Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 16, வெள்ளிக்கிழமை
Thipaan / 2016 மார்ச் 27 , மு.ப. 04:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஒற்றையாட்சிக்குள், மாகாணசபைகளுக்கு அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்கத் தாம் தயாராக இருப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கடந்த திங்கட்கிழமை ஹிக்கடுவையில் நடந்த முதலமைச்சர்களின் மாநாட்டில் வெளியிட்ட கருத்து, மேம்போக்கானதாக ஒதுக்கிவிடத்தக்க ஒன்று அல்ல.
புதிய அரசியலமைப்பை உருவாக்கும் முயற்சிகள் ஒருபக்கத்தில் நடந்து கொண்டிருக்கின்ற நிலையில், தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வை அது உள்ளடக்கியதாக இருக்குமா, இல்லையா என்ற விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்ற நிலையில் தான், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீண்டும் ஒற்றையாட்சி பற்றிப் பேசியிருக்கிறார். மாகாணசபைகள், அதிகாரப்பகிர்வு, ஒற்றையாட்சி இந்த மூன்றும் தான் ஜனாதிபதியின் உரையின் முக்கியமான விடயங்கள். முதலமைச்சர்களின் மாநாடு என்பதால், மாகாணங்களுக்கான அதிகாரங்களைப் பகிர்ந்து கொள்வது பற்றி அவர் அதிகம் பேசியிருக்கிறார். அவ்வாறு பேசாதிருந்தால், அது பொருத்தமற்ற பேச்சாக மாறியிருக்கும்.
அதிகாரங்களைப் பகிர்ந்து கொள்வதை எதிர்ப்பவர்கள் கற்காலத்துக்குச் செல்ல முனைபவர்கள் என்றும், கோத்திரவாதிகள் என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டிருக்கிறார். நவீன காலத்தில் அதிகாரங்களைப் பகிர்ந்து கொள்வதையே எல்லோரும் விரும்புகின்றனர் என்பதை சுட்டிக்காட்டியிருக்கும் அவர், ஒற்றையாட்சிக்குள் மாகாணசபைகளுக்கு அதிகாரங்களைப் பகிர்ந்தளிப்பது பற்றியே பேசியிருக்கிறார். இனப்பிரச்சினைக்கு சமஷ்டி முறையிலான தீர்வே பொருத்தமானது என்ற தமிழர்கள் தரப்பில் இருந்து வலியுறுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு சூழலில், தான் ஒற்றையாட்சியின் மீது ஜனாதிபதி கொண்டிருக்கும் அதீத நம்பிக்கை வெளிப்பட்டிருக்கிறது. ஒற்றையாட்சி மட்டும் தான், நாட்டின் ஒற்றுமையைப் பலப்படுத்தும் என்று சிங்கள மக்கள் மத்தியில் ஊறிப்போயிருக்கும் கருத்தை ஜனாதிபதியின் உரையிலும் உணரமுடிகிறது.
மாகாணசபைகளுக்கு அதிகாரங்களைப் பகிருவது ஒற்றையாட்சியைப் பலவீனப்படுத்தும் என்ற கருத்தே முன்னைய ஆட்சியாளர்களிடம் இருந்து வந்திருக்கிறது. அதனால் தான், 13ஆவது திருத்தச்சட்டம் மாகாணசபைகளுக்கு வழங்கிய அதிகாரங்களைக் கூட மத்திய அரசாங்கம் பிடுங்கி வைத்துக் கொண்டது. அவற்றில் முக்கியமானவை, காணி, பொலிஸ் அதிகாரங்கள். மாகாணசபைகளை அதிகாரப்பகிர்வின் மூலம் வலுப்படுத்தியிருந்தால், இனப்பிரச்சினை இந்தளவுக்கு மோசமடைந்திருக்காது என்ற கருத்தை அண்மையில் இரா.சம்பந்தனும் வெளிப்படுத்தியிருந்தார்.
ஆனால், இத்தகைய தருணத்தில், தமிழ் மக்களின் அபிலாஷைகளைத் தீர்த்துக் கொள்வதற்கான ஒரு களமாக மாகாணசபைகள் இருக்குமா என்ற கேள்வியும் இருக்கிறது. தமிழர்கள் எதிர்பார்க்கும் கௌரவமான - நியாயமான தீர்வு, மாகாணசபை முறைமைகளுக்கு கொஞ்சம் கூட நெருங்கமாக இல்லை என்பதை உறுதியாகவே கூறலாம்.
இந்தியாவின் தலையீட்டின் மூலமே, மாகாணசபைகள் மூன்று தசாப்தங்களுக்கு முன்னர் உருவாக்கப்பட்டன. அந்தக் காலகட்டத்தில் விடுதலைப் புலிகளுக்கு வட-கிழக்கு மாகாணங்களை ஆளும் அதிகாரங்களை வழங்குவதற்கும் கூட இணக்கம் தெரிவிக்கப்பட்டது. ஆனால், விடுதலைப் புலிகள் அதற்கு உடன்படவில்லை. ஏனென்றால், அது நிலையானதோ நிரந்தரமானதோ அல்ல என்பது மட்டும் காரணமல்ல. தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகள், அபிலாஷைகளை நிறைவேற்றும் ஒன்றாகவும் இருக்கவில்லை. இப்போதும் கூட விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன், வடகிழக்கு மாகாணசபையைப் பொறுப்பேற்றிருக்க வேண்டும், அவ்வாறு செய்திருந்தால் அழிவுகளில் இருந்து தப்பியிருக்கலாம். இன்னும் அதிகமாகப் பெற்றிருக்கலாம் என்று கருதுவோரும் உள்ளனர்.
ஆனால், அதற்கான வாய்ப்புகள் இருக்கவில்லை. வடக்கு, கிழக்கு மாகாணங்கள் எவ்வாறு பிரிக்கப்பட்டனவோ, காணி, பொலிஸ் அதிகாரங்கள் எவ்வாறு பறிக்கப்பட்டனவோ, அதுபோல, பிற்காலத்தில் நிகழ்ந்திராது என்பதற்கு எந்த உத்தரவாதம் இருக்கவில்லை. தனிநாட்டுக்கான போராட்டத்துக்கு அங்கிகாரம் அளித்த தமிழ் மக்கள், குறைந்தபட்ச அதிகாரங்களையே கொண்ட மாகாணசபைகளைப் பெற்றுக் கொள்வதுடன் திருப்திப்பட்டிருப்பார்கள் என்று கூற மடியாது.
எனவே, மாகாணசபை முறைமைகள் உருவாக்கப்பட்ட போது, அதனை ஏற்றுக்கொள்ள விடுதலைப் புலிகள் மறுத்தமை தான், இன்னும் கூடுதல் அதிகாரப்பகிர்வுக்கான கோரிக்கையை அழுத்தமாக முன்வைக்கக் காரணமாகியது. அவ்வாறான கோரிக்கை நிறைவேறியதா, அந்த நிலைப்பாட்டில் இருந்து தமிழர்களால் வெற்றிபெற முடிந்ததா என்ற கேள்விகள் இங்கு முக்கியமில்லை. மாகாணசபை முறைமை நிராகரிக்கப்பட்டதால் தான், தமிழர்கள் தமக்கான உச்ச அதிகாரப்பகிர்வை எதிர்பார்க்கிறார்கள் என்பது வெளிப்பட்டது. அதைவிட, விடுதலைப் புலிகளிடம் இருந்த ஆயுதபலம், அந்த அதிகாரப்பகிர்வுக் கோரிக்கையை இன்னும் வலுப்படுத்தியது.
அதனால் தான், புலிகள் இல்லாமல் போன ஏழு ஆண்டுகளுக்குப் பின்னரும், கூட தமிழர்கள் கூடுதல் அதிகாரப்பகிர்வுடன் கூடிய சமஷ்டித் தீர்வே தேவை என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கின்றனர். மாகாணசபைகள் என்பது ஒரு நிர்வாக முறைமையாக இருந்தாலும் அதற்கு அதிகாரங்கள் பகிரப்பட்டாலும் அதுவே இனப்பிரச்னைக்கான நிலையான தீர்வாக இருக்க முடியாது.
மாகாணசபைகளுக்கும் அப்பாற்பட்ட ஒரு தீர்வையே தமிழர்கள் எதிர்பார்க்கின்றனர். விரும்புகின்றனர். சமஷ்டி தொடர்பான தமிழர்களின் எதிர்பார்ப்பும் அபிலாஷைகளும் அரை நூற்றாண்டுக்கும் முந்தியவை.
ஆனால், இப்போதும் மாகாணசபை என்ற அரைகுறைத் தீர்வுக்குள் தமிழர்களை உள்ளடக்கி ஒற்றையாட்சி என்ற வட்டத்துக்குள் அவர்களை சிக்கவைக்கவே தென்னிலங்கை அரசியல் சக்திகள் முயற்சிக்கின்றன.
இந்த விடயத்தில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஒன்றும் முற்போக்கான சிந்தனை கொண்டவர் என்று கூறிவிட முடியாது. தாம் சுகாதார அமைச்சராக இருந்தபோது, மாகாண சுகாதார அமைச்சர்களுடன் அதிகாரங்களைப் பகிர்ந்து கொண்டதாக அவர் நினைவுபடுத்தியிருக்கிறார். தாம் ஜனாதிபதியான பின்னர், 19ஆவது திருத்தச்சட்டத்தின் மூலம் அதிகாரங்களைப் பகிர்ந்திருப்பதாகவும் அவர் கூறியிருக்கிறார்.
ஆனாலும், ஏற்கெனவே இருக்கின்ற மாகாணசபைகள் தொடர்பான 13ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த அவர், இதுவரையில் தயாராக இருந்திருக்கவில்லை என்பதும் உண்மை தான்.
அவ்வாறு நடைமுறைப்படுத்துவதற்கு அவர் தயாராக இருந்திருப்பாரேயானால், மாகாணங்கள் இப்போது காணி, பொலிஸ் அதிகாரங்களுடன் இருந்திருக்கும். மாகாணசபைகளை வலுப்படுத்துவதென்பது, அதிகாரப்பகிர்வை இன்னொரு கட்டத்துக்கு நகர்த்தும் என்பது உண்மையாக இருந்தாலும், இனப்பிரச்சினைக்கான தீர்வாக அது அமையும் என்று அரசாங்கம் எதிர்பார்த்தால் அது தவறான கருத்தாகவே இருக்கும்.
ஏனென்றால் தமது உரிமைகள் சார்ந்த விடயத்தில், மாகாணசபைகளையும் தாண்டிய அபிலாஷைகளை தமிழ் மக்கள் கொண்டிருக்கிறார்கள். அறிவுசார் சமூகம் எவ்வாறு அதிகாரப்பகிர்வை வலியுறுத்துகிறதோ அது போலத்தான், தமிழ் மக்களும் கூடுதல் அதிகாரப்பகிர்வு ஒன்று மட்டும் தான் தமது பாதுகாப்பை உறுதிப்படுத்தும் என்று நம்புகிறார்கள். மாகாணசபை முறையும் அதன் அதிகாரங்களும் எவ்வாறு கடந்த காலங்களில் பலவீனப்படுத்தப்பட்டன, மத்திய அரசு ஆட்டுவிக்கும் பொம்மைகளாக எவ்வாறு மாற்றப்பட்டன என்பதை தெளிவாக உணர்ந்த எவரும், மாகாணசபைகளை வலுப்படுத்தும் தீர்வு, நிலையானதாக இருக்கும் என்று நம்பமாட்டார்கள். அதைவிட மாகாணசபைகளின் ஊடாக ஒற்றையாட்சித் தன்மையை உறுதிப்படுத்தி வலுப்படுத்தவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் நினைக்கிறார்.
அவர் சில மாதங்களுக்கு முன்னர், சமஷ்டி என்றால் சிங்களவர்கள் அச்சம் கொள்கிறார்கள், ஒற்றையாட்சி என்றால் தமிழர்கள் அஞ்சுகிறார்கள், இந்த இரண்டு தரப்பையும் ஒரு தீர்வு நிலைக்குள் கொண்டு வருவது முக்கியம் என்று குறிப்பிட்டிருந்தார். ஒற்றையாட்சிக்குள் தமிழர்களின் அபிலாஷைகள் நிறைவேற்றப்படுவதற்கோ, தமிழர்களின் நலன்களும் உரிமைகளும் நிரந்தரமாக பாதுகாக்கப்படுவதற்கோ உறுதிப்பாடு இல்லாத நிலையில் தான் சமஷ்டி பற்றிய நிலைப்பாட்டை தமிழர்கள் எடுத்தனர். சமஷ்டி முறையிலான தீர்வு இன்றும் தமிழர்களால் முன்னிறுத்தப்படுகின்ற நிலையில் மாகாணசபை என்ற பொம்மையைக் கொடுத்து அவர்களைத் திருப்திப்படுத்தலாம் என்று அரசாங்கம் நினைக்கிறது.
பாலுக்கு அழும் பிள்ளையின் கையில், பொம்மையைக் கொடுத்து அடக்குவது போலவே இது. கையில் பொம்மை இருந்தாலும், குழந்தை, பசியெடுக்கும் போது மீண்டும் அழவே செய்யும். அதுபோலத் தான் தமிழர்களின் அபிலாஷைகளைத் தீர்க்கக்கூடிய தீர்வைக் கடந்து வேறெந்த தீர்வையும் முன்னிறுத்த முனைந்தால் அது நிலையானதாகவோ நிரந்தரமானதாகவோ இருக்காது. அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் மாகாணசபைகளுக்கு அதிகாரங்களைப் பகிர்வது ஒன்றும் பெரிய விடயமல்ல.
சிங்கள மக்களினதும், சிங்கள அரசியல் சக்திகளினதும் அதிக எதிர்ப்புகளின்றி அதனை நிறைவேற்றலாம் என்று கூட அரசாங்கம் நினைக்கலாம். ஆனால், தமிழர்களுக்கு அது நிரந்தரமான பாதுகாப்பையோ, உரிமைகளையோ தரும் தீர்வாக அமையாது.
ஒற்றையாட்சிக்குள் நின்று கொண்டு மாகாணசபைகளை வலுப்படுத்தினால் போதும் என்பதையே அதிகாரப்பகிர்வின் உச்சமாக அரசாங்கம் கருதுமாக இருந்தால், தமிழர்களின் நம்பிக்கையை பெருமளவில் நாசப்படுத்தி விடும். அதனை நோக்கியே அரசாங்கம் பயணிக்கிறது என்பது உறுதியானால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் விழித்துக் கொள்ளும். ஏனென்றால், அரசாங்கத்தின் பங்காளிகள் போல நெருக்கமாக இருக்கும் கூட்டமைப்புக்கும், அது பெரும் பாதகத்தை ஏற்படுத்தும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
43 minute ago
6 hours ago
15 May 2025