Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 30, புதன்கிழமை
எம்.எஸ்.எம். ஐயூப் / 2020 ஜனவரி 22 , பி.ப. 12:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்த இரண்டுச் சம்பவங்களும், வரலாற்றில் பல சம்பவங்களை மீட்டுவிட்டுச் சென்றுள்ளன. நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலின் போதும் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலின் போதும், ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியை ஆதரிக்க முன்வராமையே, சுதந்திரக் கட்சியிலிருந்து சந்திரிகா நீக்கப்படுவதற்குக் காரணமாகும்.
ஆனால், இதே மஹிந்த ராஜபக்ஷவை தோற்கடித்து, மைத்திரிபாலவை ஜனாதிபதியாவதற்கு, 2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின்போது முன்நின்று உழைத்தவர்தான் சந்திரிகா. அவர் அவ்வாறு உழைத்தவர் மட்டுமல்லாது, ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான கூட்டணியின் சார்பில், மஹிந்தவுக்கு எதிராகப் போட்டியிட மைத்திரியின் பெயரைப் பிரேரித்தவரும் சந்திரிகா என்றே கூறப்படுகிறது.
இன்று அதே மைத்திரிபால தலைமையிலான சுதந்திரக் கட்சி, மஹிந்த தலைமையிலான கட்சியை ஆதரிக்கவில்லை என்பதற்காக, சந்திரிகாவின் தந்தை ஆரம்பித்த கட்சியின் தொகுதி அமைப்பாளர் பதவியிலிருந்தே சந்திரிகாவை நீக்கியிருக்கிறது.
சந்திரிகாவின் தந்தையான முன்னாள் பிரதமர் எஸ்.டபிள்யூ.ஆர்.டீ. பண்டாரநாயக்கவே, 1952ஆம் ஆண்டில், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை ஆரம்பித்தார். அதனையடுத்து, சுமார் 53 ஆண்டுகளாக, பண்டாரநாயக்க குடும்பத்தினரே அக்கட்சிக்குத் தலைமை தாங்கினர். 1959ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம், பிக்கு ஒருவரால் எஸ்.டபிள்யூ.ஆர்.டீ. பண்டாரநாயக்க சுட்டுக் கொல்லப்பட்டதன் பின்னர், ஓரிரு மாதங்களில் அவரது மனைவியான சிறிமாவோ பண்டாரநாயக்க, அக்கட்சியின் தலைமைப் பதவிக்கு நியமிக்கப்பட்டார்.
சிறிமாவோ பண்டாரநாயக்கவின் குடியியல் உரிமை, 1980ஆம் ஆண்டில், அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தனவின் பதவிக் காலத்தின் போது இரத்துச் செய்யப்பட்டது. 1986ஆம் ஆண்டே, அவருக்கு மீண்டும் அவ்வுரிமை வழங்கப்பட்டது. ஆயினும், இடைப்பட்ட காலத்திலும் அவரே சுதந்திரக் கட்சியின் உத்தியோகப்பற்றற்ற தலைவியாக இருந்தார். அதன் பின்னர்? 2000ஆம் ஆண்டில் அவர் உயிரிழக்கும் வரை, சிறிமாவே அக்கட்சியின் தலைவியாகக் கடமையாற்றினார்.
அப்போது ஜனாதிபதியாக இருந்த சந்திரிகா குமாரதுங்க, சுதந்திரக் கட்சியின் தலைவியாகப் பதவியேற்றுக் கொண்டார். 2005ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம், ஜனாதிபதியாக மஹிந்த ராஜபக்ஷ தெரிவு செய்யப்பட்ட பின்னர், கட்சி யாப்பில் மேற்கொள்ளப்பட்ட திருத்தம் ஒன்றின்படி, கட்சித் தலைமை மஹிந்தவிடம் சென்றடைந்தது. அதாவது, 1952ஆம் ஆண்டு முதல் 2005ஆம் ஆண்டு இறுதி வரையான 53 வருடங்களாக, பண்டாரநாயக்க குடும்பத்தினரே சுதந்திரக் கட்சியின் தலைவர்களாக இருந்துள்ளனர்.
சுதந்திரக் கட்சியின் அத்தனகல்ல தொகுதி அமைப்பாளர் பதவியில் இருந்து சந்திரிகா நீக்கப்பட்டமை, அனேகமாக அவரை அக்கட்சியிலிருந்தே நீக்குவதற்கான ஆரம்ப நடவடிக்கையாக இருக்கலாம். எனவே தான், அவரது குடும்பச் சொத்தைப் போன்றதான சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர் பதவியிலிருந்தும் அவர் நீக்கப்பட்டமை முக்கியத்துவம் பெறுகிறது.
அரசியல் கட்சிகள், எவரதும் குடும்பச் சொத்தல்ல. ஆனால், சு.கவுக்கும் பண்டாரநாயக்க குடும்பத்துக்கும் இடையிலான உறவைப் பார்த்தால், இரண்டும் ஒன்றுபோல் தான் தெரிகிறது. எனவே தான், அக்கட்சியிலிருந்து சந்திரிகா நீக்கப்பட்டமை முக்கியத்துவம் பெறுகிறது.
தற்போது, அத்தனகல்ல தொகுதி அமைப்பாளராக, லசந்த அலகியவன்ன நியமிக்கப்பட்டுள்ளார். அதுவும் முக்கிய சம்பவமொன்றாகும். ஏனெனில், அவர் நீண்ட காலமாகவே, சந்திரிகாவின் நெருங்கிய ஆதரவாளராகவும் நம்பிக்கைக்கு உரியவராகவும் இருந்தவராவார்.
மைத்திரிபால தலைமையிலான சுதந்திரக் கட்சி, இனி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலின்போது, மஹிந்த தலைமையிலான பொதுஜன முன்னணிக்கு ஆதரவு வழங்க எடுத்துள்ள தீர்மானமும், ஒரு வகையில் விசித்திரமான முடிவாகும். ஏனெனில், ஐந்தாண்டுகளுக்கு முன்னர் இதுபோன்றதொரு நிலைமையை நினைத்துப் பார்க்கவும் முடிகிறது.
2014ஆம் ஆண்டு நவம்பர் 21ஆம் திகதியன்று, அப்போது மஹிந்த தலைமையிலான சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளராகவிருந்த மைத்திரிபால சிறிசேன, மஹிந்தவின் அரசாங்கத்திலிருந்து விலகி, எதிர்க் கட்சிகளின் பொது ஜனாதிபதி வேட்பாளராகவும் மஹிந்தவுக்கு எதிராகப் போட்டியிடுவதாகவும், தாம் ஜனாதிபதியாகப் பதவியேற்றபின், நிறைவேற்று ஜனாதிபதி முறையை இரத்துச் செய்வதாகவும் அறிவித்தார்.
மஹிந்தவின் ஆட்சியில் பாரியளவில் ஊழல்கள் இடம்பெற்றிருப்பதாகவும் தாம் அந்த ஊழல் பேர்வழிகளைத் தண்டிக்காமல் விடுவதில்லை எனவும், அவர் கூறினார்.
2015ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் திகதியன்று நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில், மைத்திரிபால வெற்றி பெற்றார். அதேபோல், அவரது ஆட்சியின் ஆரம்பத்தில், மஹிந்தவின் ஆட்சியின் கீழ் இடம்பெற்ற ஊழல்கள் தொடர்பாகப் பலர் கைது செய்யப்பட்டனர். மஹிந்தவின் குடும்பத்தவர்களும் விட்டு வைக்கப்படவில்லை. ஆனால், அப்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, மஹிந்தவுடன் வேறு விதமான உறவை வைத்திருந்தார் போல் இப்போது தெரிகிறது.
எனவே அவர், கோட்டாபய ராஜபக்ஷவின் அவன்கார்ட் நிறுவனத்தின் முன்னாள் சட்டத்தரணிகளான விஜயதாச ராஜபக்ஷவிடம் நீதி அமைச்சையும் திலக் மாரப்பனவிடம் சட்டம் ஒழுங்கு அமைச்சையும் கையளித்தார். அதன்படி, அந்த விசாரணைகள் முன்னெடுக்கப்படவில்லை.
ராஜபக்ஷர்களில் சிலரையும் மஹிந்த அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களில் சிலரையும் சிறையில் அடைத்து, தமது எதிர்க்கால அரசியலுக்கு உத்தரவாதம் தேடிக்கொள்ள மைத்திரி எடுத்த முயற்சி, இதனால் தோல்வியடைந்தது.
அத்தோடு, அரசியல் ரீதியாக மஹிந்த பலம்பெற்று வந்தார். எனவே, அவர் அச்சம் கொண்டார். 2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் தாம் தோல்வியடைந்திருந்தால், தாம் ஆறடி நிலத்தடியிலேயே இப்போது இருந்திருப்பதாக, அதற்கு முன்னர் அவர், பலமுறை கூறியிருந்தார்.
இதனிடையே, மஹிந்த தலைமையிலான புதிய கட்சியான பொதுஜன முன்னணி, 2018ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளூராட்சிமன்றத் தேர்தல்களில் பெரும் வெற்றியை ஈட்டியதால், மைத்திரி மேலும் அச்சம் கொண்டார். ராஜபக்ஷர்கள் மீண்டும் நாட்டில் ஆட்சிக்கு வந்தால், தம்மை பழி வாங்காமல் விடமாட்டார்கள் என்பது அவருக்குத் தெரியும். எனவே, மஹிந்தவுடன் இணைந்து செயற்படுவதே தமது பாதுகாப்புக்கான ஒரே வழியென, அவர் உணர்ந்தார்.
அதன்படி தான், 2018ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம், ரணில் விக்கிரமசிங்கவை பிரதமர் பதவியிலிருந்து நீக்கி, மஹிந்தவை அப்பதவியில் அமர்த்தினார். அதன் பின்னர், மஹிந்த தமது பிரதமர் பதவியைப் பாதுகாத்துக் கொள்ளும் வகையில், நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையைத் தேடிக்கொள்வதற்கு வசதியாக, நாடாளுமன்றத்தின் கூட்டத் தொடரை ஒத்திவைத்தார்.
மஹிந்தவால் அது முடியாமல் போகவே, பின்னர் நாடாளுமன்றத்தை கலைத்தார் மைத்திரி. இறுதியில், அதுவும் சட்டவிரோதமென உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அவை அனைத்தும் தோல்வி கண்ட போதிலும், மைத்திரியின் நோக்கம் நிறைவேறியது. மஹிந்த மீண்டும் பதவிக்கு வந்து தம்மை பழிவாங்காதிருக்க அவருடன் நட்பை வளர்த்துக் கொள்வதே மைத்திரியின் நோக்கமாக இருந்தது. மஹிந்தவின் பிரதமர் பதவி, 2018ஆம் ஆண்டே பறிபோனாலும், மஹிந்தவின் நண்பனாகிவிட்டார் மைத்திரி.
எனினும், மஹிந்தவோ அல்லது பொதுஜன முன்னணியோ, மைத்திரியை அவ்வளவுப் பெரிதாக மதிக்கவில்லை. பொதுஜன முன்னணியும் சுதந்திரக் கட்சியும், ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு கூட்டணி அமைக்கப் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டு இருக்கும் போதே, பொதுஜன முன்னணி, சுதந்திரக் கட்சியின் கருத்தை விசாரிக்காமலேயே கோட்டாபய ராஜபக்ஷவை தமது ஜனாதிபதி வேட்பாளராக அறிவித்தது.
மொட்டு சின்னத்திலன்றி கதிரைச் சின்னத்தில் இரு கட்சிகளும் போட்டியிட வேண்டும் என்ற சுதந்திரக் கட்சியின் யோசனையை, பொதுஜன முன்னணி உதாசீனம் செய்தது.
எனவே, தாம் இன்னமும் பாதுகாப்பாக இல்லை என்று மைத்திரி உணர்கிறார் போலும். அந்த நிலையிலேயே, அவர் வலிந்து சென்று பொதுஜன முன்னணியை ஆதரிக்க முன்வந்துள்ளார். சந்திரிகாவை சுதந்திரக் கட்சியிலிலுந்து நீக்கியதிலோ சுதந்திரக் கட்சி வலிந்து சென்று பொதுஜன முன்னணியை ஆதரிப்பதிலோ, எந்தவிதக் கொள்கை அடிப்படையும் இல்லை.
மஹிந்தவை திருப்திப்படுத்தி, தமது பாதுகாப்பை உறுதிப்படுத்திக்கொள்வதே மைத்திரியின் நோக்கமாகும். அமைச்சர் பதவிகளே சுதந்திரக் கட்சியின் ஏனைய தலைவர்களது இலக்காக இருக்கிறது. எல்லாம் சுயநலம் தான்.
மைத்திரியும் 19ஆவது திருத்தமும்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கூறுவதைப் போல், அரசமைப்பின் 19ஆவது திருத்தத்தை மாற்றியமைக்க வேண்டும் என்றும் அதற்காக, எதிர்வரும் பொதுத் தேர்தலில், மூன்றில் இரண்டுப் பெரும்பான்மைப் பலத்தை பொதுஜன முன்னணி பெறும் வகையில், அக்கட்சிக்கு சுதந்திரக் கட்சி ஆதரவளிக்கும் என்றும், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான சுதந்திரக் கட்சி அண்மையில் அறிவித்தது.
19ஆவது திருத்தத்தை அறிமுகப்படுத்துவதில், முன்னணியில் இருந்தவர் மைத்திரி. நிறைவேற்று ஜனாதிபதி முறையை இரத்துச் செய்வதாக வாக்குறுதியளித்தே, ஜனாதிபதியாக அவர் பதவிக்கு வந்தார். அதற்காக, சர்வஜன வாக்கெடுப்பொன்றை நடத்த வேண்டுமென உயர் நீதிமன்றம் கூறியதை அடுத்தே, மைத்திரி - ரணில் அரசாங்கம், ஜனாதிபதியின் அதிகாரங்களைக் கூடியவரை குறைக்கும் வகையில், 19ஆவது அரசமைப்பைக் கொண்டுவந்தனர்.
