2025 டிசெம்பர் 18, வியாழக்கிழமை

சிரிய முரண்பாடும் மோதல் தவிர்ப்பு இணக்கமும்

Thipaan   / 2016 பெப்ரவரி 25 , மு.ப. 05:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனகலிங்கம் கோபிகிருஷ்ணா

சிரியாவில் இடம்பெற்றுவரும் மோதல்களைப் போல குழப்பமானதொரு மோதலை, அண்மைக்காலத்தில் கண்டிருக்க முடியாது. உயிரிழப்புகள், சேதங்கள் என்பவற்றைத் தாண்டி, அதிலீடுபட்டிருக்கின்ற தரப்புகளையும் அவர்களது ஆதரவு - எதிர்ப்பு நிலைகளையும் பார்த்தாலே, குழப்பத்தைக் கொண்டு வந்துவிடும். இந்த நிலையில், அமெரிக்காவும் ரஷ்யாவும் இணைந்து முன்வைத்துள்ள மோதல் தவிர்ப்பு வெற்றிபெறுமா என்பதை ஆராய்வது பொருத்தமானது.

எல்லாவற்றுக்கும் முதல், முன்வைக்கப்பட்டிருப்பது மோதல் தவிர்ப்பு எனச் சொல்லப்படுகின்ற போதிலும், அது போர் நிறுத்தம் கிடையாது என்பதை உறுதிப்படுத்துதல் அவசியமானது. போரை நிறுத்துகின்ற இணக்கங்களில், 3 வகையான விடயங்கள் உள்ளன. இடைக்காலப் போர் நிறுத்தம் (truce), மோதல் தவிர்ப்பு (cessation), போர் நிறுத்தம் (ceasefire) ஆகியனவே அவை. இதில் போர் நிறுத்தம், இலங்கையில் நடந்தது போல, பொதுவாக மூன்றாந்தரப்புகளின் பங்குபற்றுதலோடு, பேரம்பேசல்கள் இடம்பெற்று, இறுதியில் சட்ட ஆவணம் போன்று, மோதலில் ஈடுபட்டுள்ள தரப்புகளால் கைச்சாத்திடப்படும்.

மிகவும் ஒழுங்காக வடிவமைக்கப்பட்ட ஒன்றாக இது கருதப்படுகிறது. இடைக்காலப் போர் நிறுத்தமென்பது, மனிதாபிமான உதவிகள் கிடைப்பதை உறுதிப்படுத்த அல்லது வேறு காரணங்களுக்காக, மோதலில் ஈடுபடும் தரப்புகள், மோதலைத் தற்காலிகமாக நிறுத்துதல் ஆகும். இங்கு, பேச்சுவார்த்தைகள் இடம்பெறுவதற்கு வாய்ப்பில்லை, மாறாக, இரு தரப்பும் புரிந்துணர்வுடன் செயற்படும் ஒன்றாக இருக்கும். மோதல் தவிர்ப்பென்பது, இடைக்காலப் போர்நிறுத்தத்தை விடப் பலம் கூடியது. பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றிருக்கும், எழுத்துமூலமான ஆவணமாக இருக்கும். ஆனாலும், போர் நிறுத்தம் போன்று பலமானதல்ல. போருக்கான காரணங்களை ஆராய்ந்து, அவற்றைத் தீர்ப்பதில், மோதல் தவிர்ப்பில் ஈடுபட்டுள்ள தரப்புகள் ஈடுபடாது.

அமெரிக்காவும் ரஷ்யாவும் கண்டுள்ள இணக்கம், மோதல் தவிர்ப்புக்காகும். போர் நிறுத்தமொன்றை ஏற்படுத்துவது, சிரிய மோதலைப் பொறுத்தவரை சிக்கலானது. ஆகவே, போர் நிறுத்தத்துக்காக நேரத்தைச் செலவழித்து, அது இழுபட்டுச் செல்வதை விட, மோதல் தவிர்ப்பே இலகுவானது என, அமெரிக்காவும் ரஷ்யாவும் முடிவு செய்துள்ளன.

சிரிய மோதல் எவ்வாறு சிக்கலானது என்ற கேள்வியும் எழலாம்.

சிரிய மோதல்களில் சிரிய அரசாங்கப் படைகள், சிரியப் போராளிகள் (இதில், ஏராளமான குழுக்கள் உள்ளடங்குகின்றன), ஐ.எஸ்.ஐ.எஸ், அல்-நுஸ்ரா, ஐக்கிய அமெரிக்காவும் அதன் தோழமை நாடுகளும், ரஷ்யா, குர்திஷ்கள், ஹிஸ்புல்லாக்கள், ஈராக், ஈரான், சவூதி அரேபியாவும் அதன் தோழமை நாடுகளும், துருக்கிய ஆகியன இடம்பெற்றுள்ளன.

பங்குபற்றுவோரின் எண்ணிக்கையே இப்படியிருக்க, அவர்களுக்கிடையிலான உறவுகள் இன்னும் சிக்கலானவை. ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக் குழுவையே, இதிலுள்ள எந்தத் தரப்புமே ஆதரிக்கவில்லை. ஏனை எல்லாத் தரப்புகளும், தங்களுக்கான ஆதரவாளர்களையும் எதிர்ப்பாளர்களையும் கொண்டே காணப்படுகின்றன. உதாரணமாக சிரியப் போராளிகளை, சிரிய அரசாங்கம், ஐ.எஸ்.ஐ.எஸ், ரஷ்யா, ஈராக், ஈரான், ஹிஸ்புல்லா குழு ஆகியன எதிர்க்கின்றன. ஐக்கிய அமெரிக்கா, சவூதி அரேபியாவும் தோழமை நாடுகளும் துருக்கியும் ஆதரிக்கின்றன. சிரியப் போராளிகளுக்கும்  அல்-நுஸ்ராவுக்கும் குர்திஷ்களுக்கும் இடையிலான உறவு, ஆதரவு - எதிர்ப்பு என்பதற்கப்பால் சிக்கலானது. சில குழுக்கள் இணைந்து இயங்குகின்ற வேளையில், சில குழுக்கள், எதிர்த்தியங்குகின்றன.

அடுத்த உதாரணமாக, சிரிய அரசாங்கப் படைகளுக்கு ரஷ்யா ஆதரவு தெரிவிப்பதும், அப்படைகளுக்கு அமெரிக்கா எதிர்ப்பதுமாக நிலைமை காணப்படுகிறது.

இந்த உதாரணங்களிலும் கவனிக்க வேண்டிய இரண்டு நாடுகள், அமெரிக்காவும் ரஷ்யாவும் ஆகும். இரு நாடுகளுமே ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக்குழுவை அழிப்பதற்கு முயல்கின்ற போதிலும், ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக்குழுவை எதிர்த்துப் போரிடுகின்ற சிரியப் போராளிகளை, ரஷ்யா எதிர்க்க, அமெரிக்கா ஆதரிக்கிறது.

அதேபோல், ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக்குழுவால் தாக்கப்படும் சிரிய அரசாங்கத்தை ரஷ்யா ஆதரிக்க, அமெரிக்கா எதிர்க்கிறது. அமெரிக்காவும் ரஷ்யாவும், ஆயுதப்பலம் பொருந்திய மிகப்பெரிய நாடுகள் என்பதன் அடிப்படையில், இரு தரப்புக்குமிடையிலான முக்கிய சவாலாக, இவர்களின் கருத்து மோதல் அமைந்தது.

அத்தோடு, என்ன தான் சிரிய ஜனாதிபதி பஷார் அல்-அசாட்டுக்கும் சிரிய அரசாங்கத்துக்கும் சிரிய அரசாங்கப் படைகளுக்கும் எதிர்ப்பாளராக இருந்தாலும், அவர்களை நேரடியாகத் தாக்குவதிலிருந்து, அமெரிக்காவும் அதன் தோழமை நாடுகளும் தவிர்த்துக் கொண்டன.

ஆனால் மறுபுறத்தில் ரஷ்யா, ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக்குழுவுக்கெதிரான மோதலில் முக்கிய பங்காற்றிவரும் சிரியப் போராளிகள் மீது தாக்குதல்களை நடத்தி வருகிறது. அப்போராளிகள், சிரிய ஜனாதிபதியை எதிர்ப்பதும், அதன் அரசாங்கப் படைகளை எதிர்த்துப் போராடுவது, அதற்குக் காரணமாகும். இது, அமெரிக்காவுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது.

இந்த நிலைமைகளைக் களைவதற்காகவும், இரு தரப்புமே சொல்லும் 'ஐ.எஸ்.ஐ.எஸ் குழுவை அழிப்பதற்கு முயல்கிறோம்' என்பதை நிறைவேற்றவுமே, மோதல் தவிர்ப்பென்பது முக்கியமானது.

இந்த மோதல் தவிர்ப்பில், ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக்குழுவும் அல்-நுஸ்ரா ஆயுதக்குழுவும் கருத்திற்கொள்ளப்படவில்லை. ஏனைய எல்லாத் தரப்புகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம், இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தரப்புகளிடையே மோதல் தவிர்ப்பொன்று ஏற்படுமென்ற போதிலும், ஐ.எஸ்.ஐ.எஸ், அல்-நுஸ்ரா குழுக்களுக்கெதிரான தாக்குதல்கள் தொடருமென எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் தாக்குதல்கள் தொடர்ந்தாலும், பொதுமக்களுக்கு அதிகம் பாதிப்பை ஏற்படுத்திய, சிரிய போராளிகளுக்கெதிராக சிரிய அரசாங்கப் படைகள் டமாஸ்கஸ்ஸிலும் ஹொம்ஸிலும் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள், இதன்மூலம் நிறுத்தப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, பட்டினியால் வாடும் மக்களுக்கான மனிதாபிமான உதவிகள் கிடைப்பதற்கு, இந்த இணக்கம் முக்கியமானதாக அமையும்.

ஆனாலம், ஏற்கெனவே குறிப்பிடப்பட்டது போன்று, ஐ.எஸ்.ஐ.எஸ், அல்-நுஸ்ரா மீதான தாக்குதல்கள் தொடருமென்பதால், அவற்றில் பொதுமக்கள் சிக்கவும் வாய்ப்பேற்படும். அதற்கு மேலதிகமாக, அல்-நுஸ்ராவுக்கு ஆதரவு வழங்கும் சிரியப் போராளிக்குழுக்கள் இருப்பதால், இவ்விணக்கத்துக்கு அக்குழுக்களும் வருமா என்பதும், அவ்வாறு வந்தால், அல்-நுஸ்ரா மீதான தாக்குதல்களுக்கு அவை எவ்வாறு பதிலளிக்குமென்பதும் கேள்விக்குரியனவே. அதேபோல், இந்த இணக்கத்துக்கு வராத குழுக்களுக்கிடையிலான மோதல்கள் தொடர்ந்தும் ஏற்படுவதற்கு அதிகமான வாய்ப்புகள் உண்டு.

அத்தோடு, மோதல் தவிர்ப்பு உருவாகுவதற்கு முன்னரும் மோதல் தவிர்ப்புக் காலத்திலும், ஆயுதக்குழுக்கள் தங்களைப் பலப்படுத்திக் கொண்டு, அதிகளவு மோதல்களில் ஈடுபடுவதற்குமான வாய்ப்புகளும் அதிகமாகவே உண்டு.

எனினும், சிரியாவில் ஏற்பட்டுள்ள மனிதாபிமான நெருக்கடிக்கு, தற்காலிகத் தீர்வையாவது இந்த மோதல் தவிர்ப்புக் கொண்டுவரும் என்பதில், இது வெற்றிபெற வேண்டுமென்பது தான், அனைவரதும் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X