Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
R.Tharaniya / 2025 செப்டெம்பர் 28 , பி.ப. 02:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
தெ.ஞாலசீர்த்தி மீநிலங்கோ
ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் 1970இல் ஆட்சியை சிறிமாவோ பண்டாரநாயக்க தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிடம் கையளித்தபோது, கடனையும் சேர்த்தே கையளித்தது.
மக்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யும் நோக்கோடு மக்கள் நலத் திட்டங்களை முன்னெடுக்க முனைந்த அரசாங்கம் தவிர்க்கவியலாமல் மேலும் கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது. உள்நாட்டில் இந்த அதிக கடன் வாங்கியதன் விளைவாக, 1969இல் ரூ.5,513 மில்லியனாக இருந்த உள்நாட்டு பொதுக் கடன் 1973இல் ரூ.8,586 மில்லியனாக உயர்ந்தது. உள்நாட்டு பொதுக் கடனுக்கான வட்டி செலுத்துதல்களும் தவிர்க்க முடியாமல் அதிகரித்தன.
இந்த வட்டியானது 1970இல் 206 மில்லியன் ரூபாய்கள் அல்லது மொத்த நடப்பு செலவினத்தில் 7.3% இலிருந்து 1974இல் 475 மில்லியன் ரூபாய்கள் அல்லது 12.2% ஆக அதிகரித்தது. இதனால், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தி உள்நாட்டு நிதி ஆதாரங்களைத் தக்கவைக்கும் முயற்சிகள், மிகப் பெரிய பொதுக் கடனையும் அதிக வட்டிச் சுமையையும் கொண்டு வந்தது.
இந்த நெருக்கடி மேலும் ஒரு சிக்கலால் மேலும் அதிகரித்தது. அதிக விலையில் கடன் வாங்கப்பட்ட இந்த நிதிகள் உற்பத்தி ரீதியாகப் பயன்படுத்தப்படவில்லை. இதன் விளைவாக அவை வட்டி கட்டணங்களை திருப்பிச் செலுத்த போதுமான புதிய வருமானத்தை கூட ஈட்டவில்லை.
இந்த அரசாங்கக் கடன்களில் பெரும்பகுதி புதிய பொதுத்துறை நிறுவனங்களை நிறுவுவதற்கான மூலதனக் கொடுப்பனவுகளாகச் சென்றன. இந்த நிறுவனங்கள் 1970இல் 62ஆக இருந்து 1973இல் 106ஆக அதிகரித்தன. நிறுவப்பட்ட 44 புதிய நிறுவனங்களில், 41 வர்த்தகம் மற்றும் சேவைத் துறைகளில் இருந்தன.
பண விநியோகம் மற்றொரு பிரச்சனைக்குரிய பகுதியாக இருந்தது. இது 1973 வரை ஆண்டுக்கு 11% முதல் 15% வரை வளர்ந்தது. மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 3% மட்டுமே இருந்ததால், விலைகள் உயரும் இயல்பான போக்கு இருந்தது. மேலும், அரசாங்கத்தின் சொந்த உள்நாட்டுக் கடன் வாங்கும் முறை விரிவாக்கம் ஏதும் இல்லாத போதிலும், இந்த காலகட்டத்தில் வெளிப்புற வங்கி சொத்துக்களின் குவிப்பு கணிசமான பணவீக்க தாக்கத்தை ஏற்படுத்தியது. பொருத்தமான முதலீட்டுச் சூழல் இல்லாததால் இந்த குவிப்பு ஏற்பட்டது.
இதன் விளைவாகத் தனியார்த் துறை பண வைப்புத்தொகையைக் குவிக்க முனைந்தது, வங்கிக் கடனுக்கான தேவை மந்தமாக இருந்தது.இதனால், இந்தக் காலகட்டத்தின் பட்ஜெட் கொள்கைகளால் தேசியப் பொருளாதாரத்திற்குக் கிடைத்த நன்மைகள் குறைவாகவே இருந்தன.
நிதியமைச்சர் டாக்டர் என்.எம்.பெரேரா, தனது முன்னோடிகளைப் போலவே, 1973 பட்ஜெட்டில் உணவு மானியம் மற்றும் பிற நலத்திட்டங்களைக் குறைத்திட முடிவு செய்தார்.
1973இன் பிற்பகுதியில் ‘உணவு நெருக்கடி’ தொடங்குவதற்கு முன்பே, அவர் உணவு மானியத்தைக் குறைக்க முயன்றார். அவர் கூறினார். “பொருளாதாரத்தைத் தக்கவைக்க, உள்ளார்ந்த பாதுகாப்பு முயற்சிகள் அல்லது அபிவிருத்தி முயற்சி இல்லாமல் நாம் ஏதுவும் செய்ய முடியாது என்பது தெளிவாகிறது.
நாம் செய்யக்கூடியது என்னவென்றால், இந்த நாட்டின் மக்கள் நலன்புரி நடவடிக்கைகளைக் குறைவாக நம்புவதன் மூலம் அதிக பொறுப்பை ஏற்க வேண்டும் என்று அழைப்பு விடுப்பதாகும்.”
நலத்திட்டங்களுக்கான ஒதுக்கீடுகளைக் குறைத்த அவரது இரண்டாவது நடவடிக்கை, அரிசியின் விலையை 75 சதத்திலிருந்து 1 ரூபாயாக உயர்த்துவதாகும்.
அரிசியின் விலை 75 சதமாக இருந்தபோதே, ரேசன் அட்டைகளை வைத்திருந்தவர்களில் 54%மானோர், தமக்குரிய மானிய விலையிலான
அரிசியைப் பெற இயலாதவர்களாக இருந்தனர்.
அவர்களின் பொருளாதார நிலை அதற்கு இடமளிக்கவில்லை. அரிசி விலையை அதிகரித்தது போலவே மா மற்றும் சீனி விலைகளும் அதிகரிக்கப்பட்டன. அதேபோல, வழங்கப்பட்ட ரேஷனின் (சீனி, மா ஆகியன) அளவையும் குறைப்பது அவரது திட்டமாகும். அவர் அதை “கனத்த இதயத்துடன் ஆனால் எதிர்காலத்தைப் பற்றிய தொலைநோக்குப் பார்வையுடன் செயல்பட வேண்டும்”
என்று நியாயப்படுத்தினார்.
இதில் கவனிக்க வேண்டியது யாதெனில், சுதந்திரத்துக்குப் பிந்தைய இலங்கையின் வரலாற்றில் 1953ஆம் ஆண்டு தொடங்கி, பத்து வருட இடைவெளியில், மூன்று பெரிய கட்சிகளையும் சேர்ந்த நாட்டின் நிதி அமைச்சர்கள் - 1953 இல் ஜே.ஆர்.ஜெயவர்த்தனா (ஐ.தே.க), 1963இல் பீலிக்ஸ் டயஸ் பண்டாரநாயக்க (ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி) மற்றும் 1973இல் டாக்டர் என்.எம்.பெரேரா (லங்கா சமசமாஜக் கட்சி) - சமூகத்தின் ஏழை அடுக்குகள் சார்ந்திருந்த மானிய விலையில் வழங்கப்படும் உணவைக் குறைக்க நடவடிக்கை எடுத்தனர்.
இந்த நடவடிக்கைகளில் பாரிய ஒற்றுமைகள் இருந்தன, அதில் முக்கியமானது யாதெனில் அவை ஒவ்வொரு முறையும் தோல்வியடைந்தன என்பதுதான்.
1973இல் என்.எம்.பெரேராவின் முன்மொழிவுகளை அரசாங்கத்தின்
சொந்த பின் வரிசை உறுப்பினர்கள் கடுமையாக எதிர்த்தனர். அரசாங்க
எம்.பிக்களின் அவசரக் கூட்டம் நடத்தப்பட்டு அரிசி மானியம் தக்கவைக்கப்பட்டது.
நிதியமைச்சர் ராஜினாமா செய்யவில்லை. பெப்ரவரி 1973இல் ரூ.1.60இல் இருந்து மார்ச்சில் அது ரூ.1.40 ஆகி பின்னர் அதே ஆண்டு ஒக்டோபரில் அது ரூ.2.00 ஆக அதிகரித்தது.
வரவு-செலவுத் திட்டச் சமநிலையில் ஏற்பட்ட துண்டுவிழும் தொகையை, அரசாங்கம் இரு முனை தாக்குதலின் மூலம் பற்றாக்குறையைச் சமாளிக்க முயன்றது. முதலாவது, இறக்குமதிகளைக் குறைத்தல். இரண்டாவது ஏற்றுமதிகளை பல்வகைப்படுத்துதல். முந்தைய சகாப்தத்தின் திறந்த பொது உரிம முறை ரத்து செய்யப்பட்டு இறக்குமதி உரிமங்களும் ஒதுக்கீட்டு முறையும் மாற்றப்பட்டன.
மிளகாய் மற்றும் பம்பாய் வெங்காயம் போன்ற சிறிய உணவுப் பொருட்களின் இறக்குமதி தடைசெய்யப்பட்டது. ஏற்றுமதிகளை பல்வகைப்படுத்துவதற்காக, ஒரு அரச இரத்தினக் கழகம் நிறுவப்பட்டது. பாரம்பரியமற்ற விவசாயப் பொருட்களின் ஏற்றுமதியை ஊக்குவிப்பதற்காக ஒரு சிறு ஏற்றுமதி பயிர்கள் துறை மற்றும் ஏற்றுமதி ஊக்குவிப்பு கவுன்சில் அமைக்கப்பட்டன.
ஏற்கனவே உள்ள ஏற்றுமதி சார்ந்த தொழில்களுக்கு ஐந்து ஆண்டு வரி விடுமுறை மற்றும் புதிய ஏற்றுமதி தொழில்களுக்கு எட்டு ஆண்டு வரி விடுமுறை மூலம் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களின் ஏற்றுமதியும் ஊக்குவிக்கப்பட்டது.
மாற்றத்தக்க ரூபாய் கணக்கு (Convertible Rupee Account - CRA) திட்டம் ஜூலை 1972இல் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் அடிப்படையில் இரத்தின ஏற்றுமதிகள் மூலம் கிடைக்கும் அந்நிய செலாவணி வருவாயில் 25% பாரம்பரியமற்ற ஏற்றுமதிகள் மூலம் கிடைக்கும்
வருவாயில் 2% (பின்னர் 5% ஆக அதிகரித்தது) மாற்றத்தக்க ரூபாய் கணக்கில் வரவு வைக்கப்படலாம். இந்த பொருட்களின் ஏற்றுமதியாளர்கள் இறக்குமதி, வெளிநாட்டுப் பயணம் மற்றும் வெளிநாட்டுப் படிப்புக்குப் பணம் செலுத்த இந்த ரூபாய் கணக்கில் உள்ள நிதியைப் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டனர்.
1970களின் முற்பகுதியில் இறக்குமதிகள் மீதான கடுமையான கட்டுப்பாடுகளின் கொள்கையால் வரவுசெலவுச் சமநிலைப் பற்றாக்குறைகள் கட்டுப்படுத்தப்பட்டன. 1973 வரை நீடித்த சிறிய கொடுப்பனவு பற்றாக்குறைகளைப் பூர்த்தி செய்ய நீண்டகால அதிகாரப்பூர்வ கடன்கள் போதுமானதை விட அதிகமாக இருந்தன.
கூடுதலாக, இரத்தின ஏற்றுமதிகளிலிருந்து குறிப்பிடத்தக்க வருவாய் கிடைத்தது (1973இல் ரூ.140 மில்லியன்). 1973இல் பொருட்களின் விலை ஏற்றம் காரணமாக இறப்பர் ஏற்றுமதி வருவாய் உண்மையில் 1972 (ரூ.265 மில்லியன்) மற்றும் 1973 (ரூ.592 மில்லியன்) இடையே இரட்டிப்பாகியது.
இறக்குமதி பக்கத்தில், மூலதனச் செலவினங்களின் தேக்கத்திலிருந்து வந்த ஒரு தீவிர மாற்றம், முதலீட்டுப் பொருட்களின் இறக்குமதியில் 1971இல் மொத்த
இறக்குமதி செலவில் 20%இலிருந்து 1973 இல் 16.8% ஆகக் குறைந்தது.
1974ஆம் ஆண்டு முதல், பொருளாதாரம் சீராக ஒரு திசைகாட்டியற்ற சறுக்கலுக்குத் திரும்பத் தொடங்கியது.
அரசாங்கத்தின் செயல்பாடுகள் வரையறுக்கப்பட்ட பொருளாதார இலக்குகள், கொள்கைகள் அல்லது திட்டங்கள் முழுமையாக இல்லாததன் பலனை எதிர்நோக்கின.
இதன் விளைவாகப் பொருளாதார முன்னேற்றத்தை விட அரசியல் பிரபலத்தை இலக்காகக் கொண்ட தற்காலிக மற்றும் சீரற்ற முடிவுகள் ஏற்பட்டன. அதிகாரத்தில் இருப்பவர்கள் பெருமளவில் மக்களுக்கு உறுதியான பொருளாதார நன்மைகளை உருவாக்கத் தகுதியற்றவர்களாக இருப்பதை மறைக்க, பொது நிதியைச் சிறுபிள்ளைத்தனமான, சாகசத் திட்டங்களுக்குச் செலவிடப்பட்டனர். இதன் பிரதான கருவியாக 1970களின் முற்பகுதியில் நிறுவப்பட்ட பிரதேச அபிவிருத்திச் சபைகள் (Divisional Development Councils) இருந்தன.
59 minute ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
59 minute ago
4 hours ago
4 hours ago