Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
என்.கே. அஷோக்பரன் / 2019 ஏப்ரல் 22 , மு.ப. 01:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 192)
தமிழர் அரசியல் வரலாற்றை நோக்கினால், தமிழ் மக்களின் ஆரம்பகால அரசியல் கோரிக்கைகள் சமஷ்டியாகவோ, பிரிவினையாகவோ, பிராந்திய ரீதியிலான அதிகாரப் பகிர்வாகவோ இருக்கவில்லை.
தமிழ் மக்களுக்கு ஆரம்பத்திலிருந்த அச்சம் என்பது, எண்ணிக்கை ரீதியிலான பெரும்பான்மைப் பலத்தைக் கொண்டிருந்த சிங்கள பௌத்தர்கள், பிரித்தானிய வெஸ்ட்மினிஸ்டர் முறையை ஒத்த ஆட்சிமுறையொன்றின் கீழ், எண்ணிக்கை ரீதியான சிறுபான்மையினரை, அவர்களின் உரிமையை, அடக்கியாளத்தக்க பலத்தைப் பெறுவார்கள். அதனைச் சமன் செய்வதே, சுதந்திரத்துக்கு முற்பட்ட இலங்கைத் தமிழ்த் தலைமைகளின் கோரிக்கையாக இருந்தது.
ஜீ.ஜீ. பொன்னம்பலம் முன்வைத்த 50:50 என்பதன் உட்பொருள் இதுதான். பிரித்தானியர் 50:50ஐ நிராகரித்ததன் காரணம், அது வெஸ்ட்மினிஸ்டர் அடிப்படைகளுக்கு ஏற்புடையதாக இருக்கவில்லை என்பதுடன், ஏலவே நிறுவப்பட்டுள்ள எண்ணிக்கை, பெரும்பான்மையின் அடிப்படையில் கொண்டு நடத்தப்படும் ஜனநாயகக் கட்டமைப்புக்கு, ஜீ.ஜீ.பொன்னம்பலத்தின் இந்தக் கோரிக்கை முரணாக இருந்தது.
ஆனாலும், இங்கு இன்னொரு விடயமும் கட்டாயம் குறிப்பிடப்பட்டேயாக வேண்டியதாகவுள்ளது. ஜீ.ஜீ. பொன்னம்பலம் உள்ளிட்ட தமிழ்த் தலைமைகள், சிறுபான்மையினர் எதிர்நோக்கும் அச்சம், சவால் பற்றிக் குறிப்பிட்டவற்றை சோல்பரி ஆணைக்குழு முற்றாக மறுக்கவில்லை. அதனால் தான், ‘ஒரு குறிப்பிட்ட இனத்துக்கோ, மதத்துக்கோ பாதகமாக அமையும் சட்டத்தை, நாடாளுமன்றத்தால் இயற்றமுடியாது’ என்ற மட்டுப்பாட்டை, 29c சரத்தினூடாக சோல்பரி அரசமைப்பின் ஓர் அங்கமாக்கியது.
ஆனால், சட்டம் என்பது, வெறும் கறுப்பெழுத்துகளில் பதிவுசெய்யப்படுவதால் மட்டுமே, நடைமுறைக்கு வந்துவிடாது. 29c நடைமுறையில் இருக்கும்போதுதான், குடியுரிமைச் சட்டம் கொண்டுவரப்பட்டு இந்திய வம்சாவளி மக்களின் குடியுரிமை பறிக்கப்பட்டது. 29c நடைமுறையில் இருக்கும்போதுதான், தனிச்சிங்களச் சட்டம் எனும் தமிழ் மக்களுக்கு முற்றிலும் எதிரான, பாதகமான சட்டம் நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டது.
ஆகவே, தமிழ் மக்களின் அபிலாஷைகளைப் பாதுகாக்க, வெறும் சட்டப்பாதுகாப்புகள் போதவில்லை. இந்த இடத்தில்தான் பிரித்தானியாவுக்கும், இலங்கைக்கும் இடையிலான ஒரு முக்கிய வித்தியாசத்தை, நாம் உணரக்கூடியதாக உள்ளது.
பிரித்தானிய வெஸ்ட்மினிஸ்டர் முறை, பிரித்தானியாவுக்கு வெற்றியளித்ததன் முக்கிய காரணங்களில் ஒன்று, அங்கு கட்டமைக்கப்பட்டுள்ள அரசியல் கலாசாரம் ஆகும். பிரித்தானிய ஜனநாயகம் என்பது, சர்வாதிகார முடியாட்சியலிருந்து, கொஞ்சம் கொஞ்சமாக அதிகாரங்கள் காலப்போக்கில் குறைக்கப்பட்டு, சர்வாதிகார முடியாட்சியானது வெறும் சடங்கு ரீதியான, அரசமைப்புக்கு உட்பட்ட முடியாட்சியாக மாற்றப்பட்டு, ஜனநாயகமாகப் பரிணாமம் கண்டது.
ஆகவே, வெஸ்ட்மினிஸ்டர் ஆட்சி முறை என்பது, ஓரிரவில் உருவான, அறிமுகப்படுத்தப்பட்ட முறையல்ல. அது அம்மக்களால், காலங்காலமாகக் கட்டமைக்கப்பட்டு, மாற்றத்துக்கு உள்ளாக்கப்பட்டு, அவர்கள், அவர்களுக்கு ஆக்கியளித்துக் கொண்டதொரு முறையாகும். இதனாலோ என்னவோ, எழுதப்படாத அரசமைப்பாக இருந்தாலும், அதாவது பெருமளவுக்கு வழக்காறுகளிலும், மரபுகளிலும் தங்கிய அரசமைப்பாக இருந்தாலும், பிரித்தானியாவில் அந்த வழக்காறுகளும் மரபுகளும் உயரிய மாண்புகளுடன் பின்பற்றப்படுகின்றன.
ஆனால், இலங்கையின் நிலை வேறு; ‘பிரித்தானிய வெஸ்ட்மினிஸ்டர் ஜனநாயகம்’ என்பது, அது அறிமுகப்படுத்தப்பட்டபோது, இலங்கைக்கு மிக அந்நியமானதொரு கோட்பாடாகவே இருந்தது. இந்த இடத்தில் சிலர், ஆரம்பகால இலங்கையில் இருந்ததாகச் சொல்லப்படும், ஊர்மக்கள் கூடி முடிவெடுத்தல் போன்ற ஜனநாயக அம்சங்கள் சிலவற்றைக் கோடிட்டுக் காட்டலாம். ஆனால் அவை, வெஸ்ட்மினிஸ்டர் ஜனநாயக முறைபோன்று, முதிர்ச்சி அடைந்ததொரு முற்றுமுழுதான ஜனநாயகக் கட்டமைப்பல்ல.
ஆகவே, வெஸ்ட்மினிஸ்டர் ஆட்சிமுறையின் அடிப்படையிலான ஆட்சிமுறையொன்று, இங்கு அறிமுகப்படுத்தப்பட்டதென்பது, இந்த மண்ணுக்கு அந்நியமானதொரு மரத்தை, இந்த மண்ணில் கொண்டுவந்து, நாட்டியமைக்கு ஒப்பானதொரு செயற்பாடாகும்.
ஆகவே, அந்த மரம், அது உருப்பெற்ற அந்நிய மண்ணில் எவ்வாறு வளர்ந்ததோ, அவ்வாறே இங்கும் வளரும் என்று எதிர்பார்க்க முடியாது. இதுதான் பிரித்தானிய ஆட்சியாளர்கள் விட்ட முக்கிய தவறுகளுள் ஒன்று.
வெஸ்ட்மினிஸ்டர் ஆட்சிமுறையை, அடிப்படையாகக் கொண்ட ஆட்சிமுறையை அறிமுகப்படுத்துவதற்கு முன்னராக, அதற்கேற்றாற்போலதானதோர் அரசியல் கலாசாரம், கட்டமைக்கப்பட்டிருக்க வேண்டும். அத்தகைய கலாசாரம் கட்டியெழுப்பப்படாத பட்சத்தில், அந்த முறை, இந்த மண்ணில் வெற்றி காண்பதற்கான வாய்ப்புகள் இல்லை.
வெஸ்ட்மினிஸ்டர் ஆட்சிமுறையும் மஹாவம்சக் கனவும் ஒன்றோடொன்று இயைபுறாதவை என்பதோடு, ஒன்றுக்கு ஒன்று, முற்றிலும் முரணானவை. ஆகவே வெஸ்ட்மினிஸ்டர் முறையின் கீழ், ஜனநாயகப் பலமானது, எண்ணிக்கை ரீதியில் பெரும்பான்மையானதோர் இனத்திடம் வழங்கப்பட்டபோது, அதன் பின்னர், அரசியல் முன்னரங்கில் எழுச்சி கண்ட அந்தப் பெரும்பான்மை இனத்தின் இனமத தேசியவாதமானது, மஹாவம்சக் கனவை அந்தப் பெரும்பான்மை மக்களிடம் விதைத்தது.
அதன் விளைவாக, வெஸ்ட்மினிஸ்டர், ஜனநாயகத்தின் உட்பொருள் சிதைவுறத் தொடங்கியது. இதன் முதல் கட்டம்தான், 1972இல் அறிமுகப்படுத்தப்பட்ட முதலாவது குடியரசு யாப்பு ஆகும். இது சர்வாதிகாரத்தை, சட்டவாக்க சபையிடம் குவித்ததுடன், சிறுபான்மையினருக்கு இருந்த அரசமைப்பு ரீதியான பாதுகாப்புகளையும் இல்லாதொழித்து, சிங்கள மொழியை, ஒரே உத்தியோகபூர்வ மொழியாகப் பிரகடனம் செய்ததுடன், பௌத்த மதத்துக்கு முன்னுரிமை வழங்கியும் பிரகடனம் செய்தது.
இதன் அடுத்த கட்டம், 1978இல் அறிமுகப்படுத்தப்பட்ட இரண்டாவது குடியரசு யாப்பு ஆகும். இது நிறைவேற்று அதிகாரங்களை, ஜனாதிபதி என்ற தனிநபரின் மீது குவித்தது. அதாவது நவீன துட்டகைமுனுவாக, ‘ஜனாதிபதி’ என்ற பதவி, முழு நாட்டையும் தனது நிறைவேற்று அதிகார ஆட்சியின் கீழ், ஆளும் கட்டமைப்பு ஜனாதிபதியை ‘அதிஉத்தம’ போன்ற வார்த்தைகளால் கௌரவிக்கும், ஆரம்பகால இலங்கை மன்னர்கள் நடந்ததாகச் சொல்லப்படும் முறைகளில், ஜனாதிபதிகள் நடந்துகொள்வதும், தனிநபரிடமான அதிகாரக் குவிப்பும் ஆகிய எல்லாம், இலங்கையானது வெஸ்ட்மினிஸ்டர் முறையிலிருந்து விலகித் தனது, மஹாவம்சக் கனவுப் பாதையில் பயணித்தது; பயணிக்கிறது.
மஹாவம்சக் கனவு என்பதன் சுருக்கமானது, இலங்கைத் தீவானது சிங்கள-பௌத்தர்களுக்கு உரித்தான, ஒரே இறைமைக்கு உட்பட்ட நாடு என்பதுதான். துட்டகைமுனு ஆதர்சிக்கப்படுவதற்கு இதுவே காரணம். மஹாவம்சக் கனவுக்குள் சிறுபான்மையினரின் நிலை என்பது நிச்சயமாக இரண்டாந்தரமானதுதான். ஏனென்றால், அதற்குள் அவர்கள், அவர்களுக்குரிய சுயநிர்ணயத்துடனும், சுயமரியாதையுடனும் அரவணைக்கப்பட இடம் அரிது. இலங்கைத் தீவுக்குள் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் அச்சமின்றி, சந்தேகமின்றி, நல்லிணக்கத்துடன் வாழவேண்டும் என்று சொல்லும் தலைவர்கள் கூட, இது அனைவருக்குமான நாடு என்று வௌிப்படையாகவும் வீரியத்துடனும் சொல்வதைத் தவிர்ப்பதை நாம் அவதானிக்கக்கூடியதாகவே உள்ளது.
மறுபுறத்தில், அவ்வாறு சொல்லத்துணியும், நவீன மேலைத்தேய தாராளவாத ஜனநாயகத்தைச் சுவீகரிக்கும் சிங்கள-பௌத்த தலைவர்கள் கூட, துரோகிகளாகப் பெருந்தேசியவாதிகளால் அடையாளப்படுத்தப்படுவதையும் நாம் அவதானிக்கலாம். ஆகவே, இந்த மஹாவம்சக் கனவுக்குள் இலங்கை இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதென்பது சாத்தியக் குறைவானதொரு கனவேயாகும்.
இந்தப் பின்புலத்தில்தான், நாம் சமஷ்டியா, ஒற்றையாட்சியா என்ற விவாதத்தையும் கருத்திலெடுத்துக்கொள்ள வேண்டியதாக இருக்கிறது. இது வெறும் சொற்றொடர்களுக்கிடையிலான பிரச்சினை என்ற கருத்து, பகுத்தறியப்பட வேண்டியதொரு கருத்தாகிறது.
‘சமஷ்டி’ என்ற சொல்தான் பிரச்சினை; அதனைத் தவிர்த்துவிட்டு, தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை அடைந்துகொள்ள முடியும் என்று கூறுபவர்களின் கருத்து, கேட்பதற்கு இனியதாக இருப்பதில் எந்த மாற்றுக் கருத்துமில்லை. எதுவுமற்றதோர் அரசியல் முட்டுக்கட்டை நிலையில் நின்று பார்க்கும் போது, இந்தக் கருத்து, புதுநம்பிக்கையை விதைப்பதாக இருக்கிறது.
ஆனால், இது வெற்று நம்பிக்கையா, இல்லையா என்பதை, நாம் ஆராய வேண்டியதாக இருக்கிறது. இலங்கை அரசமைப்புக்கு, அதன் அடிப்படைகளை மாற்றும் திருத்தமொன்றைச் செய்வதாலோ, அல்லது புதிய அரசமைப்பொன்றை முற்றாக அறிமுகப்படுத்துவதாலோ, சர்வசன வாக்கெடுப்பொன்றினூடாக மக்களின் ஒப்புதல் அவசியமாகிறது.
ஜே.ஆர். ஜெயவர்தன, தன்னுடைய நாடாளுமன்றத்தின் ஆட்சிக்காலத்தை நீட்டிப்பதற்காக, சர்வசன வாக்கெடுப்புக்கு சென்றதன் பின்னர், இதுவரை வேறொரு சந்தர்ப்பத்திலும் சர்வசன வாக்கெடுப்பு என்பது நடத்தப்படவே இல்லை. சில சட்டமூலங்கள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டபோது, அவை உயர் நீதிமன்றத்தின் முன்னர் சவாலுக்குட்படுத்தப்பட்டு, குறித்த சட்டமூலங்களை நிறைவேற்ற சர்வசன வாக்கெடுப்பினூடான ஒப்புதல் அவசியம் என்று உயர்நீதிமன்றம் தீர்மானித்திருந்த அனைத்துச் சந்தர்ப்பங்களிலும், ஒன்றில் சர்வசன வாக்கெடுப்புக்கான அவசியத்தை ஏற்படுத்திய சரத்துகள் நீக்கப்பட்டதன் பின்னர் நிறைவேற்றப்பட்டோ, அல்லது குறித்த சட்டமூலங்கள் முற்றாக கைவிடப்பட்டோதான் இருக்கின்றனவேயன்றி, எந்த அரசாங்கமும் சர்வசன வாக்கெடுப்புக்குச் சென்றதில்லை.
ஆகவே, இனப்பிரச்சினைத் தீர்வொன்று, அது ‘சமஷ்டி’ என்ற சொல்லைத் தவிர்த்துவிட்டு அமைந்தாலும், அர்த்தமுள்ள தீர்வாக அது அமையுமானால், நிச்சயமாகத் தற்போது நடைமுறையிலுள்ள அரசமைப்பில் அடிப்படையான பல மாற்றங்களைச் செய்தே தீரும்; அத்தகைய மாற்றங்கள், நிச்சயம் சர்வசன வாக்கெடுப்பைக் கோரும்; அவ்வாறான சூழலில், இலங்கையில் ஆட்சியிலிருக்கும் எந்த அரசாங்கமாவது அத்தகையதொரு சர்வசன வாக்கெடுப்புக்குச் செல்லத் தயாரா என்பது, இங்கு மிக முக்கியமாக எழும் நடைமுறைக் கேள்வி ஆகும்.
சமஷ்டி என்ற வார்த்தையைத் தவிர்த்துவிட்டால், இலங்கையின் இனப்பிரச்சினைக்கான தீர்வை, பெரும்பான்மை சிங்கள மக்கள் ஏற்றுக்கொண்டு விடுவார்களா என்பதும் அத்தோடு இணைந்துவரும் மிக முக்கியமான நடைமுறைக்கேள்வியாகும். குறைந்த பட்சம், இந்த இரண்டு கேள்விகளுக்கும் “ஆம்” என்பது பதிலாக இருக்கும் போதினில் மட்டும்தான், சொற்றொடர்களைத் தாண்டிய தீர்வு என்பது, நடைமுறைச்சாத்தியமான நம்பிக்கையாக அமையும்.
இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில், பெரும்பான்மைச் சிங்கள மக்களுடைய கரிசனையானது, சமஷ்டிதான் என்ற எடுகோளின் அடிப்படையில் பார்த்தால், சமஷ்டி என்ற வார்த்தை நீக்கமானது, நிச்சயம் பெரும்பான்மைச் சிங்கள மக்களைத் திருப்தி செய்யும் எனும் முடிவுக்கு நாம் வரலாம்.
ஆனால், சிங்கள மக்களுடைய அரசியல் அபிலாஷைகளானவை, மஹாவம்சக் கனவின் படியானது என்றால், வெறும் சமஷ்டி என்ற வார்த்தை நீக்கம், அவர்களைத் திருப்தி செய்யும் என்று சொல்லிவிட முடியாது. ஒருவகையில், சிந்தித்துப் பார்த்தால் 13ஆம் சீர்திருத்தத்தின் தோல்வி என்பதும் இந்தஇடத்தில்தான் தொடங்குகிறது.
கறுப்பெழுத்துகளில் பதியப்பட்டுள்ள சட்டம், எவ்வாறு இருந்தாலும், அந்தச் சட்டத்தின் ‘ஆன்மா’ எவ்வளவு தூரம் மதிக்கப்படுகிறது, எவ்வாறு நடைமுறைப்படுத்தப்படுகிறது என்பதில்தான், ஒரு சட்டத்தின் சாதகங்கள் தங்கியுள்ளன.
ஆகவே, தனித்த தத்துவார்த்த அல்லது கோட்பாட்டு ரீதியிலான அணுகுமுறை, இங்கு அர்த்தமற்றதாகவே முடியும்; மாறாக நடைமுறைச் சிக்கல்களைக் கருத்திற்கொண்டு, அதற்குரிய உபாயங்களை முன்னெடுப்பதன் வாயிலாக மட்டுமே, நாம் தமிழ் மக்களது அரசியல் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யவல்ல, இனப்பிரச்சினைக்கான அர்த்தமுள்ள தீர்வை நோக்கிப் பயணிக்கலாம். அதற்கான வழிவகைகள் பற்றிச் சிந்தித்தலும் இங்கு முக்கியமாகிறது.
(அடுத்த திங்கட்கிழமை தொடரும்)
38 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago