2025 மே 14, புதன்கிழமை

கிராமப்புறப் பொருளாதாரத்தின் பக்கம் திரும்பும் இந்திய பாதீடு

Administrator   / 2017 பெப்ரவரி 06 , மு.ப. 06:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய நிதியமைச்சர் அருண்ஜேட்லி நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்து உரையாற்றியிருக்கிறார். இதுவரை நிதிநிலை அறிக்கை தினத்தில் எதிரும் புதிருமாக இருக்கும் கட்சிகளும் அமைதியாக இருப்பார்கள்.

நாடாளுமன்றத்தில் நிதிநிலை அறிக்கையை வாசிக்க விட்டு, ஆரோக்கியமான விவாதத்துக்கு தயாராகும் போக்கைப் பார்த்திருக்கிறோம்.   

ஆனால், இந்த முறை ‘பாதீடு’ தாக்கல் செய்த அன்றும், பிரதான எதிர்கட்சியாக இருக்கும் காங்கிரஸ் மற்றும் சில கட்சிகள் கூச்சல் குழப்பத்தில் ஈடுபட்டமையானது, அன்றைய தினம் தாக்கல் செய்யப்பட்ட பாதீட்டின் கண்ணியத்துக்கு கஷ்ட காலத்தை ஏற்படுத்தியது என்பதே உண்மை.  

நாடாளுமன்றத்தின் மூத்த உறுப்பினரும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தலைவருமான அஹமது, திடீரென்று நாடாளுமன்ற நடவடிக்கைகளின் போதே உடல் நலக்குறைவு ஏற்பட்டு, மரண மடைந்தார்.   

அதனால், அவரது மரணத்துக்கு மதிப்பளித்து பாதீடு கூட்டத் தொடரை, ஒரு நாள் தள்ளி வைப்பதா இல்லையா என்பது பெப்ரவரி முதலாம் திகதி பெரும் விவாதமானது.  

 எதிர்க்கட்சிகள் குறிப்பாக காங்கிரஸ் கட்சியின் சார்பில் மல்லிகார்ஜுன கார்கே “இந்தப் பாதீட்டை ஒரு நாள் தள்ளி வைக்க வேண்டும்” என்று நாடாளுமன்ற வளாகத்திலேயே நின்று பேட்டி கொடுத்தார்.

ஆனால், ஆளும் பா.ஜ.கவோ “பாதீடு தாக்கல் செய்வது என்பது அரசியல் சட்டக் கடமை” என்று தெரிவித்து “முடிவை சபாநாயகர் எடுப்பார்” என்று அறிவித்தது.   

இப்படிப் பரபரப்பான சூழ்நிலையில் கூடிய நாடாளுமன்றத்தில் சபாநாயகர், “அஹமது அவர்களின் மறைவுக்கு மௌன அஞ்சலி செலுத்தி விட்டு, பாதீடு உரை வாசிக்கப்படும். பாதீடு மறுநாளைக்குத் தள்ளி வைக்கும் வாய்ப்பு இல்லை” என்று அழுத்தம் திருத்தமாக உத்தரவு பிறப்பித்தார்.  

இதுவரை, இந்திய நாடாளுமன்றத்தில் இப்படியொரு முடிவு எடுக்க வேண்டிய நெருக்கடி பாதீடு தாக்கல் செய்யும் தினத்தில் ஏற்பட்டதில்லை. ஆனால், பெப்ரவரி முதலாம் திகதியன்று ஏற்பட்ட அந்த நெருக்கடியை நாடாளுமன்ற சபாநாயகர் சுமிதா மகராஜன் மிகவும் இலாவகமாகத் தீர்த்து வைத்தார்.  

பாதீடு தாக்கல் செய்யும் தினத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் யாரேனும் மறைந்தால், ‘முதலில் அவருக்கு மௌன அஞ்சலி. பிறகு அன்றே பாதீடு தாக்கல்’ என்ற மரபு இந்திய நாடாளுமன்றத்தில் முதல் முறையாக உருவாகியிருக்கிறது.

இனிவரும் காலங்களில் இதுவே பாதீடு தினத்தில் இடம்பெறும் மரணம் போன்ற அசம்பாவிதங்களுக்கு முன்னுதாரணமாக இருக்கும்.  

இப்படிப் பரபரப்பான சூழலில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய நிதிநிலை அறிக்கை, ‘கிராம நிதிநிலை அறிக்கை’யோ என்ற தோற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.   

சுதந்திர இந்தியாவில் முதன்முதல், முழுக்க முழுக்க கிராமப்புறங்களைக் குறிவைத்து, பெண்கள், விவசாயிகள், குழந்தைகள் நலன் என்ற அடிப்படையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள முதல் பாதீடு என்று கூட எடுத்துக் கொள்ளலாம்.   

இந்த முயற்சிக்கான காரணங்கள் இல்லாமல் இல்லை. சமீபத்தில் வரலாறு காணாத வகையில், 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளைச் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் பாதிப்புகள் கிராமப் புறங்களில் இருந்தது என்றும் தொழிலாளர், சிறிய மற்றும் குறுகிய தொழில் செய்வோர், பெரும் பாதிப்புக்குள்ளானார்கள் என்றும் எதிர்க்கட்சிகள் கடும் பிரசாரம் மேற்கொண்டன.   

மேற்கு வங்க முதலமைச்சராக இருக்கும் மம்தா பானர்ஜி, இதற்காகப் பெரும் பிரசாரப் போரையே நடத்தி விட்டார். அது மட்டுமின்றி, தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவராக இருக்கும் ராகுல் காந்தி மட்டுமல்ல, எதிர்க்கட்சி வரிசையில் உள்ள வேறு பல கட்சிகளும் “மத்தியில் உள்ள பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான அரசாங்கம் ஒரு ‘கோர்ப்பரேட்’ அரசாங்கம்” என்றும் “ஏழைகளுக்கு எதுவும் செய்யாத அரசாங்கம்” என்றும் தீவிர பிரசாரத்தை மேற்கொண்டன. இன்றைக்கும் மேற்கொண்டு வருகிறார்கள்.  

பிரதமர் நரேந்திரமோடி பொறுப்பேற்றதில் இருந்தே “இது கோர்ப்பரேட் அரசாங்கம்” என்ற பிரசாரத்தை மட்டுமே மூலதனமாகக் கொண்டு அனைத்து எதிர்க்கட்சிகளும் அரசியல் செய்யத் தொடங்கின.   

பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு, அந்தப் பிரசாரம் மேலும் தூக்கலாகவே நடைபெறத் தொடங்கியுள்ளது. இந்தப் பிரசாரங்களை முறியடிக்கும் முயற்சியாகவே 2017-18 ஆம் ஆண்டுக்கான மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை அமைந்திருக்கிறது என்றே கூறலாம். 

அந்த அளவுக்கு கிராமப்புற பொருளாதாரம், கிராமப் புற மக்கள் மேம்பாடு, கிராமப்புற வேலை வாய்ப்பு போன்றவற்றை முன்னிறுத்தி நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்திருக்கிறார் நிதியமைச்சர் அருண் ஜேட்லி.  

ஒவ்வொரு மாநிலத்திலும் நடக்கும் ‘நூறு நாட்கள் வேலை வாய்ப்புத் திட்டம்’ கிராமப் புற மக்கள் மத்தியில் மிகவும் புகழ் பெற்றது. ஏழைத் தாய்மார்கள், கூலி வேலையை நம்பியிருப்பவர்கள் இத்திட்டத்தை தங்களின் வாழ்வாதாரத்துக்குக் கிடைத்த வரப்பிரசாதமாக கருதுகிறார்கள்.   

இத்திட்டம், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்க காலத்தில் கொண்டு வரப்பட்டது என்றாலும் பா.ஜ.க தலைமையிலான மத்திய அரசாங்கம் இத்திட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்து வந்தது.   

இந்த வருடம் ஏற்கெனவே இருந்ததை விட 10 ஆயிரம் கோடி ரூபாய் இத்திட்டத்துக்கு அதிக நிதி ஒதுக்கியிருப்பது கிராமப் புற மக்களை கணக்கில் கொண்டும், குறிப்பாக விரைவில் தேர்தலை சந்திக்கவிருக்கின்ற உத்தரபிரதேச மாநிலத்தை மனதில் வைத்தும் இருக்கிறது என்பதில் சந்தேகமில்லை.   

இன்றைக்கு, இந்தியாவில் கிராமங்களில்தான் வறுமை தாண்டவமாடுகிறது. இதே நிதிநிலை அறிக்கையில் 50 ஆயிரம் கிராமங்களை வறுமைக் கோட்டுக்கு மேலே உயர்த்த நிதி ஒதுக்கி, நடவடிக்கை எடுக்க முன் வந்திருப்பதும் கிராம மக்களைச் சார்ந்த நடவடிக்கையாகும்.   

வீடில்லாதவர்களுக்கு ஒரு கோடி வீடுகள் 2019 க்குள் அதாவது அடுத்து பா.ஜ.க பொதுத் தேர்தலைச் சந்திக்கும் வருடத்துக்குள் கட்டித் தரப்படும் என்ற வாக்குறுதியும் கிராமப்புற மேம்பாட்டை மனதில் வைத்து செய்யப்பட்டுள்ளது. 

இது ஒரு புறமிருக்க, ‘​கோர்ப்பரேட்டுகளுக்கு’ வரிச்சலுகை அளிக்கும் பா.ஜ.க அரசாங்கம் சிறிய மற்றும் குறுகிய தொழில் நிறுவனங்களைக் கண்டு கொள்வதில்லை என்ற குற்றச்சாட்டு நிலவி வருகிறது.   

இதைப் போக்குவதற்காகவே, இந்த நிதிநிலை அறிக்கையில், சிறிய மற்றும் குறுகிய தொழில் நிறுவனங்களுக்கு வருமான வரிச் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இது இலாபம் ஈட்டும் நிறுவனத்துக்கு மட்டுமா என்பது பற்றிய கேள்விகள் இருந்தாலும், ‘​கோர்ப்பரேட்டுகளை’ விட்டு, சிறிய மற்றும் குறுகிய தொழில் நிறுவனங்கள் மீது, இந்த நிதி நிலை அறிக்கை கவனம் செலுத்தியிருப்பது கூர்ந்து கவனிக்கத்தக்கது.  

இந்தப் பாதீட்டின் முகப்புரையில், பணவீக்கம் 3.4 சதவீதமாக குறைந்து விட்டது; நடப்புக் கணக்கு பற்றாக்குறை 0.3 சதவீதமாக குறைந்து விட்டது; அந்நிய முதலீடு ஓர் இலட்சத்து ஏழு ஆயிரம் கோடியிலிருந்து ஓர் இலட்சத்து 45 ஆயிரம் கோடியாக அதிகரித்து இருக்கிறது என்றெல்லாம் சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது.  

இருந்தாலும், நிதிநிலை அறிக்கையின் பத்து முக்கிய அம்சங்களில் பெரும்பாலானவை கிராமப் புறப் பொருளாதாரத்தை முன்வைத்தே அமைந்திருப்பது, இந்த நிதிநிலை அறிக்கையின் தனிச்சிறப்பு. இளைஞர்களுக்கு தரமான கல்வியை வழங்குவதற்கு முழு வீச்சில் நடவடிக்கை எடுக்கப்படும் என்பது இன்னொரு முத்திரை பதிக்கும் திட்டம்.  

ஆகவே, நிதிநிலை அறிக்கை உத்தரப்பிரதேசத் தேர்தலை மனதில் வைத்து மட்டுமல்ல, பா.ஜ.க தலைமையிலான அரசாங்கம், கிராமங்களுக்கு எதிரானது, கிராமப்புற மக்களுக்கு எதிரானது என்பது போன்ற பிரசாரத்தை முறியடிக்கும் வகையில் அமைந்திருக்கிறது.   

இந்த நிதிநிலை அறிக்கைக்கு மூன்று விதத்தில் தடங்கல் ஏற்பட்டது. முதலில் எதிர்க்கட்சிகள் எல்லாம் ஒன்று சேர்ந்து தேர்தல் ஆணையத்தில் முறையிட்டு, உத்தரபிரதேச தேர்தல் நடப்பதால், பாதீடு தாக்கல் செய்வதைத் தள்ளி வைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தன. அது நிராகரிக்கப்பட்டது.   

அதேபோல், உச்சநீதிமன்றத்திலும் இப்போது பாதீடு தாக்கல் செய்ய அனுமதிக்கக் கூடாது என்று வாதிட்டன. அதுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. இறுதியாகத்தான் அஹமது எம்.பியின் மரணம் நிகழ்ந்து, பாதீடு தாக்கல் செய்வது குறித்த சர்ச்சையைக் கிளப்பியது. ஆனால், இந்த மூன்று விடயங்களிலும் முடிவு காணப்பட்டு, மத்திய அரசாங்கத்தின் பாதீடு பெப்ரவரி முதலாம் திகதி தாக்கலானது.  

முதல் முறையாகக் கிராமப் புற பாதீடு, முதல் முறையாகப் பல தடங்கல்களைச் சந்தித்த பாதீடு, முதல் முறையாக இந்திய இரயில்வே நிதிநிலை அறிக்கையையும் இணைத்த பாதீடு என்று இந்த 2017-18 நிதிநிலை அறிக்கைக்குப் பல ‘முதல்’ அம்சங்கள் இருக்கின்றன.   

இந்தப் பாதீடு உத்தரபிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் பா.ஜ.கவுக்குக் எப்படிக் கைகொடுக்கப் போகிறது என்பது கேள்விக்குறியாக இருந்தாலும் பா.ஜ.க தலைமையிலான மத்திய அரசாங்கத்துக்கு குறிப்பாக பிரதமர் நரேந்திரமோடிக்கு, கிராமப்புறக் பொருளாதாரத்தின் மீது, கிராமப்புற வளர்ச்சியின் மீது அக்கறை இருக்கிறது என்பதற்கு அடையாளமாக இந்தப் பாதீடு அமைந்திருக்கிறது என்பது உண்மை.     


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X