2025 ஓகஸ்ட் 27, புதன்கிழமை

கால அவகாசம் கோருதல் எப்போது முடிவடையும்?

எம்.எஸ்.எம். ஐயூப்   / 2019 மார்ச் 13 , பி.ப. 12:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐ. நா மனித உரிமைகள் பேரவை விடயத்தில், அரசாங்கத்தின் நடவடிக்கைகள் விசித்திரமானவையாகவே இருக்கின்றன.   

ஜனாதிபதியும் பிரதமரும் அந்த விடயத்தில் கடைப்பிடிக்கும் அணுகுமுறைகளைப் பார்க்கும் போது, நாட்டில் இரண்டு அரசாங்கங்கள் இருக்கின்றனவா என்று, மனித உரிமைகள் பேரவையின் அதிகாரிகள் நினைக்கலாம்.  

ஏனெனில், அவ்விருவரும் வெவ்வேறாக, அப்பேரவை தொடர்பான விடயங்களைக் கையாளப் போகிறார்கள்.  

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட அரசாங்கம், இம்முறையும் பேரவையில் இலங்கை தொடர்பாகச் சமர்ப்பிக்கப்பட இருக்கும் பிரேரணை ஒன்றுக்கு, இணை அனுசரணை வழங்கப் போகிறது. இறுதிப் போரில், இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் விடயத்தில், அரசாங்கத்தின் மீது மனித உரிமைகள் பேரவை விதித்துள்ள சில பொறுப்புகளை நிறைவேற்ற, மேலும் கால அவகாசம் பெறுவதே அரசாங்கத்தின் நோக்கமாகவுள்ளது.   

இது தொடர்பாகப் பிரதமர் அலுவலகமும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சும் கூட்டாக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளன. ‘இணை அனுசரணை வழங்கப்பட்ட பிரேரணையொன்றின் மூலம், இலங்கை உறுதியானதும் நிலையானதுமான நல்லிணக்கத் திட்டம் ஒன்றின் பாலான, தமது கடமையையும் உறுதிப்பாட்டையும் வெளிப்படுத்துகிறது. அதற்காகத் தற்போது நடைபெற்று வரும், ஐ.நா மனித உரிமைப் பேரவையின் நான்காவது கூட்டத்தின் போது, இணை அனுசரணை வழங்கப்பட்ட பிரேரணையொன்றின் மூலம், 2015ஆம் ஆண்டு, ஒக்டோபர் முதலாம் திகதிய பிரேரணைக்குரிய கால அட்டவணையை நீடிக்க வேண்டும் எனவும் அது வேண்டுகிறது’ என, அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.   

தமது நோக்கத்தை, மேலும் தெளிவுபடுத்துவதற்காகவும் அந்த நோக்கத்துக்கு எதிராக எழுந்துள்ள சில விமர்சனங்களுக்குப் பதில் அளிக்கும் முகமாகவும் அறிக்கையில் மேலும் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.  
‘தற்போதைய முயற்சியானது நல்லிணக்கம், சமாதானம், தேசிய ஒருங்கிணைப்பு ஆகியவற்றை மேற்கொள்வதற்காக அரசாங்கத்துக்கு மேலும் கால அவகாசம் கோருவதேயன்றி வேறொன்றுமல்ல. உதாரணமாக, 2018ஆம் ஆண்டு ஒக்டோபர் 26ஆம் திகதி நடைபெற்ற அரசமைப்புச் சதியின் காரணமாக, அவசியமான சில சட்டங்களைப் பூர்த்தி செய்ய அரசாங்கத்தால் முடியாமல் போய்விட்டது.’   
அறிக்கையில், இறுதியாகக் குறிப்பிடப்பட்டுள்ள இரண்டு வசனங்களில், முதலாவது வசனம் உண்மையாயினும், இரண்டாவது வசனம் உண்மையல்ல.   

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதி, ரணில் விக்கிரமசிங்கவைப் பிரதமர் பதவியிலிருந்து நீக்கி, மஹிந்த ராஜபக்‌ஷவை அந்தப் பதவியில் அமர்த்தியதை அடுத்து, உருவாகிய நெருக்கடி நிலைமை தான், மனித உரிமை விடயத்தில் தமது கடமைகளை நிறைவேற்ற முடியாமல் போனமைக்குக் காரணம் என, அரசாங்கம் கூறுவது அப்பட்டமான பொய்யாகும்.  

2015ஆம் ஆண்டு, ஒக்டோபர் மாதம் முதலாம் திகதியே, ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கம், இணை அனுசரணை வழங்கிய பிரேரணை நிறைவேற்றப்பட்டது. அதிலிருந்து, கடந்த வருடம் ஒக்டோபர் 26ஆம் திகதி வரை, அந்தப் பொறுப்புகளை நிறைவேற்ற, அரசாங்கத்துக்கு மூன்றாண்டுகள் இருந்தன. மஹிந்த ராஜபக்‌ஷ பிரதமராகவிருந்த 51 நாள்களில் தான், அரசாங்கம் அவ்வனைத்துப் பொறுப்புகளையும் நிறைவேற்றவிருந்ததா?   

போர்க் காலத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக, வெளிநாட்டு நீதிபதிகளைக் கொண்ட, உள்நாட்டு நீதிமன்றம் ஒன்றின் மூலம் விசாரணை செய்வதே, 2015ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட பிரேணையின் மூலம், அரசாங்கத்தின் மீது சுமத்தப்பட்ட பிரதான பொறுப்பாகும்.   

அதற்குப் புறம்பாக, காணாமற்போனோருக்கான அலுவலகம் ஒன்றை நிறுவுதல், உண்மையைக் கண்டறிதல், நீதி வழங்கல், சேதங்களுக்குப் பரிகாரம் காண்பது, நடந்தவைகளை மீண்டும் நிகழாதிருத்தல் ஆகியவற்றுக்கான பொறிமுறையொன்றை உருவாக்குதல், மனித உரிமை மீறியவர்கள் படைகளில் இருப்பதற்கோ, அவற்றில் சேர்த்துக் கொள்ளப்படுவதற்கோ இடமில்லாத வகையில் படைகளைச் சீர்திருத்தல், ஊடகவியலாளர்கள், மனித உரிமைப் பாதுகாப்பாளர்கள், சிறுபான்மைச் சமயத்தவர்கள் ஆகியோருக்கும் சிவில் சமூக அமைப்புகள், சமயத்தலங்கள் ஆகியவற்றுக்கும் எதிரான தாக்குதல்களைப் பற்றி விசாரணை செய்தல், அத்தாக்குதல்களுக்குப் பொறுப்பானவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தல், எதிர்காலத்தில் அது போன்ற தாக்குதல்கள் மீண்டும் இடம்பெறாதிருக்க நடவடிக்கை எடுத்தல், பொது மக்கள் பாதுகாப்புச் சட்டத்தை மீளாய்வு செய்தல், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை மீளாய்வு செய்து, அதை இரத்துச் செய்தல் ஆகியனவும் அப்பிரேரணை மூலம், அரசாங்கத்தின் மீது சுமத்தப்பட்டுள்ள பொறுப்புகளாகும்.   

கடந்த மூன்றாண்டுகளில் அரசாங்கம் இவற்றில் எத்தனை பொறுப்புகளை நிறைவேற்றியுள்ளது, அதற்கு இருந்த தடைகள் என்ன?   

எனவே, அரசாங்கம் கடந்த ஒக்டோபர் மாதம் இடம்பெற்ற மைத்திரி-மஹிந்த சதியை, அதற்கான தடையாகக் காட்ட முற்படுவது விந்தையான விடயமாகும்.  

இப்போதைக்கு அரசாங்கம், இவற்றில் காணாமற்போனோருக்கான அலுவலகத்தை மட்டும் நிறுவியுள்ளது. உண்மையைக் கண்டறிவதற்கான ஆணைக்குழுவொன்றை நிறுவுவதற்கான நடவடிக்கைகள், ஓரிரு வாரங்களுக்கு முன்னர் தான் ஆரம்பிக்கப்பட்டன. எனினும், ஜனாதிபதி அதற்கும் சில தடைகளைப் போட்டுக் கொண்டு இருக்கிறார்.   

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்துக்கு பதிலாக, அரசாங்கம் மற்றொரு சட்டத்தைக் கொண்டு வர முயற்சிக்கிறது. அது தற்போதைய சட்டத்தை விடவும் பயங்கரமானது எனத் தமிழ்த் தரப்பினர் மட்டுமல்லாது, சிங்களத் தரப்பினரும் கூறி வருகின்றனர்.  

பிரதான பொறுப்பான, போர்க் காலச் சம்பவங்கள் தொடர்பான விசாரணைக்காக வெளிநாட்டு நீதிபதிகளைக் கொண்ட நீதிமன்றம் ஒன்றை நிறுவுதலைப் பற்றி, அரசாங்கம் கடந்த மூன்றாண்டுகளில் சிந்திக்கவே இல்லை. இந்த நிலையில் தான் அரசாங்கம், இந்தப் பொறுப்புகளை நிறைவேற்ற மேலும் இரண்டு வருட கால அவகாசம் கேட்கப் போகிறது.  

மனித உரிமை விடயத்தில், தமது கடமைகளை நிறைவேற்றுவதற்காக, அரசாங்கம் கால அவகாசம் கோரும் முதலாவது முறை இதுவல்ல. 2015, 2017ஆம் ஆண்டுகளிலும் அரசாங்கம் இதே கோரிக்கையை விடுத்து, கால அவகாசத்தையும் பெற்றுக் கொண்டது.   

தமிழ் அரசியல் கட்சிகள், அரசாங்கத்துக்கு மேலும் கால அவகாசம் வழங்குவதை எதிர்த்த போதிலும், மனித உரிமைகள் பேரவை, அரசாங்கத்துக்கு மேலும் கால அவகாசம் வழங்கும் போல் தான் தெரிகிறது.   

இம்முறை மனித உரிமைகள் பேரவையில், இலங்கை தொடர்பான பிரேரணையை முன்வைப்பதில், தலைமை தாங்கும் பிரிட்டனின் இலங்கைக்கான தூதுவர், கடந்த வாரம் மன்னாரில் இதைத் தெளிவாகவே கூறியுள்ளார்.  

எவ்வளவு தான் கால அவகாசம் வழங்கப்பட்டாலும், இலங்கையில் எந்தக் கட்சி பதவியில் இருந்தாலும், அரசாங்கம் மேலே குறிப்பிட்டவற்றில் வேறு எந்தப் பொறுப்பை நிறைவேற்றினாலும், போர்க் கால மனித உரிமை மீறல்களை விசாரிப்பதற்காக, நீதிமன்றம் ஒன்றை நிறுவப் போவதில்லை என்பது இப்போது தெளிவாகியுள்ளது.   

மஹிந்த தொடர்ந்தும் பதவியில் இருந்திருந்தால், சிலவேளை மனித உரிமைகள் பேரவை அவ்வாறானதொரு நீதிமன்றத்தைத் தாமாக நிறுவியிருக்கவும் கூடும். ஏனெனில், மஹிந்த எடுத்த எடுப்பிலேயே மனித உரிமைகள் பேரவையின் பிரேணைகளை நிராகரித்து வந்தார். எனவே தான், ஐ.நா மனித உரிமை உயர்ஸ்தானிகராக, நவநீதம் பிள்ளை இருந்த காலத்தில், தனித் தனிச் சம்பவங்களாகவன்றி, பொதுவாக மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றனவா என்பதைப் பற்றிய விசாரணையொன்று நடைபெற்றது.  பாலியல் குற்றங்களைத் தவிர்ந்த, படையினர் செய்த அத்தனை குற்றங்களையும் புலிகளும் செய்துள்ளனர் என அந்த அறிக்கை கூறியது.  

2015ஆம் ஆண்டு பிரேரணை மூலம், தனித் தனிச் சம்பவங்களாக, மனித உரிமை மீறல்கள் தொடர்பாக விசாரணை செய்வதற்காகவே வெளிநாட்டு நீதிபதிகளைக் கொண்ட உள்நாட்டு நீதிமன்றமொன்றை நிறுவுமாறு பேரவை கூறுகிறது.   

தற்போதைய அரசாங்கம், அதை மஹிந்தவைப் போல் நிராகரிக்காமல், கால அவகாசம் கேட்டுக் கேட்டு ஒத்திவைத்துக் கொண்டு போகிறது. மஹிந்த பதவியில் இருந்தால், மனித உரிமைப் பேரவை, நவநீதம் பிள்ளையின் காலத்தில் போல், தாமாகவே அவ்வாறானதொரு நீதிமன்றத்தை நிறுவியிருக்கவும் கூடும்.   

மனித உரிமைகள் பேரவையின் பிடி இறுகிய விதம்

இலங்கையில் அரச படைகளுக்கும் புலிகளுக்கும் இடையிலான போர், 2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் திகதி முடிவடைந்து, ஒரு வாரத்தில் அப்போதைய ஐ.நா செயலாளர் நாயகம் பான் கி மூன் இலங்கைக்கு வருகை தந்தார். அவரது விஜயத்தின் இறுதியில், அவரும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவும் கையெழுத்திட்டு வெளியிட்ட அறிக்கையில், போர்க் காலச் சம்பவங்கள் தொடர்பாகப் பொறுப்புக் கூறலுக்கு ஏற்பாடு செய்யப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.  

அதே ஆண்டு சில நாடுகள், இலங்கை தொடர்பாக, ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் ஒரு பிரேரணையை நிறைவேற்ற முற்பட்ட போது, இலங்கை அரசாங்கம் அதற்கு முன்னர், தாமாக முன் வந்து அப் பேரவையில் பிரேரணையொன்றை நிறைவேற்றியது. மேற்படி அறிக்கையின் பிரகாரம், இலங்கை அரசாங்கம் நடந்து கொள்ளும் என்பதே அந்தப் பிரேரணையின் சாராம்சமாகும். ஆனால், அரசாங்கம் அந்த உடன்பாட்டின் பிரகாரம் செயற்படாததால், பான் கி மூன் இலங்கையில் மனித உரிமை விடயம் தொடர்பாகத் தமக்கு ஆலோசனை வழங்குவதற்கு, 2010ஆம் ஆண்டு தருஸ்மன் குழுவை நியமித்தார்.   
அதைக் கண்ட ஜனாதிபதி ராஜபக்‌ஷ, அதே ஆண்டு தாமும் ஒரு குழுவை நியமித்தார். அதுதான், கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவாகும்.   

அதற்கு என்ன பொறுப்பைக் கொடுப்பது என்று தெரியாமல், புலிகளுக்கும் ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்துக்கும் இடையிலான போர் நிறுத்த உடன்படிக்கை ஏன் தோல்வியடைந்தது என்று ஆராயுமாறு ராஜபக்‌ஷ கூறினார். தாம் எதிர்த்த போர் நிறுத்த உடன்படிக்கை, ஏன் தோல்வியடைந்தது என்று ஆராய, அவர் ஆணைக்குழுவொன்றை நியமித்தமை விந்தையாகும்.  

ஆனால், முன்னாள் சட்ட மா அதிபர் சி.ஆர். டி சில்வாவின் தலைமையிலான அந்த ஆணைக்குழு, நல்லதோர் அறிக்கையை 2011ஆம் ஆண்டு வெளியிட்டு இருந்தது. போர்க் கால மனித உரிமை மீறல்களில் முக்கியமானவற்றைப் பற்றி விசாரணை செய்யுமாறு மட்டுமல்லாது, அதிகாரப் பரவலாக்கல் விடயத்திலும் அக்குழு தமது அறிக்கையில் பரிந்துரைகள் செய்தது. ஆனால், அரசாங்கம் அந்தப் பரிந்துரைகளையும் அமுலாக்க விரும்பவில்லை. இந்த நிலையில் தான், அமெரிக்கா தலைமையில் சில நாடுகள் 2012ஆம் ஆண்டு, மனித உரிமைப் பேரவையில் ஒரு பிரேரணையை நிறைவேற்றின. இலங்கை அரசாங்கமே நியமித்த கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்ற வேண்டும் என்பதே, அந்தப் பிரேரணையின் சாராம்சமாகும்.  

அரசாங்கம் அதனை நிராகரித்தது. ஆனால், அந்தப் பிரேரணைக்கு அமைய, ஒரு தேசிய நடவடிக்கை திட்டத்தை (National Action Plan) பேரவையில் சமர்ப்பித்தது. பேரவை, அது திருப்திகரமானதாக இல்லை எனக் கூறி, 2013ஆம் ஆண்டு மற்றொரு பிரேரணையை நிறைவேற்றியது. அதில் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை மட்டுமன்றி, போருக்குப் பின்னரான பல மனித உரிமை மீறல்களுக்கும் பரிகாரம் காணுமாறு கூறப்பட்டது.   

சிறுபான்மை சமயத்தவர்களுக்கு எதிரான அச்சுறுத்தல்கள், அதிகாரப் பரவலாக்கல் வடமாகாண சபைத் தேர்தல் போன்றவையும் அதில் உள்ளடக்கப்பட்டன. அந்த வருடம், மனித உரிமைகளுக்கான உயர் ஸ்தானிகர் நவநீதம் பிள்ளை, சர்வதேச விசாரணையொன்றின் அவசியத்தை வலியுறுத்தியிருந்தார். 

 ஆனால், போர்க் கால மனித உரிமை மீறல்கள் தொடர்பாக விசாரணை நடத்துமாறு, பேரவை இலங்கை அரசாங்கத்தையே மீண்டும் கோரியது.  அரசாங்கம் அந்தப் பிரேரணையையும் நிராகரித்துவிட்டுப் பிரேரணை மூலம் விதிக்கப்பட்ட கடமைகளை நிறைவேற்றுவதாக காட்டிக் கொண்டது. ஆனால், அது போதுமானது அல்ல எனக் கூறிய உயர் ஸ்தானிகர், சர்வதேச விசாரணையொன்றை ஆரம்பிக்குமாறு மனித உரிமைகள் பேரவைக்கு ஆலோசனை வழங்கினார்.   

அத்தோடு, வெலிக்கடைச் சிறைச்சாலைப் படுகொலைகள், தண்ணீர் கேட்டுப் போராடிய வெலிவேரிய மக்கள் மீதான தாக்குதல் போன்ற விடயங்களும் அந்த வருட பிரேரணையில் உள்ளடக்கப்பட்டன.  
இவ்வாறு, தமது பிடியை இறுக்கிக் கொண்டு வந்த பேரவை, 2015 ஆம் ஆண்டு புதிய அரசாங்கம் பதவிக்கு வந்ததன் பின்னர், அதைச் சற்றுத் தளர்த்திவிட்டு, தற்போது மீண்டும் சற்று கடும் தொனியில் பேச ஆரம்பித்துள்ளது.   


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .