Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 17, சனிக்கிழமை
முகம்மது தம்பி மரைக்கார் / 2017 ஓகஸ்ட் 15 , மு.ப. 09:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
“நான் ஒரு திருடனல்ல” என்று, இந்த நாட்டிலிருக்கும் எத்தனை அரசியல்வாதிகளால் கூற முடியும் என்று, அமைச்சர் மனோ கணேசன் கேள்வியொன்றை முன்வைத்திருக்கின்றார். சில நாட்களுக்கு முன்னர் நிகழ்வொன்றில் உரையாற்றும் போது, இதை அவர் கேட்டிருந்தார்.
மேலும், தன்னால் அவ்வாறு கூற முடியும் என்றும் அவர் தெரிவித்திருந்தார். மனோ கணேசனின் கேள்வியிலுள்ள தீவிரத் தன்மையும் நையாண்டியும் கவனத்துக்குரியன.
அரசியல்வாதிகளிடையே மலிந்து கிடக்கும், ஊழல் மற்றும் மோசடிகள் குறித்து, அதேதுறைக்குள் இயங்கிக் கொண்டிருக்கும் ஒருவரின் சாட்சியமாகவும் இதைப் பார்க்க முடிகிறது.
அரசியல் என்பது இப்போது, பெரும் வியாபாரமாக மாறிவிட்டது. தேர்தலொன்றில் வெற்றியீட்டுவதற்காக, அபேட்சகர் ஒருவர் செலவிடும் தொகையைத் தெரிந்து கொள்ளும் சாதாரண மக்களுக்குத் தலை சுற்றும். உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் கூட, தமது வெற்றி இலக்கை அடைந்து கொள்ளும் பொருட்டு, கோடிகளில் செலவு செய்கின்றனர்.
பதவிக்கு வந்த பிறகு, விட்ட தொகையை ‘எப்படியோ’ பல மடங்காகச் சுருட்டிக் கொள்கின்றனர். அதனால், அநேகமான அரசியல்வாதிகள், திருடர்களாக மாற வேண்டியுள்ளது. இதை மிக அருகிலிருந்து கண்டுகொண்டவர் என்பதால்தான், “நான் ஒரு திருடனல்ல” என்று, எத்தனை அரசியல்வாதிகளால் கூற முடியும் என, மனோ கணேசன் கேட்கிறார்.
மத்திய வங்கியின் சர்ச்சைக்குரிய பிணை முறி விவகாரத்தில் 01 இலட்சம் கோடி ரூபாய்களுக்கும் அதிகமான தொகை, மோசடி செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தத் தொகைக்கு எத்தனை பூச்சியங்கள் வரும் என்பதைக் கணிப்பதற்கே கஷ்டமாக உள்ளது.
இவ்வளவு பெரிய மோசடியுடன் சம்பந்தப்பட்டவர்கள் யார் என்பதுதான் இப்போதுள்ள கேள்வியாகும். அரசியல்வாதிகளில் ரவி கருணாநாயக்க மட்டும்தான் தற்போதைக்குச் சந்தேக நபராகக் குறிப்பிடப்பட்டுள்ளார். அவரிடம் விசாரணைகள் நடந்து வருகின்றன. அதனால், தனது அமைச்சர் பதவியை அவர், இராஜினாமாச் செய்து விட்டார்.
பிணை முறி மோசடியானது, ஒரு கூட்டுக் கொள்ளை என்று கூறப்படுகிறது. அதிகாரத்திலுள்ள பல அரசியல்வாதிகள், இந்த விவகாரத்துடன் சம்பந்தப்பட்டிருக்க வேண்டும் என்கிற சந்தேகம் பரவலாக உள்ளது. பிணை முறி மோசடியுடன் தொடர்புபட்டவர்கள் என்று, சிலரின் பெயர்களை எதிரணியினர் பகிரங்கமாகவே கூறி வருகின்றனர். உண்மையில், இந்தப் பெயர், பட்டியல் எந்தளவு நீளமானது என்று, இப்போதைக்கு யாருக்கும் தெரியவில்லை.
பிணை முறி மோசடி தொடர்பில் விசாரணைக்குள்ளாகி வருகின்ற ரவி கருணாநாயக்க தன்னுடைய அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்துள்ள போதிலும், அது இயல்பாக நடந்த ஒரு விடயமல்ல. எதிரணியிலிருந்தும் அவருடைய கட்சிக்குள்ளிருந்தும் கொடுக்கப்பட்ட பாரிய அழுத்தங்கள் காரணமாகவே ரவி, இராஜினாமாச் செய்திருந்தார்.
ஆனால், எந்தவித அழுத்தத்தின் பேரிலும் தான், பதவி துறக்கவில்லை என்று, தனது நாடாளுமன்ற உரையில் ரவி கூறியபோது, பலரும் கொடுப்புக்குள் சிரித்துக் கொண்டனர்.
பிணை முறி மோசடி தொடர்பில், ரவி கருணாநாயக்கவிடம் நடத்தப்பட்ட விசாரணை மற்றும் அவரின் இராஜினாமா ஆகியவற்றை முன்னிறுத்தி பல்வேறு கருத்துகள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.
ரவி போன்ற, அதிகாரம்மிக்க ஓர் அமைச்சரிடம் விசாரணை நடத்தப்பட்டமை, நல்லாட்சியின் ஓர் அடையாளமாகும் என்று கூறி, அரசாங்கத் தரப்பினர் கர்வப்பட்டுக் கொள்கின்றனர்.
ஆனால், இது வேடிக்கையானதாகும். நல்லாட்சி என்பதன் முதலாவது இலட்சணம், ஊழல்களையும் முறைகேடுகளையும் இல்லாதொழிப்பதாகும். ஆனால், நல்லாட்சி மலர்ந்த ஆண்டிலேயே, இலங்கை வரலாற்றில், மிகப் பெரும் மோசடி நடந்திருக்கிறது. நல்லாட்சியாளர்களே, அந்த மோசடியுடன் தொடர்புபட்டுள்ளதாகப் பலரும் கூறுகின்றனர்.
இவற்றையெல்லாம் தோதாக மறந்துவிட்டு, அமைச்சர் மீது விசாரணை நடைபெற்றமையை மட்டும் நல்லாட்சியின் அடையாளமாக அரசாங்கத் தரப்பினர் கூறுவது, வெட்கத்துக்குரிய விடயமாகும்.
இன்னொருபுறம், ரவி கருணாநாயக்கவின் இந்த இராஜினாமா, ஒரு நாடகம் என்றும், இன்னும் மூன்று மாதங்களில் அவருக்கு அமைச்சுப் பதவியொன்று வழங்கப்படும் எனவும் ஒன்றிணைந்த எதிரணியினர் கூறுகின்றார்கள். பிணை முறி மோசடி தொடர்பில், ரவி கருணாநாயக்க குற்றவாளியில்லை என்று உறுதியாகுவதற்கு முன்பாக, அவருக்கு அமைச்சுப் பதவி வழங்கப்படுமாக இருந்தால், நல்லாட்சி அரசாங்கம் இன்னும் நாறிப் போகும்.
இலங்கையிலுள்ள அநேகமான அரசியல்வாதிகள் அதிகாரத்துக்கு வந்தவுடன், திடீர் பணக்காரர்களாக மாறி விடுகின்றனர். அல்லது பெரும் பணக்காரர்களாகி விடுகின்றனர். மிகவும் வெளிப்படையாக இதை நம்மால் காண முடிகிறது.
இந்தப் பணம் அவர்களுக்கு எங்கிருந்து வந்தது என்பதை அனுமானிப்பது ஒன்றும் சீன வித்தை கிடையாது. ஊழல், மோசடி மற்றும் இலஞ்சம் உள்ளிட்டவை மூலமாகவே இவர்களில் கணிசமானோர் திடீர் பணக்காரர்களாகவும் கோடீஸ்வரர்களாகவும் மாறுகின்றனர். மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் அரசியலுக்குள் நுழைந்து, அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொண்டவர்கள், இப்போது அதி சொகுசு வாகனங்களில் வலம் வருகின்றமையைக் காணக் கிடைக்கிறது.
இதனையெல்லாம் பார்த்து விட்டுத்தான், “நான் ஒரு திருடனல்ல” என்று, எத்தனை அரசியல்வாதிகளால் கூற முடியும் என்கிற கேள்வியை, ஒரு சவாலாக மனோ கணேசன் முன்வைத்திருக்கின்றார்.
அதிகாரத்துக்கு வந்தவுடன், அரசியல்வாதிகளிடத்தில் குவியும் சொத்துகள் குறித்து, நமது நாட்டில் பெரிதாக விசாரிக்கப்படுவதில்லை. இந்த விடயத்தில் அண்டை நாடான இந்தியா, ஒப்பீட்டு ரீதியாகப் பாராட்டுக்குரியது.
தமிழக முதலமைச்சராகப் பதவி வகித்த ஜெயலலிதா மீது, சொத்துக் குவிப்பு விசாரணை நடைபெற்றமையும், அதில் குற்றவாளியாக அவர் அடையாளம் காணப்பட்டமையினால் சிறை சென்றமையும் இங்கு நினைவு கொள்ளத்தக்கது.
இலங்கையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஒவ்வொரு வருடமும் தமது சொத்துகள் தொடர்பான விவரங்களை வெளிப்படுத்த வேண்டும் என்பது கட்டாயமாகும்.
ஆனாலும், சிலர் தமது சொத்து விவரங்களை முழுமையாகச் சமர்ப்பிப்பதில்லை என்கிற விமர்சனமும் உள்ளது. இன்னும் சிலர் எந்தவிதமான விவரங்களையும் சமர்ப்பிக்காமல் தப்பித்தும் விடுகின்றனர்.
இவ்வாறான நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆளுந்தரப்பில் இருக்கும்போது, அதிகாரத்தைப் பயன்படுத்தி, தம்மீது நடவடிக்கைகள் எடுக்கப்படாமல் தப்பித்துக் கொள்கின்றனர்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தற்போது சிறைத்தண்டனை அனுபவித்து வருகின்றவருமான துமிந்த சில்வா, 2011, 2012 மற்றும் 2013ஆம் ஆண்டுகளில், தனது சொத்து விவரங்களை வெளிப்படுத்தவில்லை. அப்போது அவர் ஆளுந்தரப்பில் இருந்தார். அதனால், அவருக்கு அது தொடர்பில் பிரச்சினைகள் எதுவும் ஏற்படவில்லை.
ஆனால், ஆட்சி மாற்றத்தின் பின்னர், இதற்காக அவர் மீது இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவினர் வழக்குத் தொடர்ந்தனர். சிறையிலிருக்கும் போதே, இந்த வழக்கை, துமிந்த சில்வா எதிர்கொண்டார். மூன்று ஆண்டுகள் சொத்து தொடர்பான விவரங்களைத் தான் வெளிப்படுத்தவில்லை என்பதை ஒப்புக்கொண்டார்.
இதன் காரணமாக, நீதிமன்றம் அவரைக் குற்றவாளி எனக்கூறி தண்டனை விதித்தது. தண்டனை என்ன தெரியுமா? வெறும் மூவாயிரம் ரூபாய் தண்டமாக செலுத்த வேண்டும் என்பதுதான் அவருக்கான தண்டனையாகும்.
சில சமயங்களில் சில குற்றங்களுக்கான தண்டனைகள் போதாமலிருக்கின்றன என்கிற விமர்சனம் பரவலாக உள்ளது. அவற்றில் மேற்குறிப்பிட்டதையும் உள்ளடக்கலாம். இது தொடர்பில் நீதிமன்றங்களைக் குறை கூற முடியாது. இருக்கும் சட்டங்களுக்கேற்பவே நீதிமன்றங்கள் தீர்ப்புகளை வழங்குகின்றன.
அப்படியாயின், சட்டங்கள் திருத்தப்பட வேண்டும். கோடிக்கணக்கான தனது சொத்துகள் பற்றிய விவரங்களை வெளிப்படுத்தாமல் அவற்றை ஒருவர் மறைக்கின்றாரென்றால், அதில் ஏதோ சிக்கல்கள் இருக்கின்றன என்றுதான் விளங்கிக் கொள்ள வேண்டியுள்ளது.
அவ்வாறான ஒரு குற்றத்தைப் புரிந்தவருக்கு ஆண்டொன்றுக்கு ஆயிரம் ரூபாய் என்கிற கணக்கில் தண்டம் விதிக்கப்படுகின்றமையானது ஆச்சரியமானதாகும்.
ஒருவருக்கு வழங்கப்படும் தண்டனையானது, அந்தக் குற்றத்தை மீளவும் செய்யக் கூடாது என்கிற அச்சத்தையாவது அவருக்கு ஏற்படுத்த வேண்டும்.
இலங்கையில் பதவிகளிலுள்ள அரசியல்வாதிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தவர்களின் சொத்து விவரங்கள் தொடர்பில் கடுமையான கண்காணிப்பு அவசியமாகிறது.
நாடாளுமன்ற உறுப்பினரொருவருக்கு மாதமொன்றுக்கு ஓர் இலட்சம் ரூபாய் தேறிய சம்பளமாகக் கிடைக்கிறது என வைத்துக் கொண்டாலும், அவர் பதவி வகிக்கும் ஐந்து வருடத்துக்கும் மொத்தமாக 60 இலட்சம் ரூபாயைத்தான் அவரால் சம்பாதிக்க முடியும்.
ஆனால், பல நாடாளுமன்ற உறுப்பினர்களுடைய வாகனங்களின் பெறுமதியே பல கோடிகளாக இருக்கின்றன.“ஏது பணம்” என்று கேட்டால், “நான் ஒன்றும் தெருப் பிச்சைக்காரனல்ல” என்கிறார்கள்.
ஆட்சியிலுள்ள அமைச்சர்மார் பலருக்கு வெளிநாடுகளில் வீடுகளும் சொத்துகளும் இருப்பதாகவும் பேச்சுகள் உள்ளன.
சொத்துக் குவிப்பு தொடர்பில், இவ்வாறானவர்களிடம் முறையான விசாரணைகள் இடம்பெறுமாயின், அதிகமானோர் அகப்பட்டுக் கொள்வார்கள். ஆனால், யார் மீது யார் நடவடிக்கை எடுப்பது? யாரை யார், கள்ளன் எனப் பிடிப்பது? என்பதுதான் இங்கு கேள்வியாகும்.
“நான் ஒரு திருடனல்ல என்று, இந்த நாட்டிலிருக்கும் எத்தனை அரசியல்வாதிகளால் கூற முடியும்” என்கிற, மனோ கணேசனின் சவாலை, இந்த இடத்தில் பொருத்திப் பார்த்தல் பொருத்தமாகும்.
அரசியலுக்கு வருகின்றவர்களின் அசையும் மற்றும் அசையாச் சொத்துகள் தொடர்பில் முறையான கண்காணிப்பு தொடர்ச்சியாக இருக்குமாயின், மோசடியாக அவர்கள் குவிக்கும் சொத்துகள் தொடர்பில் உடனடியாகவும் இலகுவாகவும் அறிந்து கொள்ள முடியும்.
அவ்வாறானதொரு நிலைவரம் இருக்குமானால், மோசடியாகச் சொத்துகள் குவிப்பதற்கு ஆகக்குறைந்தளவேனும் அரசியல்வாதிகள் அச்சப்படுவார்கள். ஆனால், சொத்து விவரத்தைத் தொடர்ச்சியாக மூன்று வருடங்கள் வெளியிடாத நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு வெறும் மூவாயிரம் ரூபாய் மட்டுமே தண்டமாக விதிக்கப்படுகின்றபோது, அந்த அச்சம் எங்கிருந்து வரப்போகிறது?
அரசியல்வாதிகள் மோசடியாகச் சுருட்டிக்கொள்வது அரச பணம்; அது, வானத்திலிருந்து விழுந்தவையல்ல.
அவை மக்களிடமிருந்து பெற்ற வரிப் பணமாகும். மக்களுக்காகச் செலவிடப்பட வேண்டிய பணமாகும்.
பிணை முறி மூலம் மோசடி செய்யப்பட்டதாகக் கூறப்படும் பணத் தொகையைக் கொண்டு, பல வரவு - செலவுத் திட்டங்களுக்கான துண்டு விழும் தொகையை ஈடு செய்ய முடியும் என்பதை ஒரு தடவை நாம் நினைத்துப் பார்த்தால், மேற்படி மோசடி மூலம் நாட்டுக்கும் மக்களுக்கும் இழைக்கப்பட்டுள்ள பெரும் துரோகம் என்ன என்பதை ஓரளவாயினும் புரிந்து கொள்ள முடியும்.
பதவியிலுள்ள ஓர் அரசியல்வாதியின் சொத்துகள் தொடர்பில் உரிய கண்காணிப்பைத் தொடர்ச்சியாக மேற்கொள்ளும் ஒரு பொறிமுறை இங்கு இருக்குமானால், பல மோசடிகள் நடைபெறாமல் தவிர்த்திருக்கலாம்.
அப்படியாயின், அடிப்படையிலுள்ள தவறுகள்தான் மிகப்பெரிய மோசடிகள் நடப்பதற்குக் காரணமாக இருக்கின்றன என்பதை விளங்கிக் கொள்ள முடிகிறதல்லவா?
அண்மையில் தமிழகம் தொடர்பாக ரஜினிகாந்த் தெரிவித்த விமர்சனமொன்று இங்கு நினைவுக்கு வருகிறது. தனது உரை ஒன்றின் போது, தமிழகத்தைக் குறிப்பிட்டுப் பேசிய ரஜினிகாந்த், “இங்கு ‘சிஸ்டம்’ (அமைப்பு முறை அல்லது ஒழுங்கு) சரியில்லை” என்றார்.
ரஜினி சொன்னது, இங்கும் பொருந்தும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
3 hours ago
5 hours ago