Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
R.Tharaniya / 2025 செப்டெம்பர் 24 , பி.ப. 03:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம்.ஐயூப்
தேசிய மக்கள் சக்தியினதும் அதன் பிரதான உறுப்புக் கட்சியான மக்கள் விடுதலை முன்னணியினதும் தலைவர்களின் சொத்து விவரங்கள் இந்நாட்களில் பெரும் பேசு பொருளாக மாறியுள்ளது.
வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்கவின் சொத்து விவரங்கள் பற்றி சமூக ஊடகங்களில் வெளியானதை அடுத்தே, இந்த விடயம் சுமார் ஒரு வாரக் காலமாக இப்போது பேசு பொருளாகி உள்ளது. அவரது சொத்துக்களின் மொத்த பெறுமதி சுமார் 27 கோடி ரூபாவாகும்.
பாட்டாளி வர்க்க கட்சி என்று கூறிக்கொள்ளும் ஒரு கட்சியின் தலைவர் ஒருவரிடம் இவ்வளவு சொத்து இருக்க முடியுமா? என்பதே பலரது கேள்வியாகும். அவர் இவ்வளவு சொத்தை எவ்வாறு சேர்த்தார் என்று சிலர் கேட்கிறார்கள்.
தமது கட்சியின் முழு நேர உறுப்பினர்கள் எவ்வாறு தமது வாழ்க்கையை நடத்துகிறார்கள் என்று அமைச்சர் சமரசிங்க தொலைக்காட்சி கலந்துரையாடல் ஒன்றின் போது விவரிக்கும் ஒரு வீடியோவும் இந்நாட்களில் சமூக ஊடகங்களில் உலாவுகிறது.
தமது கட்சி உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் முழுநேர தொண்டர்களைத் தாமாகவே முன்வந்து பராமரித்து வருகிறார்கள் என்றும் தம்மையும் அவர்களே பராமரித்து வருகிறார்கள் என்றும் அவர் அதில் கூறுகிறார். இவ்வளவு சொத்து உள்ளவரைக் கட்சி உறுப்பினர்கள் ஏன்? பராமரிக்க வேண்டும் என்றும் சிலர் கேள்வி எழுப்பியிருந்தனர்.
அது நியாயமான கேள்வியாகும். ஆயினும் அவர், போன்றோர் முழு நேர ஊழியர்களாக தமது வாழ்க்கையையே கட்சிக்காக அர்ப்பணித்து இருக்கும்போது, கட்சி அவரை பராமரிக்க வேண்டும் என்று உறுப்பினர்கள் நினைக்கிறார்கள் போலும். எனவே, அவர்கள் அதை அலட்டிக்கொள்வதில்லை போலும். அத்தோடு, தேசிய மக்கள் சக்தியின் வேறு சில உறுப்பினர்களின் சொத்து விவரங்களும் பேசுபொருளாகத் தொடங்கியிருக்கிறது.
எதிர்க்கட்சிகள் தேசிய மக்கள் சக்தியின் சில உறுப்பினர்களின் சொத்துக்களைப் பற்றி பொய்யான பிரசாரங்களையும் செய்து வருகிறார்கள்.அமைச்சர் சமரசிங்க தமது சொத்து விவரங்களை மூடி மறைத்து இருக்க வேறு எவரும் அதைக் கண்டுபிடித்து அம்பலப்படுத்தி இருந்தால் தற்போதைய சர்ச்சையைப் புரிந்து கொள்ளலாம்.
இதைப் பற்றி முதன்முதலில் சமூக ஊடகங்களில் தகவல் வெளியிட்டோரும் இவ்விவரங்களை இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துரைகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் இணையதளத்தில் இருந்தே பெற்றிருந்தனர். அமைச்சர் சமரசிங்கவே அவ்விவரங்களை அவ்வாணைக்குழுவிடம் வழங்கியும் இருந்தார்.
தமது சொத்து விவரங்களை குறைவாக மதிப்பிட்டும் அவ்வாணைக்குழுவிடம் சமர்ப்பித்தவர்களும் இன்னமும் தமது விவரங்களை சமர்ப்பிக்காதவர்களும் எவ்வளவோ இருக்கத்தான் அமைச்சர் சமரசிங்க பேசு பொருளாகி உள்ளார். இவ்வாறு தமது சொத்து விவரங்களை முறையாக வழங்காதவர்களும் சமரசிங்கவின் சொத்து விவரங்களைப் பற்றி கேள்வி எழுப்புகின்றனர்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்னமும் தமது சொத்து விவரங்களை சமர்ப்பிக்க வில்லை என்றே கூறப்படுகிறது. தாம் இவ்விவரங்களை அச்சுப் பிரதிகளாக ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்ததாகவும் அதனை டிஜிடல் முறையில் சமர்ப்பிக்குமாறு ஆணைக்குழு அறிவித்ததால் இன்னமும் அதைச் சமர்ப்பிக்கவில்லை என்றும் சஜித் கூறியுள்ளார்.
அவர் தமது சொத்து விவரங்களை கையால் எழுதி சமர்ப்பித்திருக்க மாட்டார். அவர் அவற்றை நிச்சயமாக கம்ப்யூட்டரில் எழுதியே அச்சடித்து இருப்பார். அவ்வாறாயின், ஓரிரு நிமிடங்களில் அந்த மின் ஆவணங்களை மின்னஞ்சலில் ஆணைக்குழுவுக்கு அனுப்ப முடியும். அவர் ஏன் அதை வைத்துக் கொண்டு இருக்கிறார்?
அமைச்சர் வசந்த சமரசிங்க, 2004 முதல் ஒவ்வொரு தேர்தலிலும் போட்டியிட்டு வந்துள்ளார். அந்த அத்தனை சந்தர்ப்பங்களிலும் அவர் தமது சொத்து விவரங்களை இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துரைகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவிடமோ அல்லது பாராளுமன்றத்திடமோ வழங்கியும் உள்ளார்.
தற்போதைய சொத்து விவரங்களில் இருக்கும் பெரும்பாலான சொத்துக்கள் அந்த பழைய விவரங்களிலும் இருந்துள்ளன. இவ்வாறு இருக்க தமது தற்போதைய சொத்து விவரம் மட்டும் ஏன் எதிர்க்கட்சிகளின் கண்ணில் குத்துகிறது என்று அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.
சமரசிங்க ஒரு ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர் அல்ல, அவரது குடும்பம் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்கவின் சொந்த ஊரான தம்புத்தேகமவில் உள்ள பெரும் செல்வந்த குடும்பம் என்று சில காலத்துக்கு முன்னர் அனுரகுமாரவே தொலைக்காட்சி கலந்துரையாடல் ஒன்றில் கூறியிருந்தார்.
அத்தோடு, தாம் பல்கலைக்கழகத்துக்குச் செல்ல முன்னர் பாடசாலை மாணவர்களுக்கு மேலதிக வகுப்புக்களை நடத்தி, பின்னர் தனியார் கல்வி நிறுவனமொன்றுக்காகத் தனியானதொரு கட்டிடத்தை நிர்மாணித்து அதனையும் வாடகைக்கு விட்டுள்ளதாகவும். சமரசிங்க கூறுகிறார்.
அவரது சொத்துக்களோ, வருமானங்களோ, சட்ட விரோதமாக இருந்தால் அவர் அவ்விவரங்களை இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துரைகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்திருக்க மாட்டார். எனவே அந்த விவரங்களைப் பிடித்துக்கொண்டு எதிர்க்கட்சிகள் அரசியல் நடத்துவதானது வேடிக்கையாகும்.
ஆயினும், ஒரு சிலருக்கு அவர் எவ்வாறு சொத்து சேகரித்தார் என்பதில் நியாயமான சந்தேகங்கள் இருக்கலாம். அவ்வாறாயின், அந்த சந்தேகத்துக்கான காரணங்களை இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துரைகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவிடம் தெரிவித்து விசாரணை நடத்துமாறு கேட்கலாம்.
அதில் தவறேதும் இல்லை. அவ்வாறு கேட்கவும் வேண்டும். ஏனெனில் தேசிய மக்கள் சக்தியினர் ஊழலை ஒழிப்பதாக வாக்குறுதி அளித்தே பதவிக்கு வந்தனர்.
பாட்டாளி மக்களுக்காகவென ஆரம்பிக்கப்பட்டாலும், மக்கள் விடுதலை முன்னணியினர் அனைவரும் ஏழைகள் அல்ல. அக்கட்சியில் ஆரம்பத்திலிருந்தே சில செல்வந்தர்கள் இருந்துள்ளனர்.
உதாரணமாக, தங்காலை, வித்தாரந்தெனியவில் விஜித ரணவீர என்பவரை எடுத்துக் காட்டலாம். அவர் அப்பகுதியில் ஒரு பெரும் செல்வந்தர். 1971ஆம் ஆண்டு கிளர்ச்சிக்கு முன்னரே அவர் மக்கள் விடுதலை முன்னணியில் இணைந்தார்.
ஆரம்பக் காலத்தில் மக்கள் விடுதலை முன்னணியின் பல இரகசிய கல்வி முகாம்கள் அவரது தோட்டங்களில் உள்ள கட்டிடங்களிலேயே நடத்தப்பட்டுள்ளன.
மக்கள் விடுதலை முன்னணியை விடுங்கள், பாட்டாளி வர்க்க அரசியல் தத்துவத்தின் தந்தையாகக் கருதப்படும் கார்ல் மார்க்ஸூம் ஏழையல்ல.
அவரது தந்தை ஒரு சட்டத்தரணி. மார்க்கஸோடு இணைந்து கம்யூனிஸ வாதிகளின் பைபிள் என அழைக்கப்படும் டாஸ் கப்பிட்டால் என்ற நாவலை எழுதிய பிரட்ரிக் ஏங்கல்ஸின் தந்தை பாரியதோர் புடவை தொழிற்சாலையின் உரிமையாளராக இருந்தார். பின்னர் ஏங்கல்ஸூம் வர்த்தகரானார். மார்கஸூம் ஏங்கல்ஸூம் தான் மார்கஸியத்தின் ஆரம்ப கர்த்தாக்களாவர்.
அவர்களது தத்துவத்தை ஏற்று 1917ஆம் ஆண்டு ரஷ்யாவில் புரட்சியை நடத்தி உலகின் முதலாவது சோஷலிச நாடான சோவியத் ஒன்றியத்தை உருவாக்க வித்திட்ட விளாடிமிர், இலியச் லெனினும் ஏழையல்ல. அவரது தந்தை ஒரு சட்டத்தரணி ஆவார். மிகப் பின்தங்கிய நிலப்பிரபுத்துவ சீனாவைப் புரட்சி ஒன்றின் மூலம் சோசலிச வல்லரசாக மாற்றிய மா சே துங்கின் குடும்பமும் ஏழைக் குடும்பமல்ல.
வட கொரியாவில் புரட்சியை நடத்திய கிம் இல் சுங் ஒரு நடுத்தர குடும்பத்தில் பிறந்தவராவார். கியூபாவின் சோசலிச புரட்சித் தலைவர் பிடல் காஸ்ட்ரோ ஒரு சட்டத்தரணி. அவரது சகா சே குவேரா (Che Guevara) ஒரு வைத்தியர்.
இலங்கையின் இடதுசாரி இயக்கத்தின் தலைவர்களே மேற்கத்திய நாடுகளில் இருந்து இந்நாட்டுக்குப் பாட்டாளி வர்க்க அரசியல் தத்துவத்தைக் கொண்டு வந்தனர் அவர்களில் எவரும் ஏலைகளல்லர். 1930களில் வெளிநாடு சென்று கல்வி கற்க கூடிய செல்வந்தர்களாகவே அவர்கள் இருந்தனர்.
இலங்கையின் முதலாவது இடதுசாரி கட்சியான லங்கா சமசமாஜ கட்சியை உருவாக்கிய பிலிப் குணவர்தன, கலாநிதி என்.எம் பெரேரா, கலாநிதி கொல்வின் ஆர்.டி.சில்வா, பெர்னார்ட் சொய்சா மற்றும் மருத்துவர்
எஸ்.ஏ.விக்ரமசிங்க ஆகிய அனைவரும் உயர் மத்திய வர்க்கத்தை அல்லது முதலாளித்துவ குடும்பங்களைச் சேர்ந்தவர்களாவர்.
தமிழ் இடது சாரிகளில் முன்னணித் தலைவராக நாகலிங்கம் சண்முகதாசனை கருதலாம். அவரும் 1930களில் பல்கலைக்கழகம் செல்லக் கூடிய அளவில் மத்தியத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவராக இருந்தார். ஆனால், அவர்கள் பாட்டாளி வர்க்கத்தின் அதாவது ஏழைகளின் பொருளாதார விமோசனத்திற்கான தத்துவமாகக் கருதப்படும் மார்க்சியத்தை கற்று அதனை ஏற்று அதன்படி, அரசியலில் ஈடுபட்டனர்.
இதற்கு ஒரு காரணம் இருக்கிறது. மார்க்சிய தத்துவமானது பொருளியல், தத்துவம் மற்றும் அரசியல் என்று மூன்று கிளைகளைக் கொண்டதாகும். அந்த அறிவு ஆழமானதாகும். அது பாட்டாளி வர்க்கத்தைப் பற்றிப் பரிவு கொண்ட படித்தவர்கள் மூலமே ஏழைகளிடம் சென்றடைகிறது.
மக்கள் விடுதலை முன்னணியின் ஸ்தாபகர் ரோஹன விஜேவீர செல்வந்தராக இல்லாவிட்டாலும் அவரது தந்தை கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர் என்பதால் அவர் இடதுசாரி அரசியலால் கவரப்பட்டார். அத்துடன் இவ்வாறு கட்சிகள் ஆரம்பிக்கப்பட்டாலும் பிற்காலத்திலும் அமைச்சர் சமரசிங்க போன்ற வசதி படைத்தவர்களும் இடைக்கிடையே இடதுசாரி கட்சிகளில் இணைந்துள்ளனர்.
இதைத் தெரியாமல் தான் இன்று பலர் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர்களில் ஒரு சிலரின் சொத்து விவரங்களைக் கண்டு இது என்ன பாட்டாளி வர்க்க அரசியலா? என்று கேட்கிறார்கள்.
ஆயினும், தாம் எவ்வாறு சொத்து சேகரித்தோம் என்று மக்கள் விடுதலை முன்னணியின் சில தலைவர்கள் தெரிவித்து இருக்கும் கருத்துக்கள் சர்ச்சைக்குரியவையாகும். அதை அவர்கள் மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும்.
1 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
4 hours ago
4 hours ago