Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 30, புதன்கிழமை
Editorial / 2019 டிசெம்பர் 17 , பி.ப. 01:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க. அகரன்
‘சட்டியில் இருந்து அடுப்பில் விழுந்த’ கதையாகி இருக்கும் தமிழர் அரசியல் களம், தொடர்ந்தும் நிதானமின்றிப் பயணிக்கின்றதா என்கின்ற கேள்வி எழுந்துள்ளது.
தமிழ் மக்கள், தமது அரசியல் தலைமைகளிடம் ஒற்றுமையின் தேவையை உணரச் செய்கின்ற போது, அரசியல் தளத்தில் இருக்கின்றவர்கள், தமக்குள் இருக்கும் காழ்ப்புணர்ச்சிகளைக் கக்கியவாறு, தமக்கான தனித்தனித் தளங்களை ஆரம்பிக்கும் படலங்கள் தொடங்கியுள்ளன.
தனிக்கட்சி அரசியலும் அதன் பின்னரான கூட்டும் வடக்கு, கிழக்கில் உள்ள தமிழ் அரசியல்வாதிகளிடம் நாகரிகமாக ஒட்டிக்கொண்டுள்ளன.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைத் தமிழீழ விடுதலைப் புலிகள் உருவாக்கின்ற போது, தமிழ் மக்களின் அரசியல் எதிர்காலம் தொடர்பான தீர்க்கதரிசனம் இருந்ததன் காரணத்தாலேயே, விடுதலைப் புலிகளுக்கு எதிராகச் செயற்பட்ட சில கட்சிகளையும் இணைத்து, கூட்டமைப்பு ஆரம்பிக்கப்பட்டிருந்தது.
எனினும், விடுதலைப் புலிகளின் அழிவுக்குப் பின்னரான காலத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் போக்கும், அதற்குள் தம்மை வலிந்து இணைத்துக் கொண்டவர்களின் நடவடிக்கைகளும் அங்கத்துவக் கட்சிகளுக்கு வெறுப்புணர்வை ஏற்படுத்தி இருந்ததைக் கூட்டமைப்பு ஏற்றேயாக வேண்டும்.
கற்றுக்கொண்ட பாடங்களில் இருந்து, தம்மைத் திருத்திச் செயற்பட, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தவறியதன் காரணமே, இன்று பல கட்சிகள் தமிழ் மக்கள் மத்தியில் உருவாகக் காரணமாக மாறியிருக்கின்றது.
கடந்த காலத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து, விலகிய கட்சிகள் பலதும், தமிழ் மக்கள் மத்தியில் இருந்து வாக்குகளைச் சிதறடிக்கத் தம்மைப் பண்படுத்திக்கொண்டதோடு மட்டுமன்றி, தமக்கான அரசியலில், தமது எதிர்த்தரப்பு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மாத்திரம் என்று நினைத்துச் செயற்பட்டன; செயற்பட்டும் வருகின்றன.
தமிழ் மக்களின் பொது எதிரி யார் என்பதை உணரத்தலைப்படாத நிலையில், இன்றும் தமது அரசியல் செயற்பாட்டைத் தமிழ்த் தலைமைகள் முன்னெடுக்கும் நிலையில், சிங்கள கட்சிகள், தமிழ் மக்களைப் பிரித்தாளுவதில் வெற்றி கண்டுள்ளது என்றே எண்ணத்தோன்றுகின்றது.
யாழ். மாவட்டத்தில் எக்கட்சி வெற்றி கொண்டாலும், தமிழ்ப் பிரதிநிதித்துவத்தைத் தெரிவு செய்யலாம் என்பதால், இவ்வாறான கட்சி உடைவுகள், தனிநபர் அரசியல் சுயலாபமாக மாறினாலும் அலட்டிக் கொள்வதற்கு ஏதுமில்லை.
எனினும் வவுனியா, மன்னார், முல்லைத்தீவு மாவட்டங்களை உள்ளடக்கிய வன்னித் தேர்தல் தொகுதிக்கும், கிழக்கு மாகாணத்துக்கும் இவ்வாறான உடைவு அரசியலும் புதிய கட்சி உருவாக்கங்களும் தமிழ்ப் பிரதிநிதித்துவத்தின் இருப்பை இல்லாமல் செய்யும் என்பது மறுப்பதற்கில்லை.
வெறுமனே யாழ்ப்பாணத்துக்குள் கட்டுண்டு கிடக்கும் தமிழர் அரசியல் தலைமைத்துவம், பிற மாவட்டங்கள் தொடர்பிலும் அங்குள்ள அரசியல் களம் தொடர்பிலும் ஆராயத்தலைப்படாமை, தமிழ் மக்களுக்குப் பெரும் துர்ப்பாக்கியமே.
எதிர்வரப்போகும் நாடாளுமன்றத் தேர்தலில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக, மும்முனையில் எதிர்த்தரப்புகள், தமிழர்கள் சார்பில் களமிறங்கவுள்ளன.
குறிப்பாக, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி, தற்போது கூட்டமைப்பில் இருந்து உடைந்து, தம்மைக் கட்சிகளாகப் பிரகடனப்படுத்திக்கொண்டுள்ள பல கட்சிகள் ஒன்றிணைந்து விக்னேஸ்வரன் தலைமையிலான கூட்டு என, கூட்டமைப்புக்கு எதிரான செயற்பாட்டாளர்கள் களத்தில் இறங்கவுள்ளார்கள். இவற்றுக்கும் அப்பால், தேசியக் கட்சிகளின் போட்டியும் இம்முறை பலமானதாகவே அமையப்போகின்றது.
இவற்றில் இருந்துதான் தமிழ் மக்கள், வன்னித் தேர்தல் தொகுதியிலும் கிழக்கு மாகாணத்திலும் தமக்கான பலமான அரசியல் பிரதிநிதித்துவத்தைப் பெற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக, வன்னித் தேர்தல் தொகுதிக்குள் இன விகிதாசாரத்தைக் குழப்பும் வகையிலான பாரியளவிலான சிங்களக் குடியேற்றங்கள் இடம்பெற்று, இன்று அவை தமிழ் மக்களுக்குப் பெரும் சவாலாக மாறியிருக்கின்றன.
அதன் வெளிப்பாடாகவே, வவுனியா வடக்கு பிரதேச சபை, கடந்த காலங்களில் தனித் தமிழ் பிரதிநிதித்துவத்துக்குள் இருந்த நிலையில், கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஏழு சிங்களப் பிரதிநிதித்துவங்களை உள்வாங்கியுள்ளது.
இதற்கு, 2015 ஆம் ஆண்டுக்கு முன்பிருந்த ஆட்சியாளர்கள் ஏற்படுத்திய குடியேற்றம் காரணமாக இருந்தாலும், அதைத் தொடர்ந்து வந்த ஆட்சியாளர்களின் எல்லை நிர்ணயம் போன்ற பல காரணங்கள், இன்று வவுனியாவில் சிங்களப் பிரதிநிதித்துவம் இல்லாமல், ஓர் உள்ளூராட்சி மன்றத்தையேனும் அமைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், வவுனியா சிங்களப் பிரதேச சபைக்குள் ஒரு தமிழ்க் கிராமம் உள்வாங்கப்பட்டுள்ள போதிலும், அந்தப் பிரதேச சபையில் ஒரு தமிழர் கூட, மக்கள் பிரதிநிதியாக இல்லை என்பதையும் தமிழ்த் தலைமைகள் உற்றுநோக்க வேண்டிய தேவையுள்ளது.
இச்சூழலில் மாகாண சபைகளிலும் நாடாளுமன்றங்களிலும் தமிழ் மக்கள் தமக்கான பிரதிநிதித்துவத்தைத் தெரிவு செய்வதில், பாரிய பின்னடைவைச் சந்திப்பதைத் தவிர்க்க முடியாத நிலை ஏற்படுகின்றது.
இவ்வாறான விடயங்களை, மக்கள் பிரதிநிதிகளுக்குத் தினம் தினம் எடுத்துக்கூற வேண்டிய தேவையில்லை. ஏனெனில், இவற்றை ஆராயத் தலைப்பட வேண்டியது மக்கள் பிரதிநிதிகளே ஆவார்.
இவ்வாறான நிலையில்தான், தமிழ் மக்களின் பிரதிநிதிகளின் ஆளுமை தொடர்பான தேடல், மக்கள் மத்தியில் பலமாக எழுகின்றது.
புதிய வாக்காளர்களாக உள்வாங்கப்பட்டுள்ள கணிசமான இளைஞர்கள், தாம் கண்டுவந்த தமிழர் அரசியல் பாதையென்பது, தமக்கு சரியானதா என்கின்ற தேடலுக்குள், தம்மை ஆட்படுத்தியுள்ள நிலையில், அவர்களுக்குள் பல கேள்விகள் எழுந்துள்ளன.
வெறுமனே தமிழ்த் தேசிய உணர்வு ததும்பிய நிலைப்பாட்டில், தம்மை இணைப்பதா, அபிவிருத்தி, வேலைவாய்ப்பு என்ற தமது எதிர்காலம் என்ற நிலைப்பாட்டுக்குள் தம்மை உட்படுத்துவதா என்ற கேள்விக்குள் இருக்கும் அவர்கள்தான், தற்போது பலமான வாக்கு வங்கியாக மாறியுள்ளனர்.
யுத்தம் நிறைவுக்கு வந்து, கடந்த 10 வருடங்களின் பின்னராகவும் யுத்தம் நடக்கும் போதும் சிறுவர்களாக இருந்தவர்களே, இன்று இந்த வாக்கு வங்கியைத் தம்வசம் வைத்துள்ளனர்.
இவர்களே, எந்த அரசியல் கட்சிகளாக இருந்தாலும் தற்போது பிரசாரத்தின் தூண்களாவும் உள்ளனர். எனவே, இவ்வாறான ஒரு பலமான அணி, தமிழர்கள் மத்தியில் காணப்பட்டபோதிலும், குழப்பகரமானதும் சுயநலன் சர்ந்ததுமான அரசியல் தளத்துக்குள், தம்மை வட்டம் கீறி வைத்துக்கொள்ள விரும்பவில்லை.
அவர்கள், தமது எதிர்கால நலன் சார்ந்த விடயங்கள் எங்கிருக்கின்றன என்ற தேடலில் உள்ள நிலையில், அவர்களைப் பொறுத்தவரையில், அது தேசியக் கட்சியாக இருந்தாலும், அதையும் அவர்களுக்கு ஏற்பானதாகவே பார்க்கின்றார்கள்.
இந்நிலையில், தமிழ்த் தலைமைகள் அவர்களை அரவணைத்துச் செல்ல வேண்டிய தேவையுள்ள போதிலும், தமக்குள் உள்ள தலைமைத்துவம் சார்ந்த போட்டிகளும் தம்மைப் பிரபலப்படுத்தும் நிலைப்பாடுகள் காரணமாகவும் இவ்வாறாகச் செயற்படுத்தக்கூடிய செயல்களைக் கூடச் செய்யத்தலைப்படவில்லை.
இந்நிலையில், தமிழ்த் தலைமைகள் மத்தியில், பல்வேறு குற்றச்சாட்டுகளைத் தமிழ் மக்கள் வைத்துள்ள நிலையிலேயே, புதிய புதிய அணிகள் தற்போது உருவாக்கம் பெற்று வருகின்றது.
காணாமல் போனோர் விடயம், அரசியல் கைதிகள் விடுதலை, காணி விடுவிப்பு என்ற பிரதான விடயங்களுக்குப் புறம்பாக, வேறு பல தேவைப்பாடுகளும் தமிழர்கள் மத்தியில் நிறைந்துள்ள நிலையில், சிதைந்து போகும் தமிழர் அரசியல் நிலைப்பாட்டுக்குள், தமிழ்த் தேசிய உணர்வும் தடுமாறும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
எனவே, ஆரோக்கியமான அரசியல் சூழலை உருவாக்கி, வடக்கு, கிழக்கில் பலமான அரசியல் கட்டமைப்பை உருவாக்க வேண்டியது தமிழ்த் தலைமைகளின் பொறுப்பாகும். வெறுமனே மாற்றுத் தலைமை என்றும் புதிய கூட்டு என்றும் செயற்பட்டுச் செல்வதானது, எதிர்காலத்தில் தமிழர் தரப்பில் பேரம் பேசும் சக்தியை இழக்கச்செய்து, சிறுபான்மை என்ற பதத்துக்குள் பெரும்பான்மை தரும் சௌகரியங்களை மாத்திரம் அனுபவிக்கும் நிலைக்குள் தள்ளிவிடும்.
அதற்குமப்பால் சிறுபான்மையினரின் கோசங்களாக இருக்கக் கூடிய உரிமை, தேசியம் என்ற எண்ணப்பாடுகள் அற்ற ஒரு சமூகக் கட்டமைப்புக்குள் சென்று, தேசிய அரசியல் நீரோட்டத்தில், தேசிய கட்சிகளுடன் கலந்துகொள்ளும் துர்ப்பாக்கிய நிலையை எதிர்கொள்ள வேண்டியேற்படும்.
இந்நிலையில், தமிழர் தரப்பு எவ்விதமான போக்கைக் கடைப்பிடிக்க வேண்டும் மற்றும் எவ்வாறான அறிவுசார் விடயத்தை எடுக்க வேண்டும் என்பதற்கான தேடல் ஆரம்பிக்கப்பட வேண்டும்.
அதற்கு அறிவார்ந்தவர்களின் ஆலோசனைகளும் ஒழுங்கமைப்பு முறைகளும் அவசியத் தேவையாகவுள்ளன. அவற்றைச் செவிமடுக்கும் அரசியல் செயற்பாட்டாளர்களுக்கு, தமிழர் தமது வாக்கு எனும் ஆயுதத்தைப் பயன்படுத்தி, அவர்களைத் தமது பிரதிநிதிகளாக உள்வாங்க வேண்டும் என்பதே யதார்த்தம்.
எனவே, எதிர்வரப்போகும் நாள்கள், தமிழர் அரசியலில் பாரிய கருத்தியல் மோதல்களும் மாறுபட்ட அரசியல் நிலைப்பாடுகளும் உச்சம் கொள்ளப்போகும் நிலையில், தமிழர்கள் தமது அரசியல்வாதிகளின் கருத்துகளைச் செவிமடுப்பதை விடுத்து, தாமாகச் சிந்தித்து, நின்று நிதானித்துச் செயற்பட வேண்டும். இத்தகைய பொறிமுறைக்குள் செல்ல வேண்டும் என்பதே காலத்தின் தேவையாகும்.
இலங்கையை மய்யப்படுத்தி வல்லரசுகளுக்கு
இடையிலான போட்டி: தமிழர் தேசத்தின் கதி
இலங்கைத் தீவை மய்யப்படுத்தி, வல்லரசுகளுக்கு இடையே நடக்கின்ற பூகோளப் போட்டியில், தமிழர் தேசம் அங்கிகரிக்கப்படக் கூடிய நிலைமைகள் இருக்கின்றன எனத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
இதைத் தாங்கள் கடந்த பல வருடங்களாகச் சொல்லிவந்த போதும், தமிழ்த் தரப்புகளோ, “இது நடைமுறைச் சாத்தியமற்றது” எனத் தங்களைக் கேலி செய்ததாகவும் ஆனால், அன்று சொன்ன இந்த விடயங்கள், இன்று யதார்த்தமாகி வருகின்றன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
யாழ்ப்பாணம், கொக்குவிலில் உள்ள அக்கட்சியின் அலுவலகத்தில் சனிக்கிழமை (14) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், “ஜப்பான் நாட்டின் வெளிவிவகார அமைச்சர், இலங்கை ஜனாதிபதியைச் சந்தித்துக் கலந்துரையாடி உள்ளார். அந்தச் சந்திப்பில் உரையாடிய மிக முக்கியமான விடயங்கள் ஊடகங்களில் வெளிவந்திருக்கின்றன.
“அதாவது, சீனாவின் ஹொங்கொங்கைப் போல, ‘ஒரு நாடு இரு தேசங்கள்’ என்ற கோட்பாட்டை, இலங்கையிலும் உருவாக்குவதற்கு வல்லரசு நாடுகள் அழுத்தங்களைப் பிரயோகிக்கக் கூடாது என்ற அடிப்படையில், ஜனாதிபதி தனது கருத்தை முன்வைத்திருக்கின்றார்.
“சீனாவின் ஆளுகைக்கு உட்பட்டிருக்கின்ற ஹொங்கொங் பிராந்தியத்திலே, குழப்பங்கள் நடைபெற்றுக் கொண்டிருப்பது எல்லோருக்கும் தெரிந்த விடயம். இந்தச் சந்தர்ப்பத்திலே தான், ஜப்பானின் வெளிவிவகார அமைச்சரைச் சந்தித்தபோது, அவ்வாறாக, ‘இரு தேசங்கள், ஒரு நாடு’ என்பதை ஏற்படுத்துவதற்கு, இலங்கைக்கு அழுத்தங்களைப் பிரயோகிக்கக் கூடாது என்று ஜனாதிபதி கூறியிருக்கின்றார்.
“ஆகவே, ஜனாதிபதியின் இந்தக் கருத்து, எதை வெளிப்படுத்துகிறதென்றால், இலங்கைத் தீவை மய்யப்படுத்தி, வல்லரசு நாடுகளுக்கிடையே ஒரு இராஜதந்திரப் போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கின்றதென்பது எல்லோருக்கும் தெரிந்த விடயம் தான். அந்தப் போட்டி, நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றதென்பதையும் பார்க்கக் கூடியதாக இருக்கின்றது.
இலங்கைத் தீவைத் தங்களுடைய ஆளுகைக்குள் வைத்துக்கொள்ள விரும்புகின்ற இந்த வல்லரசுகளின் ஒரு பகுதியினர், அதாவது, தற்போது இலங்கை ஆட்சியாளர்கள் நடந்து கொள்கின்ற விதத்தை விரும்பாதவர்கள், இலங்கையில் தமிழர்களைத் தனித்துவமான இறைமை கொண்ட தேசமாக அங்கிகரிக்கக் கூடிய சூழல் அதிகரித்து வருவதை, ஜனாதிபதியினுடைய இந்த உரையாடல் தெளிவுபடுத்திக் காட்டுகின்றது.
“ஏனென்றால், இலங்கையின் ஆட்சியாளர்களின் தற்போதைய போக்கு என்பது, இலங்கைத் தீவில் ஆதிக்கம் செலுத்த விரும்புகின்ற ஒரு சாராருக்கு, அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கின்றதென்பது எல்லோருக்கும் நன்றாகத் தெரியும்.
அவ்வாறான ஒரு சூழலிலே, இந்தத் தீவைக் கையாள்வதற்காக, இலங்கையில் இருக்கக் கூடிய வடக்கு, கிழக்குப் பிராந்தியத்தைத் தாயகமாகக் கொண்டு வாழ்கின்ற தமிழர்கள், ஒரு தேசத்துக்கு உரித்துடையவர்கள். ஆகவே, அந்தத் தேசத்தை அங்கிகரித்து விடக்கூடியதான நிலைமை, நகர்ந்து கொண்டிருக்கின்றது என்பதைத் தான் காட்டுகின்றது.
கடந்த 10 வருடங்களாக, இலங்கைத் தீவை மய்யப்படுத்தி, இந்தப் பூகோளப் போட்டி நடைபெறுகிறது. எனவே, தேசம் அங்கிகரிக்கக் கூடிய நிலைமையை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது என்பதை, எங்களுடைய மக்கள் புரிந்துகொண்டு எதிர்காலத் தீர்மானங்களை எடுக்கவேண்டும் வேண்டும் என தெரிவித்திருந்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
53 minute ago
56 minute ago
1 hours ago
2 hours ago