக்குள், அவர்கள் என்ன தொழிலைச் செய்ய முடியும், யாராவது பொருளாதார நிபுணர்களோ, சமூகச் செயற்பாட்டியக்கத்தினரோ இதற்கான விளக்கத்தைத் தரமுடியுமா? இதனால் கிடைத்த இந்த உதவியை அவர்கள், ஆறு மாதத்துக்குள்ளாகவே தீர்த்து விட்டார்கள். இதைத்தவிர, இவர்களுக்கு மாற்று வழியும் இல்லை.

காரணம், இன்றைய இலங்கையின் பொருளாதார அமைப்பில், வழங்கப்பட்ட இந்தத் தொகை எந்தத் தொழிலைச் செய்வதற்கும் போதாது. போதவே போதாது.

ஏனென்றால், யுத்தப் பாதிப்புகள் சாதாரணமானவையல்ல. அவை, மிகக் கொடியவை. பாரதூரமான தாக்கத்தை உண்டுபண்ணும் இயல்பை உடையவை. கூடவே, பலவிதங்களில் அமைந்தவை. உடற்காயங்கள், உடல் உறுப்பு இழப்புகள், உளக்காயங்கள், தனிமைப்படுத்தல்கள் எனப்பலவகையில் அமையும் பாதிப்புகள். இவற்றை, அவற்றுக்குரிய மாதிரி, ஒவ்வொன்றுக்கும் ஏற்றமாதிரிக் கையாண்டு நிவாரணம் தரவேண்டும். சிகிச்சை செய்ய வேண்டும். இதற்கு சரியான பொறிமுறையை உரிய துறைசார் நிபுணர்களினால், நிபுணத்துவ அடிப்படையில் உருவாக்கப்படுவது அவசியம். ஆனால், அப்படி எதுவும் இதுவரையில் நடந்ததில்லை.

போரின் தாக்கங்களை இட்டு நிரப்புவதும் சீர் செய்வதும் மறுசீரமைப்பதும்,  இலகுவானதல்ல. உடற் காயங்களை ஓரளவு ஆற்றிக்குணப்படுத்தலாம். ஆனால், உடல் உறுப்பை எப்படி ஈடு செய்ய முடியும்? அது வாழ்க்கை முழுவதற்கும் நீடிக்கும் ஒரு நிரந்தர இழப்பு. என்னதான் மாற்று உறுப்பு பொருத்தினாலும், அதன் மூலம் முழுமையான இழப்பை நிவர்த்தி செய்து விடமுடியாது. அப்படி மாற்று உறுப்பைப் பொருத்துவதற்கே வழியற்ற நிலையில், பலர் உள்ளனர். இதில் இளவயதுடையோர் அவர்களுடைய வளர்ச்சிக்கு ஏற்றமாதிரி அடிக்கடி மாற்று உறுப்பின் அளவை மாற்றிக் கொள்ள வேண்டும். அதற்கு ஆகின்ற செலவை ஈடுசெய்ய முடியாமல் பல சிறார்கள் அவதிப்படுகின்றனர்.

இந்த அவதிப்படுதல் உளரீதியாக சிறாரையும் அந்தச் சிறாரின் குடும்பத்தையும் பாதிக்கிறது. ஆகவே இப்படியான நிலையில் மாற்று அவயத் தேவையுள்ளோருக்கான ஏற்பாட்டைச் செய்வதற்கு முறையான ஒழுங்கமைப்பும் பொறிமுறையும் தேவை. ஆனால், யுத்தம் முடிந்து ஏழு ஆண்டுகள் கடந்து விட்டன. இன்னும் இதைக்குறித்துச் சிந்திப்பதற்குக் கூட யாரும் முன்வரவில்லை. இந்த ஏழு ஆண்டுகளிலும் பல வெற்றிவிழாக்களை அரசாங்கம் கொண்டாடி விட்டது. பல நினைவு கூரல்களை தமிழ்த்தரப்பும் கடைப்பிடித்திருக்கிறது. ஆனால், பாதிக்கப்பட்டிருப்போரைப்பற்றி இரண்டு தரப்பும் கவனம் கொள்ளவில்லை.

