Thipaan / 2016 ஜனவரி 07 , மு.ப. 04:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
கனகலிங்கம் கோபிகிருஷ்ணா
மத்திய கிழக்குப் பிராந்தியம், கடந்த சில வருடங்களாகவே, குழப்பமானதாகவும் முரண்பாடுகள் கொண்டதாகவும் காணப்பட்டு வந்திருக்கிறது. அரேபிய வசந்தம் மூலமாக ஏற்படுத்தப்பட்ட 'ஜனநாயகம்' என்பது, மத்திய கிழக்கில் வகுப்புவாதப் பிரச்சினைகளையும் ஏற்படுத்திவிட்டிருந்தது. ஆனால், அதற்கு முன்னரே, நூற்றாண்டுக்கணக்காக, மத்திய கிழக்கு முரண்பாடுகள் காணப்பட்டே வந்திருக்கின்றன என்பது குறிப்பிடப்பட வேண்டியது. அது, இஸ்ரேல் பற்றியதாக சில முரண்பாடுகளைக் கொண்டிருந்த போதிலும், அதைவிட, பிராந்தியத்துக்கான பல போட்டிகளையும் கொண்டு வந்திருக்கின்றது.
இந்நிலையில் தான், இந்த வருடத்தின் ஆரம்பமே, புதிய வகையான, புதிய வடிவிலான மத்திய கிழக்குப் பிரச்சினையோடு தொடங்கியிருக்கின்றது. மத்திய கிழக்கின் பலவான்கள் என்று சொல்லப்படக்கூடிய சவூதி அரேபியாவுக்கும் ஈரானுக்குமிடையில் ஏற்பட்டுள்ள முறுகல் தான் அது. அப்பிரச்சினையைப் பார்ப்பதற்கு முன்னர், இரு நாடுகளினதும் பின்புலங்களைச் சுருக்கமாக ஆராய்தல் பொருத்தமானது.
இரண்டு நாடுகளையும் ஒப்பிடும்போது, சவூதி அரேபியா என்பது மிகவும் செல்வந்த நாடு. சுன்னி முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட இந்நாடு, அமெரிக்காவின் நேச நாடு ஆகும். பல்வேறுபட்ட மனித உரிமைகள் மீறல்களைக் கொண்டிருந்தாலும், இன்னமுமே சவூதி அரேபியாவை நேச நாடாக அமெரிக்கா கருதுவதற்கு, அதன் செல்வமும் எண்ணெயுமே காரணமாகும். அத்தோடு, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் சுயாதீன நிபுணர்களுக்கான முக்கிய உபகுழுவொன்றின் தலைமைப் பதவியையும் சவூதி வகிக்கின்றது.
ஈரானைப் பொறுத்தவரை, ஷியா முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட நாடு. சவூதி அரேபியா போன்றே, மனித உரிமைகள் விவகாரத்தில் மோசமானதொரு வரலாற்றைக் கொண்ட நாடு. ஆனால், சவூதியைப் போலல்லாது, அமெரிக்காவின் ஆதரவு, ஈரானுக்குக் கிடையாது. ஆகவே, ஈரான் மீதான குற்றச்சாட்டுகள், ஐ.நா தடைகள், அதிகமாக ஏற்படுவது வழக்கம். அணுசக்திப் பலமுடைய ஒரு நாடு ஆகும். அமெரிக்காவின் ஆதரவு மாத்திரம் இருந்திருந்தால், சவூதி அரேபியாவை விஞ்சக்கூடிய, மிலேச்சத்தனமான நாடாக உருவாகக்கூடிய பண்புகளைக் கொண்ட நாடு ஆகும்.
சில நாட்களுக்கு முன்னர், ஜனவரி 2ஆம் திகதி, சவூதி அரேபியாவால் நிறைவேற்றப்பட்ட மரண தண்டனை தான், புதிய பிரச்சினைகளுக்குக் காரணமாக அமைந்திருக்கிறது. பல்வேறு குற்றச்சாட்டுகளின் பேரில் கைது செய்யப்பட்டு, மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த 47 பேருக்கான மரண தண்டனையை, அன்றைய தினம் நிறைவேற்றியிருந்தது. அவ்வாறு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டவர்களில், ஷேக் நிம்மர் அல்-நிம்மர் என்ற ஷியா மதகுருவும் உள்ளடங்குகிறார். அவரது மரணம் தான், இரு நாடுகளுக்குமிடையிலான பிரச்சினையைத் தொடங்கி, தற்போது மத்திய கிழக்கின் நிலைத்த தன்மைக்கே கேள்வி வைக்குமளவுக்கு மாறியிருக்கிறது. யார் இந்த ஷேக் நிம்மர் அல்-நிம்மர்?
சவூதி அரேபியாவில் பிறந்த இவர், ஷியாக்களின் முக்கிய தலைவர்களில் ஒருவராகக் காணப்பட்டார். அந்நாட்டில், அரசாங்கத்துக்கெதிரான எதிர்ப்பு நடவடிக்கைகள் காலங்கலமாக இடம்பெற்றுவரும் நிலையில், அவ்வாறானதொரு எதிர்ப்பைக் கொண்டிருந்தவர் தான் இந்த அல்-நிம்மர். சவூதியில் தேர்தல்கள் இடம்பெற வேண்டுமெனக் கோரிக்கை விடுத்த இவர், ஷியாக்களின் உரிமைகளை அந்நாடு மதிக்காவிட்டால், கிழக்கு மாகாணம் பிரிந்துசெல்ல வேண்டுமெனவும் தெரிவித்திருந்தார். 2004ஆம், 2006ஆம் ஆண்டுகளில் கைது செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டிருந்த அவர், அதன்போது கடுமையாகத் தாக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவித்தன. ஆனால், இரு முறையும் அவர் விடுவிக்கப்பட்டிருந்தார். 2009ஆம் ஆண்டு, அவருக்கெதிராக மீண்டும் பிடிவிறாந்து பிறக்கப்பட்டது. இறுதியில், 2012ஆம் ஆண்டு மீண்டும் கைது செய்யப்பட்டார். ஷியா முஸ்லிம்களுக்கும் அதிகாரிகளுக்குமிடையிலான மோதலில், ஷியாக்கள் சார்பாக வெடிபொருட்கள் பயன்படுத்தியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டது. ஆனால், அதை அல்-நிம்மர் வரவேற்றிருக்கவில்லை. 'துப்பாக்கிச் சன்னங்களை நாங்கள், வார்த்தைகளின் கர்ச்சிப்பினால் எதிர்கொள்ள வேண்டும், வன்முறையால் அல்ல' என அவர் வலியுறுத்தியிருந்தார். இருந்த போதிலும், கைது செய்யப்பட்ட அவருக்கு, 2014ஆம் ஆண்டு மரண தண்டனை விதிக்கப்பட்டு, இவ்வாண்டு ஜனவரி 2ஆம் திகதி, மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
ஈரானினது தூண்டுதலின் பேரில் தான் அவர் செயற்படுகிறார் என சவூதி அதிகாரிகள் குற்றஞ்சாட்டியிருந்த போதிலும், அதை அவர் மறுத்திருந்தார். எனினும், நிம்மருக்கான ஆதரவை, ஈரான் வழங்கியிருந்தது. குறிப்பாக, மரண தண்டனை விதிக்கப்பட்டபோது, அதற்கெதிராக முதலில் குரல்கொடுத்த நாடுகளில், ஈரானும் ஒன்று. உண்மையில், ஈரானின் தூண்டுதலில்தான் செயற்பட்டாரா என்பது உறுதிப்படுத்தப்பட முடியாத ஒன்று. ஆனால், அல்-நிம்மர் விவகாரத்தில் ஈரான் அதிகமாக ஈடுபாட்டை வெளிப்படுத்தியமைக்கான முக்கியமான காரணம், சுன்னி - ஷியா முரண்பாடுகள்.
சுன்னி, ஷியா இரண்டுமே இஸ்லாத்தின் இரண்டு பிரிவுகளாகும். இதில், சுன்னி இனத்தவரே பெரும்பான்மையானவர்களாக இருக்கின்றனர். இஸ்லாத்தின் வரலாறு தொடர்பில் காணப்படும் வேற்றுமையே என்றாலும், அதன் பின்னர், இது, மாபெரும் வேற்றுமையாக மாறிக் கொண்டது. இரு பிரிவினருக்குமிடையிலான உறவு, இன்னமும்கூட, மிகவும் பாதிக்கப்பட்டதாகவே காணப்படுகிறது.
சவூதி அரேபியாவைப் பொறுத்தவரை,
ஷியா முஸ்லிம்களை அடக்கி, ஒடுக்குகின்தென்ற குற்றச்சாட்டுக் காணப்பட்டே வந்திருக்கிறது. அவ்வாறான சந்தர்ப்பங்களையும் பட்டியலிட முடியும். அதையும் தாண்டி, அரசாங்கத்துக்கெதிரான, மன்னர் ஆட்சிக்கெதிரான கருத்துகளையும் கூட, அது ஒடுக்கியே வந்திருக்கிறது. அதேபோல், இஸ்லாத்தை விட்டு விலகுவோர், மதச்சார்பற்ற கருத்துகளைக் கொண்டிருப்போரையும் அது விட்டுவைத்ததில்லை. இதில், ஈரானொன்றும் சிறந்த நாடு கிடையாது. அந்நாடு சுன்னி முஸ்லிம்களை பாகுபாட்டுக்கு உட்படுத்துகிறது என்பதற்கான குற்றச்சாட்டுகள் இருந்தாலும், சவூதி அரேபியா அளவுக்குப் பாகுபாடு இருக்கிறதா என்பது கேள்விக்குறியானது தான். ஆனால், மேலே சொல்லப்பட்ட ஏனைய அனைத்து விடயங்களையும் ஈரானும் பின்பற்றுகிறது.
இப்போதும், இந்த விடயத்தில் ஈரான் கவனத்தில் எடுத்துக் கொண்டது, மனித உரிமைகள் மீறல் அல்லது, மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட 47 பேரும் நியாயமான விசாரணைகளை முன்னெடுக்கவில்லை என்பதற்காகவல்ல. உண்மையில், கொல்லப்பட்ட ஏனைய 46 பேர் பற்றி, ஈரானால் எந்தவொரு வார்த்தையும் உதிர்க்கப்படவில்லை. அவர்களை ஒரு பொருட்டாகக் கூட ஈரான் மதித்திருக்கவில்லை. அந்நாட்டைப் பொறுத்தவரை, கொல்லப்பட்ட ஷியா மதகுரு மாத்திரமே பிரச்சினைக்குரியவர் ஆவார். ஆகவே, இதுவொன்றும் நியாயத்தின்பால் அல்லது மனித உரிமைகள் மீதான மதிப்பின்பால் ஏற்பட்ட எதிர்ப்புக் கிடையாது. வெறுமனே, இனக்குழும முரண்பாடுகளால் ஏற்பட்டது தான். அதற்காக, சவூதி அரேபியாவை ஆதரித்துவிட முடியாது. ஜனநாயக முறையிலான எதிர்ப்புகளை மரண தண்டனைகளைக் கொண்டு அடக்குவதென்பது, ஏற்றுக் கொள்ளப்பட முடியாத ஒன்று.
இந்த மரண தண்டனைகளைத் தொடர்ந்து, உலகின் ஷியாக்கள் வாழும் பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதில், ஈரான் தலைநகர் தெஹ்ரானில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில், சவூதி அரேபியத் தூதரகம், எரியூட்டப்பட்டது. அந்த நேரத்தில், அங்கு யாரும் இருந்திருக்கவில்லையென்பதால், உயிர்ச் சேதங்கள் ஏற்பட்டிருக்கவில்லை. துணைத்தூதரகமொன்றும் எரியூட்டப்பட்டிருந்தது.
இது தான், இரு நாடுகளுக்குமிடையிலான புதிய பிரச்சினையை ஏற்படுத்திவிட்டது. தூதரகம் தாக்கப்படலாம் என்று ஏற்கெனவே எச்சரித்திருந்ததாகவும், அதைப் பாதுகாக்க ஈரான் தவறிவிட்டதாகவும் சவூதி குற்றஞ்சாட்டுகிறது. ஆர்ப்பாட்டக்காரர்கள் எரியூட்டிய பின், அதைச் செய்தவர்களைக் கைது செய்துள்ளதாக, ஈரான் கணக்குக் காட்டுகிறது. எரியூட்டப்பட்டமைக்கு எதிராக, சுன்னி முஸ்லிம்களால் ஆளப்படும் சவூதி அரேபியா, பஹ்ரைன், சூடான், ஐக்கிய அரபு அமீரகம், குவைத் ஆகியன, இராஜதந்திர உறவுகளைத் துண்டித்தோ, தரமிறக்கியோ அல்லது தூதுவரை மீள அழைத்தோடு, எதிர்ப்பை வெளிக்காட்டியிருக்கின்றன.
இது, இந்நாடுகளுக்கான முரண்பாட்டையும் தாண்டி, ஒட்டுமொத்த மத்திய கிழக்கையும் பாதிக்கும் அபாயம் காணப்படுகிறது. குறிப்பாக, சிரியா பிரச்சினைக்கான தீர்வைக் காணும்பொருட்டு, பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், ஈரானும் சவூதி அரேபியாவும் மோதிக் கொள்வதோடு, குழுக்களாகப் பிரிந்து கொள்வதென்பது, அப்பேச்சுவார்த்தைகளைப் பாதிக்குமென்பதோடு, சிரியாவில் உயிரிழப்புகளை அதிகரிக்கவே செய்யும். அதேபோல் தான் யேமன் தொடர்பான பிரச்சினையும். இவையெல்லாவற்றையுமே, அல்-நிம்மருக்கு மரண தண்டனையை நிறைவேற்றும்போது சவூதி அரேபியா எதிர்பார்த்திருக்காதா என்பதே தற்போது இருக்கிற கேள்வி. அவரைத் தூக்கிலிடுவதன் மூலம், இவற்றை எதிர்பார்க்காமல், மூடத்தனமான வேலையை சவூதி செய்ததாக ஒரு சாரார் தெரிவிக்கின்றனர். மறுசாராரின் கருத்து, முக்கியமானதொன்று. சவூதியைப் பொறுத்தவரை, இதை எதிர்பார்த்துத் தான், மரண தண்டனையை அது நிறைவேற்றியது. மரண தண்டனை மூலம், ஷியாக்களின் எதிர்ப்பு ஏற்படும். அதனைத் தொடர்ந்து,
ஷியாக்களுக்கெதிராக சுன்னி முஸ்லிம்களை ஒன்று சேர்க்க முடியும். இதன்மூலம்,
ஷியாக்களுக்கெதிரான பாகுபாட்டை நிறுத்தச் சொல்லும் போராட்டங்களை அடக்க முடியுமென்பது, அந்நாடு போடும் கணக்கு என்கின்றனர். சவூதியின் மனித உரிமைகள் வரலாற்றை வைத்துப் பார்த்தால், இக்கணக்கும் சரியாகத் தான் இருக்கிறது.
13 minute ago
41 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
41 minute ago
2 hours ago