2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

கல்முனை: நீளும் கயிறிழுப்பு

முகம்மது தம்பி மரைக்கார்   / 2019 மார்ச் 13 , மு.ப. 09:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிச்சைக்காரனுக்கு புண்ணும் அரசியல்வாதிகளுக்கு ஆகக்குறைந்தது ஒரு சர்ச்சையும், தத்தமது தொழில்களை வெற்றிகரமாகச் செய்துகொள்வதற்கு அநேகமான தருணங்களில் தேவையாக இருக்கின்றன.

சர்ச்சைகள் இல்லாதபோது, அரசியல்வாதிகளே அவற்றை ஏதோவொரு  வழியில் தொடக்கிவைத்தும் விடுகின்றனர். அரசியலரங்கைச் சூடேற்றி, அதனூடாக வாக்குகளை அறுவடை செய்வதற்கு, இந்தச் சர்ச்சைகள் உதவுமென, பெரும்பாலான அரசியல்வாதிகள் நம்பிக்கொண்டிருக்கிறார்கள். 

பொதுத் தேர்தலொன்று விரைவில் வரலாமென்கிற கதைகள் வந்துவிட்டால், அம்பாறை மாவட்டத்தில், சர்ச்சைக்குரிய சில விடயங்கள் குறித்த பேச்சுகள் எழுந்துவிடும். தேர்தல் முடிந்ததும் அப்படியே அந்தக் கதை அடங்கிப்போகும்.

கரையோர மாவட்டம், கல்முனை உப - பிரதேச செயலகத்தைத் தரமுயர்த்துதல், சாய்ந்தமருதுக்கான பிரதேச செயலக உருவாக்கம் உள்ளிட்ட சில விடயங்கள், கட்டாயமாக அந்தப் பேச்சுப் பட்டியலுக்குள் இருக்கும். 

அந்த வகையில், இப்போது பொதுத் தேர்தல் ஒன்றுக்கான காலம் நெருங்குவதாக, அரசியலரங்குகளில் பேசப்படுகின்ற நிலையில், கல்முனை தமிழ்ப் பிரிவுக்கான உப - பிரதேச செயலகத்தைத் தரமுயர்த்துவதற்கான கோசங்களும் சர்ச்சைகளும் எழுந்துள்ளன. 

கல்முனையில் பிரதேச செயலகமொன்றும் உப - பிரதேச செயலகமொன்றும் உள்ளன. முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளை நிர்வகிக்கும் பொருட்டு, கல்முனைப் பிரதேச செயலகமும் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளை நிர்வகிக்க, கல்முனை உப - பிரதேச செயலகமும் இயங்கி வருகின்றது.

எவ்வாறாயினும், மேற்படி உப - பிரதேச செயலகலத்தை, ‘பிரதேச செயலகம் (தமிழ் பிரிவு)’ என்றுதான் அங்குள்ள நிர்வாகத்தினர் அடையாளப்படுத்தி வருகின்றனர். மேலும், அம்பாறை மாவட்டச் செயலகமும் கல்முனை உப - பிரதேச செயலகத்தை, ஒரு பிரதேச செயலகமாகவே கருதிச் செயற்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

இவ்வாறானதொரு நிலையில்தான், கல்முனை உப - பிரதேச செயலகத்தை, பிரதேச செயலகமாகத் தரமுயர்த்த வேண்டுமென, தமிழர்த் தரப்பு கோரி வருகின்றது. ஆனால், முஸ்லிம்கள் இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர். அதற்கு அவர்கள் கூறும் காரணங்கள் வலுவானவையாகும்.

கல்முனை உப - பிரதேச செயலகத்தை, பிரதேச செயலகமாகத் தரமுயர்த்தும் போது, அதற்குரிய நிர்வாக நிலப்பகுதிகளை வரையறை செய்தல் அவசியமாகும். அவ்வாறு எல்லைகள் வரையறுக்கப்படும் போது, கல்முனை நகர்ப் பகுதி முழுவதும், கல்முனை தமிழ்ப் பிரிவுக்கான பிரதேச செயலகத்தின் நிர்வாகத்தின் கீழ்ச் சென்றுவிடும். 

கல்முனை நகர்ப் பகுதியில்தான், சந்தை, அரச அலுவலகங்கள், வியாபாபார நிறுவனங்களென, முக்கியமான இடங்கள் அனைத்தும் உள்ளன. கல்முனை நகரில், பள்ளிவாசலொன்றும் இருக்கிறது.
பல நூற்றாண்டுகளாக, முஸ்லிம்களின் தொன்மைமிக்க நகரமாக கல்முனை இருந்து வருவதாகக் கூறப்படுகிறது. இன்றுவரை, கல்முனை நகரில் முஸ்லிம்களின் ஆதிக்கமே உள்ளது.

கல்முனைப் பிரதேசம், ஒரு நகரமாக அப்போதைய ஆளுநர் சேர் ஜே. ரிட்ச்வேயால் உத்தியோகபூர்வமாகப் பிரகடனம் செய்யப்பட்டது. 1892ஆம் ஆண்டின் 18ஆம் இலக்க சிறிய பட்டினச் சுகாதாரச் சபைகள் சட்டத்தின் பிரிவு - 2இன் கீழ், 1897 பெப்ரவரி 19ஆம் திகதியன்று வெளியிடப்பட்ட 5459ஆம் இலக்க அரச வர்த்தமானியினூடாக, இந்தப் பிரகடனம் மேற்கொள்ளப்பட்டது. 

அப்போது, கல்முனை நகரம், முஸ்லிம் பெரும்பான்மையைக் கொண்டிருந்ததாக, சுமார் இரண்டரை வருடங்களுக்கு முன்னர், கல்முனையின் பூர்வீக வரலாறு தொடர்பான பிரகடனமொன்றை, கல்முனை அனைத்துப் பள்ளிவாசல்கள், பொது அமைப்புகளின் சம்மேளனம் வெளியிட்ட போது தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

எனவே, பாரம்பரியமாக இவ்வாறு தமக்குச் சொந்தமாக இருந்துவரும் கல்முனை நகரத்தை இழப்பதற்கு, முஸ்லிம்கள் விரும்பவில்லை. அதனால்தான், கல்முனை உப - பிரதேச செயலகத்தைத் தரமுயர்த்துவதற்கு, அவர்கள் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர்.

இவ்வாறானதொரு பின்னணியில், தற்போது அரசாங்கத்தில் தமக்குள்ள செல்வாக்கைப் பயன்படுத்தி, கல்முனை உப - பிரதேச செயலகத்தைத் தரமுயர்த்துவதற்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால், முயற்சியொன்று மேற்கொள்ளப்பட்டு இருந்தது. ஆயினும், அதை முஸ்லிம் காங்கிரஸ் எதிர்த்துள்ளது.

குறிப்பாக, கல்முனை உப - பிரதேச செயலகத்தைத் தரமுயர்த்துவதற்கு, கல்முனையைச் சொந்த இடமாகக் கொண்ட முஸ்லிம் காங்கிரஸின் இராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ், கடுமையான எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றார். “கல்முனை உப -பிரதேச செயலகம் தரமுயர்த்தப்பட்டால், அரசாங்கத்திலிருந்து வெளியேறுவேன்” என்று, இராஜாங்க அமைச்சர் ஹரீஸ் கூறியதாகச் செய்திகளும் வெளியாகி இருந்தன. 

இதனையடுத்து, முஸ்லிம் காங்கிரஸும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் பேசி, இந்த விடயத்தில் ஒரு முடிவுக்கு வருமாறு, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இரு சாராரிடமும் வேண்டிக் கொண்டதாகவும் செய்திகள் வெளியாகியிருந்தன.

இந்த நிலையில், கல்முனை உப - பிரதேச செயலகம் தரமுயர்த்தப்படுவதற்கான கோரிக்கை தொடர்பில், முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம், சில தினங்களுக்கு முன்னர், ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டுள்ளார்.

“கல்முனை உப - பிரதேச செயலகம் தரமுயர்த்தப்படும் போது, நிலத்தொடர்பற்ற முறையில் நிர்வாக எல்லைகள் கூறுபோடப்படாமல், நிலத் தொடர்புபட்ட அடைப்படையிலும் சில எல்லை மாற்றங்களோடும் தரமுயர்த்தப்பட வேண்டும். முஸ்லிம் காங்கிரஸும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் கலந்து பேசி, உடன்பாடு கண்ட பின்னரே, அது சாத்தியமாகும்” என்று, தமது நிலைப்பாட்டை, அமைச்சர் ஹக்கீம் தெரிவித்திருக்கிறார்.

“கல்முனையின் இரண்டு பிரதேச செயலகப் பிரிவுக்குள்ளும் இருக்கின்ற சமூகத்தினர், தனித்தனியே செல்கின்ற நிலைப்பாடு திருப்திகரமானதாக இல்லை. எனவே, அங்குள்ள கிராம சேவகர் பிரிவுகளில், எல்லை நிர்ணயம் செய்வதிலுள்ள சர்ச்சைகள் நீக்கப்படுகின்ற முடிவுகளும் எட்டப்பட வேண்டும். எனவே, இந்த விடயங்களிலெல்லாம் திருப்திகரமான முடிவு காணப்படும் போதுதான், கல்முனை உப - பிரதேச செயலகம் என்பது சாத்தியமாகும்” என்றும் ஹக்கீம் விவரித்திருந்தார்.

இது இவ்வாறிருக்க, இந்த விவகாரத்தை வைத்துக்கொண்டு, தங்கள் அரசியலைச் சூடேற்றும் வகையில், சில மக்கள் பிரதிநிதிகள் பேசிக்கொள்வதோடு, இனவாதத்தைத் தூண்டும் வகையிலும் கருத்துகளை வெளியிட்டு வருகின்றமை கவலையளிக்கின்றது. 

அம்பாறை மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நடாளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன், கல்முனை உப - பிரதேச செயலகக்தைத் தரமுயர்த்துவது தொடர்பில், வெள்ளிக்கிழமையன்று (08),  சபையில் கடும் சொற்களைப் பயன்படுத்தி, உரையொன்றை நிகழ்த்தியிருந்தார். இதன்போது, இராஜாங்க அமைச்சர் ஹரீஸை, கேவலமானவர் என்றும் வங்குரோத்து அரசியல் செய்பவர் எனவும் வசை கூறியிருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும். 

அதேவேளை, கல்முனை உப - பிரதேச செயலகத்தைத் தரமுயர்த்தித் தருவதாக, பிரதமர் ரணில் விக்ரமசிங்க தமக்கு வாக்குறுதி அளித்திருப்பதாகவும், நாடாளுமன்றத்தில், கோடீஸ்வரன் எம்.பி தெரிவித்திருந்தார்.

மறுபுறமாக, நாடாளுமன்றில் அதே தினம் உரையாற்றிய இராஜாங்க அமைச்சர் ஹரீஸ், ”கல்முனையைத் துண்டாடும் இதுபோன்ற நடவடிக்கைகளுக்கு, உடந்தையாக இருக்க மாட்டேனென்று, பிரதமர் எனக்கு  வாக்குறுதி வழங்கியிருக்கிறார்” எனவும் கூறினார்.

அப்படியென்றால், இங்கு யார் கூறுவது உண்மை? அல்லது யார் சொல்வது பொய் என்பதை அலசிப் பார்த்தல் அவசியமாகும். சிலவேளை, இருவர் கூறுவதும் உண்மை என்றால், பிரதமர் ரணில் விக்ரமசிங்க, மேற்படி இரண்டு தரப்பினரிடமும் இருவேறு வாக்குறுதிகளை வழங்கியுள்ளாரா என்பது பற்றியும் தேடிப்பார்க்க வேண்டியுள்ளது. 

ஏற்கெனவே, கல்முனை மாநகர சபைக்குட்பட்ட சாய்ந்தமருது பிரதேசத்தவர்கள், தமக்கென தனியான உள்ளூராட்சி சபையொன்றைக் கோரி, போராட்டமொன்றை முன்னெடுத்துவரும் நிலையில், கல்முனை பிரதேச செயலகப் பிரிவிலிருந்து, தமிழர்களும் பிரிந்து, தமக்கெனத் தனியான பிரதேச செயலகமொன்றைக் கோருவது, அரசியல் ரீதியாக இராஜாங்க அமைச்சர் ஹரீஸுக்கு, பாரிய தலையிடியை ஏற்படுத்தியுள்ளது.

கல்முனை மாநகர சபையிலிருந்து சாய்ந்தமருது பிரிந்து சென்றால், தமிழர்களின் வசம் கல்முனை மாநகரசபை சென்றுவிடும் என்கிற அச்சம், கல்முனை முஸ்லிம்களிடமுள்ளது. அதேவேளை, கல்முனை உப - பிரதேச செயலகத்தைத் தரமுயர்த்தினால், கல்முனை நகரம் தமிழர்களிடம் அகப்பட்டுவிடும் என்கிற பயமும், அங்குள்ள பெரும்பான்மை முஸ்லிம்களுக்கு இருக்கின்றது. எனவே, மேற்படி அச்சப்படும் விடயங்கள் இரண்டும் நடந்துவிடாமல் பார்த்துக் கொள்வதில்தான், தனது அரசியல் வெற்றி தங்கியுள்ளதென, இராஜாங்க அமைச்சர் நினைக்கக்கூடும். 

எது எவ்வாறாயினும், கல்முனை உப - பிரதேச செயலகத்தைத் தரமுயர்த்த முயற்சிப்பதும் அதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பதும், தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையிலான முறுகலாக மாறிவிடக்கூடிய அபாயங்களும் உள்ளன என்பதைக் கவலையுடன் இங்கு பதிவுசெய்ய வேண்டியுள்ளது. அவ்வாறானதொரு முறுகல் ஏற்படுவதையே, கணிசமான அரசியல்வாதிகளும் விரும்புகின்றனர் என்பதையும் விளங்கிக் கொள்ள முடிகிறது.

தமது கொள்கைகளாலும் அபிவிருத்திகளாலும், மக்களைத் தம்பக்கம் ஈர்க்க முடியாத அரசியல்வாதிகள், இனவாதத்திடமே இறுதியில் சரணடைகின்றனர். இனவாதம் என்பது, ஒரு காட்டுத் தீயைப்போல் மிக எளிதாகவும் பெரிதாகவும் பற்றிக்கொள்ளக் கூடியதாகும் என்பதையும் நாம் மனதில் வைத்துக்கொள்தல் வேண்டும்.

எனவே, மேற்சொன்ன விடயங்களில், கயிறிழுத்துக் கொண்டிராமல் நேர்மையாக யோசித்து நடந்து கொள்ளுவதே சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு நல்லதாக அமையும்.  

இழுத்து மூட வேண்டும்

கல்முனை உப - பிரதேச செயலகமானது, ஆயுத முனையில் அடாத்தாக உருவாக்கப்பட்டது என்றும், அதனை மூடிவிட வேண்டும் எனவும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் முன்னாள் செயலாளரும் சட்ட முதுமாணியுமான வை.எல்.எஸ். ஹமீட் தெரிவிக்கின்றார்.  

கல்முனை உப - பிரதேச செயலகத்தைத் தரமுயர்த்தக் கோருகின்றமை குறித்து எழுந்துள்ள பிரச்சினைகள் தொடர்பில், கருத்துக் கேட்டபோதே, மேற்படி பதிலை அவர் வழங்கினார்.

“1989ஆம் ஆண்டு, வடகிழக்கு மாகாண முதலமைச்சராக வரதராஜப் பெருமாள் பதவி வகித்த காலத்தில், துப்பாக்கி ஏந்திவந்த ஒரு குழுவினர், அப்போதைய கல்முனை உதவி அரசாங்க அதிபரை அச்சுறுத்தி, உதவி அரசாங்க அதிபர் காரியாலயத்தின் உள்ளேயே தமிழர்களுக்கென வேறாக ஒரு பிரிவை உருவாக்க வைத்தனர். சட்டவிரோதமாக உருவாக்கப்பட்ட இந்தப் பிரிவுதான், பின்னர் அரச அங்கிகாரத்துடன் உப - பிரதேச செயலகமானது” என்றும், ஹமீட் கூறினார்.

சட்ட முதுமாணி வை.எல்.எஸ். ஹமீட், கல்முனையைச் சொந்த இடமாகக் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், கல்முனை உப - பிரதேச செயலகத்தைத் தரமுயர்த்துவதற்கு, ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்று தெரிவித்த ஹமீட், “உப - பிரதேச செயலகத்தை இழுத்து மூட வேண்டும்” என்றும் கூறினார்.  “கல்முனை என்பது பாரம்பரியமான ஒரு நகரமாகும். இங்குள்ள நிறுவனங்களில் அதிகமானவை முஸ்லிம்களுக்குரியவை. எனவே, கல்முனை நகரை நிருவாக ரீதியாக இரண்டாகப் பிரிக்கக் கூடாது” என்றும் ஹமீட் வலியுறுத்தினார்.

“வடக்கு, கிழக்கை இணைக்க வேண்டும் என்று கோரி வருகின்ற தமிழர்கள், கல்முனையை ஏன் பிரிக்க வேண்டும்” என்றும், அவர் கேள்வியெழுப்பினார்.

“எவ்வாறாயினும், கல்முனையில் நிலத் தொடர்பற்ற முறையில் தமிழர் பிரதேசங்களை இணைத்து, ஓர் உள்ளூராட்சி சபையை உருவாக்கி, அந்தச் சபைக்கென்று ஒரு பிரதேச செயலகம் வழங்கப்படுவதில் தமக்கு ஆட்சேபனை கிடையாது” எனவும் சட்டமுதுமாணி ஹமீட் தெரிவித்தார்.

“எதிர்காலத்தில் அரசியல் அதிகாரம் தனக்குக் கிடைக்குமாயின், கல்முனை உப -பிரதேச செயலகத்தை மூடி, தனது நிலைப்பாட்டை நிறைவேற்றுவேன்” என்றும் அவர் நம்மிடம் கூறினார்.

கடந்த காலங்களில் வை.எல்.எஸ். ஹமீட்,  தேர்தல்களில் போட்டியிட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X