Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 03, சனிக்கிழமை
Gavitha / 2019 மே 20 , மு.ப. 06:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
(மறைந்துகொண்டு பார்ப்பதில் அலாதிப் பிரியம்)
காலம் மாறுகிறது!, ஒவ்வொரு நொடிப் பொழுதுகளிலும் மாறுகிறது! மாறக்கூடிய உயிர்கள் மட்டுமே வாழக்கூடிய தகுதி பெறும். இது இயற்கையின் விதி.
அபரிமித வளர்ச்சி பெற்றுள்ள தொடர்பாடல் துறை, சமிக்ஞை அடிப்படையில்தான் ஒரு காலத்தில் இடம்பெற்றது. இத்துறை அடைந்திருக்கும் உச்சக் கட்ட வளர்ச்சியின் பயனாக, உலகமே இன்று ஒரு பூகோளக் கிராமமாக மாறிவிட்டது.
வெறுப்புணர்வுக் கலாசாரத்தில் நாம் வாழ்ந்து வருகிறோம். இதில் சோகமான அம்சம் என்னவென்றால், நம் குழந்தைகள் இந்தக் கலாசாரத்தில்தான் வளர்ந்து வருகிறார்கள்.
`குழந்தைகளுக்கு நிகராக பெற்றோர்களும் சமூக வலைத்தளங்களுக்கு அடிமையாகியுள்ளனர். இது தங்களுடைய வாழ்க்கையில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது குறித்து அவர்கள் யோசிக்க வேண்டும்.
இன்றைய காலத்தில் இணையத்தில் பரீட்சயமான பெரியவர்கள் முதல், கணினியைக் கையாளத்தெரிந்த சிறு பிள்ளைகள் வரை ஒரு சேரத் தற்பெருமை அடித்துக்கொள்ளும் களம் தான் இந்தச் சமூக வலைத்தளங்கள்.
உலகையே மாற்றியமைக்கும் ஒரு முக்கிய பொறியாக, சமூக வலைதளங்கள் மாறி வருகின்றன. இந்தச் சமூக வலைதளங்கள், புதிய கொள்கைகள், சமூகப் போக்குகள், யோசனைகள், பல விதிமுறைகள் என, ஒவ்வோர் ஆண்டுக்கும் ஒவ்வொன்றாக, மக்கள் மத்தியில் அறிமுகப்படுத்திக்கொண்டு வருகின்றது. பெரும்பாலான சந்தர்ப்பங்களில், மாற்றங்கள், திடீரென அல்லது எதிர்பாராத விதமாக வருகின்றன. அது படிப்படியாகவும் ஒப்பீட்டளவில் யூகிக்கமுடியாதவையாக மாறி வருகின்றது.
இந்நிலையில், 4/21 தற்கொலைக்குண்டுத் தாக்குதலுக்குப் பின்னர், இலங்கையில் சமூக வலைத்தளங்கள், தற்காலிகமாக அவ்வப்போது முடக்கப்பட்டன. இனங்களுக்கிடையில் குரோதங்களை ஏற்படுத்தும் போலியான செய்திகள் பரவுவதைத் தடுக்கும் வகையிலேயே தற்காலிகமாகத் தடைவிதிக்கப்பட்டன. இந்தத் தீர்மானம், நாட்டிலுள்ள 80 சதவீத பிரஜைகள் மத்தியில் வரவேற்கப்படாத விடயமாகவே கருதப்பட்டது.
இலங்கையில், சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டமை முதல் தடவையல்ல. கண்டி - தெல்தெனிய, திகன பகுதியில், 2018ஆம் ஆண்டு மார்ச் மாதம் 5ஆம் திகதி, இரண்டு குழுவினரின் நடவடிக்கை காரணமாக, முஸ்லிம் பள்ளிவாசல்கள், வீடுகள், வர்த்தக நிலையங்கள் தாக்குதலுக்குள்ளானபோது, வன்முறை தொடர்பான போலியான பதிவுகள் வெளியாவதைத் தடுப்பதற்கு, மார்ச் 7ஆம் திகதி முதல் 15ஆம் திகதி வரை சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டன.
அப்போதிலிருந்தே, உலகளாவிய ரீதியிலான இலங்கை மீதான கண்காணிப்பும் தீவிரமடைந்திருந்தது. கடந்த ஆண்டு நவம்பர் மாதமும், மியன்மாரில் இடம்பெற்ற இன வன்முறைக்கு, தனது சேவை பயன்படுத்தப்பட்டு வந்ததாக, பேஸ்புக் நிறுவனம் ஒப்புக்கொண்டிருந்தது. அதையடுத்து, நியூசிலாந்து, க்ரைஸ்சேர்ச் பகுதியில், முஸ்லிம் பள்ளிகளில் தொழுகையில் இருந்தவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவம் அடங்கிய காணொளி, யூடியூப், பேஸ்புக் உள்ளிட்ட பிரபல சமூக வலைதளங்கள் ஊடாகப் பரவலாகப் பகிரப்பட்டு வந்தன.
ஆனால், அந்நாடு, சமூக வலைத்தளங்களைத் தடை செய்திருக்கவில்லை. எனினும், அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகள், சமூக வலைத்தளங்களை வைத்திருக்கும் நிறுவனங்கள் கடுமையான கட்டுப்பாடுகளைக் கொண்டுவரவேண்டும் என்று அழைப்பு விடுத்திருந்தன.
சமூக வலைத்தளங்கள் மீதான இலங்கையின் தற்காலிகத் தடையானது தற்போது முக்கியமான பேசுபொருளாகிவிட்டது. சமூக வலைத்தளங்கள் மீது தடை விதிக்கப்பட்ட போது, தற்காலிகத் தடை இன்றாவது நீங்குமா என்றே, நாட்டிலுள்ள பலர் எதிர்பார்த்துக்கொண்டு இருந்தனரே தவிர, இதன் முக்கியத்துவம், நல்லது, கெட்டது குறித்து யாரும் சிந்திக்கவில்லை.
இனக்கலவரத்தைத் தூண்டும் அளவுக்கு போலியான செய்திகளைப் சமூக வலைத்தளங்கள் மூலம் பரப்பினார்கள் என்ற குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்படுவோருக்கு, 10 வருட சிறைத் தண்டனை வழங்கப்படும் என்று, இராணுவ தரப்பில் அறிவிக்கப்பட்டும், போலியான சம்பவங்களை பரப்பிய 300க்கும் மேற்பட்ட பேஸ்புக் கணக்குகள் முடக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்ட பின்னரும் கூட, இணையம் என்றெதாரு விடயத்தால், நல்ல மற்றும் மோசமான விளைவுகளை உருவாக்க முடியும் என்பதற்கு, சமீபத்தில் சிலாபத்தில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் ஒரு நல்ல எடுத்துக்காட்டாகும்.
சமூக வலைத்தளம் என்பது, உலகில் எந்த நபர் எப்பகுதியில் இருந்தாலும், உலகளாவிய ரீதியில் தகவல் வலைப்பின்னலின் மூலம், நம்பமுடியாத அளவுக்கு தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடிகின்றது. ஆனால், இந்த வலைத்தளங்கள் இல்லை என்றால், உலகளாவிய சமூக இணைப்பு என்பது, இக்காலத்தில் சாத்தியமற்றதாகிவிடுகின்றது அல்லவா?
சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தி, போலியான செய்திகளைத் தெரிந்தோ தெரியாமலோ அல்லது விளையாட்டுக்காகவோ பரப்புவதன் மூலம் ஜனநாயகத்துக்கும் அது சார்ந்த அமைப்புகளுக்கும் சிக்கல் ஏற்படுகின்றன. அது மாத்திரமல்லாது, வளர்ந்து வரும் டிஜிட்டல் மீடியாவும் குறைமதிப்புக்கு உள்ளாக்கப்படுகின்றது. என்னதான் தடை விதித்தாலும் இதைக் கட்டுப்படுத்திக்கொள்ள முடியவில்லை.
ஒரு திறந்த ஜனநாயக அமைப்பு முறையைத் தக்கவைத்துக்கொள்வதற்காக, இந்தச் சிக்கல்களைத் தீர்ப்பதற்கு, அரசாங்கம் சமூக வலைத்தள வழங்குநர்கள் மற்றும் நுகர்வோருடன் இணைந்து செயற்படுதல், முக்கியமானதாகக் கருதப்படுகின்றது. அவ்வாறாயின், இலங்கைப் பிரஜைகள் என்ற வகையில், வெளிநாட்டு நிறுவனங்களால், நம் நாட்டுக்கு வழங்கப்படும் இந்தச் சமூக வலைதளங்களை எந்த முறையில் பயன்படுத்தவேண்டும் என்ற கடமை, நமக்கும் உண்டு அல்லவா?
தற்போது, அடிக்கடி முடக்கப்பட்டு வரும் பேஸ்புக், வைபர், வட்ஸ்ஆப், இன்ஸ்டகிராம் உள்ளிட்ட பல சமூக வலைத்தளங்களுடன், இம்முறை டுவிட்டரும் உள்ளடக்கப்பட்டிருந்தது. இலங்கையில் முதன் முறையாகவே, டுவிட்டர் வலைத்தளம் முடக்கப்பட்டிருந்தது. ஆனால், சமூகவலைத்தளம் முடக்கப்பட்ட அடுத்த ஒரு சில நேரத்திலேயே, வெளிநாட்டு இணைய முகவரிகளைப் பயன்படுத்தி, சமூக வலைத்தளங்களுக்குச் சென்றமை, கூகுள் ஊடாக, VPN (Virtual Private Network) என்ற செயலியை, இலங்கையிலுள்ள 80 சதவீதமான சமூக வலைதளப் பாவனையாளர்கள் பதிவிறக்கம் செய்திருந்தனர்.
சமூக வலைதளங்கள் முடக்கப்பட்ட பின்னர், VPN என்ற வார்த்தை, கூகுளில் மிகவும் பிரபலமாகப் பயணித்துள்ளது. வன்முறைகள் ஏற்படக்கூடாது என்று, அரசாங்கத்தால் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்குப் பின்னரும் கூட, இந்தச் செயலியைப் பயன்படுத்தி, பல இடங்களிலும் போலியான தகவல்கள் பகிரப்பட்டிருந்த என்ற செய்திகள் சமீபகாலமாக வெளியாகிக்கொண்டு வருகின்றன.
மக்களுக்குள், குறைவான தகவல்களைப் பெறும் பிரிவினர், இவ்வாறு வெளியாகும் போலியான செய்திகளையும் அதிரடிச் செய்திகளையும் அதிகம் நம்புகின்றனர். இதை நம்பும் சமூதாயத்தைச் சார்ந்தவர்கள், அவர்களுக்குத் தெரியாமலேயே பாதிக்கப்படுகின்றனர் என்பதை, அவர்கள் புரிந்து வைத்திருப்பதில்லை.
எனவே, எந்தவொரு செய்தியையும் சமூக வலைத்தளம் மூலம் வழங்கும் நபருக்கோ அல்லது நிறுவனமொன்றுக்கோ, அந்தச் செய்தியை நம்பத்தகுந்த ஆதாரங்களுடன் சுயாதீனமாக வழங்கவும் கடமை உண்டு. அரசியல் ரீதியாக பாகுபாடு காட்ட விரும்பும் ஒரு சில நபர்களால், சமூக வலைத்தளங்களில் பரவும் போலிச் செய்திகள் மூலம், ஊடக சுதந்திரமும் நிராகரிக்கப்படுவதோடு, அவை குறைமதிப்புக்குள்ளாக்கப்படுகின்றது என்பதை மறுக்க முடியாது. இது, ஊடகங்கள் மீது பொதுமக்கள் நம்பிக்கை இழக்கும் ஒரு கட்டமாக உருவெடுப்பதுடன், ஜனநாயகத்துக்கும் ஓர் ஆபத்தானதாவே அமைந்து விடுகின்றது.
பத்திரிகை மற்றும் ஊடகத் தணிக்கை, ஊடகவியலாளர்கள் படுகொலை, வலைத்தளங்கள் தடை செய்யப்படுதல் போன்றவற்றில் இலங்கை நீண்ட வரலாற்றைக்கொண்டுள்ளது. யுத்தம் முடிவடைந்து 10 வருடகாலங்கள் ஆகின்ற நிலையில், சமீபத்திய இந்தத் தாக்குதலானது, இளைஞர்களது ஆதங்கங்களை, சமூக வலைதளங்களில் கொட்டித்தீர்ப்பதற்கு ஒரு வாய்ப்பை ஏற்படுத்தியும் உள்ளது.
இந்தச் சமூக வலைத்தளங்கள், அரசியலையே மாற்றியமைக்கும் என்பதற்கு கடந்த ஜனாதிபதித் தேர்தல் நல்லதோர் உதாரணமாகும். இதேவேளை, சூழ்ச்சியின் ஊடாக பதவியிறக்கப்பட்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை, அப்பதவியில் மீண்டும் அமரவைப்பதற்கு எடுக்கப்பட்ட முயற்சிகளின் போது, நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற அனைத்துக் கலவரங்களும், பேஸ்புக்கிலும் யூடியூபிலும், சில நாடாளுமன்ற உறுப்பினர்களாலேயே பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தமை நாம் அறிந்ததே.
இவையனைத்தும் ஒருபுறமிருக்க, சமூக வலைத்தளங்களை மாத்திரம் சொந்த வியாபாரமாகக்கொண்டுள்ள பல நிறுவனங்கள், இந்த ஒரு மாத காலத்துக்குள் நட்டத்தை எதிர்நோக்கியிருந்ததுடன், இது, இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தியிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்களின் முடக்கத்துக்குப் பின்னர், இணையத்தள பாவனையாளர்களின் இணையப் பாவனை குறைவடைந்த பின்னரும் கூட, தொலைத்தொடர்பாடல் சேவைகளை வழங்கிய நிறுவனங்களின் வருவாயும் குறைவடைந்தது.
21ஆம் திகதி இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல், இலங்கையின் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த ஒரு சிலரால் முன்னெடுக்கப்பட்டிருந்தாலும், தற்போது ஒட்டுமொத்தச் சமூகமும் சந்தேகப் பார்வைக்குள் தள்ளப்பட்டுள்ளது. அவ்வாறே, இந்தச் சமூகவலைத்தளங்கைளப் பயன்படுத்தி, ஒரு சிலரால் முன்னெடுக்கப்படும் போலிப் பிரசாரம் மற்றும் போலிச் செய்திகளைப் பரப்புதல் போன்ற செயற்பாடுகள் காரணமாக, முழு நாடுமே, ஒரு சில கணம் ஸ்தம்பித்துப் போய்விடுகின்றது அல்லவா?. எனவே, ஒரு சிலர் செய்யும் தவறுகளால், முழுச் சமூதாயமும் ஒரு வட்டத்துக்குள் அடக்கப்பட வேண்டுமா இல்லையா என்பதை, நாட்டுப் பிரஜைகளே கவனத்தில் கொள்ளவேண்டும் என்று கூறினால் அது மிகையாகாது.
இதில் நட்புறவுகள் மேம்படுத்தல், தகவல் பரிமாற்றங்கள் போன்ற சில பயன்கள் இருந்தாலும், மேலோங்கி நிற்பது அவரவர்களின் தற்பெருமைகளும் வக்கிர எண்ணங்களுமே! இன்னும், சில இடங்களில் தூண்டி விடுதல் மிகமுக்கியமான அங்கமாய் உள்ளது. அதனால், பாரிய அழிவுகளும் இடம்பெற்றுள்ளன.
பக்கத்து வீட்டில் அல்லது தமக்கு அருகில் என்ன நடக்கின்றது என்பதைக் கூட அவர்கள் திரும்பிப் பார்க்க முடியாத அளவுக்கு சமூக வலைத்தளங்களில் பலரும் மூழ்கிப்போய் உள்ளனர். அது அவர்களின், கண்பார்வைக்கும், உடல் உள ஆரோக்கியத்துக்கும் ஏற்றதல்ல.
சமூக ஊடகங்களின் தீமையை மட்டுமே கண்டு ஒதுங்கக் கூடாது. எந்த ஒரு புதுமையிலும், நாணயத்தின் இருபக்கம் போல, நன்மை, தீமை இரண்டும் சேர்ந்தே இருக்கும். பாலையும் நீரையும் பிரித்தறியும் அன்னமாக மாறுங்கள். சமூக ஊடகங்கள் வரமா? சாபமா? என்று கேட்டால், தீர்க்காய்வாளர் போல, சமூக ஊடகத்தைப் பயன்படுத்தும் போது நிச்சயம் அது வரமே.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
2 hours ago
4 hours ago
4 hours ago