யுத்தத்தின் போது நடந்த உயிரிழப்புகளை நேரில் பார்த்ததால், தங்கள் குடும்ப உறுப்பினர்களை இழந்ததால், காயங்களைச் சந்தித்ததால், உடல் உறுப்புகளை இழந்ததால், பிள்ளைகளையோ பெற்றோரையோ கணவனையோ மனைவியையே காணமுடியாமல் இன்னும் தேடிக்கொண்டிருப்பதால், சொத்துகளையும் வாழிடத்தையும் இழந்தததால், கல்வியையும் தொழிலையும் இழந்ததால், இப்படிப் பல விதமான இழப்புகளால் உள நெருக்கடியைச் சந்தித்து உளப்பாதிப்புக்குள்ளாகியிருப்போர் பல ஆயிரம்.

அகதி முகாமிலேயே இவர்களுக்கான உளவியல் சிகிச்சைகள் நடந்தன. இதைப்பற்றி உளநல மருத்துவர் சிவதாஸ் உள்ளிட்டவர்கள் விரிவாகப் பேசியிருக்கிறார்கள். ஆனால், இந்த உளச் சிகிச்சை முறைப்படுத்தப்பட்டு நடக்கவில்லை என்பது, இவர்களுடைய கவலை. அதற்கான அவகாசமும் சூழலும் அமையவில்லை என்பது இங்கே கவனிக்க வேண்டிய ஒன்று.

உளக்காயங்கள் பலவகையானவை. பல பருவத்தினருடையவை. ஒவ்வொருவருடைய மனவடுக்களையும், அதற்கு ஏற்ற வகையில் வகைப்படுத்தியே அவற்றுக்குச் சிகிச்சை அளிக்க முடியும். இதற்கு சரியான மதிப்பீடுகளும் வகைப்படுத்தல்களும் தேவை. இதைச் செய்வதற்கு போதிய ஆளணி வளமும் ஏனைய வசதிகளும் இருக்க வேண்டும்.

உளமருத்துவத்துக்கான அனுமதியை நீண்டகாலமாக அரசாங்கமே மறுத்திருந்தது. பாடசாலைகளில், வீடுகளில், அகதி முகாமில், வைத்தியசாலைகளில் எனப் பல இடங்களிலும் மேற்கொண்டிருக்க வேண்டிய இந்தப் பணிக்கு அரசாங்கத்தின் அனுமதி கிடைத்திருக்கவில்லை. சில தொண்டர் அமைப்புகளும் பிற நாடுகளில் உள்ள புலம்பெயர் மக்களில் சிலரும் இதற்கு முயன்ற போதும் அரசாங்கத்தின் ஒத்துழைப்பின்மையால் இந்தப் பணிகள் மேற்கொள்ளப்படமுடியாமற் போய்விட்டது.

இதைப்போல பெண்கள், முதியோர், ஆதரவற்ற நிலையில் இருந்தோர் எனப் பலருக்கும் ஆறுதற் படுத்தும் நடவடிக்கைகள் முறையாகக் கிடைக்கவில்லை. ஆனால், போரினால் பாதிக்கப்பட்டவர்களை ஆறுதற்படுத்தும் அவர்களுடைய மனவடுக்களை நீக்கும் தலைப்பணி, உலக அளவில் முக்கியப்படுத்தப்பட்ட ஒன்றாக உள்ளது. இதற்காகப் பல அமைப்புகள் இயங்குகின்றன. அவை நாடு, மொழி, இனம் என்ற வேறுபாடுகளின்றி தொண்டாகப் பணிகளைச் செய்கின்றன. இதற்காகப் பயிற்றப்பட்ட வைத்தியர்களும் பணியாளர்களும் நிறைய உண்டு. ஆனால், இவர்களை இலங்கை அரசாங்கம் பயன்படுத்திக் கொள்ளவில்லை.

ஒரு பக்கத்தில் உளச்சிகிச்சையை அளித்துக் கொண்டு, மறுபக்கத்தில் பொருளாதார மேம்பாட்டுக்கும் தொழிற்துறைக்கும் பொழுது போக்குக்குமான ஒருங்கிணைந்த நல்ல திட்டங்களை உருவாக்கி நடைமுறைப்படுத்த வேண்டியது இன்றைய அவசியமாகிறது. இல்லையெனில் வைத்தியசாலைகள் மட்டுமல்ல, சமூகமே கூட்டு உளவியல் சிகிச்சைக்கு உள்ளாக வேண்டிவரும். இதுவோர் அபாய அறிவிப்பு. அவசியப்பணிக்கான இடித்துரைப்பு மற்றும் எடுத்துரைப்பாகும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .