2025 டிசெம்பர் 18, வியாழக்கிழமை

சமஷ்டி முறையும் சந்தர்ப்பவாதமும்

Thipaan   / 2016 ஜனவரி 20 , மு.ப. 04:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

இனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு தேடுவது தொடர்பாகவும் நிறைவேற்று ஜனாதிபதி முறை மற்றும் விகிதாசாரத் தேர்தல் முறை ஆகியவற்றினால் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வு தேடுவது தொடர்பாகவும் இலங்கைக்கு நீண்டதொரு வரலாறு இருக்கிறது. இந்த முயற்சிகளின் போது காணப்பட்ட முக்கியமானதொரு விடயம் என்னவென்றால், ஆளும் கட்சி தீர்வு தேட முயற்சிக்கும் போதெல்லாம் எதிர்க்கட்சி, அதற்குக் குழி பறிக்க முற்பட்டமையே.

இம் முறையும் நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கம், புதியதோர் அரசியலமைப்பை கொண்டு வர முயற்சிக்கும் போது, அரசாங்கம் அதற்கான ஆலோசனைகளை முன்வைக்கும் முன்னரே, முன்னாள் ஜனாதிபதியின் நண்பர்களான எதிர்க்கட்சிக் குழுவினர், நாட்டின் ஒற்றையாட்சித் தன்மையை அரசாங்கம் இல்லாதொழிக்கப் போகிறது என்றும் பௌத்த சமயத்துக்கு அரசியலமைப்பினால் வழங்கப்பட்டுள்ள அந்தஸ்த்தை இல்லாமல் செய்யப் போவதாகவும் குற்றஞ்சாட்ட ஆரம்பித்துள்ளனர்.

அரசாங்கம், புதிய அரசியலமைப்பொன்றின் மூலம் இவ்வாறு நாட்டுக்குப் பேரழிவை ஏற்படுத்தப் போவதாக மஹிந்தவின் சகாக்கள் கூச்சலிட்ட போதிலும், அரசியலமைப்பை மாற்றி அமைப்பதற்கான ஆலோசனை எதனையும் இன்னமும் அரசாங்கம் முன்வைக்கவில்லை. அரசியலமைப்பை மாற்றி அமைப்பதாக இருந்தால், அரசாங்கம் முதலில் அதற்கான ஆலோசனைகளை முன்வைக்க வேண்டும் எனவும் ஆனால், அரசாங்கம் இன்னமும் அவ்வாறு எந்தவொரு ஆலோசனையையும் முன்வைக்கவில்லை எனவும் மக்கள் விடுதலை முன்னணியும் கூறியுள்ளது.

இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப் பதவியில் இருக்கும் அரசாங்கங்கள் முற்படும் போது, அதனைக் கொண்டு அரசியல் இலாபம் தேடும் நோக்கில், அவ்வப்போது இருக்கும் எதிர்க்கட்சிகள் இவ்வாறு தமிழீழப் பேயை காட்டிய போதிலும் அந்த எதிர்க் கட்சிகள் பதவிக்கு வந்தபோது, அவர்களும் அதே தீர்வுகளைத் தான் முன்வைக்கிறார்கள். அப்போது முதலில் பதவியில் இருந்த கட்சிகள் அரசியல் இலாபம் தேட தமிழீழப் பேயைக் காட்டுகிறார்கள். எனவே, பதவியில் இருந்த இரண்டு பிரதான கட்சிகளும் தமது பதவிக் காலங்களில் ஒரு முறையாவது சமஷ்டி ஆட்சி முறையை ஏற்றுக் கொண்டு இருக்கிறார்கள்.

இலங்கையில் முதன் முறையாக நடைமுறையில் சமஷ்டி முறையை ஏற்றுக் கொண்ட கட்சி, 1987ஆம் ஆண்டு இலங்கை- இந்திய ஒப்பந்தத்தை அடுத்து, அவ்வொப்பந்தத்தின் பிரகாரம், மாகாண சபைகளை உருவாக்கிய ஐக்கிய தேசியக் கட்சியாகும்.

சமஷ்டி ஆட்சி அமைப்பொன்று உள்ள மலேசியாவில், பிராந்தியங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை விட கூடுதலான அதிகாரங்கள், இலங்கையிலுள்ள மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாக உலகப் புகழ்பெற்ற சட்ட மேதையான பேராசிரியர் சி.ஜி.வீரமந்திரி அப்போது கூறிய போதும், அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தன, இலங்கையின் ஆட்சியை சமஷ்டி ஆட்சியாக அரசியலமைப்பில் குறிப்பிடவில்லை. சிங்கள மக்களை ஏமாற்றும் நோக்கில் இலங்கையை ஒற்றையாட்சியுள்ள நாடாகவே அரசியலமைப்பில் ஜயவர்தன குறிப்பிட்டார்.

ஆயினும், அப்போது மாகாண சபை முறைக்கு எதிராக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மாபெரும் ஆர்ப்பாட்டங்களை நடத்தியது. நாடு பிரியப் போவதாக கூச்சலிட்டது.

பின்னர், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையிலான கூட்டரசாங்கமொன்று, 1994ஆம் ஆண்டு பதவிக்கு வந்தது. முதலில் பிரதமராகவும் பின்னர் ஜனாதிபதியாகவும் சந்திரிகா குமாரதுங்கவே அந்த அரசாங்கத்தின் தலைவியாக இருந்தார். பதவிக்கு வந்த உடன் புலிகள் அமைப்புடன் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்த முற்பட்டு தோல்வி கண்ட சந்திரிகாவின் அரசாங்கம், 1995ஆம் ஆண்டு 'பக்கேஜ்' என அக்காலத்தில் பலரால் அழைக்கப்பட்ட தீர்வுத் திட்டமொன்றை முன்வைத்தார். அப்போதைய அரசியலமைப்புத்துறை அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.

பீரிஸும் சர்வதேச ரீதியாக அங்கிகரிக்கப்பட்ட சட்ட வல்லுனரான கலாநிதி நீலன் திருச்செல்வமுமே அந்த தீர்வுத் திட்டத்தை வரைந்தனர்.

இந்தத் திட்டத்தின் எந்த இடத்திலும் இலங்கை ஒற்றையாட்சியுள்ள நாடாக குறிப்பிடப்படவில்லை. மாறாக, இலங்கை பிராந்தியங்களின் ஒன்றியமாகவே (Union of regions) அதில் குறிப்பிடப்பட்டது. இன்று அந்த ஜீ.எல்.பீரிஸ் தான் ஒற்றையாட்சிக்காக வாதாடுகிறார். புலிகள் இந்தத் தீர்வுத் திட்டத்தை ஏற்றுக் கொண்டிருக்க வேண்டும் என 2003ஆம் ஆண்டு கிளிநொச்சியில் புலிகளின் நீதிமன்றத் தொகுதியொன்றை திறந்து வைக்கும் வைபவமொன்றின் போது,அவ்வமைப்பின் அரசியல் ஆலோசகர் கலாநிதி அன்டன் பாலசிங்கமும் கூறியிருந்தார்.

சந்திரிகாவின் அரசாங்கம் மேலும் இரண்டு தீர்வுத்திட்டங்களை முன்வைத்திருந்தது. அதில் ஒன்று தான், 1996ஆம் ஆண்டு இனப் பிரச்சினையை தீர்ப்பதற்காக ஜீ.எல்.பீரிஸின் தலைமையில் நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற தெரிவுக்குழு தோல்வியடைந்த பின், அந்த குழுவின் முன் பலர் முன்வைத்த கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டது. பீரிஸ்- சந்திரிகாவின் பொதுஜன ஐக்கிய முன்னணி அரசாங்கத்தின் சார்பில், 1997ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 24ஆம் திகதி அதனை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார். அதிலும் ஒற்றையாட்சி என்ற பதம் இருக்கவில்லை.

பின்னர், சந்திரிகாவின் அரசாங்கம், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் காலஞ்சென்ற எம்.எச்.எம். அஷ்ரபின் உதவியுடன் 2000ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 3ஆம் திகதி புதிய அரசியலமைப்பு நகலொன்றை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தது. அது ஒரு சமஷ்டி அரசியலமைப்பு என்பதை சந்திரிகா ஒருபோதும் மறைக்கவில்லை. அதேபோல் மேலும் 9 ஆண்டுகளுக்கு வடக்கு - கிழக்கு மாகாணங்கள் இணைந்து இருக்க வேண்டும் என்றும் அந்த அரசியலமைப்புக்கான பிரேரணையில் குறிப்பிடப்பட்டு இருந்தது. மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட அவரது அரசாங்கத்தின் அமைச்சர்கள் எவரும் அதில் ஒரு வாசகத்தையேனும் அப்போது எதிர்க்கவில்லை.

இலங்கையில், சமஷ்டி முறையை மிகவும் வெளிப்படையாக ஏற்றுக் கொண்ட ஓர் அரசாங்கம் என்றால், அது 2001ஆம் ஆண்டு பதவிக்கு வந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கமே. அந்த அரசாங்கம் 2002ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் சமாதான பேச்சுவார்த்தைகளை புலிகளுடன் ஆரம்பித்து, அதே ஆண்டு டிசெம்பர் மாதம், நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் நடைபெற்ற முன்றாம் சுற்று பேச்சுவார்த்தையின் போது சமஷ்டி முறையின் கீழ் இனப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதென புலிகளுடன் இணக்கம் கண்டது.

பொதுஜன ஐக்கிய முன்னணி அரசாங்கத்தின் காலத்தில் பலமுறை சமஷ்டி அரசியலமைப்புக்களை வரைந்த பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் அந்த விடயத்திலும் முக்கிய பங்காற்றினார். புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திய அரசாங்க தூதுக்குழுவின் தலைவராக அவரே செயற்பட்டார். அரசாங்கத்தின் சார்பில் சமஷ்டி முறையை அவரே ஏற்றுக் கொண்டார்.

அந்தவகையில் பார்த்தால், பீரிஸ், 1995, 1997, 2000 அரசியலமைப்பு திருத்தங்கள் மூலமும் 2002ஆம் சமாதான பேச்சுவார்த்தைகள் மூலமும் இந் நாட்டுக்கு சமஷ்டி முறையை கொண்டு வர பாடுபட்டு இருக்கிறார். அவர் தான் இப்போது ஒற்றையாட்சி முறை இல்லாமல் போகப் போகிறது என்று கூச்சலிடுகிறார். இது ஒரு கல்விமானுக்கு பொருத்தமான பண்பா என்ற கேள்வி இங்கு எழுகிறது.

அவர் அத்தோடு நின்றுவிடவில்லை. 2003ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி, சமாதான பேச்சுவார்த்தைகளில் இருந்து புலிகள் விலகிக் கொண்டனர். அதன் பின்னர் அவர்கள் இடைக்கால சுய ஆட்சி அதகாரசபை (Interim Self- Governing Authority-ISGA) என்ற ஓர் அமைப்பை அமைக்க வேண்டும் என அதற்கான திட்டத்தை முன்வைத்தனர். உண்மையிலேயே அது தனி நாட்டுக்கான திட்டமாவே இருந்தது.

இனி பேச்சுவார்த்தை நடத்துவதானால் அந்தத் திட்டத்தை அடிப்படையாகக் கொண்டே பேச்சுவார்த்தை நடத்த முடியும் என புலிகள் நிபந்தனை விதித்தனர். ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கமும் பீரிஸின் தலைமையிலான பேச்சுவார்த்தை குழுவும் அந்த நிபந்தனையை ஏற்றுக் கொண்டன. அந்த பீரிஸ் தான் இப்போது ஒற்றையாட்சியைப் பற்றிப் பேசுகிறார்.

சமஷ்டி முறையைப் பற்றியும் நாட்டுப் பிரிவினையைப் பற்றியும் ஒற்றையாட்சி முறையை ஒழிப்பதைப் பற்றியும் இரு பிரதான கட்சிகளும் மக்கள் மத்தியில் அடிக்கடி பீதியை உருவாக்கிய போதிலும் இவ்விரு கட்சிகளும் பலமுறை அதிகார பரவலாக்கலை ஏற்றுக் கொண்டுள்ளன. அக் கட்சிகளின் தலைவர்கள் சமஷ்டி என்று எதைக் குறிப்பிட்டார்கள் என்று தெரியாது.

ஒருமுறை கட்டுரையொன்றை எழுதுவதற்காக நாம் பல முக்கிய அரசியல் கட்சிகளின் முக்கிய தலைவர்களை பேட்டி கண்டு சமஷ்டி முறை என்பதற்கு அவர்களின் வரைவிலக்கணத்தை பெற்றுக் கொண்டோம். அந்த வரைவிலக்கணங்களைப் பார்க்கும் போது யானையின் பல்வேறு உறுப்புக்களைத் தொட்டுப் பார்த்து, யானையை விவரித்த குருடர்கள் தான் ஞாபகத்துக்;கு வந்தது.

சர்வதேச நீதிமன்றத்தின் முன்னாள் உப தலைவராகவிருந்த இலங்கையரான பேராசிரியர் சி.ஜி. வீரமந்திரி மாகாண சபை முறையைப் பற்றி இலங்கையில் ஆராயப்பட்டு வரும் போது, 

1986ஆம் ஆண்டு வெளியிட்ட ஒரு கட்டுரையில் இருந்த சில கருத்துக்களை இங்கு குறிப்பிடுவது பொருத்தமாகும். அக் காலத்தில் அவுஸ்திரேலியாவின் மொனாஷ் பல்கலைகழகத்தில் பேராசிரியராக இருந்த வீரமந்திரி தேசிய ஐக்கியத்துக்கான வெளிநாட்டில் வதியும் இலங்கையர்களின் அமைப்பின் (OSLONU) தலைவராகவும் செயற்பட்டார்.

அந்தக் கட்டுரையில் வீரமந்திரி இவ்வாறு கூறுகிறார். 'ஓர் அரசு, ஒற்றையாட்சி அரசா இல்லையா என்பது அதனை விவரிப்பதற்கான பதங்களை வைத்து தீர்மானிக்கப்படுவதில்லை. மாறாக, அந்த அரசுக்குள் அதிகாரம் பரவலாக்கல் செய்யப்படும் முறை என்ற யதார்த்தத்தை வைத்தே அது தீர்மானிக்கப்படும். அரசியலமைப்புத்துறை சட்டத்தில் ஒற்றையாட்சி என்ற பதமானது, சமஷ்டி என்ற பதத்துக்கு எதிராகவே பயன்படுத்தப்படுகிறது. சமஷ்டி என்றால் மத்திக்கும் அலகுகளுக்கும் இடையில் இறைமை அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட்ட அரை சுயாட்சி அலகுகளின் ஒன்றியமாகும். ஒற்றையாட்சியில் சட்டவாக்க அதிகாரம் பகிர்ந்தளிக்கப்படுவதில்லை.

தமக்கு வழங்கப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பாக உத்தேச மாகாண சபைகள் சட்டமியற்றலாம். எனவே, உத்தேச மாகாண சபைத் திட்டமானது, தெளிவாகவே சமஷ்டி முறையாகும். சமகால பல்வேறு சமஷ்டி அமைப்புகளை விட இங்கே மாகாண சபைகளுக்கு கூடுதலாக அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது' இது தான் வீரமந்திரியின் விளக்கம்.

ஒரு நாட்டில் ஒரு சட்டமியற்றும் சபை மட்டுமே இருந்தால் அது ஒற்றையாட்சி என்றும் பல்வேறு சட்டமியற்றும் சபைகள் இருந்தால் அது சமஷ்டி முறையென்றும் பேராசிரியர் வீரமந்திரி கூறுகிறார். மாகாண சபைகளுக்கு அதிகாரம் பரவலாக்கல் செய்யப்படும் போது அவ்வாறு பரவலாக்கப்பட்ட விடயங்கள் தொடர்பாக மாகாண சபைகளுக்கு மட்டுமே சட்டமியற்ற முடியும். அதாவது அதிகார பரவலாக்கலை அடுத்து நாட்டில் பல சட்டமியற்றும் சபைகள் உருவாவதை தடுக்க முடியாது. பல சட்டமியற்றும் சபைகள் இருந்தால் அதுவே சமஷ்டி முறை எனப்படுகிறது.

பேராசிரியர் வீரமந்திரியின் இந்த கருத்துப்படி, மாகாண சபைகள் உருவாக்கப்பட்டது முதல், இலங்கை சமஷ்டி ஆட்சி முறையுள்ள நாடாக மாறியுள்ளது. ஆனால், 1987ஆம் ஆண்டு ஆட்சி முறையை மாற்றிய போதிலும் சிங்கள மக்கள் குழம்பிவிடுவார்கள் என்ற பயத்தினால் அப்போதைய ஜனாதிபதி - புதிய முறையை சமஷ்டி என்று அழைக்காது ஒற்றையாட்சியாகவே அரசியலமைப்பில் குறிப்பிட்டார்.

எனவே, சமஷ்டி வேண்டும், சமஷ்டி வேண்டும் என தமிழர்கள் கூக்குரலிடுவதிலும் அர்த்தம் இல்லை. சமஷ்டி பயங்கரமானது என்று சிங்களவர்கள் கூக்குரலிடுவதிலும் அர்த்தம் இல்லை. அது எப்போதோ நடைமுறையில் உருவாக்கப்பட்டு சுமார் 27 ஆண்டுகளாக நாட்டில் இருக்கும் ஆட்சி முறையாகும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X