2025 டிசெம்பர் 18, வியாழக்கிழமை

எட்டாக்கனியாகிய சிவா பசுபதி

Thipaan   / 2016 ஜனவரி 09 , மு.ப. 05:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வுத் திட்டம் தயாரிக்கும் உபகுழுவில், சட்டநிபுணர் சிவா பசுபதியும் இடம்பெறவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியிருந்த போதும், அவரை அதற்குள் இணைத்துக் கொள்ளும் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் முயற்சிகள், தோல்வியில் தான் முடிந்திருக்கின்றன. தமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வுத் திட்டத்தை தயாரிக்கும் உபகுழு, அடுத்த மூன்று மாதங்களுக்குள் தமிழ் மக்களுக்கான தீர்வுத் திட்டம் ஒன்றைத் தயாரிக்கும் என்ற வாக்குறுதியைக் கொடுத்திருக்கிறது. இந்த நிலையில், கடந்த மாத இறுதியில் நடத்தப்பட்ட கூட்டம் ஒன்றில், இதற்கான 15 பேர் கொண்ட உபகுழுவும், தமிழ் மக்கள் பேரவையினால் அமைக்கப்பட்டது.

அதில் இடம்பெறும் 11 பேரின் விவரங்கள் மாத்திரம் வெளிப்படுத்தப்பட்டன. முதலமைச்சரின் இரு பிரதிநிதிகள், புளொட் அமைப்பின் ஒரு பிரதிநிதி மற்றும், சிவில் சமூகத்தின் ஒரு பிரதிநிதி, நான்கு பேர் யார் என்ற விவரங்கள் வெளிப்படுத்தப்படவில்லை. கூடிய விரையில், இந்த உபகுழுவின் உறுப்பினர்களின் விவரங்கள், ஊடகங்கள் மூலம் வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இந்தச் சூழலில் தான், முதலமைச்சரின் பிரதிநிதியாக சிவா பசுபதி இடம்பெறவுள்ளதாக, ஊடகங்களில் பரவலாகச் செய்திகள் வெளியாகின.

தமிழ் மக்கள் பேரவையின் கூட்டத்திலேயே இவரது பெயர் முன்மொழியப்பட்டு, அதற்கு இணக்கம் காணப்பட்டதாகவும் கூட, செய்திகள் வெளியாகின. அதற்கு, தமிழ் மக்கள் பேரவையின் தரப்பில் இருந்து யாரும் மறுப்புத் தெரிவிக்கவில்லை என்பதால், அந்தச் செய்திகளில் தவறு இருக்கும் எனக் கருத முடியாது.

சிவா பசுபதி, இலங்கையின் முன்னாள் சட்டமா அதிபர். ஜனாதிபதி சட்டத்தரணி. அரசியலமைப்புச் சட்ட நிபுணர். 1975ஆம் ஆண்டு தொடக்கம் 1988ஆம் ஆண்டு வரையில், இலங்கையின் 34ஆவது சட்டமா அதிபராக, 13 ஆண்டுகள் பணியாற்றியவர். இவர் சட்டமா அதிபராக இருந்த காலத்தில் தான், ஜே.ஆர்.ஜெயவர்தன, 1978ஆம் ஆண்டு அரசியல்யாப்பை உருவாக்கினார். அதுமட்டுமன்றி, 1979ஆம் ஆண்டு பயங்கரவாதத் தடைச்சட்டம் கொண்டு வரப்பட்டதும், இவர் சட்டமா அதிபராக இருந்த காலத்தில் தான். இதற்காக, இவரே அதன் சூத்திரதாரி என்று சொல்ல முடியாது.

ஜே.ஆர்.ஜெயவர்தனவின் உத்தரவுகளை நிறைவேற்றுகின்ற நிலையில் இருந்த ஒருவர் என்ற வகையில் தான், அவர் அதனைச் செய்திருந்தார். சிறந்த அரசியலமைப்புச் சட்டநிபுணராக பெயரெடுத்த சிவா பசுபதி, ஓய்வுபெற்ற பின்னர், அவுஸ்ரேலியாவில் குடியேறினார். 2002ஆம் ஆண்டு, விடுதலைப் புலிகளுக்கும் ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கத்துக்கும் இடையில் பேச்சுகள் ஆரம்பித்த போது, விடுதலைப் புலிகளால், அரசியல் விவகாரக் குழுவொன்று அமைக்கப்பட்டது. விடுதலைப் புலிகளின் பேச்சுக் குழுவுக்கு உதவவும் ஆலோசனைகளை வழங்கவும், இந்த அரசியல் விவகாரக் குழு அமைக்கப்பட்டது.

இதில், சிவா பசுபதி, மலேஷிய

பேராசிரியர் இராமசாமி, சிங்கப்பூர் பேராசிரியர் சொர்ணராஜா, அவுஸ்ரேலிய பேராசிரியர் இமானுவேல்பிள்ளை போல் டொமினிக், சட்ட நிபுணர் விஸ்வேந்திரன் மற்றும் வி.உருத்திரகுமாரன், ஜோய் மகேஸ்வரன், இரேனியஸ் செல்வில் உள்ளிட்ட வளவாளர்கள் பலரும் இடம்பெற்றிருந்தனர்.

இந்த அரசியல் விவகாரக் குழுவினரே, 2003இல் விடுதலைப் புலிகளால் முன்வைக்கப்பட்ட இடைக்காலத் தன்னாட்சி வரைவைத் தயாரித்திருந்தனர். அதில் சிவா பசுபதி, முக்கிய பங்கு வகித்திருந்தார். அதாவது, சட்டமா அதிபராக நீண்டகாலம் பதவி வகித்தவர் என்ற வகையில், அவரது சட்டவரைவு நிபுணத்துவம், இதற்குத் துணையாக இருந்தது.

2006ஆம் ஆண்டு அரசாங்கத்துடனான பேச்சுகள் முறியும் வரை, விடுதலைப் புலிகளின் அரசியல் விவகாரக் குழுவில் இடம்பெற்றிருந்தார், வெளிநாடுகளில் நடந்த பேச்சுகளிலும் பங்கெடுத்திருந்தார்.

எனினும், அதற்குப் பின்னர், சுமார் 10 ஆண்டுகளாக ஊடகங்களால் அவர் மறக்கப்பட்டிருந்த நிலையில் தான், மீண்டும், கடந்த ஓரிரு வாரங்களாக, அவர் பற்றிய செய்திகளை அதிகளவில் காண முடிந்தது. அவர், யாழ்ப்பாணம் வருவதற்கு எடுத்த முடிவு தான் இதற்குக் காரணம் எனச் சொல்ல முடியாது. அவரது யாழ்ப்பாண வருகை இடம்பெற்ற சூழல் தான், அவர் பற்றிய செய்திகளை ஊடகங்களில் பரபரப்படைய வைத்திருக்கிறது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குப் போட்டியாக, தமிழ் மக்கள் பேரவை உருவாக்கப்பட்ட நிலையில், தமிழ் அரசியல் களம் ஏற்கெனவே பரபரப்படைந்திருந்தது. தமிழ் மக்கள் பேரவையினால், தீர்வுத் திட்டம் ஒன்றை முன்வைப்பதற்கான உபகுழு நிறுவப்பட்ட காலமும், சிவா பசுபதியின் யாழ்ப்பாணப் பயணமும் நெருக்கமாக இருந்ததால், இந்த இரண்டுக்கும் இடையில் முடிச்சுப் போடப்பட்டதில் ஆச்சரியமில்லை.

சிவா பசுபதியின் யாழ்ப்பாணப் பயணம், மூன்று மாதங்களுக்கு முன்னரே திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், அவர் உபகுழுவில் பங்கேற்பதற்காகத் தான் யாழ்ப்பாணம் வருவதாக, ஊடகங்களில் தகவல்கள் பரவின.

தற்போது 82 வயதை எட்டியுள்ள சிவா பசுபதி, தனது சொந்த இடமான யாழ்ப்பாணத்தைப் பார்வையிட்டு, பொழுதைக் கழிப்பதற்காகவே திட்டமிட்ட பயணம். இது இந்தளவுக்குப் பரபரப்பை ஏற்படுத்தும் என்று அவர், சிறிதேனும் எதிர்பார்த்திருக்கமாட்டார். எவ்வாறாயினும், தமிழ் மக்கள் பேரவையில், முதலமைச்சரின் பிரதிநிதியாக சிவா பசுபதியை இடம்பெறச் செய்வதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டதால் தான், ஊடகங்களில் இந்தச் செய்திகள் கசிந்தன.

அதேவேளை, யாழ்ப்பாணம் வந்த சிவா பசுபதியை, உப குழுவில் இடம்பெறச் செய்ய, முதலமைச்சர் விக்னேஸ்வரன் மேற்கொண்ட முயற்சி வெற்றிபெறவில்லை. தொலைபேசி மூலம் இதுபற்றி முதலமைச்சர் பேசிய போது, உடனடியாகவே அதற்கு சிவா பசுபதி மறுத்து விட்டதாகவும், அவரை இணங்க வைக்க தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள்,  பலனளிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்தச் செய்தியை, இந்திய ஊடகம் ஒன்று தான் வெளியிட்டது.

அதுமட்டுமன்றி, ஒன்றுபட்ட இலங்கைக்குள், இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக முயற்சிகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில், இத்தகைய தனியான முயற்சிகள் தேவையில்லை என்று சிவா பசுபதி கூறிவிட்டதாகவும், அந்தச் செய்தியில் கூறப்பட்டிருந்தது.

சிவா பசுபதியை உபகுழுவில் இடம்பெறச் செய்வதற்கு முயற்சிகளை மேற்கொண்ட தரப்புகளுக்கு அவர் மறுப்புத் தெரிவித்ததை விட, தமிழ் மக்கள் பேரவை தொடர்பாக அவர் வெளியிட்டதாகக. கூறப்படும் தகவல் தான், அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும். தமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு தயாரிக்கும் உபகுழுவுக்கு,  சிவா பசுபதி போன்ற கனதியானவர்கள் அவசியம் தேவை. அவர் இதற்குள் உள்வாங்கப்பட்டிருந்தால், அது உபகுழுவின் பெறுமானத்தை அதிகரிக்கச் செய்திருக்கும். விடுதலைப் புலிகள், தன்னாட்சி அதிகார வரைவைத் தயாரித்த போது, இலங்கையின் முன்னாள் சட்டமா அதிபரொருவரின் தலைமையில் உருவாக்கப்பட்ட ஆவணம் என்பதையே, பிரதானமாக வலியுறுத்தினர். அதுவே, அந்தத் திட்டத்துக்கு கூடுதல் பெறுமானத்தைக் கொடுத்தது.

அதுபோலத் தான், தற்போது, சிவா பசுபதிக்கு, இரண்டு தகைமைகள் உள்ளன. ஒன்று, முன்னாள் சட்டமா அதிபர் என்பது. இரண்டாவது, விடுதலைப் புலிகளின் அரசியல் விவகாரப் பிரிவில் இருந்தவர் என்பது. விடுதலைப் புலிகளின் அரசியல் விவகாரப் பிரிவில் ஆலோசகராக இருந்த ஒருவரையும் உள்ளடக்கியே, தீர்வுத் திட்டம் தயாரிக்கப்படுகிறது எனும் போது, அது தமிழ் மக்களிடம் கூடுதல் ஈர்ப்பைப் பெறும் என்பதில் சந்தேகமில்லை. அதற்காகத் தான், அவரை உள்ளே கொண்டு வரும் முயற்சிகள், தமிழ் மக்கள் பேரவையினால் முன்னெடுக்கப்பட்டன.

அவர் அதற்கு உடன்பட மறுத்தது, தமிழ் மக்கள் பேரவைக்கு ஏற்பட்டிருக்கின்ற சறுக்கல் என்றே கூறலாம். சிவா பசுபதி இணைந்தாலும் சரி இணையா விட்டாலும் சரி, தமிழ் மக்கள் பேரவை, தனது செயற்பாடுகளை முன்னெடுக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், அதற்குக் கூடுதல் பெறுமானத்தைக் கொடுக்கக் கூடிய ஒரு வாய்ப்பு, பறிபோயிருக்கிறது. அதேவேளை, அவர் மறுப்புத் தெரிவித்தமைக்குக் கூறியிருக்கும் காரணம், இந்திய ஊடகம் குறிப்பிட்டது போலவே அமைந்திருந்தால், அது, தமிழ் மக்கள் பேரவையினால் ஜீரணிக்க முடியாத ஒன்றாகவே இருக்கும். எவ்வாறாயினும், இந்த விவகாரம் குறித்து, அதாவது, இந்திய ஊடகத்தில் வெளியான தகவல்கள் குறித்து, எந்தக் கருத்தையும் வெளியிட முதலமைச்சர் மறுத்திருக்கிறார்.

அதேவேளை, விசமத்தனமான செய்திகள் வெளியாவதாகவும், அவர் கூறியிருக்கிறார். எது எவ்வாறாயினும், உபகுழுவை நியமிப்பதில் வேகம் காட்டியளவுக்கு, அதற்குத் பொருத்தமானவர்களைக் கண்டறிவதில், தமிழ் மக்கள் பேரவை, வேகத்தைக் காட்ட முடியவில்லை.

சிவா பசுபதி விவகாரத்தில், அவரது உடன்பாட்டைப் பெறாமல், அதுபற்றிய செய்திகளைக் கசிய விட்டு, தம்மைப் பரபரப்பாக்கிக் கொள்ள முயற்சி மேற்கொண்டதன் விளைவு தான், தமிழ் மக்கள் பேரவைக்கு இந்த சறுக்கல் நிலையை ஏற்படுத்தியிருக்கிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X