Janu / 2026 பெப்ரவரி 25 , பி.ப. 04:58 - 0 - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம். ஐயூப்
அண்மையில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நிறைவேற்றிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்துச் செய்யும் சட்டமூலமும் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கான வரவு செலவு திட்ட ஆலோசனையும் எதிர்க்கட்சிகளுக்கு கையாள கஷ்டமான இரண்டு விடயாங்களாக இருந்தன.
இந்த இரண்டும் ஆளும் கட்சிக்கான மக்கள் ஆதரவை பெருக்கும் விடயங்கள் என்பதால் அக்கட்சிகளுக்கு அவற்றுக்கு அதரவு வழங்கவும் முடியாது. அதேவேளை அவற்றை எதிர்த்தால் மக்களின் எதிர்ப்பை சந்திக்க நேரிடும் என்பதால் அவற்றை எதிர்க்கவும் முடியாது.
மாற்றுக் கட்சியின் ஆட்சியாக இருந்தாலும் அரசாங்கம் முன்வைக்கும் நல்ல விடயங்களை ஆதரிக்கும் அதேபோல் மோசமான விடயங்களை எதிர்க்கும் அரசியல் நாகரிகம் இலங்கை அரசியலில் இல்லாமையே இதற்குக் காரணமாகும்.
எம்பிக்களின் ஓய்வூதியம் என்ற விடயத்தில் மக்கள் விடுதலை முன்னணிக்கும் அதன் தலைமையில் உருவாக்கப்படுள்ள தேசிய மக்கள் சக்திக்கும் ஆரம்பத்திலிருந்தே நிலையானதோர் நிலைப்பாடு இருந்தது. 1977 ஆம் ஆண்டு ஜே. ஆர். ஜயவர்தன அரசாங்கத்தால் எம்.பிக்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் அறிமுகப்படுத்தப்பட்ட நாள் முதல் மக்கள் விடுதலை முன்னணி அதனை எதர்த்து வந்துள்ளது.
மக்கள் விடுதலை முன்னணியல்லாத பல குழுக்கள் தேசிய மக்கள் சக்தியில் இருந்த போதிலும் அவை அடிப்படையில் மக்கள் விடுதலை முன்னணியின் கொள்கைகளையே பின்பற்றுகின்றன. எனவே 2019 ஆம் ஆண்டு தேசிய மக்கள் சக்தி அரம்பிக்கப்பட்டது முதல் அக்கட்சியும் எம்.பிக்களின் ஓய்வூதியத்தை எதிர்த்தே வந்துள்ளது.
அரசியல் என்பது பணம் சம்பாதிக்கும் பொறிமுறையொன்றல்ல, அது சமூக சேவைக்கான தற்தேர்வாக இருக்க வேண்டும் என்ற கொள்கையின் அடிப்படையிலேயே அரசியல்வாதிகளுக்கான ஓய்வூதியம் தொடர்பான மக்கள் விடுதலை முன்னணியினதும் தேசிய மக்கள் சக்தியினதும் நிலைப்பாடு அமைந்துள்ளது. அந்த அடிப்படையிலேயே முன்னாள் ஜனாதிபதிகளுக்கு உத்தியோகபூர்வ விடுதிகள் மற்றும் ஏனைய வசதிகள் வழங்கும் சட்டமும் கடந்த செப்டம்பர் மாதம் இரத்துச் செய்யப்பட்டது.
எனவே கடந்த நவம்பர் மாதம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதியத்தை இரத்துச் செய்யும் சட்மூலம் அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்டது. இம்மாதம் 17 ஆம் தகதி அது நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு சட்டமாக்கப்பட்டது.
ஆனால் எதிர்க்கட்சிகள் இந்த விடயத்தில் நிலையான கொள்கையின்றி ஊசலாடின. தேசிய மக்கள் சக்தி இந்த ஓய்வூதியத்தை இரத்துச் செய்வதாக 2024 ஆம் ஆண்டு ஜனாதிதி தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல் காலத்தில் வாக்குறுதி அளித்த போது எதிர்க்கட்சிகள் அதை விமர்சிக்கவோ எதிர்க்வோ இல்லை.
ஆனால் இரண்டு தேர்தல்களுகளும் நடைபெற்று முடிந்ததன்; பின்னர் நாடாளுமன்றத்துக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் எம்பியாக தெரிவாகியிருந்த ஹேஷா வித்தானகே எம்பிக்களின் ஓய்வூதியம் உள்ளிட்ட அவர்களுக்கான சகல வசதிகளையும் இரத்துச் செய்வதற்கான தனி நபர் பிரேரணையொன்றை தாம் விரைவில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதாக தெரிவித்தார். அப்போதும் ஐக்கிய மக்கள் சக்தி அதனை ஆதரிப்பதாகவோ எதிர்ப்பதாகவோ கூறவில்லை. ஐமசவின் கீழ் போட்டியிட்ட தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகளும் அதனை எதிர்க்கவில்லை.
ஆயினும்; ஹேஷா அவ்வாறு சபதம் செய்ததன் பின்னர் கடந்த 15 மாதங்களில் ஒருபோதும் அவர் தாம் கூறியவாறு அவ்வாறான தனி நபர் பிரேரணையொன்றை சமர்ப்பிக்கவில்லை. அதற்குப் பதிலாக ரனில் விக்ரமசிங்கவின் புதிய ஜனநாயக முன்னணியின் சார்பில் நாடாளுமன்றத்துக்கு நியமிக்கப்பட்ட ரவி கருணாநாயக்க கடந்த வருடம் பெப்ரவரி மாதம் எம்பிக்களின் ஓய்வூதியத்தை இரத்துச் செய்வதற்கான தனி நபர் பிரேரணையொன்றை சமர்ப்பித்தார்.
அதனையும் எதிர்க்கட்சியில் உள்ள எந்தவொரு கட்சியும் எதிர்க்கவில்லை. இதே நோக்கத்துக்காக தேசிய மக்கள் சக்தி சட்டமூலமொன்றை முன்வைத்த போது அதற்கு எதிராக நீதிமன்றம் செல்வதாக கூச்சலிட்ட மக்கள் விடுதலை முன்னணியிலிருந்து பிற்காலத்தில் பிரிந்து சென்ற முன்னாள் மக்கள் விடுதலை முன்னணியின் எம்பிக்களும் ஹேஷாவின் வாக்குறுதியையோ ரவி கருணாநாயக்கவின் பிரேரணையையோ எதிர்க்கவோ விமர்சிக்கவோ இல்லை.
எனினும் எம்பிக்களின் ஓய்வூதியத்தை இரத்துச் செய்வதற்கான தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் சட்டமூலம் கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது ஐக்கிய மக்கள் சக்தி அதனை கடுமையாக விமர்சித்தது. ஐமசவின் சார்பில் தெரிவு செய்யப்பட்டு இப்போது ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் செய்லாளர் பதவிக்காக போராடும் தயாசிறி ஜயசேகரவே அதில் முன்னணியில் இருந்தார்.
ரவி கருணாநாயக்க மேற்படி தனி நபர் பிரேரணையை சமர்ப்பித்த போது மௌனமாக இருந்த புதிய ஜனநாயக முன்னணியின் சார்பில் தெரிவான சாமர சம்பத் தசநாயக்கவும் அதiனை கடுமையாக எதிர்த்தார். அவரும் அண்மையில் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தேசிய அமைப்பாளராக தெரிவு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
அரசாங்கத்தின் சட்டமூலம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடைபெற்ற போது தமிழ் முஸ்லிம் கட்சிகள் உள்ளிட்ட ஐமச எம்பிக்களும் இலங்கை தமிழரசுக் கட்சி எம்பிக்களும் அவ்வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாது சபையிலிருந்து வெளியேறி இருந்தனர். ரவி கருணாநாயக்க ஆளும் கட்சியோடு சேர்ந்து சட்டமூலத்துக்கு ஆதரவாக வாக்களித்தார்.
அவ்வாறாயின் இந்த விடயத்தில் எதிர்க்கட்சிகளின் கொள்கை என்ன? 15 மாதங்களுக்கு முன்னர் ஹேஷா கூறியதைப் போல் அவர்கள் இதனை ஆதரிப்பதாக இருந்தால் அதனை ஏன் விமரசிக்க வேண்டும்? அதேபோல் ஏன் வாக்களிக்காமல் ஒதுங்கியிருக்க வேண்டும்? ஹேஷாவே அதனை ஆதரிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
ரவி கருணாநாயக்க சட்டமூலத்தை ஆதரித்து வாக்களித்த போதும் நாடாளுமன்றத்துக்குள் அவரது கடசிக்காரரான சாமர சம்பத் அதனை விமர்சித்தார். வாக்களிக்கவும் சபையில் இருக்கவில்லை. ரவி சட்டமூலத்தை ஆதரித்தாலும் ஓய்வூயத்தை இரத்துச் செய்வதன் கௌரவம் அரசாங்கத்துக்கு மட்டுமு; போகக்கூடாது என்பதற்காகவே தாம் அதனை ஆதரித்து வாக்களித்ததாக கூறினார். அதாவது அவரும் கொள்கை அடிப்படையில் அதனை ஆதரிக்கவில்லை. அவ்வாறாயின் அவர் ஏன் கடந்த வருடம் பெப்ரவரி மாதம் தனி நபர் பிரேரணையொன்றை சமர்ப்பித்தார்?
அரசியல்வாதிகள் ஓய்வூதியம் பெறுவதை பொதுமக்கள் விரும்பவில்லை என்பதை எதிர்க்கட்சிகளுக்குத் தெரியும். அல்லது அவ்வாறு அவர்கள் கருதுகிறார்கள். எனவே தான் அக்கட்சிகள் தேர்தல் காலத்தில் தேசிய மக்கள் சக்தி இவ்விடயம் தொடர்பாக அளித்த வாக்குறுதியை விமர்சிக்கவில்லை. அதே காரணத்தினால் தான் ஹேஷா தனி நபர் பிரேரணையொன்றை கொண்டுவருவதாக கூறினார். அதனாலேயே தான் ஐமுச அப்போது மௌனமாக இருந்தது.
தாம் ஓய்வூதியத்தை இரத்துச் செய்வதை எதிர்க்கவில்லை என்று நாளை கூறுவதற்காகவே எதிர்க் கட்சிகள் வாக்களிப்பில் இருந்து ஒதுங்கிக்கொண்டன. அதற்காகவே ரவியும் சட்டமூலத்துக்கு ஆதரவாக வாக்கிளத்துள்ளார்.
எம்பிக்களின் இறுதி காலத்தில் அவர்களுக்கு வாழ்வதற்கு ஒரு வழி வேண்டும் என்பதே ஓய்வூதியத்தை அதரிப்போரின் பிரதான வாதமாகும். நீண்ட காலத்துக்கு முன்னர் சில முன்னாள் எம்பிக்கள் அவ்வாறு கஷ்டப்பட்டதாக கூறப்பட்டாலும் இன்றைய நடைமுறை அதுவல்ல. இப்போது வாழ வாழியில்லாத முன்னாள் எம்பிக்கள் இருப்பதாக கூற முடியாது. இருந்தால் மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் எம்பிக்களாகத் தான் இருக்க வேண்டும்.
தற்காலத்தில் மக்கள் விடுதலை முன்னணி, தேசிய மக்கள் சக்தி, முன்னணி சோஷலிச கட்சி மற்றும் சில சிறிய இடதுசாரி கட்சிளைத் தவிர எந்தவொரு கட்சியும் வருமானம் இல்லாத வறியவர்களை எந்தவொரு தேர்தலிலும் வேட்பாளர்களாக நிறுத்துவதில்லை. அவ்வேட்பாளர்கள் தேர்தல்களுக்காக கோடிக் கணக்கில் செலவழிப்பதன் மூலமும் அது தெளிவாகிநறது. அவ்வேட்பாளர்கள் நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டாலும் அவர்கள் தமது வருமான வழிகளை கைவிடுவதில்லை. பின்னர் அவர்கள் ஓய்வு பெற்றாலும் அந்த வருமானம் இல்லாமல் போவதில்லை.
தேசிய மக்கள் சக்தி பதவிக்கு வரும் வரை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தீர்வையற்ற முறையில் ஒரு வாகனத்தை இறக்குமதி செய்ய அனுமதிப் பத்திரம் ஒன்று வழங்கப்பட்டது. பெரும்பாலான எம்பிக்கள் அவ்வனுமதிப் பத்திரத்தை பல கோடி ரூபாவுக்கு விற்று சாதாரண சுகபோக வாகனம் ஒன்றை கொள்வனவு செய்து கோடிக் கணக்கில் சம்பாதி;த்தனர். இரண்டு வாரம் நாடாளுமன்றத்தில் இருந்த ஒருவரும் அவ்வாறு வாகன அனுமதிப்பத்திரத்தை பெற்றுள்ளார்.
அண்மையில் பிரதமர் ஹரினி அமரசூரிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான சகல கொடுப்பனவுகளையும் வெளியிட்டு இருந்தார். அதன் படி எம்பிக்கள் ஒவ்வொருவரும் மாதாந்தம் பல இலட்சம் ரூபா பொதுப் பணத்தில் இருந்து பெறுகிறார்கள். அவர்களில் பலர் கடந்த காலங்களில் அதிகாரத்தை பாவித்து சட்டவிரோதமாகவும் பணம் சம்பாதித்தனர்.
இன்றைய இலங்கை சமூகத்தில் ஓய்வூதியம் பெறுவோரைப் பார்க்கிலும் பெறாதவர்களே அதிகமாக இருக்கினறனர். அவர்களிலும் பெரும்பாலானோர் வறியவர்களாவர். அவ்வாறு இருக்கத் தான் எம்பிக்களுக்கு ஓய்வுதியம் வழங்கப்பட்டது. சாதரணமாக அரச ஊழியர் ஒருவர் ஓய்வூதியம் பெறுவதற்காக குறைந்தபடசம் 10 ஆண்டுகள் கடமையாற்றி இருக்க வேண்டும். ஆனால் எம்பிக்களு;க்கு ஐந்து வருடங்களில் ஓய்வூதியம் வழங்கப்பட்டது.
அரச ஊழியர் ஒருவர் 55 வயதுக்குப பின்னரே ஓய்வூதியம் பெற முடியும் ஆனால் எம்பிக்கள் 25 வயதில் ஓய்வு பெற்றாலும் அன்றிலிருந்தே அவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்பட்டது. எனவே எம்பிக்களுக்கான ஓய்வூதியத் திட்டம் நியாயமற்ற முறையிலேயே அமைந்திருந்தது. எவ்வாறாயினும் ஓய்வூதியம் இரத்துச் செய்யப்பட்டமை தேசிய மக்கள் சக்தியின் பல வறிய எம்பிக்களை பாதிக்கலாம். அவர்கள் நீண்ட காலமாக நாடாளுமன்றத்தில் இருந்தால் அவர்களது எதிர்காகலம் கஷ்ட காலமாகலாம்.
25.02.226
4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago