2025 மே 16, வெள்ளிக்கிழமை

சீனாவிடம் வாய்க்குமா ரணிலின் திட்டம்?

Thipaan   / 2016 ஏப்ரல் 07 , பி.ப. 09:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, கடந்த புதன்கிழமை சீனாவுக்கான மூன்று நாள் உத்தியோகபூர்வ பயணத்தை ஆரம்பித்திருக்கிறார். இந்தப் பயணத்தின் உச்சக்கட்டமாக, சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங்கை, பெய்ஜிங்கில் இன்று சந்தித்துப் பேச்சுக்களை நடத்தவிருக்கிறார்.

மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியில் இருந்த போது, அவருக்கும் சீனாவுக்கும் இடையில் நெருக்கம் அதிகமாக இருந்தாலும் மஹிந்த ராஜபக்ஷ, பலமுறை சீனாவுக்கான பயணங்களை மேற்கொண்டிருந்தாலும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் இந்தப் பயணம், கூடுதல் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது.

இலங்கையில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் இடம்பெற்ற ஆட்சிமாற்றத்துக்குப் பின்னர், சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையில் ஏற்பட்ட ஓர் இடைவெளியை நிரப்பும் ஆர்வத்தில், இருநாடுகளும் இருப்பது தான், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் இந்தப் பயணம் கூடுதல் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியதற்கு முக்கிய காரணம். கிட்டத்தட்ட 16 மாத காலத்தில், இரண்டு நாடுகளுமே தமக்கிடையில் ஏற்பட்டுள்ள இடைவெளியின் பாதகத்தன்மையை அனுபவித்திருக்கின்றன என்றே கூறலாம். இதனால் தான், மீண்டும் உறவுகளை வலுப்படுத்துவதில் இரு நாடுகளும் கூடுதல் அக்கறை கொண்டிருக்கின்றன.

ஆறு அமைச்சர்கள் சகிதம், சீனா சென்றிருக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு, இது முக்கியமானதொரு பயணம். அவர் கடந்த ஜனவரி மாதம் பிரதமராக நியமிக்கப்பட்ட பின்னர், மேற்கொள்ளும் சவாலான பயணம் என்று கூட இதனைக் குறிப்பிடலாம். இதற்கு முன்னர் அவர் பயணம் மேற்கொண்ட நாடுகளுடன், இந்தளவுக்கு இடைவெளிகள் இருந்ததில்லை. எனவே, சீனாவுடனான இந்த இடைவெளியை நீக்க வேண்டிய பொறுப்புமிக்க பயணமாகவே இது அமைந்திருக்கிறது.

அதுவும், இலங்கை பொருளாதார ரீதியாக நெருக்கடிகளைச் சந்தித்துக் கொண்டிருக்கும் ஒரு சூழலில், எதிர்கால பொருளாதார வாய்ப்புகள் குறித்த நம்பிக்கையை ஏற்படுத்தும் பொறுப்பு அவரிடம் உள்ளது. இப்போதைய அரசாங்கத்தில் உள்ளவர்கள், முன்னர் எதிர்க்கட்சியில் இருந்த போதும் ஆட்சிக்கு வந்த புதிதிலும், சீனாவின் திட்டங்களை விமர்சித்து வந்தனர்.

ஹம்பாந்தோட்டைத் துறைமுகம், மத்தல விமான நிலையம் என்பனவற்றை வெள்ளை யானை என்று வர்ணித்தவர்கள் தான், இப்போது அந்தத் திட்டங்களைச் செயற்படுத்தும் புதிய வாய்ப்புகளைத் தேடத் தொடங்கியுள்ளனர். சீனாவின் திட்டங்களினால் தான், இலங்கை கடன்சுமைக்குள் தள்ளப்பட்டதாகக் குற்றஞ்சாட்டிய தற்போதைய அரசாங்கம், வேறு வழியின்றி மீண்டும் சீனாவிடமே தஞ்சமடைய வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக்காலத்தில், சீனாவின் முதலீட்டுத் திட்டங்களுக்கு கூடுதல் வட்டியுடன் கடன்கள் வழங்கப்பட்டன. அவற்றைத் திருப்பிச் செலுத்துவதில் அரசாங்கம் கடுமையான நெருக்கடிகளை எதிர்கொண்டிருக்கிறது.

இதனைக் கடுமையாக விமர்சித்த தற்போதைய அரசாங்கம், மீண்டும் பொருளாதாரத்தை தூக்கி நிறுத்துவதற்கு, சீனாவின் தயவை நாட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. சீனா, உலகில் தவிர்க்க முடியாத பொருளாதார சக்தியாக வலுப்பெற்றிருப்பது ஒரு காரணம். இன்றைய நிலையில், சீனாவைத் தவிர வேறெந்த நாடும் பெரும் முதலீடுகளை இலங்கையில் மேற்கொள்ளத் தயாரில்லை என்பது இன்னொரு காரணம்.

