Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 16, வெள்ளிக்கிழமை
Thipaan / 2016 மார்ச் 24 , மு.ப. 06:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை முன்னிறுத்தி, அரசியல் சதுரங்கத்தில் சில காய்களை வெட்டுவதற்கான முயற்சிகளை, பிரதமர் ரணில் விக்ரமசிங்க மேற்கொண்டு வருகின்றார். கடந்த பொதுத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட பொன்சேகா, மிகவும் சொற்பமான வாக்குகளைப் பெற்றுப் படுதோல்வியடைந்தார். இந்த நிலையில், முன்னாள் அமைச்சர் எம்.கே.ஏ.டி.எஸ்.குணவர்த்தனவின் மறைவுக்குப் பின்னர் ஏற்பட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் வெற்றிடத்துக்கு, தன்னுடைய கட்சியிலேயே முக்கியஸ்தர்கள் பலர் இருக்கின்ற நிலையிலும், அவர்களையெல்லாம் தவிர்த்துவிட்டு, பொன்சேகாவை நாடாளுமன்றத்துக்கு அழைத்து வந்திருக்கின்றார் ரணில். அத்தோடு, அமைச்சரவை அமைச்சுப் பதவியொன்றையும் வழங்கியிருக்கின்றார். இந்த நடவடிக்கைகள் உணர்த்தும் செய்திகள் எவை, ரணிலின் முக்கிய ஏவல் கருவியான பொன்சேகா, யாரையெல்லாம் வெட்ட வேண்டியிருக்கின்றது என்று இந்தப் பத்தி கவனம் செலுத்துகின்றது.
இராணுவத் தளபதி, முப்படைத் தளபதி என்கிற பதவி நிலைகளைக் கடந்து, ஓய்வுக்குப் பின்னர் ஏதாவதொரு நாட்டின் தூதுவர் பதவியைப் பெற்றுக் கொண்டு இருக்க வேண்டிய பொன்சேகாவை, அரசியலுக்கு வலிந்து இழுத்து வந்தவர் ரணில். 2010ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை எதிர்த்து போட்டியிட்டு தோற்றுப் போன பின்னர், ராஜபக்ஷக்களினால் படுமோசமாக பொன்சேகா பழிவாங்கப்பட்டார். சுமார் 3 ஆண்டுகள் வரையில் சிறை வாசமும் அனுபவித்தார். தன்னுடைய அழைப்பையேற்று அரசியலுக்கு வந்து இவ்வாறு அவஸ்தைகளையும் பட்ட பொன்சேகாவுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் பதவி மற்றும் அமைச்சர் பதவியை ரணில் வழங்குவது நன்றிக்கடனாக இருக்கலாம். அப்படி உணரப்படுதலிலும் குறிப்பிட்டளவு நியாயமிருக்கின்றது. ஆனால், அந்த நன்றிக்கடன் என்கிற விடயத்தினைத் தாண்டி, தன்னுடைய அரசியல் எதிர்காலத்தினை பலப்படுத்துவது தொடர்பில் பொன்சேகாவை ரணில் கையாள நினைக்கின்றார்.
அதன்பிரகாரம், 1. போர் வெற்றிக்கான உரித்தினைத் தொடர்ந்தும் தங்களோடு வைத்துக் கொண்டிருக்கும் ராஜபக்ஷக்களிடம் இருந்து அதனை அகற்றுவதற்கும் 2. புலிகளுக்கு எதிரான இறுதி மோதல்களின் போது ஆட்சியிலிருந்த கட்சி என்கிற அந்தஸ்தினை கொண்டிருக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு கிடைத்திருக்கின்ற அபிமானத்தினை அகற்றுவதற்கும் 3. இறுதி மோதல்களின் போது நிகழ்த்தப்பட்ட போர்க்குற்றங்கள் தொடர்பில் இராணுவத்தினர் மீது வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களிலிருந்து அவர்களை விடுவிப்பதற்குமான முக்கியமான கருவியாக பொன்சேகாவை செயற்படுத்தும் எண்ணப்பாட்டின் போக்கிலாகும்.
மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதி வேட்பாளராக முன்னிறுத்தி, ராஜபக்ஷக்களை ஆட்சியதிகாரத்திலிருந்து அகற்றிவிட்ட போதிலும் தென்னிலங்கையில் போர் வெற்றிவாதமும் அது சார்பில் ராஜபக்ஷக்கள் மீது செலுத்தப்படும் கதாநாயக அபிமானமும் அவ்வளவுக்கு குறையவில்லை. விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதி மோதல்களை இராணுவத்தினர் வெற்றி கொண்டார்கள் என்கிற நிலையைத் தாண்டி ராஜபக்ஷக்களின் தனித்த வெற்றி என்கிற உணர்வே தென்னிலங்கையில் ஊட்டப்பட்டிருக்கின்றது. அதனை, அகற்றும் தேவையொன்று ரணிலுக்கு உண்டு. அது, எதிர்கால அழுத்தங்கள் சிலவற்றைக் குறைக்கும்.
அதன்போக்கிலேயே, பொன்சேகாவை வைத்துக் கொண்டு ராஜபக்ஷக்களை ஓடவிடும் முயற்சிகளை ரணில் ஆரம்பித்திருக்கின்றார். இறுதி மோதல்களின் போது ராஜபக்ஷக்களின் பங்கு என்ன, அவர்கள் போர் வெற்றிக்கான உரித்தை எடுத்துக் கொள்வதற்கு தகுதியானவர்கள் தானா, என்கிற கேள்விகளை பொன்சேகா தொடர்ந்தும் எழுப்பி வருகின்றார். இராணுவத்தினரின் முழு முனைப்புள்ள வெற்றியை தங்களுடைய சுயலாபத்துக்காக ராஜபக்ஷக்கள் எவ்வாறு பயன்படுத்திக் கொண்டார்கள் என்பது தொடர்பிலும், அதனை வைத்து அவர்கள் நிகழ்த்திய ஊழல் மோசடிகளையும் பொன்சேகாவை வைத்தே நாடாளுமன்றத்துக்குள்ளும் வெளியிலும் ரணில் வெளியிட்டு வருகின்றார்.
இறுதி மோதல்களை வழிநடத்திய இராணுவத் தளபதி என்கிற ரீதியில், பொன்சேகா முன்வைக்கும் கருத்துக்கள் தென்னிலங்கையில் தாக்கம் செலுத்த வல்லன. அவ்வளவுக்கு இலகுவாக நிராகரிக்க முடியாதவை. மெல்ல மெல்ல ராஜபக்ஷக்கள் மீதான அபிமானத்தின் அத்திவாரங்களை அது தகர்க்கும். அதுவும், பொன்சேகாவின் ஒருவகையான தான்தோன்றித்தனமான ஆளுமை என்பது, ராஜபக்ஷக்களை மிகவும் கோழைத்தனமானவர்கள் என்கிற ரீதியில், மீள மீள வலியுறுத்திக் கொண்டிருக்கின்றது. அதனைக் கடந்து வருவது தொடர்பில் ராஜபக்ஷக்களுக்கு புதிய சிக்கல் உருவாகியிருக்கின்றது.
மைத்திரி - ரணில் தலைமையில் நல்லாட்சி அராங்கம் ஆட்சி நடத்தினாலும், கட்சித் தலைவர்கள் என்கிற ரீதியில் தமது கட்சிகளைப் பலப்படுத்த வேண்டிய தேவை இருவருக்கும் உண்டு. அதன்போக்கிலான நடவடிக்கைகளை அவர்கள் எடுத்துக் கொள்வார்கள். அதன்போக்கில், ரணில் புத்திசாதுரியமான நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் கவனமாக இருக்கின்றார். குறிப்பாக, ராஜபக்ஷக்களை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு நெருக்குவாரங்களைக் கொடுக்கும் தரப்பாக தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கின்றார். இதன்போக்கிலான ரணிலின் நடவடிக்கைகளை மைத்திரி அவ்வளவு இரசிக்கவில்லை என்கிற போதிலும் அதனைக் கையாள முடியாது தவிக்கின்றார். இந்த நிலையில், ரணில் பொன்சேகாவை இணைத்துக் கொண்டு, முக்கியத்துவம் வழங்குவதையும் மைத்திரியால் இரசிக்க முடியவில்லை.
ஏனெனில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மீது தென்னிலங்கைக் கிராமங்களில் இருக்கும் அபிமானத்தினை பொன்சேகா (பாட்டலி சம்பிக்க ரணவக்க) போன்றவர்களை முன்னிறுத்தி உடைக்கலாம் என்று ரணில் கணக்குப் போட்டிருக்கின்றார். அத்தோடு, சுதந்திரக் கட்சி மீது படர்ந்துள்ள போர் வெற்றி உரித்தினையும் அகற்ற முடியும் என்றும் அவர் நம்புகின்றார். (ஜாதிக ஹெல உறுமயவின் பாட்டலி சம்பிக்க ரணவக்க, ரணிலின் அதி நேசத்துக்குரியவராக மாறி வரும் காட்சிகளும் இன்னொரு பக்கம் அரங்கேறிக்கொண்டிருக்கின்றது. அது பற்றி இன்னொரு பத்தியில் பேசலாம்.)
ஏனெனில், தென்னிலங்கைக் கிராமங்களிலிருந்து, குறிப்பாக ஏழைக் குடும்பங்களிலிருந்து வந்தவர்களே இராணுவத்தில் அதிகம். அவர்களின் பெருமளவான உயிரிழப்புக்களோடுதான் போர் வெற்றி சாத்தியப்பட்டது என்பதை வலியுறுத்திக் கூறுவதற்கான தகுதியை பொன்சேகா கொண்டிருக்கின்றார். அவர், அதனை திரும்பத் திரும்பக் கூறும் போது, அந்தக் குடும்பங்கள் ராஜபக்ஷக்களோ, சுதந்திரக் கட்சியோ, போர் வெற்றி உரித்தினைக் கோரினால் புறந்தள்ளுவதற்கான வாய்ப்புக்கள் மெல்ல உருவாகும். அது, ஐக்கிய தேசியக் கட்சிக்கு சாதகமானது.
இறுதி மோதல்களின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில், இராணுவத்தினர் மீது பாரிய குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருக்கின்றன. அந்தக் குற்றச்சாட்டுக்களிலிருந்து அவர்களை விடுவித்துக் கொள்ள வேண்டிய தேவை ரணிலுக்கு உண்டு. அது, தென்னிலங்கையில் அரசியல் அதிகாரத்தினை தக்கவைப்பதற்கும், இராணுவம் உள்ளிட்ட முப்படைக்குள் ஐக்கிய தேசியக் கட்சி மீதான அபிமானத்தை அதிகரிக்கவும் உதவும்.
அதன்போக்கில், பொன்சேகாவை அரச தரப்பு சாட்சியாக முன்வைப்பதனூடு, முக்கியமான பல விடயங்களிலிருந்து இராணுவத்தினை விடுவித்து, அந்தக் குற்றச்சாட்டுக்களுக்கு ஒரு சிலரை காரணிகளாக்கிவிட்டு தப்பித்துக் கொள்ளுதலாகும். பொன்சேகாவின் அண்மைய ஊடக, அரசியல் உரையாடல்களின் போது அவர், இறுதி மோதல்களின் போது இராணுவம் ஜெனீவா விதிமுறைகளின் பிரகாரமே நடந்து கொண்டதாகவும் இலங்கை இராணுவம் ஒழுக்கத்தில் முதற்தரமானது என்றும் தொடர்ச்சியான வலியுறுத்தி வருகின்றார்.
அத்தோடு, 'சர்வதேச மனிதாபிமான சட்டத்தை பின்பற்றுவதற்கு இலங்கை இராணுவத்தினர் பயிற்றுவிக்கப்பட்டிருக்கின்றனர். அப்படியான நிலையில், முழு இராணுவமும் குற்றமிழைத்திருப்பதான குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொள்ள முடியாது. அங்கொன்றும் இங்கொன்றுமாக சில குற்றங்கள் இடம்பெற்றிருக்கலாம். அதனைக் கண்டுபிடித்து, தண்டிக்க வேண்டியது அவசியமானது. அதன்போக்கிலேயே சர்வதேச ஆலோசகர்கள், பங்களிப்பாளர்களின் பங்களிப்பு விசாரணைகளின் போது அவசியமானது' என்றும் கூறி வருகின்றார்.
இந்த இடத்தை பலரும் தவறாகப் புரிந்து கொண்டு, சர்வதேச விசாரணையொன்றுக்கான அழைப்பை பொன்சேகா விடுத்திருக்கின்றார் என்று தமிழ் ஊடகங்களும் அரசியல் நோக்கர்கள் சிலரும் புளகாங்கிதம் அடைந்தமை கடந்த வாரங்களில் அரங்கேறின. ஆனால், சர்வதேச விசாரணையொன்றை பொன்சேகா கோரவில்லை. மாறாக, இராணுவத்தின் கடும் குற்றங்களுக்கு வெள்ளையடிக்கும் முகமான வேலைகளை மிகவும் தெளிவாகவும், திட்டமிட்ட வகையிலும் செயற்படுத்த முனைகின்றார்.
அதனை தென்னிலங்கைப் பாணியில் விபரிப்பதானால், விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதி மோதல்களை நேர்த்தியாக வழிநடத்திய தளபதி என்கிற ரீதியில், இராணுவத்துக்கு எதிரான குற்றச்சாட்டுக்களையும் வெற்றிகரமாக முறியடிப்பதற்கான முனைப்புக்களில் அவர் மீண்டும் தளபதியாக முன்னிறுத்தப்பட்டிருக்கின்றார். அதனைத்தாண்டி, நீதி நியாயம் கோருவதற்கான முனைப்பின் பக்கம் பொன்சேகா இல்லை என்பதை தமிழ் ஊடகங்கள் சில உணர்ந்து கொள்ள வேண்டும்.
பொன்சேகாவின் மீள் வருகை, ராஜபக்ஷக்களுக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் எவ்வளவு சிக்கலானதோ, அதேயளவுக்கு தமிழ்த் தரப்புக்கும் சிக்கலானது. ரணிலின் அரசியலை புரிந்து கொள்வதும் எதிர்கொள்வதும் புத்திசாலித்தனத்தோடு முன்னெடுக்கப்பட வேண்டியது. அதனை, விலகி நின்று இரசித்துக் கொண்டிருப்பதை விடுத்து, முன்வந்து எதிர்கொள்ள வேண்டிய தேவை தமிழ்த் தரப்புக்கு உண்டு. அந்த வகையில், ரணிலின் புதிய கருவியான சரத் பொன்சேகாவையும் தமிழ் தரப்பு அவதானமாக நோக்க வேண்டும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
44 minute ago
6 hours ago
15 May 2025