2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

சுனாமி: கைநழுவிச் சென்ற அரிய சந்தர்ப்பம்

எம்.எஸ்.எம். ஐயூப்   / 2019 டிசெம்பர் 25 , மு.ப. 01:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொத்தமாக 14 நாடுகளைச் சேர்ந்த 225,000க்கும் மேற்பட்டோரின் உயிர்களைப் பலி கொண்ட சுனாமி அனர்த்தத்துக்கு, நாளையுடன் 15 ஆண்டுகள் பூர்த்தியாகின்றன.   

2004 ஆம் ஆண்டு, டிசெம்பர் 26ஆம் திகதி, இடம்பெற்ற இந்த அனர்த்தம், உலக வரலாற்றிலேயே மிகவும் மோசமான கடல் கொந்தளிப்பாகக் கருதப்படுகிறது.  

இந்த 14 நாடுகளில் இந்தோனேசியா, இலங்கை, தாய்லாந்து ஆகிய நாடுகளே மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டன. இந்தோனேசியாவில் 130,000 பேர் கொல்லப்பட்டதாகவும் மேலும் 30,000 பேர் காணாமற்போயுள்ளதாகவும் 500,000 பேர் வீடுகளை இழந்ததாகவும் கணக்கிடப்பட்டது.   

இலங்கையில் 31,000 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் 5,000 பேர் காணாமற்போயுள்ளதாகவும் உத்தியோகபூர்வ அறிக்கைகள் கூறிய போதிலும், கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 41,000க்கும் அதிகம் என உத்தியோகப்பற்றற்ற அறிக்கைகள் கூறுகின்றன.   

இலங்கையில் கிழக்கு மாகாணமே மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட பிரதேசமாகும். அதிலும் அம்பாறை மாவட்டத்தில் மட்டும் 11,000க்கும் மேற்பட்டோர், சுனாமிப் பேரலையால் உயிரிழந்தனர். இலங்கையில் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளிட்ட கட்டடங்கள் அழிந்துள்ளன.  

இந்த விடயத்தில், இந்தோனேசியாவும் இலங்கையும் பல அம்சங்களில் சமமான அனுபவங்களைப் பெற்ற நாடுகளாகும். சுனாமியால் மிகவும் பாதிக்கப்பட்ட நாடுகள் என்பது ஒரு புறமிருக்க, இரண்டு நாடுகளிலும் அரசியலில் இந்த அனர்த்தம் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.   
குறிப்பாக, இரண்டு நாடுகளிலும் பிரிவினைவாத ஆயுதப் போராட்டங்கள் இடம்பெற்ற நிலையில், இந்த அனர்த்தம் இடம்பெற்றமையும் அந்தப் போராட்டம் இடம்பெற்ற பகுதிகள் வெகுவாக பாதிக்கப்பட்ட -மையும் இரண்டு நாடுகளிலும் பிரிவினைவாதப் போராட்டங்களைத் தீர்த்துக் கொள்ள, இந்த அனர்த்தம் அரிய வாய்ப்பை வழங்கியமையும் குறிப்பிடத்தக்கது. ஆனால், இந்தோனேசியா மட்டுமே, அந்த வாய்ப்பை, நல்ல முறையில் உபயோகித்துக் கொண்டது.  

இரண்டு நாடுகளிலும் பிரிவினைவாதப் போராட்டங்கள் ஒரே ஆண்டில் தான் ஆரம்பிக்கப்பட்டன. 1976ஆம் ஆண்டு, இலங்கையில் பிரிவினைவாத போராட்டத்துக்கான சித்தாந்த அத்திவாரமாக, தமிழர் விடுதலைக் கூட்டணி உருவாக்கப்பட்டதோடு, அக்கட்சி, தனது வட்டுக்கோட்டை மாநாட்டின் போது, ‘தமிழ் ஈழம்என்ற பெயரில், தனித் தமிழ் நாட்டை உருவாக்கும் பிரேரணையை நிறைவேற்றியது.   