ஆனால் அந்தத் திருத்தத்தின்படி, ஜனாதிபதியைப் பார்க்கிலும் சில விடயங்களில் பிரதமரே அதிகாரம் கொண்டவராக இருக்கிறார். எனவே, மைத்திரி அவரது ஆட்சியின் இறுதிக் காலத்தில், அந்தத் திருத்தத்தை மாற்றியமைக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டுக்கு வந்தார். அதனை அவர் பல பகிரங்க மேடைகளிலும் கூறியிருந்தார். ஆயினும், அந்த திருத்தத்தின் மூலம் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்ட சுயாதீன் ஆணைக்குழுக்கள் மூலம், நாட்டில் ஜனநாயகம் பாதுகாக்கப்பட்டதாக அவர் அதன் பின்னரும் பெருமையாகக் கூறியிருந்தார். உண்மையும் அதுவே.
நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலை அடுத்து பதவிக்கு வந்தவுடன், 19ஆவது திருத்தத்தின் தாக்கத்தை கோட்டாபய ராஜபக்ஷவும் உணர்ந்தார். பாதுகாப்பு என்ற விடயம் ஜனாதிபதியின் பொறுப்பு என்று அரசமைப்பில் குறிப்பிடப்பட்டு இருந்த போதிலும், 19ஆவது திருத்தத்தின்படி, அமைச்சுப் பதவிகளை ஜனாதிபதி ஏற்க முடியாது. எனவே, இப்போது பாதுகாப்பு அமைச்சர் ஒருவர் நாட்டில் இல்லை.
ஜனாதிபதியின் விருப்பப்படி, உயரதிகாரிகளை நியமிக்கவும் முடியாது. இந்த நிலையிலேயே, 19ஆவது திருத்தத்தை மாற்றியமைக்க வேண்டும், அதற்காகத் தமக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை அதிகாரம் வேண்டுமென, ஜனாதிபதியும் பொதுஜன முன்னணியினரும் கூறி வருகிறார்கள்.
தமது எதிர் காலத்தைப் பற்றி அச்சத்தோடு இருக்கும் மைத்திரி, ராஜபக்ஷர்களை மேலும் திருப்திப்படுத்த, அதனையும் ஒரு சந்தர்ப்பமாகப் பாவிக்கிறார்.
அதனால் தான், நடைபெறவுள்ள பொதுத் தேர்தலின் போது, வெறுமனே நாம் பொதுஜன முன்னணியை ஆதரிப்போம் என்று கூறாது, 19ஆவது திருத்தத்தை மாற்றிமைக்க, மூன்றில் இரண்டு பலத்தைப் பெற்றுக் கொடுக்கும் வகையில் நாம் பொதுஜன முன்னணியை ஆதரிப்போம் என்று, மைத்திரியும் அவரது சுதந்திரக் கட்சித் தலைவர்களும் கூறி வருகின்றனர்.
கோட்டாபய தலைமையிலான அரசாங்கம், மூன்றில் இரண்டு பலத்தைப் பெற்று, 19ஆவது திருத்தத்தை மாற்றியமைத்தால், சுயாதீன ஆணைக்குழுக்கள் தொடரும் என்பதற்கு எந்தவித உத்தரவாதமும் இல்லை.
2001ஆம் ஆண்டில், சந்திரிகாவின் அரசாங்கம் அறிமுகப்படுத்திய சுயாதீன் ஆணைக்குழுக்களை, 2010ஆம் ஆண்டில் 18ஆவது அரசமைப்புத் திருத்தத்தைக் கொண்டுவந்த மஹிந்த ராஜபக்ஷ, அதன் மூலம் அவற்றை இரத்துச் செய்தமை குறிப்பிடத்தக்கது.
எனவே, கோட்டாபயவும் அவற்றை இரத்துச் செய்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
நிலைமை அவ்வாறிருக்கையிலேயே, சுயாதீன் ஆணைக்குழுக்கள் மூலம், நாட்டில் தாம் ஜனநாயகத்தை நிலைநாட்டியதாக பெருமை பாராட்டிக்கொள்ளும் மைத்திரி, 19ஆவது திருத்தத்தை மாற்றியமைக்க, கோட்டாபயவுக்கு மூன்றில் இரண்டு பலத்தைப் பெற்றுக் கொடுப்போம் எனவும் கூறுகிறார். இது கொள்கையல்ல, சுயநலமே.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
7 hours ago
29 Apr 2025
29 Apr 2025