Thipaan / 2016 ஓகஸ்ட் 09 , மு.ப. 04:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
முகம்மது லெப்பே
'கபாலி' திரைப்படத்தின் முடிவு, பார்வையாளர்களைக் குழப்பும் வகையிலானது. கபாலி என்கிற ரஜினிக்காக வேலை செய்து கொண்டிருந்த இளைஞனொருவனை பொலிஸார் பிடித்து மூளைச்சலவை செய்து, ரஜினியை சுட்டுக் கொல்லுமாறு கூறி, அந்த இளைஞனிடம் துப்பாக்கியையும் கொடுத்து அனுப்புகிறார்கள். டைகர் என்கிற அந்த இளைஞனும் ரஜினி இருக்கும் இடம்தேடி வருகிறான், ரஜினியை நெருங்குகிறான். திடீரென காட்சி இருட்டாகிறது. துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்கிறது. ஒன்றும்; புரியவில்லை. அதற்குள் படம் முடிந்து விடுகிறது. பார்வையாளர்கள் தத்தமக்கு ஏற்றால்போல், கபாலி படத்துக்கான முடிவினை - கற்பனை செய்து கொள்ளத் தொடங்கினார்கள்.ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின்; தலைவர் மீது தவிசாளர் சுமத்தி வரும் குற்றச்சாட்டுகளும், அது குறித்து தலைவர் ஹக்கீம் கடைப்பிடிக்கும் மௌனமும் - கபாலி திரைப்படத்தின் முடிவினைப் போலவே, கட்சி ஆதரவாளர்களைக் குழப்பிக் கொண்டிருக்கின்றன. உதாரணமாக, 'முஸ்லிம் காங்கிரஸின் தலைமையகம் மற்றும் சொத்துக்கள் தொடர்பில் பாரிய மோசடிகள் இடம்பெற்றுள்ளன' என்று, கட்சியின் தவிசாளர் பஷீர் சேகுதாவூத் கூறிவருகின்றார்.
முஸ்லிம் காங்கிரஸின்; சொத்துக்கள் தொடர்பில் 12 கேள்விகளை உள்ளடக்கிய கடிதமொன்றினையும், தலைவர் ஹக்கீமுக்கு தவிசாளர் பஷீர் அனுப்பி வைத்தார். ஆனால், இதுவரை - அந்தக் கடிதத்துக்குரிய பதிலை முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் வழங்கவில்லை என்பதெல்லாம் நாம் அறிந்த கதைகளாகும். இந்த நிலைவரமானது அந்தக் கட்சியின் சாதாரண ஆதரவாளர்களை கடுமையான குழப்பத்துக்குள் தள்ளிவிட்டுள்ளது. தலைவர் மீது தவிசாளர் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்கள் உண்மையா? பொய்யா? தலைவர் குற்றவாளியா? அப்பாவியா? என்கிற முடிவுகளுக்கு வர முடியாமல், கட்சியின் சாதாரண, நடுநிலை ஆதரவாளர்கள் தடுமாறிக் கொண்டிருக்கின்றார்கள். இவ்வாறானதொரு குழப்ப நிலை உருவாகுவதற்கு, கட்சியின் தலைவரும் தவிசாளருமே காரணமாகவும் உள்ளனர்.
முஸ்லிம் காங்கிரஸ் என்கிற கட்சியானது, அதன் அங்கத்தவர்களுக்குச் சொந்தமானதாகும். அந்தக் கட்சியின் நிதி மற்றும் சொத்துக்கள் குறித்து கட்சியின் அங்கத்தவர்கள் கேள்வி கேட்பதற்கும், தெளிவுகளைப் பெற்றுக் கொள்வதற்கும் முழு உரித்துடையவர்களாவர்.
இந்த நிலையில், முஸ்லிம் காங்கிரஸின் சொத்துக்கள் யாருடைய பெயரில் உள்ளன எனும் கேள்விகள் பாரியளவிலும், பரவலாகவும் முன்வைக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, பலகோடி ரூபாய் பெறுமதியுள்ள முஸ்லிம் காங்கிரஸின்; தாருஸ்ஸலாம் எனும் பெயருடைய தலைமையகக் கட்டடத்தின் உரித்து குறித்தான குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. இந்தக் குற்றச்சாட்டுக்களை முன்வைப்பவர்களில் பிரதானமானவர் கட்சியின் தவிசாளர் பஷீர் சேகுதாவூத்.
முஸ்லிம் காங்கிரஸின்; சொத்துக்களினுடைய உரித்து தொடர்பில் எழுப்பப்பட்டுள்ள கேள்விகளுக்கு, அந்தக் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் இதுவரை பதிலளிக்காமையானது - பாரிய பொறுப்பு மீறலாகும். தவிசாளர் பஷீர்
சேகுதாவூத் முன்வைத்துள்ள கேள்விகள் குறித்து, தான் அலட்டிக் கொள்ளப் போவதில்லை என்று, மு.கா தலைவர் ஹக்கீம் தெரிவித்துள்ளார். மு.காவின் இரண்டாம் நிலைத் தலைவர் ஒருவர், அந்தக் கட்சியின் சொத்துக்கள் தொடர்பில் முன்வைத்துள்ள கேள்விகளுக்கு, 'பதிலளிக்க மாட்டேன்' என்று கட்சியின் தலைவர் சொல்கின்றமை, சிறுபிள்ளைத் தனமான எதிர்வினையாகும்.
இன்னொருபுறம், முஸ்லிம் காங்கிரஸின் சொத்துக்களில் மோசடிகள் இடம்பெற்றுள்ளதாகவும் அவற்றினை நிரூபிப்பதற்கான ஆவணங்கள் தன்னிடமுள்ளதாகவும் தவிசாளர் பஷீர் சேகுதாவூத் அண்மையில் வெளியிட்ட ஊடக அறிக்கையொன்றின் மூலம் தெரிவித்துள்ளார். எட்டு மாதங்கள், தான் தொடர்ந்து மேற்கொண்ட முயற்சியின் பலனாக, முஸ்லிம் காங்கிரஸின்; சொத்துக்கள் தொடர்பான ஆவணங்களை பெற்றுக் கொண்டதாக அந்த அறிக்கையில் பஷீர் கூறுகின்றார். மேலும், குறித்த ஆவணங்களை ஆராய்ந்தபோது அவற்றில் காணக்கிடைத்த உண்மைகள், இத்தனை காலமும் தவிசாளராக இருக்கும் தன்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தி விட்டது என்றும், பஷீர் சேகுதாவூத் ஒரு பீதியைக் கிளப்பி விட்டுள்ளார். ஆனால், அந்த ஆச்சரியம் என்ன என்பதை, அவர் இதுவரை வெளிப்படுத்தவில்லை. இருந்தபோதும், முஸ்லிம் காங்கிரஸின்; சொத்துக்கள் தொடர்பில் கேள்விகளை முன்வைத்து, மு.கா தலைவர் ரவூப் ஹக்கீமுக்கு தான் எழுதிய கடிதத்துக்குரிய பதில்களை அவர் வழங்காவிட்டால், 'என்னிடமுள்ள ஆவணங்களை வெளியிடுவேன்' என்கிற எச்சரிக்கையினையும், தனது அறிக்கையில் தவிசாளர் பஷீர் பதிவு செய்துள்ளார்.
இவை அனைத்தையும் வைத்துப் பார்க்கின்றபோது, முஸ்லிம் காங்கிரஸின்; தலைமையகக் கட்டிடம் மற்றும் ஏனைய சொத்துக்களின் உரித்து தொடர்பில் 'ஏதோ' விவகாரம் நடந்திருக்கிறது எனும் ஐயம் பலருக்கும் ஏற்பட்டுள்ளது. அது என்ன என்பது, தனக்குத் தெரியும் என்கிறார் மு.கா தவிசாளர். அதற்கான ஆதாரங்களும் தன்னிடம் உள்ளதாகக் கூறுகிறார். அப்படியென்றால், தனது வசமுள்ள ஆதாரங்களை ஏன் ஒரேயடியாக தவிசாளர் போட்டுடைக்கக் கூடாது என்கிற கேள்வி இங்கு எழக்கூடும். ஆனால், பஷீர் அப்படிச் செய்ய மாட்டார். மு.கா தலைவரை உளவியல் ரீதியாக சிறிது சிறிதாகவும் தொடர்ந்தும் நெருக்கடி நிலையொன்றுக்குள் வைத்திருக்கும் ஒரு தந்திரோபாய செயற்பாட்டினை மேற்கொள்ளவே பஷீர ;முயற்சிக்கின்றார் என்பதை அவதானிக்க முடிகிறது. சீரான கால இடைவெளிகளில் அவர் வெளியிடும் கடிதங்களையும் அறிக்கைகளையும் அவ்வப்போது அம்பலப்படுத்தும் ஆவணங்களையும் படிக்கின்றபோது,
பஷீருடைய எண்ணத்தைப் புரிந்துகொள்ள முடிகிறது. மேலும், பகைவர்களைத் தாக்கக்கூடிய தன்னிடமுள்ள ஆயுதங்களை, களத்தில் ஒரேயடியாகப் பயன்படுத்தி முடிப்பவன் சிறந்த போர் வீரனாக இருக்க முடியாது என்பதை, ஆயுத இயக்கமொன்றில் நீண்டகாலம் இணைந்திருந்த பஷீர் சேகுதாவூத் மிக நன்றாக அறிந்துமிருப்பார்.
இவ்வாறானதொரு நிலையில், ஹக்கீமுக்கு எதிராகப் பயன்படுத்தும் பொருட்டு, வேறு என்ன வகையான 'ஆயுதங்களை'யெல்லாம் பஷீர் தன்வசம் வைத்திருக்கின்றார் என்கிற தகவல்களைத் தேடித் திரட்டுவதில், மு.கா தலைவருக்கு நெருக்கமானவர்கள் தீவிரமாகக் களமிறங்கியுள்ளனர். அவற்றினைத் தெரிந்து கொள்வதன் மூலம், பஷீரின் திட்டங்களை முறியறிக்க முடியுமென அவர்கள் நினைக்கலாம். அல்லது தற்காப்பு யுத்தமொன்றுக்காகவேனும், மு.கா தலைவர் தன்னைத் தயார் படுத்தலாமென நம்பலாம்.
இது இவ்வாறிருக்க, மு. காங்கிரஸின் சொத்துக்கள் தொடர்பில் இத்தனை காலமும் கட்சித் தவிசாளர் பேசாமல் இருந்து விட்டு, இப்போது மட்டும் சந்தேகம் கேட்பது ஏன்? என்கிற கேள்வியினை, மு.கா தலைவர் ஹக்கீமும், அவரின் அபிமானிகளும் தொடர்ச்சியாக முன்வைத்து வருகின்றனர். 'கட்சிக்குள் மூன்று முறை தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளை அனுபவித்த போது வராத ஞானம், அந்தப் பதவிகளினூடாக பணத்தையும் அதிகாரங்களையும் பெற்றுக்கொண்ட போது வராத ஞானம், இப்போது மட்டும் ஏன் வந்தது' என்று, பஷீரை அவர்கள் கேட்கின்றனர். நியாயப்படி பார்த்தால், பஷீரை அப்படிக் கேட்பதில் பிழைகளில்லை. 'ஹக்கீமிடமிருந்து கிடைத்த வரப்பிரசாதங்கள், பஷீரை ஊமையாக்கியிருந்தது' என்கிற குற்றச்சாட்டு மிகப் பெரிய உண்மையாகும். ஆனால், அப்போதெல்லாம் ஹக்கீமுடைய பிழைகளைத் தட்டிக் கேட்காதவர் - இனி எப்போதும் கேட்கவே கூடாது என்று நினைப்பதும், சொல்வதும் பாரிய பிழையாகும்.
முஸ்லிம் காங்கிரஸின்; சொத்துக்களில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் மோசடிகளை தவிசாளர் பஷீர் சேகுதாவூத் மட்டும் தட்டிக் கேட்கவில்லை. பஷீர் கடிதம் எழுதுவதற்கு முன்னதாகவே, முஸ்லிம் காங்கிரஸின்; உயர்பீட உறுப்பினர்கள் 12 பேர் சேர்ந்து, கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 10 ஆம் திகதி கடிதமொன்றினை எழுதியிருந்தார்கள். கட்சியின் தலைமையகமான தாருஸ்ஸலாம் தொடர்பில் தமக்குள்ள சில சந்தேகங்களைத் தெளிவுபடுத்துமாறு கேட்டு எழுதப்பட்ட அந்தக் கடிதம், கட்சியின் செயலாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மு.காவின் தலைமையகமான தாருஸ்ஸலாம் பற்றிய அடிப்படைத் தகவல்கள், தாருஸ்ஸலாம் ஊடாகப் பெறப்படும் வருமானங்கள் மற்றும் அந்த வருமானங்களுக்குரிய செலவுகள் என்று, பல்வேறு சந்தேகங்களுக்குரிய தெளிவினைப் பெற்றுக் கொள்ளும் வகையில், குறித்த கடிதத்தில் 06 கேள்விகள் முன்வைக்கப்பட்டிருந்தன. ஆனால், அந்தக் கடிதத்துக்கும் திருப்திகரமான பதில்கள் எவையும் வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
மேற்குறிப்பிட்ட கடிதத்தில் கையொப்பமிட்டவர்களில் பலர், மு.கா தலைவர் ஹக்கீமோடு நெருக்கமானவர்கள் என்பது கவனிப்புக்குரியது. அமைச்சர் ஹக்கீமுடைய பிரத்தியேகச் செயலாளரும், முஸ்லிம் காங்கிரஸின்; தற்போதைய பிரதித் தவிசாளரும், ஹக்கீமுடைய மச்சான் முறையானவருமான எம். நயிமுல்லா, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் முஸ்லிம் காங்கிரஸின்; பொருளாளருமான எம்.எஸ்.எம். அஸ்லம், கிழக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினரும், முஸ்லிம் காங்கிரஸின்; தேசிய கொள்கை பரப்புச் செயலாளரும் அமைச்சர் ஹக்கீமுடைய அதிகாரத்தின் கீழுள்ள நீர்வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சில் இணைப்பாளராகக் கடமையாற்றுபவருமான யூ.எல்.எம். முபீன் மற்றும் தற்போதைய தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தௌபீக் உள்ளிட்ட பலர், அந்தக் கடிதத்தில் கையொப்பமிட்டிருந்தமை கவனிப்புக்குரியதாகும்.
இந்தக் கடிதத்தின் பிரதியொன்று, மிக அண்மையில் ஊடகங்களுக்கு கசிய விடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. கட்சியின் அதி உயர்பீட உறுப்பினர்கள் 12 பேர் இணைந்து எழுதிய மேற்படி கடிதம் தொடர்பில், தலைவர் ஹக்கீமும் தற்போதைய தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம். சல்மானும் உயர்பீடக் கூட்டமொன்றில் வழங்கிய மழுப்பலான பதிலில் தனக்கும், இன்னும் பல உயர்பீட உறுப்பினர்களுக்கும் திருப்தி ஏற்படவில்லை என்றும், அதனாலேயே கட்சியின் சொத்துக்கள் தொடர்பில் கேள்வி கேட்டு, தலைவருக்கு தான் கடிதம் எழுதவேண்டிய நிலை ஏற்பட்டது என்றும், தவிசாளர் பஷீர் சேகுதாவூத் முன்னர் ஒரு தடவை ஊடக அறிக்கையொன்றின் வழியாகத் தெரிவித்திருந்தார்.
8 hours ago
9 hours ago
23 Mar 2026
23 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
9 hours ago
23 Mar 2026
23 Mar 2026