R.Tharaniya / 2025 ஒக்டோபர் 23 , பி.ப. 05:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
லக்ஸ்மன்
ஒன்றை மறைப்பதற்காக இன்னொன்றைக் கொண்டுவருதல் அல்லது உருவாக்குதல் என்பது எல்லா விடயங்களிலும் நடக்கின்ற ஒன்றே. மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான அரசாங்கம் அட்சியை ஏற்பதற்கு முன்னர் சொன்னவற்றைச் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு வெளிவருவதற்கும் இதற்கும் சம்பந்தம் இருக்கிறது என்றே கொள்ளலாம்.
இலங்கையில் நடைபெற்ற உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் திடீர் ஆட்சி மாற்றம் ஒன்றுக்கு காரணமாக இருந்தது. அதேபோன்று, இப்போதிருக்கின்ற அரசாங்கம் உருவாவதற்கும் காரணமாக இருந்தது. ஆனால், மீண்டும் ஒரு ஆட்சி மாற்றத்துக்குக் காரணமாக அமையும் என்றும் எதிர்பார்க்கப்பட்டதாக இருந்தாலும், தொடர்கிறது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரிகள் தண்டிக்கப்படுவது கட்டாயம் என்கிற தோரணையில் கர்தினால் மல்க்கம் ரஞ்சித் ஆண்டகை அரசுக்கு மிரட்டல்களை விடுத்துக் கொண்டிருந்தார். ஆனால், அவர் இப்போது சத்தமின்றி இருக்கிறார்.
சூத்திரதாரியைக் கைது செய்வோம். தண்டனை வழங்குவோம் என்று கூறிய ஜனாதிபதியும் அரசாங்கமும் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும்
முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சரும், முன்னாள் இராஜாங்க அமைச்சர், பாராளுமன்ற உறுப்பினருமான பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தனை விசாரணைக்குட்படுத்தியது.
பின்னர் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் கலாநிதி ரவீந்திரநாத்தின் கொலையுடன் சம்பந்தப்படுத்தப்பட்டு கைது செய்யப்பட்டிருந்தார்.இருந்தாலும், அவரது கைதின் பின்னர் அவ்விடயம் எதுவுமற்றதாக அமைதியடைந்து விட்டதாகவே தெரிகிறது.
பிரித்தானிய சுற்றுலாப் பயணிகள் 8 பேர் உட்பட 275க்கும் அதிகமானவர்கள் கொல்லப்படுவதற்குக் காரணமாக இருந்த உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் ராஜபக்ஷக்களுக்கு விசுவாசமாக செயற்பட்டவர்கள், இருந்ததாக குற்றச்சாட்டுக்கள் குண்டுத் தாக்குதல் நடைபெற்ற காலம் முதலே வெளிவந்திருந்தன.
பிரித்தானியாவின் செனல் 4 கூட இராஜாங்க அமைச்சராக
இருந்த பிள்ளையான் என அழைக்கப்படும் சி.சந்திரகாந்தன் உள்ளிட்டோரின் சம்பந்தம் குறித்து அவருடைய செயலாளராக இருந்த அசாத் மௌலானாவின் தகவல்களை உள்ளடக்கியதாக ஆவணப்படம் வெளியிட்டிருந்தது.
சூத்திரதாரி, சம்பந்தப்பட்டவர்கள், ஒத்தாசையாக இருந்தவர்கள், குற்றவாளிகள், தகவல் வழங்கியவர்கள் என இக் குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் ஆயிரக்கணக்கானவர்கள் இருக்கத்தான் செய்கின்றனர்.
ஆனால், இதுவரையில் உண்மையானவர்கள் என்று யாரும் தண்டனைக்குட்படுத்தப்படவில்லை. ராஜபக்ஷக்களை மீண்டும் ஆட்சியில் அமர்த்துவதற்காக, இஸ்லாமிய அரசு அமைப்புடன் தொடர்புடைய குண்டுதாரிகள் இத்தாக்குதல்களை மேற்கொண்டனர் என்பதுதான் இப்போது வரையில் பொதுவான கருத்தாக இருந்து வருகிறது.
இருந்தாலும், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் ராஜபக்ஷக்களின் திட்டமே. இலங்கை என்ன சொல்கிறது? என்ற செனல் 4 இன் கேள்வியுடனேயே
இருக்கும் விடயமாக உயிர்த்த ஞாயிறு விவகாரம் முடிவின்றி இருக்கிறது.
உயிர்த்த ஞாயிறுத் தற்கொலைத் தாக்குதல்கள் நடைபெற்ற பின்னர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பொலிஸ் மா அதிபராக இருந்த பூஜித ஜயசுந்தர உள்ளிட்டோர் நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டிருந்தனர்.
தேசிய தௌகீத் ஜமாத் அமைப்பு சேர்ந்து பலரும் கைது செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டனர். இந்த அமைப்பினருக்கு இராணுவப் புலனாய்வுப் பிரிவினருடன் தொடர்பிருந்ததாகவும் குற்றஞ்சாட்டப்பட்டது.
சஹ்ரானின் தாக்குதல் தொடர்பாக முன்கூட்டியே புலனாய்வுப் பிரிவினர் அறிந்திருந்தும், தடுப்பதற்குரிய கால அவகாசம் இருந்தும் ஏன் முன்கூட்டியே தடுக்கப்படவில்லை? என்று குற்றச்சாட்டுக்கள் அடுக்கப்பட்டன. ஆனால், பின்னர் நிலைமையில் மாற்றம் ஏற்பட்டது.
கடந்த வாரத்தில், பாராளுமன்ற உயர் பதவிகள் தொடர்பான குழுவில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும் ஓய்வுபெற்ற சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபருமான ரவி செனிவிரத்ன உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் இந்தியா இருப்பதாகத் தெரிவித்ததாக ஒரு சலசலப்பு ஏற்பட்டது.
அதன் பின்னர் பாராளுமன்றத்தில் கடும் வாதப்பிரதிவாதங்கள் நிகழ்ந்து முடிந்திருந்தன. பாராளுமன்றத்தில் இவ்விடயம் குறித்துப் பேசிய
வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலின் பின்னணியில் இந்தியா இருப்பதாகவும், இந்தியாவே பிரதான சூத்திரதாரி என்றும் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனிவிரத்ன எவ்விடத்திலும் கூறவில்லை.
போலியான விடயங்களை சமூக மயப்படுத்துபவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்திருந்தார். ஆனால், எதற்காக இந்தியாவின் பெயர் இதற்குள் கொண்டுவரப்பட்டது என்பது பற்றியோ, இத் தகவல் எவ்வாறு வெளியே வந்தது என்பது பற்றியோ அவர் கருத்து வெளியிடவில்லை.
இது ஆராயப்பட வேண்டியதே. ஆனால், இத்தகவல் வெளியானதைத் தொடர்ந்து பாராளுமன்றத்தில் விவாதம் நடைபெற்றது. பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும் ஓய்வுபெற்ற சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபருமான ரவி செனிவிரத்ன அத் தகவலை மறுத்து பொலிஸ் தலைமையகத்தினால் ஊடகங்களுக்குச் செய்திகள் அனுப்பப்பட்டிருந்தன.
அத்துடன், அது காணாமல்போனது. அதே நேரத்தில், உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் விவகாரத்தில் அரச புலனாய்வு சேவையின் முன்னாள் தலைவர் நிலந்த ஜயவர்தனவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு இத்தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழு அறிவித்திருந்தபோதிலும், பொலிஸ் மா அதிபர் மற்றும் சட்ட மா அதிபர் ஆகியோர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.
எனவே, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரும் ரீட் மனு ஒன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை சமூக மற்றும் சமய மையத்தின் பணிப்பாளர் அருட்தந்தை ரொஹான் சில்வா மற்றும் தாக்குதலுக்கு ஆளானதாகக் கூறப்படும் சுராச் நிலங்க ஆகியோர் தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனுவை கடந்த 14ஆம் திகதி பரிசீலித்த மேன் முறையீட்டு நீதிமன்றின்மாயாதுன்னே கொரயா மற்றும் மஹேன் கோபல்லாவ ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வு
இந்த ரிட் மனுவை எதிர்வரும் 2026ஆம் ஆண்டு மார்ச் 24ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளத் தீர்மானித்துள்ளது.
உயிர்த்த ஞாயிறு தின பயங்கரவாதத் தாக்குதல் 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் நடைபெற்று இதுவரையில் ஆறு வருடங்கள் கடந்திருக்கின்றன. ஆனால், அதற்குள் மூன்று ஜனாதிபதிகள் பதவிக்கு வந்திருக்கின்றனர்.
ஒருவர் தாக்குதல் நடத்தப்பட்டமையைக் காரணம் காட்டி ஆட்சிக்கு வந்தவர். அடுத்தவர் மக்கள் போராட்டத்தின் காரணமாக அந்த ஜனாதிபதி நாட்டை விட்டுத் தப்பிச் சென்ற பின்னர் ஆட்சிக்கு வந்தவர். தற்போதிருப்பவர் தாக்குதலை நடத்துவதற்குக் காரணமானவர்களைப் பாதுகாத்தார் எனப் பல குற்றச்சாட்டுக்களை அடுக்கித் தான் சூத்திரதாரிகளுக்குத் தண்டனை வழங்குவேன் என்று கூறி ஆட்சிக்கு வந்தவர்.
எவ்வாறானாலும், வாய் வார்த்தைகளை மாத்திரமே எல்லோராலும் அடுக்கி விட முடியும். செயலில் நடத்திமுடிப்பதென்பது சாதாரணமானதல்ல என்பதுதான் இப்போது நிரூபிக்கப்பட்டுவருகிறது. போதைப்பொருள் ஒழிப்பில் ஈடுபட்டுள்ள அரசாங்கம் நேபாளம் சென்று குற்றவாளிகளைக் கைது செய்து வந்துள்ளதாக பெருமைப்பட்டுக் கொள்கிறது.
ஆனால், உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் சூத்திரதாரிகளைக் கண்டுபிடிக்க, அறிவிக்க முடியாத நிலையிலேயே இருந்து வருகிறது.
விசாரணைக்குழு அமைக்கப்பட்டு விசாரணைகள் நடைபெற்றாலும்,
கர்தினால் மல்கம்ரஞ்சித் ஆண்டகை ஆணைக்குழுவின் விசாரணையில் திருப்தியில்லை என்ற நிலைப்பாட்டிலேயே இருந்தார்.
சர்வதேச விசாரணையை நடத்த வேண்டும் என்றுகோரிவந்தார். அன்றைய அரசாங்கத்தின் செயற்பாட்டில் நம்பிக்கையில்லாமலேயே அவர் இந்த நிலைப்பாட்டுடன் இருந்து வந்தார். புதிய அரசாங்கத்தினை உருவாக்குவதில் பலரும் பங்கு அவருக்கும் இருக்கிறது என்றே கொள்ளலாம்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதித் தேர்தலை அறிவித்த பின்னர் தேசிய மக்கள் சக்தி முன்வைத்த தேர்தல் வாக்குறுதிகளை நம்பி கர்தினால் மல்கம் ரஞ்சித் மற்றும் பெருந்தொகையானவர்கள் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரிகள் கண்டுபிடிக்கப்பட்டு விடுவார்கள்
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் விடயத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்ற நம்பிக்கையும் காணப்பட்டது.
ஜனாதிபதியாக அனுரகுமார திசாநாயக்க பதவியேற்ற பின்னர் நீர்கொழும்பு சென்று நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பாதிக்கப்பட்டவர்களையும் சந்தித்தார். இருந்தாலும், எதுவுமே நடைபெறாது நீண்டுகொண்டே செல்வதானது
ஏன், எதனால் என்பது வெளியாகவில்லை.
ஆரம்பத்திலிருந்து பல்வேறு வினாக்களுடனேயே இருக்கும் விடயம் இப்போதும்
தொடர்கிறது என்றால், அரசின் இயலாமையா, பாதுகாப்பு, விசாரணைத் தரப்பின் குறைபாடா? என்றும் கேள்வியை எழுப்புகிறது. அந்தவகையில், வினாக்களுக்கான பதில்கள் தற்போதைய அரசிடம் இருந்து கிடைக்குமா? என்பதும் கேள்விதான்.
4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago