Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 30, புதன்கிழமை
Editorial / 2019 டிசெம்பர் 26 , மு.ப. 10:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
-இலட்சுமணன்
தமிழர் அரசியல் வரலாற்றில், உரிமைப் போராட்டம் அஹிம்சையில் தொடங்கி, ஆயுதப் போராட்டமாகப் பரிணமிப்பதற்கு அடிப்படைக் காரணங்களில் முதன்மையாக, தமிழ் மாணவர்களின் பல்கலைக்கழகத் தரப்படுத்தல், அபிவிருத்தி, தொழில் வாய்ப்பு போன்றவை காணப்பட்டன. இவை இளைஞர்களிடையே பலத்த விவாதங்களுக்கு உட்பட்டிருந்தன. இவற்றில், சம உரிமை, அத்துமீறிய குடியேற்றங்களை நிறுத்துதல் என்பவையும் முக்கியத்துவம் பெற்றிருந்தன.
இந்த வகையில், பல்கலைக்கழகத் தரப்படுத்தல் என்பது, அன்றைய காலகட்டத்தைப் பொறுத்தவரையில் குறிப்பாக, யாழ்ப்பாண மாவட்ட மாணவர்களின் பல்கலைக்கழக அனுமதியை, மட்டுப்படுத்துவதாக இருந்தது. ஆனால், மறுபுறத்தில், பின்தங்கிய பிரதேச மாணவர்களுக்கு, அது வரப்பிரசாதமாக இருந்தது.
கல்வியில் பின்தங்கிய மாணவர்கள், மாவட்ட அடிப்படையில் பல்கலைக்கழகம் செல்ல வாய்ப்பாக இருந்தது. இவ்வகையில், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, மலையகம் போன்ற பிரதேசங்களைச் சேர்ந்த மாணவர்கள், பல்கலைக்கழகம் செல்லும் வாய்ப்பைப் பெற்றனர் .
இத்திட்டம், சிங்கள மக்கள் பெரும்பான்மையாக வாழும், கல்வியில் பின்தங்கிய மாவட்டங்களை மய்யப்படுத்தி, முன்னெடுக்கப்பட்ட திட்டமாக இருந்தாலும், இதனால் பின்தங்கிய பிரதேச தமிழ் மாணவர்களும் நன்மை பெற்றனர். ஆயினும், திறமை அடிப்படையில் முன்னிலை வகித்த, யாழ்ப்பாண மாவட்ட மாணவர்கள், இதனால் பெருமளவில் பாதிக்கப்பட்டனர். ஆயினும், தமிழ் அரசியல் தலைவர்களால் எதையும் இதற்கு எதிராகச் சாதிக்க முடியவில்லை.
இதனுடைய இரண்டாவது பக்கத்தை நோக்கும்போது, தமிழ்ப் பிரதேசங்களில், தமிழ்த் தேசியம் பேசும் அரசியல் தலைவர்களால், இதுவரை காலமும், முடியுமான, தமிழ்ச் சமூகத்துக்கு ஏதுவான அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்க முடியவில்லை; மாறாக, தமிழ்த் தேசிய அரசியல் சக்திகளுக்கு எதிரான தமிழர்களின் பிரதிநிதிகள் வடக்கிலும் கிழக்கிலும் அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்துள்ளனர்.
இந்த வகையில், உயர்கல்வி நிறுவனங்கள், ஆடைத் தொழிற்சாலைகள், குளங்கள் புனரமைப்பு, பாலங்கள், வீதிகள் அமைத்தல், ஆசிரிய கலாசாலைகள், வைத்தியசாலைகள் போன்றவற்றை நிறுவுதல், தரம் உயர்த்துதல், பிரதேச சபைகளைத் தரம் உயர்த்துதல் எனப் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை, அரசாங்கத்துடன் இணக்க அரசியல் நடத்தும், தமிழ்த் தேசிய அரசியலுக்கு மாற்றான, எதிர்த் தரப்பினரே முன்னெடுத்தனர் .
இத்தகைய அபிவிருத்தி பற்றிய விடயங்களில், முழுமையாகப் பங்கு கொள்ளாததற்கு காரணம் உரிமையா, சலுகையா, என்ற தமிழரது கோசமாகும்.
“எமக்கு, வாழ்தலுக்கான அடிப்படை உரிமை வேண்டும்; அதன்பின்னரே அபிவிருத்தி என்னும் சலுகையைப் பெறுவோம்” எனத் தமிழ் அரசியல் முழக்கங்கள், காலத்துக்குக் காலம் எழுந்து, பாரிய அபிவிருத்தித் திட்டங்களை நிராகரித்திருந்தன. இதனால், தமிழ்ப் பிரதேசங்கள், மேலும் மேலும் நலிவடைந்து சென்றன.
இதனால், அபிவிருத்தி அரசியல், கடந்த 70 ஆண்டுகளாக ஏற்படுத்தாத சலசலப்பை, இப்போது ஏற்படுத்தியுள்ளது. அந்தவகையில்தான், இணக்கப்பாட்டு அரசியல் பற்றிய கருத்தாடல்கள், தமிழ்த் தேசிய அரசியலில் தற்போது முளைவிட்டுள்ளன.
ஆயினும், சலுகையா, உரிமையா கோஷம் அடிப்படைவாதிகளால் முன்னெடுக்கப்பட்டு உள்ளதாகத் தமிழ்த் தேசிய அரசியல் தலைமைகள் கருத்துகளைத் தெரிவிக்கின்ற போதும், உண்மையில் இது, தமிழ்த் தேசிய அரசியல் தலைமைகளின் இயலாமையின் வெளிப்பாட்டை மூடிமறைக்க, அவர்களாலேயே இட்டுக் கட்டப்பட்டுள்ள கருத்தாகும்.
மேலும், தொழில் வாய்ப்புகளைப் பொறுத்தவரையில், தமிழ் இளைஞர்களுக்கு சந்தர்ப்பங்கள் அமையப்பெறாத, மிகமோசமான நிலையை அடைந்த காரணத்தால், படித்த இளைஞர்கள் தொழில்வாய்ப்பின்றிப் பாதிக்கப்பட்டனர். இந்நிலையும் ஆயுதப் போராட்டத்துக்கு மேலும் வலு சேர்த்தது.
இதன் காரணமாகத் தமிழர் விடுதலைப் போராட்டம், மேலும் கூர்மை அடைந்தது எனலாம். அரசியல் உரிமை தொடர்பாகப் போராடுவதும், தொழில்வாய்ப்புகள் மற்றும் சலுகைகளைக் கேட்டும் நாம் எப்படி ஆளும் தரப்பிடம் செல்வது எனத் தமிழ்த் தேசிய அரசியல் நீரோட்டத்தில் நீச்சலடிக்கும் தமிழ் தலைவர்கள், மக்களிடம் கூறிய கதைகள், தமிழ் மக்களிடம் ஒரு வரலாறாகவே உள்ளன.
இந்த வகையில், தமிழர் உரிமைப் போராட்டத்தில் தொழில் வாய்ப்பைப் பெற்றுக் கொடுப்பதற்குப் பதிலாக உரிமை அரசியல் பேசப்பட்டது. தொழில்வாய்ப்பு என்பது, தமிழ் மக்களுக்கு சலுகையாக இத் தலைமைகளால் கூறப்பட்டது . இது மரத்தால் விழுந்தவனை, மாடேறி மிதித்த கதைபோல் தமிழ் மக்களுக்கு இருந்தது.
மேலும், சிங்களக் குடியேற்றத் திட்டங்களைத் தடுத்து நிறுத்துதல், பாரம்பரியமாகத் தமிழ் மக்கள் வாழ்ந்த பிரதேசங்களில், சிங்கள ஆட்சியாளர்களால் அவர்களின் ஆசீர்வாதத்துடன் சிங்கள மக்கள் பெருமளவில் குடியேற்றப்பட்டு ஆக்கிரமிக்கப்பட்டன. இதனால், தமிழர் பிரதேசங்கள் பறிக்கப்பட்டுள்ளன; விலை கொடுத்து வாங்கப்பட்டுள்ளன.
இடப்பெயர்வும் அகதி வாழ்க்கையும் தமிழர் பிரதேசங்கள் ஆக்கிரமிக்கப்படுவதற்கு மேலும் சந்தர்ப்பங்களை அளித்தன. கடந்த 50 ஆண்டுகளில் சிங்கள, முஸ்லிம் குடியேற்றங்கள், தமிழ்ப் பிரதேசங்களை கபளீகரம் செய்ததாகத் தமிழ் அரசியல் தலைமைகள் காலத்துக்கு காலம் கூறி வருவதோடு, இனத்துவ அரசியலில், தமிழ் மக்களையும் உணர்ச்சி உசுப்பேற்றல்களை உருவாக்கி விட்டிருந்தன. ஆயினும், இக்கபளீகரங்களை எந்த அளவுக்குச் செயல் ரீதியாகத் தடுத்து நிறுத்தியுள்ளனர் என்பதைத் தமிழ்த் தலைமைகள் இதயசுத்தியுடன் வெளிப்படுத்துமா.
இது இவ்வாறிருக்க, தமிழ்ப் பிரதேச குடியேற்றங்களை மறுக்கும் சிங்கள அரசியல்வாதிகள், “இது இலங்கை நாடு; சோசலிச ஜனநாயக நாடு; இங்கு உள்ள மக்கள் இலங்கையின் எப்பாகத்திலும் வாழ்வதற்கு அரசியல் ரீதியான உரிமை உண்டு; அந்த வகையில் நாம் வடக்கிலும் கிழக்கிலும் வாழ விரும்புகிறோம்; தமிழ், முஸ்லிம் மக்கள், எங்கள் சிங்களப் பிரதேசங்களில், தென்பகுதிகளில் மத்திய மலைநாடு, மேற்கு பிரதேசங்களில் வாழவில்லையா? இங்கு வாழும் தமிழ், முஸ்லிம் மக்களை நோக்கி, சிங்கள மக்கள், “எங்கள் பிரதேசங்களைத் தமிழர்கள், முஸ்லிம்கள் ஆக்கிரமித்து விட்டார்கள்” என்று கூறுகின்றார்களா? என வினாத் தொடுக்கின்றனர்.
இதிலும் ஒரு நியாயம் இருக்கத்தான் செய்கிறது. இன்றைய அரசியல் சூழலில், தமிழர்களை வடக்கு, கிழக்கு பிரதேசத்துக்குச் செல்லுமாறு கூறினால், அதன் மறு பிரதிபலிப்புக்குத் தமிழ் தலைமைகள் என்ன பதிலைச் சொல்லும் அதற்கு இலகுவான பதில் அவர்களிடம் உண்டு; அதுதான் தமிழ் மக்கள், சிங்களப் பிரதேசங்களிலிருந்து விரட்டியடிப்பு என்ற உணர்ச்சி அறிக்கையோடு, அவர்கள் பணி சலுகையா, உரிமையா என்ற கருத்துடன் முற்றுப்பெறும்.
இந்த வகையில், தமிழர் அரசியல் விடுதலைப் போராட்டத்துக்கு முனைப்புச் சேர்த்த பல்கலைக்கழக தரப்படுத்தலும் சரி, அபிவிருத்தியும் சரி, தொழில் வாய்ப்பும் சரி, குடியேற்றத் திட்டங்களை தடுத்தாலும் சரி, கடந்து 60 ஆண்டுகளுக்கு மேலாகத் தமிழ் இனத்துவ தலைமைகளால், தமிழ்ப் பிரதிநிதித்துவத்தையும் தமிழர் அரசியலையும் தமிழரின் அரசியல் இருப்பையும் காப்பாற்றுவதாகக் கூறி, எந்தத் தேவைகளின் நிமித்தம், தமிழர் உரிமைப் போராட்டங்கள் ஆரம்பித்ததோ, அந்தக் காரணங்களால், அவை உரிமை அல்ல, சலுகை என வாதிட்டு வரும் அறிக்கை அரசியல், இன்று தமிழர் பிரதிநிதித்துவமாக உள்ளது.
இன்று பல்கலைக்கழகத் தரப்படுத்தல் பிரச்சினை அவசியமற்ற ஒன்றாகி விட்டது. குடியேற்றத் திட்டங்கள் கையாலாகாத்தனமாக இன முரண்பாட்டை ஊக்குவிப்பதாக அமைந்துள்ளன. ஆயினும், அடிப்படை தேவைகளான தொழில் வாய்ப்பு, அபிவிருத்தி இவற்றையும் வேண்டாம் என்று தமிழ் தலைமைகள் தொடர்ந்து கூறமுடியாது. இவை சலுகைகள் அல்ல; இவை அனைத்தும் உரிமைதான்.
காலமாற்றம், சர்வதேச ஒழுங்குகள், அரசியல் சூழல் ஆகியவற்றை புரிதலும் மிக முக்கியமானது. மாற்றம் ஒன்றே மாறாதது; மற்றவை அனைத்தும் மாறும்.
எந்தக் கோட்பாடுகளுக்குத் தமிழ் மக்கள் போராடினார்களோ, அவற்றைச் சலுகைகளாகக் காட்டித் தமிழ் அரசியல்வாதிகள் வாழ முனைவது ஆபத்தானது.
இக்கோரிக்கைகள் நான்கையும் தராத அரசியலும் இவற்றை நிர்வகிக்க சுயநிர்ணயம் தேவை எனப் போராட வேண்டிய சூழலில், கிடைத்ததையும் கேட்பதையும் விளக்கம் இன்றி நிராகரிக்கும் உரிமையா, சலுகையா அரசியலில் இறுதியாகத் தொடரப்போகின்றது.
எதிர்வரும் தேர்தலில் தமிழர் ஒன்றுபட வேண்டும் என்ற கோஷமும் தமிழர் பிரதிநிதித்துவம் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற கோஷமும் கிழக்கு அரசியல் வேறு, வடக்கு அரசியல் வேறு என்ற கோஷங்களும் மாற்று இனங்களிடம் தமிழர் பிரதிநிதித்துவத்தைப் பறி கொடுத்து விடுவோம் என்ற கோஷமும் சலுகை அல்ல; உரிமை தான் முக்கியம் என்ற கோஷமும் இணக்க அரசியலா, எதிர்க்கட்சி அரசியலா என்ற கோஷங்களும் சூழலுக்கு ஏற்ப முடிவெடுப்போம் என்ற கோஷங்களும் முளைவிடத் தொடங்கியுள்ளன.
உண்மையில், உரிமை சலுகை பற்றிப் பேசும் தமிழ்த் தலைமைகள், தமிழ்ப் பிரதிநிதிகள், தமிழ் மக்களுக்கு உரிமையை கேட்கிறோம் கேட்டுப் போராட வேண்டும், சலுகை கொடுக்கக் கூடாது என கருத்து தெரிவிப்பது சரி என்றால், நீங்களும் நாடாளுமன்றத்தில் உரிமையை மட்டும் பேசுங்கள்; நாடாளுமன்றச் சலுகைகள் அனைத்தையும் புறக்கணியுங்கள்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
3 hours ago
4 hours ago