சீனாவின் திட்டங்கள் இடைநிறுத்தப்பட்டதால், பெருமளவில் பணப்புழக்கம் குறைந்து போனது. இது, தாம் பொருளாதார நெருக்கடி ஒன்றை எதிர்கொள்வது போன்ற தோற்றத்தை மக்கள் மத்தியில் தோற்றுவித்திருப்பது மற்றொரு காரணம். பொருளாதார ரீதியாக வளர்ச்சி பெறாவிடினும், வெளிநாட்டு முதலீட்டுத் திட்டங்கள் முன்னெடுக்கப்படும் போது, உள்ளூர் மக்களிடையே வேலைவாய்ப்பு, மற்றும் ஏனைய வடிவங்களிலான பணப்புழக்கம் அதிகரிக்கும்.

எல்லாத் திட்டங்களும் இடைநிறுத்தப்பட்டதால், உள்ளூர் மக்களில் அநேகமானோரிடம் பணப்புழக்கம் குறைந்து, ஒரு வெறுமையான நிலை தோன்றியதையும் மறுக்க முடியாது. இந்த வெறுமை நிலைக்கு முடிவுகாண வேண்டுமாக இருந்தால், பாரிய முதலீட்டுத் திட்டங்கள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட வேண்டும். சீனாவைக் கைவிட்டால், அது சாத்தியமில்லை என்று உணர்ந்த நிலையில் தான், எப்படியாவது அந்த நாட்டிடம் இருந்து புதிய முதலீடுகளை பெற்றுக் கொள்வது என்ற உறுதியுடன் பெய்ஜிங் சென்றிருக்கிறார் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க.

மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் காலத்தில், சீனாவுடன் இருந்த நெருக்கத்தை விமர்சித்தவர், சீனாவின் முதலீடுகளை விமர்சித்தவர் இப்போது, அது சீனாவிடம் கையேந்துவது பொருத்தமா என்றெல்லாம் கேள்விகள் எழுப்புகின்றனர். முன்னர் சீனாவின் திட்டங்களை எதிர்த்த ரணில் விக்கிரமசிங்க இப்போது, சீனாவை நாடுவது குறித்து டுவிட்டரில் பதிவு ஒன்றை இட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, அரசாங்கத்தின் சீனா பற்றிய நிலைப்பாடு என்ன என்று கேள்வி எழுப்பியிருந்தார். ஆனால், மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் சீனா பற்றிய நிலைப்பாட்டுக்கும், தற்போதைய அரசின் சீனா பற்றிய நிலைப்பாட்டுக்கும் ஒரு முக்கிய வேறுபாடு இருப்பதை மறுக்க முடியாது. மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் காலத்தில் இலங்கையில் முன்னெடுக்கப்பட்ட சீனாவின் திட்டங்கள் அனைத்திலும், ரிஸ்க் எடுத்துக் கொண்டது இலங்கை அரசாங்கமே தவிர சீனா அல்ல.

இலங்கை கேட்கும் நிதி அனைத்தையும் எந்த நிபந்தனையும் இன்றி சீனா கொடுத்துக் கொண்டிருந்தது. மஹிந்த ராஜபக்ஷவே முன்னர் இதனைப் பற்றிப் பெருமையாக கூறியிருந்தார். எந்தக் கேள்வியும் இன்றி நிபந்தனை விதிக்காமல் சீனா நிதியைக் கொடுக்கின்ற போது, அதனைச் சார்ந்து செயற்படுவதில் என்ன தவறு என்று மஹிந்த ராஜபக்ஷ கேட்டிருந்தார். சீனா அவ்வாறு நிதியைக் கொடுத்தது உண்மை. அந்த நிதி வருமானத்தை ஈட்டித் தரும் துறைகளில் முதலீடுகள் செய்யப்படுகிறதா என்பதையெல்லாம் சீனா கவனத்தில் எடுக்கவில்லை.

சீனாவுக்கு தனது நிதியைப் பெருக்கும் ஒரு முதலீட்டு வாய்ப்பும் கிடைத்தது, தமது நாட்டு நிறுவனங்களுக்கும் நிபுணர்களுக்கும் தொழில் வாய்ப்பும் கிடைத்தது. அதில் சீனா எந்த அபாயத்தையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கவில்லை. முற்றிலும் அபாயத்தை எதிர்கொண்டது இலங்கை தான். அதனால் தான் சீனா, எந்தக் கேள்வியும் இன்றி நிதியைக் கொடுத்தது. அதன் விளைவு, சீனா கட்டிக்கொடுத்த துறைமுகம், விமான நிலையம் என்பன காய்ந்து கொண்டிருக்கின்றன. ஆனால் சீனா, தான் கொடுத்த கடனை வட்டியுடன் தவறாமல் வசூலித்துக் கொண்டிருக்கிறது. இதுபோன்றதோர் அபாய நிலைக்குள் செல்லாத வகையில், சீனாவின் முதலீடுகளைப் பெறும் முயற்சியில் தான் ரணில் விக்கிரமசிங்க ஈடுபட்டுள்ளார்.

மஹிந்த ராஜபக்ஷவைப் போல, அவர் சீனாவில் கடன்களைப் பெறுவது பற்றிப் பேச விரும்பவில்லை. ரணில் விக்கிரமசிங்கவின் இந்தப் பயணத்தின் முக்கிய இலக்கு, சீனாவின் வெளிநாட்டு முதலீடுகளை இலங்கையில் அதிகரிப்பது தான். சீன நிறுவனங்களை இங்கு முதலீடு செய்ய வைப்பதன் மூலம், இலங்கைக்குள் தொழில் வாய்ப்புகளையும் பணப்புழக்கத்தையும் அதிகரிக்கலாம்.

அதைவிட, முதலீட்டுக்கான அபாயங்களையும் இலங்கை எதிர்கொள்ள வேண்டியதில்லை. கடன்சுமை, வட்டி என்றும் புலம்ப வேண்டியதில்லை. இதற்காகவே, ஹம்பாந்தோட்டையில் முதலீட்டு வலயம் ஒன்றை அமைப்பதற்கும் அதற்காக நிலங்களை ஒதுக்கவும் அரசாங்கம் தயாராக இருக்கிறது. அதாவது, ரிஸ்க் எடுப்பதை சீனாவிடமே விட்டுவிடப் பார்க்கிறார் ரணில்.

இதன் ஆபத்துக்களை சீனா உணராமலும் இல்லை. ஆனாலும், இப்போதைய நிலையில், சீனாவுக்கும் பல நெருக்கடிகள் ஏற்பட்டிருக்கின்றன. மஹிந்த ராஜபக்ஷவுக்குப் பிந்திய இலங்கையுடன் ஏற்பட்ட உறவுகளின் விரிசல், சீனாவின் நலன்களைப் பாதிப்பதாகவே இருந்திருக்கிறது. இந்தக் காலகட்டத்தில் அமெரிக்கா, இந்தியா, ஜப்பான் முதலான, சீனாவுக்குப் போட்டியான நாடுகளுடன் இலங்கை, கொள்கை ரீதியாக நெருங்கிச் சென்றிருக்கிறது.

இது பொருளாதார ரீதியாக மட்டுமன்றி, பாதுகாப்பு ரீதியாகவும், சீனாவுக்கு பெரும் அடியாக இருந்தது. இந்தியப் பெருங்கடலில், உறுதியாக நகர்வுகளை முன்னெடுத்து வந்த சீனாவுக்கு, மஹிந்த ராஜபக்ஷவுக்குப் பிந்திய காலகட்ட இலங்கையின் போக்கு, பெரும் தடையாக மாறியிருக்கிறது.

இது சீனாவின் பட்டுப்பாதைக் கனவுத் திட்டத்துக்கும் சவாலாக மாறியிருக்கிறது. இதனால் தான், எப்படியாவது இலங்கையுடன் நெருக்கமான உறவுகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற முடிவுக்கு சீனாவும் வந்திருக்கிறது. பிரிந்து நின்றதன் பாதக விளைவுகளை வலுவாக அனுபவித்த பின்னர் தான், இரண்டு நாடுகளும் மீண்டும் உறவுகளை வலுப்படுத்தும் முடிவுக்கு வந்துள்ளன என்பதால், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு இந்தப் பயணம் சாதகமாகவே அமையலாம். ஆனாலும், பொருளாதார நலன்களை மட்டும் கருத்தில் கொள்ளாமல், பாதுகாப்பு நலன்களையும் சீனா முதன்மைப்படுத்த முனைந்தால், அது பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இலங்கை அரசாங்கத்துக்கும் சிக்கலாக மாறும்.

ஏனென்றால், அது, தற்போது நல்லுறவைக் கொண்டுள்ள இந்தியா மற்றும் அமெரிக்காவுடனான உறவுகளுக்குச் சவாலை ஏற்படுத்தக் கூடும்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .