Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 01, வியாழக்கிழமை
Editorial / 2019 ஓகஸ்ட் 15 , மு.ப. 03:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
இன்று, காஷ்மிர் கொதி நிலையில் உள்ளது. உலகிலுள்ள ஒடுக்கப்பட்ட மக்கள், காஷ்மிரியர்களுக்காகத் தமது ஆதரவை வழங்கியுள்ளார்கள். காஷ்மிரில் நிகழ்த்தப்பட்டது, மிகப்பெரிய அநியாயம் என்பதை ஒடுக்கப்பட்ட, உரிமைகளுக்காகப் போராடும் மக்கள் அறிந்திருக்கிறார்கள்.
உலகெங்கிலுமிருந்து காஷ்மிரியர்களுக்கு ஆதரவாகக் குரல்கள் தொடர்ந்து ஒலிக்கின்றன. ஆனால், உலகில் நீண்ட காலமாக, ஒடுக்கப்பட்ட ஓர் இனமான தமிழ் இனத்தின் அரசியல் பிரதிநிதிகள் என்று தங்களைச் சொல்லிக் கொண்டு, நாடாளுமன்றத்திலும் அதற்கு வெளியிலும் அமர்ந்திருக்கும் தலைமைகள், ஒரு புறமும் தமிழ்த் தேசியத்தை முன்னெடுப்பதாகச் சொல்வோர்; மறுபுறமுமாக, காஷ்மிர் தொடர்பில், வாய் பொத்தி மௌனம் காக்கிறார்கள்.
இந்த மௌனம் சொல்லும் செய்தி கனமானது. இது, தங்கள் இந்திய எஜமானர்களுக்கு எதிராக, எந்தக் கணத்திலும் குரல் கொடுக்கத் தயாராக இல்லை என்பதை, இன்னொரு முறை ஆணித்தரமாக நிறுவுகிறது.
இவர்களது அரசியல், மக்கள் நல அரசியலன்று; அதிகார ஆசைக்கான அரசியல் என்பது புலனாகிறது.
தமிழ்த் தேசியத்தின் பெயரால், வாக்கு வங்கி அரசியலும் உணர்ச்சி அரசியலையும் முன்னெடுக்கும் பிற்போக்குத்தனத்தின் வெளிப்பாடுதான் இந்த மௌனம்.
உலகில் நீண்ட காலமாக, ஒடுக்கப்பட்டு வரும் சமூகங்களில் ஒன்றாக, தமிழ்ச் சமூகம், தொடர்ச்சியாக இருந்து வருகிறது. ஆனால், நமது ஆண்ட பரம்பரைக் கனவுகளில், நாம் ஆழ்ந்து இருக்கிறோம்.
பழைய புண்ணைச் சொறிந்து சொறிந்து, சுகம் காண்பது போல, பழைய கதைகளில் திழைத்துத் திழைத்து, காலத்தைக் கடத்துகிறோம்.
ஒடுக்கப்பட்ட ஒரு சமூகம் என்ற வகையில், நமது நிலை என்ன?
நம்மையொத்த நிலையில் உள்ள, உலகின் பிற மக்கள் யார்?
நாம் யாருடன், நம்மை அடையாளப்படுத்துவது? இந்த மாதிரி, விடயங்களில் சரியான தளத்தை வந்தடைய, நமக்கு உலக நிலைமைகள் பற்றிய உண்மைகள், தெரிய வேண்டும்; நமது வரலாறு பற்றிய உண்மைகள், தெரிய வேண்டும். அவை, ஏன் சொல்லப்படுவதில்லை என்பதை, நாம் கவனமாக ஆராய வேண்டும்.
1950களில், குறிப்பாக, 1961ஆம் ஆண்டு நடைபெற்ற சத்தியாக்கிரகத்தின் தோல்வியை அடுத்து, ஏற்பட்ட திகைப்பின் தொடர்ச்சியாக, நமக்கு முன்னுதாரணமான ஒரு நாடாக, இஸ்ரேல் காட்டப்பட்டது.
இஸ்ரேல் அரங்கேற்றி வந்த கொடுமைகள் பற்றிப் பேச, இஸ்ரேலின் உருவாக்கம் எவ்வளவு அநீதியானது என்று நமக்குச் சொல்லப்பட்டதில்லை. ‘மீண்டும் ஒருமுறை ஆளுகிறார்கள்’ என்ற அந்தப் ‘பொதுமை’, தமக்குப் போதுமானதாகவே தலைவர்களுக்குத் தெரிந்தது.
நமது நிலை, பலஸ்தீனத்தின் அராபியர்களது நிலை போன்றது என்பதையும் அந்த ஒற்றுமை, பல வகைகளிலும் பொருந்தி வருகிறது என்பதையும் நாம் உணரவில்லை.
இன்றும் இஸ்ரேலிய உதாரணம் பற்றி மெச்சப்படுகிறது. இஸ்ரேல் எவ்வாறு பலஸ்தீனத்தில் குடியேற்றங்களை அமைத்ததோ, அதைப்போன்றே இன்று இலங்கையின் வடக்கு, கிழக்கில் நடக்கிறது. ஆனால் நமக்கு, இஸ்ரேல் உதாரணமாகக் காட்டப்படுகிறது.
கொஞ்சக் காலம், பங்களாதேஷ் விடுதலையை வென்று தந்த இந்தியாவே, தமிழீழ விடுதலையை வென்று தரும் என்ற கனவு, ஊட்டி வளர்க்கப்பட்டது. இந்தியாவின் சேவகன் போன்று செயற்பட்ட முஜிபுர் ரஹ்மான், மக்களின் ஆதரவை இழந்து, இராணுவச் சதியில் உயிரிழந்த நாள் வரை, முஜிபுர் தமிழருக்கு முன்னுதாரணமாகக் காட்டப்பட்டு வந்தார். இவ்வாறு, தவறான உதாரணங்களே நமக்குக் காட்டப்பட்டு வந்துள்ளன.
இன்று, ஒடுக்கப்படும் காஷ்மிரியர்களுக்குக் குரல் கொடுக்க வேண்டியது ஈழத் தமிழர்களின் கடமையாகிறது. இதை நாம் செய்தாக வேண்டும்.
ஒடுக்கப்பட்ட சமூகமாகிய நாம், ஆதரவை வேண்டி நிற்கவேண்டியது, ஒடுக்கப்பட்ட சமூகங்களிடமே; ஒடுக்குமுறையாளர்களிடம் அல்ல.
தமது சொந்த மக்களையே ஒடுக்கும், அதிகாரங்களைப் பறிக்கும், வன்முறையை ஏவும் ஒரு நாடு, இன்னொரு நாட்டில், அதே அவலங்களுக்கு உட்படும் ஒரு சமூகத்துக்கு விடுதலையைப் பெற்றுத்தரும் என்று நம்பச் சொல்வது, அயோக்கியத்தனமானது.
ஒடுக்கப்பட்ட சமூகமொன்றின் பிரதிநிதிகள், ஒடுக்குமுறைக்கு எதிராகக் குரல்கொடுக்கத் தவறுவது தற்செயலானதல்ல; அவர்களின் நடத்தை, அவர்களின் நோக்கங்களைப் பிரதிபலிக்கிறது.
‘இந்தியாவை நம்பலாம்’ என்று சொல்லிய, சொல்லி வருகின்ற ஒவ்வொருவரும், காஷ்மிர் விடயத்தில், இந்தியாவின் நடத்தை பற்றி முதலில் வாய்திறக்கட்டும்.
விடுதலை என்பது, அறம் சார்ந்தது என்ற உண்மை, எமக்கு உறைக்கிற வரை, நாம் முன்செல்ல இயலாது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
43 minute ago
1 hours ago
1 hours ago