Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 30, புதன்கிழமை
எம். காசிநாதன் / 2019 டிசெம்பர் 30 , மு.ப. 12:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
தேசிய மக்கள் தொகைப் பதிவேடும் தேசிய குடிமக்கள் பதிவேடும் ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
இந்திய அமைச்சரவைக் கூட்டம், “தேசிய மக்கள் தொகைப் பதிவேடு புதுப்பிக்கப்படும்” என்று, முடிவு எடுத்திருக்கிறது. குடியுரிமைச் சட்டத் திருத்தத்தின் சர்ச்சைகள் ஓய்வு பெறுவதற்கு முன்பே, எடுக்கப்பட்டுள்ள இந்த முடிவு, மீண்டும் போராட்டக் களத்தை சூடுபடுத்தி இருக்கிறது.
தேசிய மக்கள் தொகைப் பதிவேடு என்பது, இந்தியாவுக்குப் புதிதல்ல. ஏற்கெனவே, மன்மோகன்சிங் பிரதமராக இருந்த போது, இந்தத் திட்டம் தொடங்கப்பட்டு, மக்கள் தொகை பற்றிய விவரங்கள் சேகரிக்கப்பட்டன. இப்படி, மக்கள் தொகை சேகரிப்புக்காக வெளியிடப்பட்ட கேள்விகள், மக்கள் மத்தியில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தின.
அந்தப் பதிவேட்டின் அடிப்படையில், அடையாள அட்டை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதன் பிறகு, ஆதர் அடையாள அட்டை வழங்கப்பட்டாலும், தேசிய மக்கள் தொகைப் பதிவேட்டின் அடுத்த கட்டப் பணிகள் மேற்கொள்ளப்படவில்லை.
இந்நிலையில், மீண்டும் இப்போது பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை, மக்கள் தொகை கணக்கெடுப்புடன், தேசிய மக்கள் தொகைப் பதிவேட்டை (National Population Register) புதுப்பிக்கும் பணிக்கும் சேர்தது, கடந்த செவ்வாய்க்கிழமை (24) 12,695 கோடி ரூபாய்க்கான திட்டத்துக்கு அனுமதி அளித்துள்ளது. இந்த அனுமதிதான், புதிய சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது.
குடியுரிமைச் சட்டத் திருத்தத்துக்கு எதிரான போராட்டம், ஆங்காங்கே நடைபெற்று, உத்தர பிரதேசத்தில் மட்டும் 20 பேருக்கும் மேல் உயிரிழந்த நிலையில், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, தானே முன்னின்று பேரணிகளை நடத்தி வருகிறார். இந்தச் சட்டத் திருத்தத்துக்குக் காங்கிரஸ் கட்சி, ஆளும் மாநில முதலமைச்சர்கள் உள்ளிட்ட 12 க்கும் மேற்பட்ட முதலமைச்சர்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருகிறார்கள்.
குறிப்பாக, கூட்டணிக் கட்சிகளான அகாலிதளம், ஐக்கிய ஜனதா தளக் கட்சி போன்றவை, குடியுரிமைச் சட்டத் திருத்தத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை என்றாலும், அதன் அடிப்படையில் தயாரிக்கப்படுவதாகக் கூறப்படும் தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன.
“கூட்டணிக் கட்சிகள் பலவும் அதிருப்தியில் இருக்கின்றன. ஆகவே, தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் கூட்டத்தைக் கூட்ட வேண்டும்” என்று அகாலிதளம் வலியுறுத்தி வருகிறது.
குடியுரிமைச் சட்டத் திருத்தத்துக்குக் கடுமையான எதிர்ப்புத் தெரிவிக்கும் மாநிலங்களில், அஸ்ஸாம் முக்கியமானது. அங்குதான் உச்சநீதிமன்றத்தின் மேற்பார்வையில், தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிக்கும் பணி நடைபெற்று முடிந்திருக்கிறது.
இந்தப் பதிவேட்டுக்குப் பிறகு, 19 இலட்சம் மக்கள், அங்கு குடியுரிமை பெறும் ஆதாரங்கள் இன்றி இருக்கிறார்கள் என்பது கண்டறியப்பட்டுள்ளது. இப்படிக் குடியுரிமை இல்லாதவர்கள், தடுப்பு முகாம்களுக்கு அனுப்பப்படுவார்கள் என்பதும், ஆங்காங்கே தடுப்பு முகாம்கள் அமைக்கப்படுகின்றன என்பது செய்திகளாகவும் எதிர்க்கட்சிகளின் கண்டன அறிக்கைகளாகவும் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
முன்னாள் உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம், “தடுப்பு முகாம்கள் அமைக்கப்படுகின்றனவா என்பதை, உளவுத்துறை மூலம் விசாரித்து, பிரதமர் அறிந்து கொள்ளலாம்” என்று பேட்டி கொடுத்து, “தடுப்பு முகாம்கள் அமைக்கப்படவில்லை” என்ற மோடியின் கருத்தை மறுத்திருக்கிறார்.
இந்நிலையில், மக்கள் தொகைப் பதிவேட்டைப் புதுப்பிக்கும் அமைச்சரவையின் முடிவு, மீண்டும் எதிர்ப்பு அலையை ஏற்படுத்தி இருக்கிறது. இது, தேசிய குடிமக்கள் பதிவேடு (National Register of Citizens) தயாரிப்பதற்கான முன்னோட்டம் என்று, எதிர்க்கட்சிகள் கூறி வருகின்றன.
குறிப்பாக, தேர்தல் பிரசாரங்களில் உரையாற்றிய தற்போதையை உள்துறை அமைச்சர் அமித்ஷா, “முதலில் குடியுரிமைச் சட்டத் திருத்தம்; பிறகு மக்கள் தொகைப் பதிவேடு; அடுத்து, தேசிய குடிமக்கள் பதிவேடு” என்று பேசி வந்ததை, இன்றைக்கு எதிர்க்கட்சிகள் சுட்டிக்காட்டி, வருகின்றன.
இந்தச் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில், “நாடு தழுவிய ரீதியில் குடிமக்கள் பதிவேடு தயாரிக்கும் பணி பற்றி, அரசு மட்டத்தில் விவாதமே நடைபெறவில்லை” என்று பிரதமர் மோடி அறிவித்ததை அடுத்து, தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிப்பதில் பிரதமருக்கும் உள்துறை அமைச்சருக்கும் கருத்து வேறுபாடா என்று, எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின.
ஆனால், உண்மை என்னவென்றால், ‘தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிக்க வேண்டும்’ என்ற கொள்கை முடிவை எடுத்து, அதற்காகக் குடியுரிமைச் சட்டத்தில் உரிய திருத்தத்தைக் கொண்டு வந்தவர், மறைந்த முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் என்பது குறிப்பிடத்தக்கது.
2003இல் பா.ஜ.கவையும் உள்ளடக்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங்கம் இருந்த போது, குடியுரிமைச் சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டு, 14A என்ற புதிய விதி சேர்க்கப்பட்டது. மொத்தமே 19 விதிகள் உள்ள 1955 ஆம் வருடத்திய குடியுரிமைச் சட்டம், இதுவரை 10 முறை திருத்தப்பட்டுள்ளது.
வாஜ்பாய் பிரதமராக இருந்த போது, புதிதாகச் சேர்க்கப்பட்ட இந்த விதியின் முக்கிய நோக்கங்கள் மூன்று ஆகும். முதலில், இந்தியக் குடிமக்கள் ஒவ்வொருவரையும் கட்டாயம் பதிவு செய்வது; அப்படிப் பதிவு செய்தவர்களுக்கு, தேசிய அடையாள அட்டை வழங்குவது.
இரண்டாவது நோக்கம், இதற்காகத் தேசிய குடிமக்கள் பதிவேட்டைத் தயாரிப்பது. மூன்றாவது நோக்கம், இந்த நோக்கங்களுக்கு முதலில் வடிவம் கொடுத்தது, பிரதமராக இருந்த டொக்டர் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கம் ஆகும். அப்போதுதான், தேசிய அடையாள அட்டை வழங்கும் பணிக்காக, நாடு தழுவிய ரீதியில், தேசிய மக்கள் தொகைப் பதிவேடு தயாரிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.
ஆனால், தற்போது அஸ்ஸாம் மாநிலத்தில், உச்சநீதிமன்றத்தின் மேற்பார்வையில் நடத்தப்பட்ட தேசிய குடிமக்கள் பதிவேடு விவகாரத்தில், குடியுரிமை இழந்தவர்களின் விவரம் தெரிய வந்த பிறகு, இந்தத் தேசிய மக்கள் தொகை பதிவேட்டுக்குக் கடும் எதிர்ப்புக் கிளம்பி வருகிறது.
பா.ஜ.கவின் கூட்டணிக் கட்சியான, ஐக்கிய ஜனதா தளத்தின் துணைத் தலைவர் பிரசாந்த் கிஷோர், “தேசிய மக்கள் தொகைப் பதிவேடும் தேசிய குடிமக்கள் பதிவேடும் ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள்” என்று விமர்சித்தார். தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலின், “இவை ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள்” என்று டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மத்திய பிரதேசத்தின் காங்கிரஸ் முதலமைச்சர் கமல்நாத், “காங்கிரஸ் கட்சியும் தேசிய மக்கள் தொகைப் பதிவேடு தயாரிக்கும் பணியைச் செய்தது. ஆனால், அதைக் குடிமக்கள் பதிவேடு தயாரிக்கும் பணியுடன் இணைக்கவில்லை. இப்போது மத்திய அரசு கொண்டு வரும் தேசிய மக்கள் தொகைப் பதிவேடு தயாரிக்கும் பணிக்கு, உள்நோக்கம் இருக்கிறது” என்று எதிர்த்துள்ளார்.
மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியும் “தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிக்கும் பணியை, எங்கள் அரசு செய்யாது” என்று, வெளிப்படையாகத் தெரிவித்து, போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
இவற்றுக்குத் தீர்வு காணும் வகையில், “தேசிய மக்கள் தொகைப் பதிவேட்டுக்கும் குடிமக்கள் பதிவேட்டுக்கும் தொடர்பில்லை” என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்திருக்கிறார்.
ஆனால், இப்போது வெளியிடப்பட்டுள்ள அமைச்சரவைத் தீர்மானத்தில், “அஸ்ஸாம் மாநிலம் தவிர, மற்ற மாநிலங்களில் தேசிய மக்கள் தொகைப் பதிவேடு தயாரிக்கும் பணி நடைபெறும்” என்று அறிவித்திருப்பது, சந்தேகத்தை வலுப்படுத்தியுள்ளது.
அஸ்ஸாம் மாநிலத்தில், ஏற்கெனவே தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிக்கும் பணி நிறைவுபெற்றுள்ளது. ஆகவேதான், தேசிய மக்கள் தொகைப் பதிவேடு தயாரிக்கும் பணியில், அஸ்ஸாம் மாநிலம் விடுவிக்கப்பட்டுள்ளது. இந்நிலை,“மற்ற மாநிலங்களில் நிச்சயம், தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிக்கும் பணி நடக்கப்போகிறது” என்ற எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்கு வலுச் சேர்க்கும் வகையில், அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு அமைந்துள்ளது.
ஏற்கெனவே மக்கள், பான் கார்ட், வாக்காளர் அட்டை, ஆதார் அட்டை என்று பல்வேறு ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டு, எந்தத் திட்டத்துக்கு எந்த அட்டை தேவை என்ற குழப்பத்துக்கு, இன்னும் தீர்வு கிடைக்காமல்த் தவிக்கிறார்கள்.
இந்த நிலையில், இப்போது வெளிவரும் குடியுரிமைச் சட்டத் திருத்தத்தின் தாக்கம், தேசிய மக்கள் தொகைப் பதிவேடு தயாரிக்கும் பணி எல்லாம், ‘நாங்கள் இந்திய குடிமக்கள்’ என்று நிரூபிக்கும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டு, நாடு முழுவதும் பல்வேறு அலுவலகங்கள் முன்பு, வரிசையில் நிற்க வேண்டிய நிலை வருமோ என்ற அச்சமே, இப்போது தேசிய மக்கள் பதிவேடு தயாரிக்கும் பணிக்கு எழுந்துள்ள எதிர்ப்பின் பின்னனி ஆகும்.
2003 ஆம் ஆண்டு குடியுரிமைச் சட்டத் திருத்தத்துக்குச் செயல்வடிவம் கொடுக்க, தேசிய மக்கள் தொகைப் பதிவேடு நிச்சயம் வேண்டும். அதன் அடிப்படையில், ஒவ்வொரு குடிமகனுக்கும் தேசிய அடையாள அட்டை வழங்கும் போது, தேசிய குடிமக்கள் பதிவேடு நிச்சயம் உருவாகும்.
ஆகவேதான், தேசிய மக்கள் தொகைப் பதிவேடு, தேசிய குடிமக்கள் பதிவேடு இரண்டும் ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள் என்பதை, எதிர்க்கட்சிகள் நம்புகின்றன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
3 hours ago
3 hours ago