2025 டிசெம்பர் 18, வியாழக்கிழமை

சவூதி அரேபிய - ஈரான் முறுகல்: பகையின் வழித்தடம்

Thipaan   / 2016 ஜனவரி 14 , மு.ப. 04:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ

வீரப் பேச்சுக்கள் பொதுவாக விவேகமற்றவை. வாய்ச்சவடால்களோ, சாகசங்களோ, சவால்களோ விவேகமான நடத்தைக்கு வழிசெய்வதில்லை. வீரப் பேச்சுக்கள், உலக வரலாற்றிற் பல பேரழிவுகளுக்குக் காரணமாகியுள்ளன. அரசியலில் முக்கியமானது அறிவுடமை. அது எதேச்சாதிகாரத்திடமோ, அளவுமிகுந்த செல்வத்திடமோ இருப்பதரிது.

இன்று, சவூதி அரேபியாவுக்கும் ஈரானுக்குமிடையேயான முறுகல், மத்திய கிழக்கினதை மட்டுமன்றி, முழு உலகினதுங் கவனத்தையும் ஈர்த்துள்ளது. சவூதி அரேபியா, ஷியா மதத்தலைவர் ஷேக் அல் நிம்ர் உட்பட 47 பேருக்கு ஜனவரி 2ஆம் திகதி மரணதண்டனையை நிறைவேற்றியது. அது ஷியா பிரிவு முஸ்லிம்களின் பாரிய எதிர்ப்பைச் சம்பாதித்ததுடன் ஷியா முஸ்லிம்கள் வாழும் நாடுகளில் அதற்கெதிராக போராட்டங்களும் நடைபெற்றன.

கொல்லப்பட்ட ஷேக் அல் நிம்ர் சவூதி அரேபியாவில் சிறுபான்மையினராக உள்ள ஷியா முஸ்லிம்களின் முக்கியமான தலைவரும் சிறுபான்மையினருக்கெதிரான சவூதி அரேபிய அரசாங்க ஒடுக்குமுறைக்கெதிராகக் குரல்கொடுத்தவருமாவார்.

ஒரே நாளில் 47 பேரின் மரண தண்டனையை நிறைவேற்றியமை மனித உரிமை ஆர்வலர்களின் பலத்த கண்டனத்துக்கு உள்ளானது. அத் தண்டனைகள் 12 வெவ்வேறு சிறைச்சாலைகளில் நிறைவேறின.

அவற்றில் எட்டு இடங்களில், மரண தண்டனை விதிக்கப்பட்டோர் சிரச்சேதத்துக்குள்ளாயினர். தண்டனை நிறைவேறிய பின், தலையற்ற உடல்களைச் சிலுவையில் அறைந்து, பொதுவிடத்திற் பார்வைக்கு வைத்தனர். சவூதி ஆளுங் குடும்பத்தை எதிர்க்க நினைக்கும் எவருக்கும் இக் கதியே ஏற்படும் என்ற செய்தியைச் சொல்லவே அவ்வாறு செய்யப்பட்டது.

ஷியா பிரிவினர் பெரும்பான்மையாக வாழும் சவூதி அரேபியாவின் கிழக்குப் பகுதியில் 2011ஆம் ஆண்டு நடந்த அரசுக்கெதிரான போராட்டங்களை வழிநடத்தினார் என்ற குற்றச்சாட்டை வைத்தே ஷேக் அல் நிம்ர், கொல்லப்பட்டார். அரேபியாவில் சிறுபான்மை ஷியா இனத்தவர் மோசமான அடக்குமுறைக்கும் ஒதுக்கலுக்கும் உள்ளாவதை எதிர்த்தும் சவூதி அரேபியாவில் பொதுவாக எழுந்த ஜனநாயகப்படுதற் கோரிக்கைகட்;கு ஆதரவாகவுமே 2011ஆம் ஆண்டு போராட்டங்கள் இடம்பெற்றன.

தண்டனைகளையடுத்து, ஈரானின் தலைநகர் தெஹ்ரானில் நடந்த ஆர்ப்பாட்டங்களின் போது ஆர்ப்பாட்டக்காரர்கள் சவூதி அரேபியத் தூதரகத்தைத் தாக்கியதோடு, ஈரானின் இன்னொரு நகரான மஸ்ஹத் நகரின் சவூதி அரேபியத் தூதரக அலுவலகத்தை நெருப்புக்குண்டுகள் வீசித் தாக்கினர். இத் தாக்குதல்களில், சவூதி அரேபிய இராஜதந்திரி எவருமோ அலுவலக ஊழியர் எவருமோ ஊறுபடவில்லை.  

இந் நிகழ்வுகளையடுத்து, சவூதி அரேபியாவிலிருந்த ஈரானியத் தூதரை வெளியேறுமாறு பணித்த சவூதி அரசு, ஈரானிலிருந்த தனது தூதரை மீள அழைத்தது. இச் செயல் இரு நாடுகளதும் இராஜதந்திர உறவை முற்றாக முறிக்கப் போதுமாயிற்று. அதைத் தொடர்ந்து சவூதி அரேபியாவைப் போன்று சுன்னி மதப்பிரிவினரை ஆட்சியிற் கொண்ட பஹ்ரேன், சூடான், குவைத், ஐக்கிய அரபு இராச்சியம், கட்டார், ஜிபூட்டி, சோமாலியா ஆகியனவும் ஈரானுடன் இராஜதந்திர உறவுகளை முறித்தன.

நீண்டகாலப் பகையாக விருத்தியடைந்த ஷியா - சுன்னி முரண்பாட்டின் வெளிப்பாடாக ஊடகங்கள் இவற்றைக் காட்டுகின்றன. சவூதி அரேபியாவைப் பின்பற்றிப் பிற சுன்னி முஸ்லிம் அரபு நாடுகள் எடுத்த நடவடிக்கை இவ் விளக்கத்தை ஊக்குவித்தது. ஆனால் நெருக்கடியின் காரணங்கள் மிகவும் ஆழமானவையும் மத்திய கிழக்கில் அதிகாரத்திற்கான ஆவலின் வெளிப்பாடுகளுமாம்.

நீண்டகாலமாக உலகின் எண்ணெய் விலைகளைத் தீர்மானிக்கும் சக்தியாக சவூதி அரேபியா உள்ளது. பெற்றோலிய ஏற்றுமதி நாடுகளின் அமைப்பில் (ஒபெக்) சவூதி அரேபியா பிரதானமானது. அதேவேளை, அமெரிக்காவின் நெருங்கிய கூட்டாளியாகவுள்ள சவூதியின் நாணயமான சவூதி ரியால்  அமெரிக்க டொலருடன் இணைக்கப்பட்டுள்ளது. சவூதி அரேபியா, மத்திய கிழக்கில் அமெரிக்காவின் நம்பிக்கைக்குரிய அடியாளாகக் கடந்த அரைநூற்றாண்டுக்கு மேற் செயற்பட்டு வந்துள்ளது.

உலகளாவிய ரீதியில் இப்போது ஏற்பட்டுள்ள எண்ணெய் விலைகளின் வீழ்ச்சி சவூதி அரேபியாவை மோசமாகப் பாதித்துள்ளது. வேறெவ்வகையிலும் வருமானம் ஈட்டமுடியாது எண்ணெயை மட்டுமே நம்பியுள்ள சவூதிப் பொருளாதாரத்தின் சரிவு பாரியது. பீப்பாவொன்று 110 அமெரிக்க டொலருக்கு விலைப்பட்ட எண்ணெய் இப்போது 35 டொலருக்குப் போகிறது. கடந்தாண்டு எண்ணெய் விலை வீழ்ச்சியால் துண்டுவிழும் தொகை சவூதியின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 15 சதவீதத்துக்கும் அதிகமாகும். இந்நிலை தொடருமிடத்து, சவூதி வங்குரோத்தாக நீண்டகாலம் எடாது.

அதேவேளை, பொருளாதாரத்தைச் சரிப்படுத்துவதும் சிரமமாகியுள்ளது. பிராந்தியத்தின் ஏனைய நாடுகளில் சவூதி அரேபியா போரிடுகிறது. ஒரு புறம், சிரியாவில் அல் அசாத் ஆட்சியை மாற்றக் கிளர்ச்சியாளர்களுக்கு நிதியுதவியும் ஆயுதங்களும் அளிக்கும் அதேவேளை, உள்நாட்டுப்போர் நடைபெறும் யெமனில், குறிப்பாக ஈரானின் ஆதரவு பெறுவோரெனக் கூறும் ஹூத்தியினருக்கு எதிராக, நேரடியாகப் போரிடுகிறது. இப் படை நடவடிக்கைகள் செலவு மிக்கன. சுருங்கிவரும் சவூதி வரவுசெலவுத் திட்டத்தில் 25 சதவீதம் இராணுவத்துக்கு ஒதுக்கப்படுவதால், இவை சவூதிப்; பொருளாதாரத்திற் பாரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

கடந்தாண்டு ரஷ்ய -அமெரிக்க மோதலின் போது, ரஷ்யாவைப் பொருளாதார வழியிற் தண்டிக்குமாறு எண்ணெய் விலைகளைக் குறைக்க, சவூதி தனது எண்ணெய் உற்பத்தியை அதிகரித்தது. ரஷ்யப் பொருளாதாரமும் எண்ணெயிற் கணிசமாகத் தங்கியிருப்பதால் எண்ணெய் உற்பத்தி அதிகரிப்பால் விலைகள் குறையும். அது ரஷ்யாவுக்குப் பாதகமாகும் என எதிர்பார்த்ததற்கெதிராக, அது ரஷ்யப் பொருளாதாரத்திற் பாரிய நெருக்கடியை உருவாக்கவில்லை. மாறாக எண்ணெய் விலைகள் மோசமாகக் கீழிறங்கின. சவூதியின் இச் செயலை அவதானித்த சீனா, சவூதி எண்ணெயில் தங்கியிருப்பதன் ஆபத்தை உணர்ந்தது.

எனவே, சவூதியிடம் அதிக எண்ணெய் வாங்கும் நாடுகளில் ஒன்றான சீனா சவூதி தவிர்ந்த நாடுகளினின்றும் எண்ணெய் வாங்கத் தொடங்கியது. எனவே எண்ணெய் உற்பத்தி செய்யும் ஏனைய நாடுகளும் உற்பத்தியை அதிகரித்தன. அதுவரை, எண்ணெய் உற்பத்திக்குக் கட்டுப்பாடு இருந்தது. அக் கட்டுப்பாட்டை சவூதியே முதலில் மீறியது. எனவே ஏனைய நாடுகள் உற்பத்தியை அதிகரித்தபோது சவூதியாலோ ஒபேக் அமைப்பாலோ அதைக் கட்டுப்படுத்த இயலவில்லை. அதனாற் கேள்விக்கும் மேலாக உற்பத்தி தொடர்வதால் எண்ணெய் விலைகள் தொடர்ந்தும் குறைவாகவே உள்ளன.

இச் சிக்கலில் இருந்து சவூதி அரேபியா தப்ப வேண்டின் அதற்குள்ள ஒரே வழி, எண்ணெய் உற்பத்தியைக் குறைப்பதன் மூலம் சந்தையில் எண்ணெய் விலையை அதிகரிப்பது. ஆனால், சவூதி அரேபியா அதைச் செய்யத் தயாராயில்லை.

கடந்தாண்டு எட்டிய ஈரான் அணுசக்தி உடன்படிக்கை சவூதி அரேபியாவுக்குப் பாரிய அரசியற் பின்னடைவாகும். அவ்வுடன்படிக்கையை எதிர்த்த நாடுகளில் சவூதி அரேபியா முதன்மையானது. அவ்வுடன்படிக்கை, ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளை அகற்றி, உலகச் சந்தையில் எண்ணெய் விற்கும் வாய்ப்பையும் ஈரானுக்கு வழங்கியுள்ளது. சவூதி அதை விரும்பவில்லை. அதேவேளை, ஈரான் அப் பிராந்தியத்தின் தவிர்க்கவியலாத ஒரு சக்தியாகத் தன்னை நிறுவியுள்ளது. உற்பத்திக் குறைப்பால் அதிகரிக்கும் விலைகள் புதிதாக உலகச் சந்தைக்கு வரும் ஈரானுக்குச் சாதகமாகும் அதே வேளை, உற்பத்திக் குறைவால் ஏற்படும் கேள்வியிற் பகுதியை ஈரான் எண்ணெய் நிரப்பும். எனவே, சவூதி தனது சந்தையையும் வாங்குவோரையும் இழக்க நேரும்.

இந் நிலையில், சவூதி வேறொரு வழியை நாடுகிறது. அமைதியின்மை மத்திய கிழக்கெங்கும் பரவின், பல எண்ணெய் உற்பத்தி நாடுகட்கு எண்ணெய் உற்பத்தி இயலாமற் போகும். அதனால் சவூதி எண்ணெய்க்கான கேள்வி அதிகரிப்பதுடன் எண்ணெய் விலைகளும் உயரும். அதற்காக, இயக்கங்களுக்கு ஆதரவளிப்பதன் மூலம் மத்திய கிழக்கெங்கும் முரண்பாடுகளைப் போராக்கும் காரியத்தை சவூதி செய்ய விழைகிறது.

ஈரான் அணுசக்தி உடன்படிக்கையை சவூதி அரேபியா சீரணிக்க முடியாமைக்கு வேறு காரணங்களும் உள்ளன. ஒருபுறம் அதன் மிகுந்த நம்பிக்கைக்குரிய கூட்டாளியான அமெரிக்கா, சவூதி எதிர்ப்பையும் மீறி அவ்வுடன்படிக்கையைச் செய்தமை அமெரிக்காவின் நிபந்தனையற்ற ஆதரவைக் கேள்விக்குள்ளாக்கியுள்ளது.

குறிப்பாக, அமெரிக்கா, ஈராக்கில் சுன்னி பிரிவினரான சதாம் ஹூசைனைப் பதவியிலிருந்து அகற்றி ஷியா பிரிவினரின் கைகளில் ஆட்சியை அளித்தமை, அமெரிக்கா, ஷியாக்களை ஆதரிக்கிறதா என்ற சந்தேகத்தை உருவாக்கியுள்ளது. எனவே, மேலும் வலிமையுடன் எழுச்சி பெறும் ஈரானை ஆத்திரமூட்டி வலுச்சண்டைக்கிழுத்து, அமெரிக்க ஆதரவை முழுமையாகப் பெறுவதன் மூலம் அமெரிக்காவை ஈரானுக்கெதிரான போருள் இழுக்க முனைகிறது.

ஷியா மதத் தலைவர் ஷேக் அல் நிம்ரின் மரணதண்டனையை இப்பின்னணியிலேயே நோக்க வேண்டும். அவருடைய மரண தண்டனையின் மோசமான பின்விளைவுகளை அறிந்தே சவூதி தண்டனையை நிறைவேற்றியது. அதனாலேயே ஈரானில் உள்ள தூதரகம் தாக்கப்பட்டவுடனேயே இராஜதந்திர உறவுகளை முறிப்பதாக சவூதி அறிவித்தது.

இச் செயல் அரசியலில் மட்டுமன்றிப் பொருளாதாரத்திலும் பாரிய பின்விளைவுகளைக் தருவது. சவூதிக்கு எண்ணெய்கப்பால் வருமானத்தை ஈட்டுவது, ஹஜ் மற்றும் உம்ரா தொழுகைகட்கான யாத்திரைகளாகும். 100,000 ஈரானியர்கள் ஹஜ் தொழுகைக்காகவும் 500,000க்கு அதிகமானோர் உம்ரா தொழுகைக்காகவும் ஆண்டுதோறும் வருகிறார்கள். இப்போது, ஈரான் அரசு தனது குடிமக்கள் அவ் வழிபாடுகட்காக சவூதிக்குச் செல்லத் தடைவிதித்துள்ளது. இதனால், சவூதிக்கு மூன்று பில்லியன் அமெரிக்க டொலர் வருமான இழப்பு ஏற்படும் என ‡போர்ப்ஸ் சஞ்சிகை கணக்கிட்டுள்ளது.

சவூதி அரேபியா உலகெங்கும் பரப்ப நினைக்கும் வகாபிசத்துக்கு எதிர்ப்புச் சக்தியாக ஈரான் உள்ளது. மறுபுறம், யெமனில் முன்னேறும் ஈரானுக்கு அனுதாபமான ஹுத்திகட்கெதிரான சவூதி விமானத் தாக்குதல்களும் பிற இராணுவ நடவடிக்கைகளும் எதிர்பார்த்த வெற்றியை அளிக்கவில்லை.

எனவே, சவூதி ஒரு புதிய எதிரியைத் தனக்கருகில் உருவாக்கியுள்ளது. சவூதி அரேபியாவை சுன்னி மதப்பிரிவினர் ஆண்டாலும் பெரும்பாலான எண்ணெய் வயல்கள் ஷியாக்கள் பெரும்பான்மையாயுள்ள சவூதியின் கிழக்கு மாநிலத்திலேயே உள்ளன. இப்போது புதிய கட்டத்தை அடைந்துள்ள சவூதி - ஈரான் முறுகல், சுன்னி - ஷியா மோதலாகி, அது போராகுமாயின் சவூதியின் கிழக்கு மாநிலம் பிரிந்து தனிநாடாகலாம். அது சவூதி அரேபியாவின் கதையின் முடிவாகலாம்.

இன்று சவூதி அரேபியா பிராந்தியத்தில் வலுச்சண்டைக்குத் தயாராகிறது. சில நாடுகள் அதற்குத் தூபமிட்டு ஈரானைத் தாக்கத் தருணம் பார்த்திருக்கின்றன. இம் முறுகல் போராவதை விரும்பாவிடினும், ஈரான் அதற்கும் தயாராக இருக்கிறது. ஈரானின் தரப்பில் ரஷ்யாவும் சீனாவும் நிற்கின்றன.

கெடுகுடி சொற்கேளாதல்லவா, இறுதியில் சொற்கேளாத் தறுதலையை வளர்த்து ஆதரித்த பயனை அமெரிக்கா அனுபவிக்க நேரும்.    


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X