Thipaan / 2015 செப்டெம்பர் 28 , மு.ப. 07:57 - 0 - {{hitsCtrl.values.hits}}

மூன்று திராவிட இயக்கங்களும் தமிழகத்தில் சவாலை சமாளிக்கின்றன. காங்கிரஸை வீழ்த்தி தமிழகத்தில் 1967இல் திராவிட இயக்க ஆட்சிக்கு வித்திட்ட இந்த இயக்கங்கள், இன்னும் எஞ்சியிருக்கும் எத்தனை வருடங்களுக்கு கொடி கட்டி பறக்கப் போகின்ற என்ற கேள்வி பிறந்திருக்கிறது.
திராவிட முன்னேற்றக் கழகம், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் என, மூன்று தேர்தலைச் சந்திக்கும் திராவிடக் கட்சிகள் தமிழகத்தில் இருக்கின்றன. அவற்றுள் தி.மு.க. ஐந்து முறை ஆட்சிக்கு வந்து விட்டது. அ.தி.மு.க மூன்று முறை ஆட்சிக்கு வந்து விட்டது. ஆனால், ம.தி.மு.க இன்னும் ஒருமுறை கூட ஆட்சிக்கு வர முடியவில்லை.
இன்றைக்கு இந்த மூன்று இயக்கங்களில் முதல் இயக்கத்துக்கு கலைஞர் கருணாநிதி தலைவராக இருக்கிறார். இரண்டாவது இயக்கத்துக்கு முதல்வர் ஜெயலலிதா தலைவராக இருக்கிறார். மூன்றாவது இயக்கமான ம.தி.மு.க.வுக்கு வைகோ பொதுச் செயலாளராக இருக்கிறார். தேர்தல் தோல்விகள் இந்த இயக்கங்களை வீழ்த்தியது இல்லை. 1977, 1991, 2011ஆம் ஆண்டுகளில் இடம்பெற்ற சட்டமன்றத் தேர்தல்களில்
படுதோல்வியைச் சந்தித்த தி.மு.க. வீழ்ந்து விடவில்லை. அதே போல் 1996, 2006 ஆகிய சட்டமன்றத் தேர்தல்களில் படுதோல்வியைச் சந்தித்த அ.தி.மு.கவும் இளைத்துப் போகவில்லை. ஆனால், ஆட்சியைப் பிடிக்க முடியாத ம.தி.மு.கவும் உறுதியாகவே இருந்தது.
இந்த காட்சிகள் எல்லாம் இன்றைக்கு மாறுகிறது. தி.மு.க.வில் கலைஞர் கருணாநிதியை இளைஞர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்ற சிந்தனை சிறகடித்துப் பறக்கிறது. அதனால் ஸ்டாலினை முன்னிறுத்தி அக்கட்சி இப்போது கூட 'நமக்கு நாமே' என்று பயணத்தை தொடங்கி விட்டது. முதல் கட்டமாக கடந்த 20ஆம் திகதி கன்னியாகுமரியில் தொடங்கிய 'நமக்கு நாமே' பயணம் ஒக்டோபர் 2ஆம் திகதி திருச்சியில் நிறைவு பெறுகிறது. அதன் பின்னர், இரு கட்டங்களில் 'நமக்கு நாமே பயணம் நடக்கவிருக்கிறது. நேராக மக்களிடம் செல்வோம் என்ற முடிவுக்கு வந்த ஸ்டாலின் ஒவ்வொரு மாவட்டத்திலும் பலதரப்பட்ட மக்களை சந்தித்து வருகிறார்.
ஆனாலும் அவரை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு மனசு இல்லை. 'நானே முதல்வர் வேட்பாளர்' என்று 92 வயதில் அடம்பிடித்துக் கொண்டிருக்கிறார் கலைஞர் கருணாநிதி. இந்த முதல்வர் வேட்பாளர் பிரச்சினையும் சரி, தி.மு.கவின் அடுத்த தலைவர் ஸ்டாலின் என்பதிலும் ஏற்படும் குளறுபடிகள் திராவிட முன்னேற்றக் கழகம் என்ற இயக்கத்தை சிக்கலில் மாட்டி வைத்திருக்கிறது. ஒரு கட்சியில் 'தலைமை மாற்றம்' நடைபெறும் போது நடக்கும் குளறுபடிகள்தான் தி.மு.க.விற்குள் நடக்கிறது என்றாலும், கலைஞர் கருணாநிதியின் குடும்பத்தில் உள்ளவர்களால் நடக்கும் குழப்பங்கள் அக்கட்சியின் எதிர்காலத்துக்கு பெரும் ஆபத்தை உருவாக்கியிருக்கிறது. சட்டமன்றத் தேர்தலுக்கு தி.மு.க.வின் தெளிவான பாதை என்ன என்பதில் பல்வேறு தடைக்கற்கள் கிடக்கின்றன.
அதை அப்புறப்படுத்தி விட்டு தேர்தலை சந்திக்க மு.க. ஸ்டாலினுக்கு இன்னும் தைரியம் வரவில்லை. தன் தந்தையின் மீது உள்ள பாசத்தால் அந்த தைரியம் வரவில்லையா அல்லது எப்படியும் தலைமைப் பொறுப்பு தனக்குத்தான் வரும் என்ற நம்பிக்கையா என்பது தெரியாமல் முதல் திராவிட இயக்கமாக இருக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தில் குத்துச் சண்டை உருவாகியிருக்கிறது.
இதற்கு சற்றும் சளைத்தது இல்லை அ.தி.மு.க என்ற நிலை உருவாகியிருக்கிறது. அ.தி.மு.கவின் தலைமைப் பொறுப்பை இப்போது முதல்வர் ஜெயலலிதா ஏற்று நடத்தி வருகிறார். அவர்தான் அ.தி.மு.க என்ற நிலை இருக்கிறது. ஆனால், எம்.ஜி.ஆருக்குப் பின்னரே அ.தி.மு.க பல்வேறு சவால்களை சந்தித்துத்தான் இறுதியில் முதல்வர் ஜெயலலிதா தலைமையின் கீழ் அ.தி.மு.க வந்தது. 'சேவல் சின்னத்திலும்' 'புறா சின்னத்திலும்' தனித் தனியாக 1989 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த அ.தி.மு.க பின்னர்தான் ஜெயலலிதா தலைமையில் ஒன்று சேர்ந்தது. தி.மு.க.வில் எப்படி இரண்டாம் கட்ட தலைவர்கள், அதுவும் செல்வாக்கு உள்ள தலைவர்கள் இல்லையோ அதே நிலைமைதான் அ.தி.மு.கவிலும்.
அ.தி.மு.க என்ற கட்சி தி.மு.க.வைப் போல் கடுமையான திராவிட இயக்கக் கொள்கைகளின் பிடியில் நிற்கும் கட்சி அல்ல. தி.மு.க.வில் தலைமைக்கு தெரியாமல் சாமி கும்பிட்டால், அ.தி.மு.கவில் தலைமையின் பிறந்த நாளைக்கு வெளிப்படையாகவே தங்க தேர் இழுப்பது உள்ளிட்ட திருக்கோயில் காட்சிகளுக்கு பஞ்சமிருக்காது. அதே போல் 'இந்தி மொழி விவகாரத்திலும்' தி.மு.கவுக்கு முன்பு இருந்தது போன்ற நிலைப்பாடு அ.தி.மு.கவுக்கு இல்லை. சமஸ்கிருத எதிர்ப்பும் தி.மு.க.வுக்கு இருப்பது போல் அ.தி.மு.கவுக்கு இல்லை. இந்ச சூழ்நிலைகள் எல்லாவற்றையும் பார்த்தால் திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து வித்தியாசமான திராவிட இயக்கமாக அ.தி.மு.க இருக்கிறது.
அக்கட்சிக்கு குடும்பத்தால் பிரச்சினை இல்லை என்பது ஒரு சாதகமான அம்சம் என்றாலும், இன்றைக்கு அ.தி.மு.க தலைமையை சவாலுக்கு இழுக்கும் வேலைகளை பாரதிய ஜனதாக் கட்சி செய்து கொண்டிருக்கிறது. சென்ற நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. தலைமையில் தனி கூட்டணி அமைத்து 19 சதவீத வாக்குகளைப் பெற்றது. அந்த வாக்குகள் சென்ற நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.கவுக்கு பாதகமாக போனாலும், சட்டமன்றத் தேர்தலில் அப்படியொரு கூட்டணி உருவானால் அ.தி.மு.கவுக்குத்தான் பாதகமாக அமைந்து விடும். அதனால் இரு திராவிடக் கட்சிகளில் ஒன்றை கணக்கு முடிக்க வேண்டும் என்று பா.ஜ.க துடித்துக் கொண்டிருக்கிறது.
இரு திராவிடக் கட்சிகளில் அ.தி.மு.கவில் இருக்கும் வாக்குகள் தான் பா.ஜ.க.வின் கொள்கைக்கு ஏற்ற வாக்கு வங்கி என்றாலும், இப்போதைக்கு வீக் ஆக இருக்கிறது என்று நினைக்கும் தி.மு.க.வை கார்னர் பண்ண வேண்டும் என்று வியூகம் அமைத்துச் செயல்படுகிறது பா.ஜ.க. 2-ஜி வழக்கில் புதிய விசாரணை, தயாநிதி மாறன் மீது தீவிர சி.பி.ஐ. விசாரணை எல்லாம் இந்த திசையை நோக்கித்தான் போகிறது. அந்த வகையில் பார்த்தால் இப்போது இருக்கின்ற அ.தி.மு.க என்ற திராவிட இயக்கத்துக்கும் பா.ஜ.க.வால் அச்சுறுத்தல் இருக்கிறது என்பதில் சந்தேகமில்லை.
அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் 'உண்மையான திராவிட இயக்கம் இல்லை' என்ற கோஷத்தை ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ எடுத்திருக்கிறார். ஆனால், அந்த கோட்பாட்டுக்கு சற்றும் ஒத்து வராத வகையில் அவரது கட்சி உடைந்து கொண்டிருக்கிறது. இதுவரை எந்த சட்டமன்றத் தேர்தலிலும் அவர் வெற்றிக் கூட்டணி அமைக்கவில்லை. அதனால் அவரை நம்பி சேர்ந்த திராவிட இயக்கத்தினர் ஏறக்குறைய 22 வருடங்களாக எந்த எம்.எல்.ஏ. பதவியும் அனுபவிக்க முடியாமல் தவிக்கிறார்கள்.
இந்த முறையும் நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்து விட்டு, தேர்தல் முடிவுகள் வெளிவந்த கையோடு அக்கூட்டணியை விட்டு வெளியேறி விட்டார் வைகோ. அந்த வகையில் பார்த்தால் ஏறக்குறைய 13 வருடங்களாக அவரது கட்சியினர் மாநில அதிகாரத்திலும் பலன் அடையவில்லை. மத்திய அதிகாரத்திலும் பலன் அடையவில்லை.
அதனால் 'இந்தக் கட்சியில் இனியும் இருந்த என்ன பிரயோஜனம்' என்ற கேள்வி ம.தி.மு.கவில் உள்ள அனைத்து முக்கியத் தலைவர்கள் மனதிலும் எழுந்துள்ளது. குறிப்பாக தி.மு.கவுடன் கூட்டணி என்றும் பிறகு கூட்டணி இல்லை என்றும் மூன்று மாதங்களுக்குள் பல்டி அடித்த வைகோவின் நம்பகத்தன்மை அரசியலில் கேள்விக்குறியாகி விட்டது.
அவரது கட்சியினர் மத்தியில் பெரும் கேள்வியாகி விட்டது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் 'வருங்கால முதலமைச்சர்' என்று போற்றி முழக்கமிடப்பட்ட வைகோ இப்போது 'என் வழி பெரியார் வழி' என்கிறார். பெரியார் வழி என்றால் தேர்தலில் போட்டியிடாத வழி என்பதுதான் தமிழகத்தில் உள்ள நிலைமை. அப்படியென்றால் இனி ம.தி.மு.க வெற்றிக் கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிடாதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
2011 சட்டமன்றத் தேர்தலை புறக்கணித்தார் வைகோ. 2014ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் 8 தொகுதிகளில் போட்டியிட்டு அனைத்து தொகுதிகளிலும் ம.தி.மு.க தோல்வியடைந்தது. இப்போது 2016 சட்டமன்றத் தேர்தலுக்கு 'தி.மு.க.வும் இல்லை. அதிமுகவும் இல்லை' என்று கூறிவிட்டு மக்கள் நலக் கூட்டு இயக்கம் சார்பில் கூட்டணி என்று அறிவித்துள்ளார் வைகோ. இது ம.தி.மு.கவினரிடையே அவநம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. அதன் விளைவாக மூன்றாவது திராவிட இயக்கமாக அறியப்பட்ட ம.தி.மு.கவுக்கு இப்போது சிக்கல் முளைத்திருக்கிறது.
ஆக, மூன்று திராவிட இயக்கங்களுமே தமிழகத்தில் கடுமையான குழப்பத்தில் மூழ்கிக் கிடக்கின்றன. இதைப் பயன்படுத்தி 'திராவிடக் கட்சிகளை' ஒழிப்போம் என்று ஒரு பக்கம் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் டாக்டர் ராமதாஸ் களத்தில் குதித்துள்ளார். இன்னொரு பக்கம் பாரதிய ஜனதா கட்சி தேர்தல் குஸ்திக்கு தயாராகிறது. இவர்கள் இந்த மூன்று திராவிட இயக்கங்களையும் எந்த அளவுக்கு சோதனைக்கு உள்ளாக்கப் போகிறார்கள் என்பது ஒரு பக்கமிருந்தாலும், 2016இல் நூற்றாண்டு விழாக் காணும் திராவிட இயக்கம் சவாலை சந்திக்கிறது என்பதில் துளியும் சந்தேகமில்லை.
2 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
4 hours ago