2026 மார்ச் 24, செவ்வாய்க்கிழமை

சட்டத்திடம் சூடு வாங்கிய அவுஸ்திரேலியா

Thipaan   / 2016 மே 10 , மு.ப. 04:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

ப.தெய்வீகன்

மூக்கிருக்கும்வரை சளியிருக்கும் என்பதுபோல, அவுஸ்திரேலியா என்ற கண்டம் தீவாக இருக்கும்வரை, அகதிகள் பிரச்சினை இருந்துகொண்டுதானிருக்கும். ஆக மொத்தம், தீர்வுகாணப்படமுடியாத சிக்கல். பப்புவா நியூ கினியின் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பொன்றினால், அவுஸ்திரேலியாவின் குடிவரவு அமைச்சர் கடந்த ஒரு மாதகாலமாக தலையை பிய்த்துக்கொண்டிருக்கிறார். நாட்டுக்குள் சட்டவிரோதமாக நுழைய எத்தனிக்கும் புகலிடக் கோரிக்கையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதற்காக சில வருடங்களுக்கு முன்பு அவுஸ்திரேலிய அரசாங்கம் கொண்டுவந்த கடுமையான நடவடிக்கைதான், இவ்வாறான தஞ்சக்கோரிக்கையாளர்களை 48 மணிநேரத்துக்குள் விமானத்தில் ஏற்றி, மானஸ் தீவிலும் நவுறு தீவிலும் உள்ள சிறப்பு தடுப்புமுகாம்களில் கொண்டு சென்று தங்கவைப்பது என்ற ஏற்பாடாகும்.

அவுஸ்திரேலியாவிலிருந்து வடகிழக்கில் 3,000 - 5,000 கிலோமீற்றர் தொலைவில் உள்ள இந்தத் தீவுகள், இன்னமும் அவுஸ்திரேலியாவின் கட்டுப்பாட்டில் இருந்தாலும் அந்நாட்டு மக்கள், தமக்கான அரசாங்கத்தை தெரிவுசெய்து, சுயாட்சி ஏற்பாட்டின் கீழ் வாழ்ந்து வருகின்றனர். வசதிகள் குறைந்த இந்தத் தீவுகளின் காலநிலை மற்றும் தங்குமிட ஏற்பாடுகள் ஆகியவற்றின் அடிப்படையில், இந்தத் தீவுகள் புகலிடக் கோரிக்கையாளர்களை தடுத்துவைப்பதற்கு ஏற்புடையதல்ல என்று, அகதி அமைப்புக்கள் பல வருடங்களாக எதிர்ப்புத் தெரிவித்துவந்திருந்தன. இந்தத் தடுப்புமுகாம்களின் கொடூரம் குறித்து, சர்வதேச அளவில் விழிப்புணர்வுப் பிரசாரங்களும் மேற்கொள்ளப்பட்டன. அவுஸ்திரேலியாவுக்கு தஞ்சம் கோரி வரும் அகதிகளை இவ்வாறு, வேறு தீவுகளில் கொண்டுபோய்த் தடுத்துவைப்பது, மனிதாபிமானமற்ற செயல் என்று கடந்த பல வருடங்களாக ஐ.நா வரை முறையீடுகளும் செய்தாயிற்று.

ஆனால், அவுஸ்திரேலிய அரசாங்கமோ, தனது கொள்கையில் விடாப்பிடியாக சட்டவிரோத குடியேற்றவாசிகளை இந்தத் தீவுகளுக்கு அனுப்பி அங்கு தடுத்துவைத்துவருகிறது. இதில் மிகமுக்கியமான விடயம், அகதிகள் என்று ஏற்றுக்கொள்ளப்பட்டவர்கள் மாத்திரமே இந்தத் தீவுகளில் தடுத்துவைக்கப்படுகின்றனர். ஏனையவர்கள், உடனடியாகவே தத்தமது நாடுகளுக்குத் திருப்பி அனுப்பப்படுகின்றனர்.

அரசாங்கத்தின் இந்தக்கொள்கை, கடந்த சில வருடங்களாக சட்டவிரோத குடியேற்றவாசிகளின் வருகையை முற்றாக குறைத்தது என்பதை ஏற்றுக்கொண்டேயாகவேண்டும். ஏனெனில், 2009ஆம் ஆண்டு காலப்பகுதி முதல் பல்லாயிரக்கணக்கில் படகில் வந்துகொண்டிருந்த அகதிகளின்வருகையை முற்றாகவே நிறுத்தியதற்கு காரணம், அரசாங்கம் இவ்வாறு மேற்கொண்ட கடுமையான நிலைப்பாடுதான் என்று கூறலாம்.

அரசாங்கத்தின் இந்தக் கொள்கை, அவுஸ்திரேலியாவின் வலதுசாரிகளின் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றது. பிரதான கட்சிகள், மக்கள் மத்தியில் தமது கொள்கையைச் சந்தைப்படுத்துவதற்கு மிக அருமையான அரசியல் பண்டமாக இந்த அகதிகள் விவகாரம் இருந்துவந்துள்ளது.

இவ்வாறு, நவுறு தீவுகளில் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் ஏற்பாட்டுக்கு எதிராக, கடந்த வருடம் ஒக்டோபர் மாதம், அவுஸ்திரேலிய நீதிமன்றம் ஒன்றில் வழக்குத் தாக்கல் செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த வழக்கின் சீரியஸ் தன்மையை முன்னரே புரிந்துகொண்ட அரசாங்கம், ஒரு புதிரான ஏற்பாட்டை அறிவித்தது. அதாவது, நவுறு தீவுகளில் இனிமேல் தடுப்புமுகாமில் எந்த அகதிகளும் தடுத்துவைக்கப்படமாட்டார்கள். அவர்கள், அங்குள்ள மக்களுடன் சேர்ந்து வாழ்வதற்கான வசதிகளை ஏற்படுத்திக்கொடுத்து, தங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கு அவுஸ்திரேலிய அரசாங்கமும் நவுறு அரசாங்கமும் உதவியளிக்கும் என்ற அறிவிப்பை விடுத்தது.

அதாவது, சட்டரீதியாக 'தடுப்பு' என்ற விடயத்திலிருந்து அகதிகளை விடுவித்துக்கொண்ட அதேநேரத்தில், அவர்களை அவுஸ்திரேலியாவுக்குள் வந்துவிடாமல் பார்த்துக்கொள்வதற்கான வஞ்சகமாதோர் ஏற்பாட்டினையும் சாதுரியமாக செய்து, அரசாங்கம் தப்பிக்கொண்டது.

இம்முறை, மானஸ் தீவில் வேறுவிதமாக இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டதாலும் மானஸ் தீவில் அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் அகதிகள் கொள்கைக்கு எதிராக வலுக்கும் எதிர்ப்பினாலும் அவுஸ்திரேலிய அரசாங்கம் வெளிப்படையாக அடிவாங்கியிருக்கிறது என்று கூறலாம். அதாவது, மானஸ் தீவின் அரசாங்கமான பப்புவா நியூ கினி உச்ச நீதிமன்றத்திலேயே இம்முறை வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக்கில், வேறு நாட்டுக்கு அகதிகளாக வந்தவர்களை அந்தத் தீவுகளில் கொண்டுவந்து தடுத்துவைத்திருப்பது சட்டவிரோதம் என்றும் அந்நாட்டின் அரசமைப்புக்கு அது ஏற்புடையதல்ல என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வழக்கை விசாரித்த ஐந்து நீதிபதிகள் கொண்ட குழு, அங்கு அகதிகளைக் கொண்டுவந்து தடுப்புமுகாமில் வைத்திருப்பதை சட்டவிரோதம் என்று அறிவித்து. பப்புவா நியூ கினி அரசாங்கம், இந்தத் தடுப்புமுகாம்களை மூடுவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் கூறியுள்ளது. பப்புவா நியூ கினி அரசாங்கமும் அவுஸ்திரேலியா அரசாங்கமும் என்னவிதமான பேரம்பேசி இந்தத் தடுப்புமுகாமை நடத்திவந்தன என்று எவருக்கும் தெரியாத நிலையில், தற்போது அந்த ஏற்பாட்டுக்கு நீதிமன்றம், ஆப்பு இறுக்கியுள்ளது.

அகதி அமைப்புக்களும் தடுப்புமுகாம்களிலுள்ள அகதிகளும் இந்த நீதிமன்ற அறிவிப்பினை பெரும் வெற்றியாக கொண்டாடினாலும், அகதிகள் சார்பாக செயற்பட்டுவரும் சட்டத்தரணிகள் மிகவும் எச்சரிக்கையுடன் கூடிய நம்பிக்கையையே கொண்டுள்ளனர்.

அதற்குக் காரணம், எக்காரணம் கொண்டும் உடனடியாக அந்த அகதிகளை அவுஸ்திரேலியாவுக்கு கொண்டுவரும் என்று தாம் நம்பவில்லை என்றும் நீதிமன்ற தீர்ப்பினை ஏற்றுக்கொண்டு, நவுறு தீவுகளைப் போல அகதிகளை, தடுப்புமுகாமிலிருந்து விடுவித்து, அங்குள்ள மக்களுடன் சேர்ந்து வாழுவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்கு அவுஸ்திரேலிய அரசாங்கம் முயற்சிக்கலாம் என்றும் சட்டவாளர்கள் கூறுகின்றனர்.

எதிர்வரும் ஜூலை மாதம், அவுஸ்திரேலியா முழுவதும் இரண்டு அவைகளிலும் தேர்தல் நடைபெறுவதற்கான அறிவிப்பு வெளிவந்துள்ள நிலையில், அவுஸ்திரேலியாவில் காலகாலமாக அரசியல் விவகாரமாகவே பார்க்கப்பட்டுவரும் அகதிகள் விவகாரத்தை அரசாங்கம் மிகக்கவனமாகவே கையாளும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

ஆனால், நவுறு தீவுகளைப்போன்று மானஸ் தீவிலுள்ள அகதிகளை, எழுந்தமானமாக தடுப்புமுகாமினால் விடுதலை செய்வதற்கு அந்நாட்டு அரசாங்கம் விரும்பாது. ஏனெனில், தற்போதைய அகதிகள் தடுப்புமுகாமிலிருந்து மிகக்குறுகிய தூரத்தில்தான் அந்நாட்டின்

மிகமுக்கியமான கடற்படைத்தளம் அமைந்துள்ளது. ஆகவே, இந்த அகதிகளை அந்நாட்டினுள் விடுதலை செய்வதானால் பாதுகாப்பு விடயத்தில் பப்புவா நியூகினி அரசாங்கம் மிகுந்த அக்கறை செலுத்தவேண்டியிருக்கும் என்று அகதிகள் விவகார ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

இவ்வாறான ஒரு நிலையில், இந்த அகதிகளை மானஸ் தீவிலிருந்து ஏற்றிச்சென்று, நவுறு தீவுகளில் அங்கு ஏற்கெனவே உள்ள அகதிகளுடன் குடியமர்த்துவதற்கு அவுஸ்திரேலிய அரசாங்கம் யோசிக்கலாம். அல்லது, வேறு தீவுகள் ஒன்றுக்கு இந்த அகதிகளை கொண்டுசென்று அங்கு தடுத்துவைப்பதற்கு முயற்சிக்கலாம் என்றும் அகதிகள் அமைப்பு வட்டாரங்களில் அச்சம் தெரிவிக்கப்படுகிறது. கொள்கை சார்ந்த இவ்விடயங்கள் ஒருபுறமிருக்க, நவுறு தீவிலிருந்த 23 வயதான ஈரான் அகதி ஒருவர் அண்மையில் தீக்குளித்து இறந்துள்ள சம்பவம் அவுஸ்திரேலிய அரசாங்கத்தை மேலும் அழுத்திப்பிடித்திருக்கிறது.

இரண்டொரு நாட்களின் பின்னர், சோமாலியாவைச் சேர்ந்த 21 வயதான இளம்பெண் ஒருவர் தீக்குளித்து, கடும் எரி காயங்களுடன் வைத்தியசாலைக்குக் கொண்டுசெல்லப்பட்டு இன்னமும் சிகிச்சையளிக்கப்பட்டுவருகிறார்.

நவுறு தீவிலுள்ள அகதிகள், தாங்கள் மிகுந்த அவலங்களைச் சந்தித்துவருவதாகவும் தமக்கு எந்த வசதிகளும் செய்துதரப்படவில்லை என்றும் தொடர்ச்சியான போராட்டங்களை மேற்கொண்டுவருகின்றனர். இதேவேளை, அவுஸ்திNலியாவிலும் அகதிகள் நலன்சார்ந்த அமைப்புகள், தீவிர இடதுசாரி குழுக்கள் ஆகியவை தொடர்ச்சியாக பாரிய பேரணிகளை மேற்கொண்டுவருகின்றன. நாடளாவிய ரீதியில், இந்தப் பேரணிகளுக்கு பெருமளவில் மக்கள் கலந்துகொள்வதையும் காணக்கூடியதாக உள்ளது. இடதுசாரி ஊடகங்கள் இந்த பேரணிகளுக்கும் மானஸ் - நவுறு தீவகளிலுள்ள அகதிகள் மற்றும் அவர்களது பிரச்சினைகளுக்கும் தொடர்ச்சியாக முக்கியத்துவம் கொடுத்து செய்திகளை வெளியிட்டுவருகின்றன.

அங்குள்ள நிலமைகளை அவுஸ்திரேலிய மக்களுக்கு தெரியப்படுத்துவதில் இயன்றளவு நீதியுடன் செயற்படுகின்றன. ஆனால், அரசாங்கம் இந்த விவகாரத்தைத் தனது முக்கியமான கொள்கை சார்ந்த விடயமாக நோக்குவதாலும், தேர்தல் காலங்களில் மிகுந்த உணர்வுபூர்வமாக விடயமாக தாக்கங்களைச் செலுத்தும் என்ற காரணத்தினாலும் தான் எடுத்துவைக்கும் ஒவ்வொரு அடியிலும் மிகுந்த கவனத்துடன் செயலாற்றுகிறது. தற்போதைய அரசாங்கத்துக்கு, இந்த விவகாரத்தை இறுக்கமாக கையாளுவதற்கு கிடைத்துள்ள மிகப்பெரும் வசதி என்னவென்றால், மானஸ் தீவிலும் நவுறு தீவிலும் அகதிகளை கொண்டுபோய்த் தடுத்துவைக்கும் திட்டத்தைக் கொண்டுவந்தது முன்னைய தொழிற்கட்சி அரசாங்கமாகும். அந்தத் திட்டம்தான் சட்டவிரோத அகதிகளைக் கட்டுப்படுத்துவதற்கு சரியான வழி என்று, தங்களது ஆட்சியிலும் லிபரல் கட்சி அதனைத் தொடர்ந்து கடைப்பிடித்துவருகிறது.

ஆகவே, தற்போது இந்த அகதிகள் விவகாரம் தொடர்பாக ஏற்பட்டிருக்கும் எந்த சிக்கலுக்கும் எதிர்க்கட்சி வட்டாரத்திலிருந்து அரசாங்கத்துக்கு எந்த அழுத்தங்களும் இல்லாதது, லிபரல் கட்சியைப் பொறுத்தவரை தனது இறுக்கமான பாதையில் பயணிப்பதற்கும் முடிவுகளை எடுப்பதற்குமான பூரண சுதந்திரத்தை வழங்கியுள்ளது. இந்தத் தீவிர சிக்கலை அவுஸ்திரேலியா எவ்வாறு கையாளப்போகிறது என்பது, தற்போது அறிவிக்கப்பட்டுள்ள தேர்தல் காலப்பகுதியில் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .