Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
R.Tharaniya / 2025 செப்டெம்பர் 23 , பி.ப. 05:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொஹமட் பாதுஷா
உலக வரலாற்றில் இதுவரைக்கும் நடைபெற்ற யுத்தங்களில் பெரும்பாலானவை நிலத்தை ஆக்கிரமிப்பதற்கான அல்லது நில மீட்புக்கான யுத்தங்களாகும். காணிகள் மீதான உரிமை எந்தளவுக்கு முக்கியமானது என்பதை இலங்கையின் அனுபவத்தின் ஊடாகவும் புரிந்து கொள்ள முடியும்.
வடக்கு கிழக்கு மாகாணங்களை மையமாகக் கொண்ட தனிநாட்டுக் கோரிக்கையை விடுதலைப் புலிகள் முன்வைத்தனர். இப்போது வடக்கு, கிழக்கை இணைக்க முஸ்லிம்கள் ஒருபோதும் சம்மதிக்கப் போவதில்லை என்றாலும் கூட, இணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்தில் காணி அதிகாரத்தைப் பெற்றால், காணி உரிமைத்துவங்களை உறுதிப்படுத்துவதுடன் காணிப் பிரச்சினைகளையும் தீர்த்து வைக்க முடியும் என்று தமிழ் தரப்பு நம்புகின்றது.
மறு புறத்தில், அவ்வாறு காணி அதிகாரம் சிறுபான்மைச் சமூகத்திற்குப் போய்விடக் கூடாது என்பதில் பெருந்தேசியம் மிக உறுதியாக இருக்கின்றது.
இந்தப் பின்னணியில், முஸ்லிம் சமூகம் குறிப்பாக, வடக்கு கிழக்கு முஸ்லிம்கள் தங்களது காணி உரிமைகளை உறுதிப்படுத்துவதில் எந்தளவுக்கு முனைப்பாக உள்ளனர்?
இந்த காணிகளை தற்போதிருக்கின்ற இன விகிதாசாரத்தின்படி, காணிப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு முஸ்லிம் சமூகம் எந்தளவுக்குப் போராடி வருகின்றது?
ஜே.வி.பியின் கட்டுப்பாடுகளை மீறி, என்.பி.பியின் முஸ்லிம் எம்.பிக்களால் காணி விடயத்தில் எதையாவது செய்து விட முடியும் என்று எந்த அடிப்படையில் வைத்து நம்புவது?
வடக்கில் இருந்து 1990ஆம் ஆண்டு புலிகளால் வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்துடன் தொடர்புபட்ட காணிப் பிரச்சினை இதில் முதன்மையானதும் நாட்பட்டதும் ஆகும்.
வடக்கில் இருந்து தனது 10 வயதில் வெளியேறிய ஒரு சிறுவனுக்கு இன்று 38 வயது. அவனுக்குப் பிள்ளைகளும் இருக்கும். இவ்வாறு விருத்தியடைந்துள்ள மக்கள் தொகைக்கு வாழ்வதற்கான காணியை உறுதிப்படுத்துவது அவசியமானது.
இது தவிர ஆக்கிரமிப்புக்கள், சுவீகரம், வர்த்தமானி ஊடாக பாதுகாக்கப்பட்ட வனமாகப் பிரகடனப் படுத்தப்பட்டமை போன்ற காரணங்களாலும் வடமாகாண முஸ்லிம்கள் காணிப் பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளனர்.
கிழக்கில் முஸ்லிம்கள் 42 வீதம் வாழ்கின்றனர். திருகோணமலை மற்றும் அம்பாறை மாவட்டங்களில் பெரும்பான்மையாக வாழும் இனக் குழுமமாக முஸ்லிம்களே இருக்கின்றனர். கிழக்கில் இன்னும் பத்து வருடங்களில் முஸ்லிம்களின் சனத்தொகை 50 வீதத்தைத் தாண்டும் என்றும் கணிக்கப்படுகின்றது.
ஆனால், ஏற்கெனவே இருக்கின்ற பல்லாயிரக்கணக்கான ஏக்கர் காணிப் பிரச்சினைகளையே தீர்ப்பதற்கு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை இதுவரை எடுத்திராத முஸ்லிம் அரசியல்வாதிகள், இனிவரும் காலத்தில் பல்கிப்பெருகக் கூடிய மக்கள் தொகையினர் வாழ்வதற்குரிய காணிகளை இன விகிதாசாரத்தின் அடிப்படையில் பங்கிட்டுப் பெற்றுக்கொள்ளவது பற்றி சிந்திப்பார்களா?
குறைந்தபட்சம் இத்தனை ஆயிரம் ஏக்கர் காணிப் பிரச்சினை இருக்கின்றது என்ற புள்ளிவிபரமாவது, என்.பி.பியின் கிழக்கு மாகாணத்திற்கான ஒரேயொரு முஸ்லிம் எம்.பிக்கு, ஆளும் தரப்பின் ஏனைய முஸ்லிம் எம்.பிக்களுக்கு அல்லது முஸ்லிம் கட்சிகளின் எம்.பிக்களுக்கு தெரியுமா?
உண்மையில், கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தவரை முஸ்லிம்களின் எத்தனையாயிரம் காணிகள் முரண்பாடுகளுக்கு உள்ளாகியிருக்கின்றன என்ற மிகப்பிந்திய மிகச் சரியான தரவு கூட எந்த அரசியல்வாதியிடமும் இருப்பதாகத் தெரியவில்லை.
ஆனால், கடந்த சில வருடங்களுக்கு முன்னர் எம்.ஐ.எம்.மொஹிதீன் போன்றோரின் தரவுகளை அடிப்படையாக வைத்துத் தயாரிக்கப்பட்ட அண்ணளவான தரவுகளின் அடிப்படையில், கிழக்கு மாகாணத்தில் 65 ஆயிரம் ஏக்கருக்குக் குறைவில்லாத காணிப் பிரச்சினைகள் உள்ளன. இது இப்போது இன்னும் அதிகரித்திருக்க வாய்ப்புள்ளது.
அம்பாறை மாவட்டத்தை எடுத்துக் கொண்டால் முஸ்லிம்கள் 48 சதவீதமாகப் பெரும்பான்மையாக வாழ்கின்றனர். இங்கு வேகமாகம், கிரான்கோவை, கிரான்கோமாரி. ஒலுவில் அஷ்ரப் நகர், பொன்னன்வெளி, கீத்துப்பத்து பாவாபுரம், அம்பலம் ஓயா, ஹிங்குராணை, வட்டமடு ஆகிய இடங்களில் பல நூற்றுக்கணக்கான ஏக்கர் காணிகளின் உரிமைகள் கேள்விக்குறியாகி இருக்கின்றன.
பொத்துவில், அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, ஆலையடிவேம்பு, நிந்தவூர், சம்மாந்துறை, திருக்கோவில், தமணை பிரதேச செயலக எல்லைகளுக்கு உட்பட்ட பகுதிகளில் மாத்திரம் 3000 ஏக்கருக்கும் அதிகமான காணிகள் உரிமை சார்ந்த சர்ச்சைக்குள் சிக்கியுள்ளன.
அம்பாறை மாவட்ட நிலப்பரப்பில் பெரும்பான்மையின மக்களைத்
திட்டமிட்டுக் குடியேற்றியமையாலும் மாவட்ட எல்லை நிர்ணயத்தாலும் சிறுபான்மையினரின் விகிதாசாரம் வீழ்ச்சியடைந்து சிங்களவர்களின் விகிதாசாரம் பல மடங்கினால் இம்மாவட்டத்தில் அதிகரித்திருக்கின்றது.
1930களில் ‘அதிக உணவு பயிரிடல்’ தேசிய அபிவிருத்தித் திட்டம் அமுலுக்கு வந்ததைத் தொடர்ந்து, அடர்ந்த காடுகளை வெட்டி 30 வருடங்களுக்கு மேலாக முஸ்லிம்கள் பயிர்ச் செய்கை மேற்கொண்டு வந்தனர்.
பின்னர் கல்ஓயா அபிவிருத்தித் திட்டம் மற்றும் அதன் பின்னரான செயற்றிட்டங்களின் கீழ் தென்னிலங்கையில் இருந்து அழைத்து வரப்பட்ட சிங்களவர்களுக்காக இவற்றுள் கணிசமான காணிகள் பகிர்ந்தளிக்கப்பட்டன.
நுரைச்சோலை, அம்பலத்தாறு, ஓமரங்காய், சேனைக்கண்டம், சேலவட்டை, வேலாமரத்துவெளி, சியத்தரவட்டை, பொன்னன்வெளி போன்ற இடங்களில் ஒரு தொகுதி காணிகள் சிங்களவர்களுக்கு கொடுக்கப்பட்டன.
இம் மாவட்டத்தில் சிங்கள இனப் பரம்பலை அதிகரிக்கும் வேறு குடியேற்றங்களாலும் பெருமளவு காணிகள் இழக்கப்பட்டுள்ளன. வனவளம், இராணுவ முகாம், தொல்பொருள் மையங்கள், புனித வலய பிரகடனம் என்ற பல்வேறு காரணங்கள் கூறப்பட்டு கணிசமான காணிகள் உரிமைசார்ந்த பிரச்சினைக்குள்ளாகியுள்ளன.
பொன்னன்வெளியில் 600 ஏக்கர் காணியானது தீகவாபி புனித பிரதேச பிரகடனத்தின் கீழ் பறிபோயுள்ளது. இது தவிர, அஷ்ரப் நகர், அம்பலம்ஓயா கண்டம், கீத்துப்பத்து பாவாபுரம், கிரான் கோமாரி, பலையடிவட்டை, பொத்துவில் மற்றும் லகுகலை எல்லைப் பகுதி எனப் பல இடங்களில் முஸ்லிம்களுக்குரித்தான காணிகளின் உரிமைகள் சர்ச்சைக்குரியவையாக மாறியுள்ளன.
இந்தப் பின்னணியில் பொத்துவில் தொடக்கம் மருதமுனை வரையான எல்லாக் கரையோர தமிழ், முஸ்லிம் கிராமங்களிலும் காணித் தட்டுப்பாடு உள்ளது. இப்போதே அங்கு முஸ்லிம்கள் காணிகளைப் பெற்றுக்கொள்ள முடியாத அளவு வரையறுக்கப்பட்ட காணிகளே உள்ளன. இன்னும் சில வருடங்களில் நிலைமை இதைவிட மோசமடையப் போகின்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் முஸ்லிம்கள் சுமார் 22 கிலோ மீற்றர் நிலப்பரப்பிற்குள், சனத்தொகை அடிப்படையில் சிறுபான்மையாக வாழ்கின்றனர். ஆனால், அந்த மக்களுக்குக் கூட அவர்களது சனத்தொகை விகிதாசாரத்திற்கு ஏற்ப
காணிகள் இல்லை. மறுபுறத்தில், ஆக்கிரமிக்கப்பட்ட, பிரகடனப்படுத்தப்பட்ட, பறிபோன காணிகள் பற்றிய பிரச்சினைகளும் இன்னும் தீர்க்கப்படவில்லை.
மட்டக்களப்பு மாவட்டத்தைப் பொறுத்தவரை, 1980களின் பிற்பகுதியில் வாகரையில் இருந்து யுத்தம் காரணமாக வெளியேறிய முஸ்லிம்களின் காணிப் பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை. அதேநேரம், கள்ளிச்சை, புணானை மேற்கு, வாகனேரி. காரமுனை போன்ற கிராமங்களில் வாழையடி வாழையாக வாழ்ந்து வெளியேறிய முஸ்லிம்களின் நூற்றுக்கணக்கான ஏக்கர் காணிப் பிரச்சினைகள் கிடப்பில் கிடக்கின்றன.
இதேவேளை, திருகோணமலை மாவட்டத்திலும் முஸ்லிம்கள் சிக்கலான காணிப் பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்திருக்கின்றனர். வழக்கமான காணி பிரச்சினைகளை விட அண்மைக்காலத்தில் நில ஆக்கிரமிப்புக்கள், பாதுகாக்கப்பட்ட வனமாக பிரகடனப்படுத்தும் செயற்பாடுகள் அதிகரித்திருப்பதை அவதானிக்க முடிகின்றது.
கிண்ணியா, பதவிசிறிபுர, குச்சவெளி, மூதூர் உள்ளிட்ட முஸ்லிம்கள் வாழும் பிரதேசங்களில் காணிப்பற்றாக்குறை காணப்படுவதுடன் இம்மாவட்டத்தில் முஸ்லிம்களுக்கு உரித்தான பல்லாயிரக்கணக்கான ஏக்கர் காணிகள் இன்று உரிமை கொண்டாட முடியாத நிலை ஏற்பட்டிருக்கின்றது.
சிங்கள பிரதேசங்களில் குறைந்தளவான மக்களுக்கு அதிக நிலமும், தமிழ் மற்றும் முஸ்லிம் பிரதேசங்களில் அதிகளவான மக்களுக்கு வரையறுக்கப்பட்ட காணி உரிமையும் இருப்பதை... திருகோணமலையிலும் காண முடிகின்றது.
இன விகிதாசாரத்திற்கு அமைவாக காணிப்பங்கீடு மேற்கொள்ளப்பட
வேண்டும் என்று சர்வதேச சட்டங்கள் வலியுறுத்துகின்ற சமகாலத்தில்,டி நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரையிலும் இவ்விடயம் உள்ளடக்கப்பட்டுள்ளது.
அதாவது, கிழக்கில் மீள் குடியமர்த்தப்பட்டவர்களின் காணிகளுக்கு சட்டபூர்வ உரிமை வழங்கப்பட வேண்டும் என்றும், பயங்கரவாதத்தால் வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களின் காணிப் பிரச்சினையை விரைவாகத் தீர்க்க வேண்டும் என்றும் கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு பல வருடங்களுக்கு முன்னமே பரிந்துரைத்து விட்டது.
ஆனால், இந்த இடியப்பச் சிக்கலான பிரச்சினைகளை ஒரு அங்குலமாவது தீர்ப்பதற்கு முஸ்லிம் அரசியல்வாதிகளோ அல்லது இன்று வரை ஆட்சி செய்த அரசாங்கங்களோ காத்திரமாக முயற்சிக்கவில்லை.
தமிழர்கள் தங்களது ஒற்றுமையின் மூலமும் காணி மீட்பு போராட்டத்தின் ஊடாகவும் கணிசமான ஏக்கர் காணிப் பிரச்சினைகளைத் தீர்த்துள்ளனர். காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன.
ஆனால், முஸ்லிம்கள் இன்னும் இதற்காகப் போராடவில்லை. அதைவிடுத்து, அதிக விலைக்குக் காணி விற்பதையும் வாங்குவதையும் ஒரு கலாசாரமாக மாற்றியுள்ளனர்.
எனவே, இது விடயத்தில் முழுச் சமூகத்திற்கும் பொறுப்பிருக்கின்றது. சமத்துவம், நீதி, நியாயம் பேசும் என்.பி.பி. அரசாங்கமும், அதன் முஸ்லிம் எம்.பிக்களும் இதற்காக முன்னிற்க வேண்டும். முஸ்லிம் கட்சிகளின் எம்.பிக்கள் அதற்கான அழுத்தத்தைக் கொடுக்க வேண்டும்.
52 minute ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
52 minute ago
3 hours ago
3 hours ago