1975ஆம் ஆண்டு, புலிகளால் யாழ்ப்பாண மேயர் அல்பிரட் துரையப்பா சுட்டுக் கொல்லப்பட்ட போதிலும், 1976ஆம் ஆண்டிலேயே தனித் தமிழ் நாடடுக்கான சித்தாந்தம் உத்தியோகபூர்வமாக நிறைவேற்றப்பட்டது.  

அதேபோல், 1976ஆம் ஆண்டிலேயே இந்தோனேசியாவில் அச்சே மாநிலத்தில் முஸ்லிம் பிரிவினைவாத ஆயுதப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது. GAM என்று ஆங்கிலத்தில் சுருக்கமாக அழைக்கப்படும் ‘சுதந்திர அச்சே இயக்கமே’ அந்தப் போராட்டத்தை நடத்தியது.   

அந்தப் போராட்டத்தின் காரணமாக, 2004 ஆம் ஆண்டு சுனாமி அந்நாட்டைத் தாக்கிய காலகட்டம் வரையிலும், 12,000க்கு மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர்.   

இதேகாலகட்டத்தில், இலங்கையில் பிரிவினைவாதப் போராட்டத்தின் காரணமாகக் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை, அதைவிடப் பல மடங்கு அதிகமாகும்.  

இரண்டு நாடுகளின் பிரிவினைவாதப் போராட்டங்களில் காணப்படும் மற்றோர் ஒற்றுமை என்னவென்றால், பல சமாதான நடவடிக்கைகளை அடுத்து, 2002 ஆம் ஆண்டு, இரண்டு நாடுகளிலும் புதிதாகச் சமாதானப் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டமை ஆகும்.  

இலங்கையில் 2002ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 21, 22 ஆகிய நாள்களில், புலிகளின் தலைவர் வே. பிரபாகரனும் இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் போர் நிறுத்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்டனர். செப்டெம்பர் மாதம் இறுதியில், இரு சாராரும் தாய்லாந்தில் நக்கோம்பத்தோம் நகரில் சமாதானப் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்தனர்.   

இரண்டு நாடுகளினதும் சமாதானப் பேச்சு வார்த்தைகளுக்கு, வட ஐரோப்பிய நாடுகளே, மத்தியஸ்தம் வகித்தன. இலங்கை சமாதானத் திட்டத்துக்கு நோர்வேயும் அச்சே மாநிலத்தின் சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்கு பின்லாந்தும் மத்தியஸ்தம் வழங்கின.   

விசித்திரமான விடயம் என்னவென்றால், இரண்டு நாடுகளிலும் அந்தச் சமாதான பேச்சுவாத்தைகள், சுமார் ஆறு மாதங்களில் முறிவடைந்தமை ஆகும். இலங்கையில் புலிகள், 2003 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி, பேச்சுவார்த்தைகளில் இருந்து விலகிக் கொண்டனர்.  

ஆயினும், அதன் பின்னரும் இலங்கையில் போர் நிறுத்தம் அரைகுறையாக அமுலில் இருந்ததோடு, இந்தோனேசிய அரசாங்கம், சமாதானப் பேச்சுவார்த்தைகள் முறிவடைந்தவுடன், பாரிய அளவில் கிளர்ச்சிக்காரர்களுக்கு எதிராகத் தமது படைகளை நகர்த்தியது.   

இந்த நிலையிலேயே, 2004 ஆம் ஆண்டு, இரண்டு நாடுகளிலும் பிரிவினைவாதப் போராட்டம் இடம்பெற்ற பகுதிகளை, சுனாமி அனர்த்தம் கடுமையாகத் தாக்கியது. அச்சே மாநிலம் முற்றாகத் தரைமட்டமாகியது. இலங்கையிலும் வடக்கு - கிழக்கு மாகாணங்களில் பாரிய அழிவுகள் ஏற்பட்டன.  

புதிய நிலைமைகளின் காரணமாக, இரு நாடுகளிலும் பிரிவினைவாத கிளர்ச்சிக்காரர்களும் அரசாங்கங்களும் புதிதாகச் சிந்திக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டன.   

சுனாமி அலை பல இடங்களில், ஆயுதப் போராட்டத்தை மறந்து செயற்பட, கிளர்ச்சிக்காரர்களையும் ஆயுதப் படையினரையும் நிர்ப்பந்தித்தது. 

இலங்கையில் பல இடங்களில், கடல்அலையில் அடித்துச் சென்ற புலி உறுப்பினர்களைப் படையினரும் வேறு சில இடங்களில் படையினரைப் புலி உறுப்பினர்களும் காப்பாற்றினர். சண்டையில் மற்றத் தரப்பாரை அழிக்கக் கங்கணம் கட்டிக் கொண்டு இருந்த போதும், இரு சாராரினதும் மனிதாபிமானத்தைக் கடல் அலை அழிக்கவில்லை.  

எனினும், சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கும் விடயத்தில் பாரிய சிக்கல் ஏற்பட்டது. வடக்கு - கிழக்கு மாகாணங்களில் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் ஒரு பகுதி, அரச கட்டுப்பாட்டிலும் ஏனைய பகுதிகள் புலிகளின் கட்டுப்பாட்டிலும் இருந்தன.   

அதேவேளை, பாதிக்கப்பட்டவர்களுக்கான வெளிநாட்டு உதவி, அரசாங்கத்துக்கே கிடைத்தது. அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளில் வாழ்ந்த மக்களைப் போலவே, புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் வாழ்ந்த மக்களுக்கும் நிவாரணம் வழங்கும் உத்தியோகபூர்வ கடமை, அரசாங்கத்துக்கே இருந்தது. இந்த நிலையில், அதற்கான பொறிமுறையொன்றை உருவாக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது.  

அதற்காக, அப்போது பெயரளவிலாவது அமுலில் இருந்த போர் நிறுத்த உடன்படிக்கையின் கீழ், கூட்டுப் பொறிமுறையொன்றை உருவாக்கும் யோசனையொன்றை, ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் அரசாங்கம் முன்வைத்தது.   

ஆனால், வடக்கு - கிழக்கில் ஆயிரக் கணக்கான மக்கள் கடலலையில் அள்ளுண்டு சென்று, ஆயிரக் கணக்கான வீடுகள் அழிந்து இருந்த அந்த நிலையில், புலிகள் நிவாரணத் திட்டத்தை அரசியல் மயமாக்கினர்.   

வடக்கு - கிழக்கு மாகாணங்களில் அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளில், அனர்த்தத்துக்குப் பின்னரான நிவாரணம், அபிவிருத்திப் பணிகளைத் தாமே மேற்கொள்ள வேண்டும் என்று கூறிய அவர்கள், அதற்காக ஒரு திட்டத்தையும் முன்வைத்தனர். ‘சுனாமிக்குப் பின்னரான நடவடிக்கை பொறிமுறை அமைப்பு’ (Post Tsunami Operational Mechanism Structure-P-TOMS) என்ற பெயரில் அந்தத் திட்டம் அழைக்கப்பட்டது.  

சுனாமி நிவாரணம் என்ற பெயரில், அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளையும் புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் இந்தத் திட்டத்துக்கு, தென் பகுதியில் பெரும் எதிர்ப்புக் கிளம்பியது.   

புலிகளை எவ்வகையிலும் மீண்டும் பேச்சுவார்த்தை மேசைக்குக் கொண்டு வர வேண்டும் என்று நினைத்த சந்திரிகா, இந்தத் திட்டத்தை ஏற்றுக் கொண்டார். அதற்கான ஒப்பந்தம் ஒன்றும் கைச்சாத்தானது.   

அப்போது சந்திரிகாவின் பொதுஜன ஐக்கிய முன்னணி, மக்கள் விடுதலை முன்னணியுடன் கூட்டரசாங்கம் ஒன்றையே நடத்தி வந்தது. அரசாங்கம், இந்தத் திட்டத்துக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டால், தாம் அரசாங்கத்திலிருந்து விலகுவதாக, மக்கள் விடுதலை முன்னணி எச்சரித்தது.   

அதைப் பொருட்படுத்தாமல் அரசாங்கம், அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடவே மக்கள் விடுதலை முன்னணி, அரசாங்கத்திலிருந்து விலகியது. அரசாங்கம் பெரும்பான்மையை இழந்தது. அதையடுத்து ஏற்பட்ட அரசியல் நெருக்கடி நிலையில், ஒப்பந்தம் காணாமற்போய்விட்டது.  

சர்வதேச கண்காணிப்பில், அரசாங்கமும் புலிகளும் பரஸ்பரம் நம்பிக்கையை வளர்த்துக் கொள்ளவும் அதன்படி இனப்பிரச்சினைக்கு நல்லதொரு தீர்வைக் காண்பதற்கும், கிடைத்த சிறந்த சந்தர்ப்பம் ஒன்றை, நாடு அவ்வாறு இழந்துவிட்டது.   

அச்சே மாநிலத்தில் சுனாமி தந்த சமாதானம்

2004 ஆம் ஆண்டு சுனாமிக்கு முன்னர் இலங்கையிலும் இந்தோனேசியாவில் அச்சே மாநிலத்திலும் இடம்பெற்ற பிரிவினைவாத போராட்டங்களில் பல ஒற்றுமைகள் இருந்த போதும், அந்த அனர்த்தத்தை அடுத்து, இரு நாடுகளிலும் அரசியலில் ஏற்பட்ட மாற்றங்களில் அந்த ஒற்றுமையைக் காண முடியாது.   

அதற்குப் பிரதான காரணம், அச்சே கிளர்ச்சியாளர்கள் சுனாமியை அடுத்து ஏற்பட்ட நிலைமையை, அரசியல்மயமாக்காததும் இலங்கையில் புலிகள் அதனை அரசியல்மயமாக்கியதுமே ஆகும். இலங்கையில் சுனாமியால் ஏற்பட்ட அழிவை விட, அச்சே மாநிலத்தில் ஏற்பட்ட அழிவு மிகவும் பயங்கரமானதாகும். அந்த நிலையில், தம்மால் மாநிலத்தைக் கட்டி அமைக்க முடியாது என்பதை GAM என்று அழைக்கப்பட்ட ‘சுதந்திர அச்சே இயக்கம்’ உணர்ந்தது.   

மீட்புப் பணிகளின் போதும் நிவாரணப் பணிகளின் போதும் அரசியலை அவற்றில் கலக்க அரசாங்கமோ கிளர்ச்சிக்காரர்களோ நினைக்கவில்லை. மாறாக, அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு வழங்கிய கிளர்ச்சிக்கார இயக்கம், அதன் மூலம் ஏற்பட்ட பரஸ்பர நம்பிக்கையின் அடிப்படையில், பல விட்டுக் கொடுப்புகளுடன் தமது அரசியல் கோரிக்கைகள் விடயத்தில், அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த முன்வந்தது.   

அதன் பிரகாரம், 2002 ஆம் ஆண்டு கைவிடப்பட்ட சமாதான பேச்சுவார்த்தைகள், பின்லாந்தில் ஹெலசிங்கி நகரில் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டு, முன்னரை விடக் கூடுதலான சுயாட்சி அதிகாரங்களை வழங்க அரசாங்கம் இணக்கம் தெரிவித்தது. மாநலத்தின் எண்ணெய் வளத்தில், 70 சதவீதத்தின் வருமானத்தை மாநில அரசாங்கத்துக்கு விட்டுக் கொடுக்க, இந்தோனேசிய அரசாங்கம் இணங்கியது. இது பரஸ்பர நம்பிக்கையின் விளைவாகும்.   

இலங்கையிலும் அது போன்று இனப்பிரச்சினையைத் தீர்த்துக் கொள்ள, சுனாமி அரிய சந்தர்ப்பம் ஒன்றை வழங்கியது. எனினும், புலிகள் நிவாரணப் பணிகளுக்கான பொறிமுறையை, அரசியல் அதிகாரத்தை பெறும் பொறிமுறையாக மாற்ற முயற்சித்தார்கள். அதனால், தென்பகுதியில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது. அவ்வாறானதொரு நிலைமை உருவாகாதிருந்தால், சந்திரிகாவுடன் இரு சாராரும் ஏற்கக் கூடிய தீர்வொன்றைக் காண வாய்ப்பு இருந்தது.  உண்மையிலேயே, ஏற்கெனவே அவ்வாறானதொரு தீர்வை, சந்திரிகாவின் அரசாங்கம் முன்வைத்திருந்தது. 1995 ஆம் ஆண்டு, சந்திரிகா முன்வைத்த ‘பக்கேஜ்’ என்று அக்காலத்தில் அழைக்கப்பட்ட திட்டம், ஏற்றுக் கொள்ளக்கூடியதொன்று என்று, 2003 ஆம் ஆண்டு, புலிகளின் ஆலோசகர் கலாநிதி அன்டன் பாலசிங்கமும் தெரிவித்திருந்தார்.   

அதன் பின்னர், 2002ஆம் ஆண்டு நவம்பர் மாதம், நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கமும் புலிகளும் சமஷ்டித் தீர்வைப் பற்றிய உடன்பாட்டை ஏற்படுத்திக் கொண்ட போதும், தெற்கில் ஓர் ஊர்வலமாவது அதற்கு எதிராக இடம்பெறவில்லை. மாறாக, 2003 ஆண்டு ஏப்ரல் மாதம் புலிகள் பேச்சுவார்த்தை மேசையிலிருந்து ஒதுங்கிய போது, எதிர்க்கட்சிகள் அது தொடர்பாகக் கவலை தெரிவித்திருந்தன. எனவே, சுனாமி வழங்கிய சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, சந்திரிகாவின் பக்கேஜைப் பற்றி, பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்திருக்கலாம்.   

‘பக்கேஜ்’ என்ற அந்தத் திட்டத்தில், இலங்கை ஒற்றை ஆட்சி என்று அழைக்கப்படவில்லை. பிராந்தியங்களின் ஒன்றியம் என்றே அழைக்கப்பட்டு இருந்தது. மாகாண சபைச் சட்டத்தில், அரசாங்கத்துக்கும் மாகாண சபைகளுக்கும் பொதுவானதாக இருக்கும் பல அதிகாரங்கள் மாகாண சபைகளிடம் வழங்கப்பட்டு இருந்தன.   

ஆனால், இலங்கையில் தனித் தமிழ் நாடொன்று உருவாவதற்கு இந்தியா ஒருபோதும் இடமளிக்காது என்ற பூகோள அரசியல் யதார்த்தத்தைப் புரிந்து கொள்ளாத புலிகள், தனித் தமிழ் நாட்டுக் கோரிக்கை விடயத்தில் விடாப்பிடியாக இருந்தனர். 

பாலசிங்கம் இந்த யதார்த்தத்தை அறிந்து இருந்தமையாலேயே, சந்திரிகாவின் பக்கேஜை ஏற்றுக் கொண்டு இருக்க வேண்டும் என்று கூறினார்.   இறுதியில் இந்தியா மற்றும் ஏனைய பல நாடுகளின் உதவியில் அரசாங்கம் புலிகளை அழித்துவிட்டது. அந்தப் போரில் பல்லாயிரக் கணக்கான அப்பாவி மக்களும் கொல்லப்பட்டனர். இப்போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ அதிகாரப் பரவலாக்கலே தேவையில்லை என்கிறார். 

அதனிடையே சில பௌத்த பிக்குகள், மாகாண சபைகளையும் இரத்துச் செய்ய வேண்டும் என்கின்றனர். தமிழ்க் கட்சிகள் செய்வதறியாது ஒன்றுக்கொன்று சண்டை பிடித்துக் கொண்டு இருக்கின்றன.    


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X