2026 மார்ச் 24, செவ்வாய்க்கிழமை

ஜி.எஸ்.டி: பா.ஜ.கவுக்கு வரப்பிரசாதமா, வீண் வம்பா?

Thipaan   / 2016 ஓகஸ்ட் 09 , மு.ப. 04:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் ஒரு சட்டமூலத்தை நிறைவேற்ற 13 வருடங்கள் எடுத்துக் கொண்டிருப்பது சரக்கு மற்றும் சேவை வரி சட்டமூலம் என்பது நிஜம் என்றால், இந்தச் சட்டமூலத்தை நிறைவேற்ற நடைபெற்ற பேச்சுவார்த்தைகள், விவாதங்கள், கருத்துப் பரிமாற்றங்கள் எல்லாம் அதை விட நிஜம். ஊழலை ஒழிக்க 'லோக்பால்' அமைப்பை ஏற்படுத்துவதும் இப்படிப்பட்ட நீண்ட விவாதங்களுக்குப் பிறகு நிறைவேற்றப்பட்டாலும், இன்னும் இந்தியாவில் லோக்பால் அமைப்பு உருவாக்கப்படவில்லை. ஆனால் சரக்கு மற்றும் சேவை வரி சட்டமூலம் லோக்சபா மற்றும் ராஜ்ய சபா ஆகிய இரு அவைகளாலும் 3.8.2016 அன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்தச் சரக்கு மற்றும் சேவை வரிச்சட்டத்துக்கு வித்திட்டவர் டாக்டர் ஹெல்கர். அவர் தலைமையிலான குழுதான் 2003 ஆம் வருடம் இந்தியாவில் 'ஒரே வரி விதிப்பு' முறையைக் கொண்டு வர வேண்டும் என்ற பரிந்துரையைச் செய்தது. முன்பு நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரம் தனது நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்து 2006 இல் நாடாளுமன்றத்தில் பேசிய போது 'சரக்கு மற்றும் சேவை வரி' சட்டம் கொண்டு வர வேண்டிய அவசியத்தை வலியுறுத்தினார். அப்போதுதான் இது வெளிஉலகத்துக்குத் தெரியவந்தது.

அவருக்குப் பிறகு வந்த நிதியமைச்சர் பிரனாப் முகர்ஜி காலத்திலும் இதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. தற்போது நிதியமைச்சராக இருக்கும் அருண்ஜேட்லி காலத்தில் இந்தச் சட்டமூலம் லோக் சபாவிலும், ராஜ்ய சபாவிலும் நிறைவேற்றப்பட்டு இந்தியாவில் ஒரே விதமான வரி விதிப்பு முறை நடைமுறைக்கு வருகிறது. 2003 இல் தொடங்கிய இச்சட்டத்திற்கான நிதியமைச்சர்களின் போராட்டம் 2016 இல் நிறைவு பெற்றிருக்கிறது. மூன்று இந்திய நிதியமைச்சர்களின் தொடர் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றியாகவே இந்தச் சட்டம் கருதப்படுகிறது.

இச்சட்டம் கொண்டு வரப்படுவதற்கு  முன்பு மாநிலங்களுக்கு இரண்டு விதமான அச்சம் இருந்தது. ஒன்று வரி விதிப்பு மாநில அரசுகளின் அதிகாரத்தில் உள்ள விடயம். அதில் மத்திய அரசு குறுக்கிட்டு மாநில அரசுகளின் உரிமையைப் பறிக்கிறது என்ற எண்ணம் ஏற்பட்டது. அதனால்தான் இந்த விவாதத்தில் பங்கேற்றுப் பேசி விட்டு வெளிநடப்புச் செய்த அதிமுக ராஜ்ய சபை உறுப்பினர் நவநீதகிருஷ்ணன், 'இச்சட்டம் அநீதியானது. ஒரு தலைப்பட்சமானது. அரசியல் சட்டத்துக்கு விரோதமானது. அரசியல் சட்டத்தின் அடிப்படை அம்சத்தை தகர்க்கக் கூடியது' என்றெல்லாம் கடுமையாக விமர்சித்துப் பேசினார்.

இன்னொரு அச்சம் உற்பத்தி செய்யும் மாநிலங்களின் அச்சம். இந்தச் சட்டத்தால் தங்களுக்கு பெரிய வருவாய் இழப்பு ஏற்படும் என்று அஞ்சின. உதாரணமாக உற்பத்தி மாநிலமான தமிழகத்துக்கு 9,000 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படும் என்று முதலமைச்சர் ஜெயலலிதாவே பிரதமர் நரேந்திரமோடிக்கு எழுதிய கடிதத்தில் வலியுறுத்திக் கூறினார்.

இந்த இரு அச்சங்களையும் போக்கும் விதத்தில் சட்டமூலத்தை அறிமுகம் செய்து பேசிய இந்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, 'மாநிலங்களுக்கு ஏற்படும் வருவாய் இழப்பு ஐந்து வருடத்துக்கு ஈடுகட்டப்படும். இந்த வரி விதிப்பு பற்றிய பிரச்சினைகள் எதுவாக இருந்தாலும் அவற்றைத் தீர்க்க ஜி.எஸ்.டி கவுன்சில் அமைக்கப்படும். அதில் மாநிலங்களுக்கு மூன்றில் இரண்டு பங்கு வாக்குரிமையும் மத்திய அரசுக்கு மூன்றில் ஒரு பங்கு வாக்குரிமையும் உண்டு' என்று விளக்கினார். இது மாநில அரசுகளின் அச்சத்தைப் போக்கியிருந்தாலும், இன்னும் மாநில அரசுகளுக்கு 'சரக்கு மற்றும் சேவை வரிச் சட்டத்தின்' மீதான பீதி நீடிக்கிறது என்றே கருதும் வகையில் அடுத்த கட்ட விவாதங்களும் நாடாளுமன்ற விவாதங்களும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

சரக்கு மற்றும் சேவை வரிச் சட்டத்தால் நாடு முழுவதும் ஒரே வரி விதிப்பு முறை இருக்கும்; வரி ஏய்ப்பு தடுக்கப்படும்; மத்திய - மாநில அரசுகளின் வரி வருவாயைப் பெருக்கும்ƒ நாட்டின் வளர்ச்சிக்கு பேருதவியாக இருக்கும் என்று வாதிடப்படுகிறது. அதை விட நாடு முழுவதும் பொருட்களின் மீதான வரி விதிப்பு சதவீதம் குறையும் என்ற கருத்தும் முன் வைக்கப்படுகிறது.

இந்தச் சட்டமூலத்தை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக மாநிலங்களுக்கு இடையிலான வர்த்தகத்துக்கு ஒரு சதவீத கூடுதல் வரி விதிக்கும் முறையை மத்திய அரசு கைவிட்டுள்ளது. ஆனால் அதிகபட்ச வரியாக 18 சதவீதம் மட்டுமே இருக்க வேண்டும் என்று இந்திய நிதித்துறை ஆலோசகர் அரவிந்த் சுப்ரமண்யம் கொடுத்த அறிக்கை இன்றைக்கு பெரிய விவாதமாக மாறியிருக்கிறது. இந்தச் சட்டமூலத்தை நிறைவேற்றும் போது அதிகபட்ச வரி விதிப்பு 18 சதவீதமா அல்லது அதற்கும் அதிகமா என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்றாலும், அரசு வட்டாரங்கள் 20 சதவீதம் கூட இருக்கலாம் என்ற கருத்தை விதைத்து வருகின்றன.

ஆனால் முன்னாள்; நிதியமைச்சர் ப. சிதம்பரம், '18 சதவீதத்துக்கு அதிகமாக வரி விதிக்கக் கூடாது. அதற்கு மேல் போனால் பண வீக்கத்தை அதிகரிக்கும். அரசு கூறுவது போல் இந்தச் சட்டம் மக்களின் நண்பனாக இருக்காது. ஆகவே அதிகபட்ச வரி 18 சதவீதத்துக்கு மேல் இருக்காது என்றே நம்புகிறேன்' என்று எடுத்துரைத்துள்ளார். இந்நாள் நிதியமைச்சருக்கு முன்னாள் நிதியமைச்சர் சொன்ன அறிவுரை என்பதை விட, அனேகமாக அனைத்துக் கட்சிகளுமே சட்டமூலத்தை ஆதரித்த கட்சிகள் கூட இதே கருத்தை வலியுறுத்தி வருகின்றன.

அதற்கு நிதியமைச்சர் அருண்ஜேட்லியோ, 'முன்னாள் நிதியமைச்சராக இருப்பது சௌகரியமானது. ஆனால் சரக்கு மற்றும் சேவை வரிச் சட்டத்தை அமல்படுத்துவது கடினமானது' என்று சிதம்பரத்துக்கு பதில் கூறியிருக்கிறார் அருண்ஜேட்லி. இந்தச் சட்டம் 2019 இல் நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.கவிற்கு 'சுமைகூலியாக' மாறி விடக்கூடாது என்பதுதான் பா.ஜ.கவில் உள்ள பல மூத்த தலைவர்களின் கவலையாக இருக்கிறது. 'ஜி.எஸ்.டி' பா.ஜ.கவிற்கு வரப்பிரசாதமா அல்லது வீண் வம்பை விலை கொடுத்து வாங்கியதா என்பது 2019 நாடாளுமன்றத் தேர்தலில் தெரிய வரும்.

மாநிலங்களின் நிதிச் சுதந்திரத்தை மத்திய அரசு பறித்து விட்டதா இல்லையா என்பது ஒரு புறமிருக்க, இந்தச் சட்டமூலத்தை நிறைவேற்றுவதில் அரசியல் சற்று வித்தியாசமானது. சென்ற முறை ஆட்சியிலிருந்த காங்கிரஸ் கட்சி இந்தச் சட்டமூலத்தை பா.ஜ.க இல்லாமல் நிறைவேற்ற முயன்று தோற்றது. இந்த முறை ஆட்சியிலிருக்கும் பா.ஜ.க, கடந்த 18 மாதங்களில் காங்கிரஸின்

ஆதரவு இல்லாமல் நிறைவேற்ற முயன்று தோற்றிருக்கிறது. இறுதியில் அனைத்து மாநில நிதியமைச்சர்களுடனும், முதலமைச்சர்களுடனும் மற்ற அரசியல் கட்சிகளுடனும் ஆதரவு திரட்டி பா.ஜ.க இறுதியில் காங்கிரஸ் கட்சியுடன் சமரசம் செய்து கொண்டே இந்தச் சட்டமூலத்தை நிறைவேற்றியிருக்கிறது. ராஜ்ய சபையில் ஆளும்கட்சியான பா.ஜ.கவிற்கு போதிய பலம் இல்லை. காங்கிரஸ் இல்லாமல் அக்கட்சியால் எந்தச் சட்டமூலத்தையும் நிறைவேற்றுவது அவ்வளவு எளிதல்ல என்பதை இப்போது பா.ஜ.க உணர்ந்திருக்கிறது. 'சாட்சிக்காரன் காலில் விழுவதை விட, சண்டைக்காரன் காலில் விழுவது நல்லது' என்று ஒரு பழமொழி உண்டு. இந்தச் சட்டமூலத்தை நிறைவேற்றுவதில் பா.ஜ.க - காங்கிரஸ் இடையே ஏற்பட்ட ஒற்றுமை அதை உறுதி செய்திருக்கிறது.

டெல்லி அரசியல் இப்படியிருக்க தமிழக அரசியலோ இந்தச் சட்டமூல விடயத்தில் எதிர்பாராத விதமாக அரங்கேறி விட்டது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் இந்தச் சட்டமூலத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து விட்டார்கள். ஆனால் எதிர்த்து வாக்களிப்பதற்குப் பதில் வெளிநடப்பு மட்டும் செய்து விட்டு அமைதி காக்கிறது அதிமுக. ஆனால் திராவிட முன்னேற்றக் கழகமோ, மத்திய அரசின் சரக்கு மற்றும் சேவை வரிச் சட்டத்தை ஆதரித்து விட்டது.

அதிமுகவைப் பொறுத்தமட்டில் மத்தியில் உள்ள பா.ஜ.க அரசின் உதவி வேண்டும். ஆனால் அக்கட்சியுடன் கூட்டணியாக இருப்பது போல் தமிழக மக்களுக்கு தெரிந்து விடக்கூடாது என்று கருதுகிறது. அதற்கு முக்கியக் காரணம் தமிழகம் சார்ந்த பல பிரச்சினைகளில் பா.ஜ.கவின் மத்திய அரசுக்கும், ஏற்கெனவே காங்கிரஸ் சார்பில் இருந்த மத்திய அரசுக்கும் எந்த வித வித்தியாசமும் இல்லை என்றே எண்ணுகிறது.

அதே நேரத்தில் தி.மு.கவோ, 'அதிமுக எதிர்க்கிறது. ஆகவே நாம் மத்திய அரசை ஆதரிப்போம். அதனால் அதிமுகவிற்கு மத்திய அரசிடமிருந்து தலைவலி ஏற்பட்டால் நல்லதுதானே' என்று அரசியல் செய்கிறது. பா.ஜ.கவைப் பொறுத்தமட்டில் பிரதான எதிர்கட்சியான காங்கிரஸே சட்டமூலத்தை ஆதரித்த பிறகு தி.மு.க மற்றும் அதிமுக ஆதரவு பற்றி அதிகம் அலட்டிக் கொள்ள வேண்டியதில்லை என்ற முடிவுக்கு வந்து விட்டது. அதனால்தான் 'இந்தச் சட்டமூலத்தை ஆதரிக்க வேண்டுமென்றால் அதிமுகவின் அச்சத்தை களைய மத்திய அரசு முன் வர வேண்டும்' என்று அக்கட்சியின் எம்.பி நவநீத கிருஷ்ணன் பேசிய பிறகும், அது பற்றி மத்திய அரசு கண்டுகொள்ளவே இல்லை.

அது மட்டுமல்ல பா.ஜ.கவின் சார்பில் யாரும் அதிமுகவை வலியுறுத்தி சட்டமூலத்துக்கு ஆதரவை கேட்டுப் பெறவும் இல்லை. ஆனால் ஒன்று, மாநிலக் கட்சிகள் மல்லுக்கட்டினாலும், தேசிய கட்சிகளான காங்கிரஸும், பா.ஜ.கவும் ஒற்றுமையுடன் செயல்பட்டால் இந்திய நாடாளுமன்றத்தில் சட்டங்களை நிறைவேற்றுவது எளிது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்திய நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கு விடப்பட்டுள்ள நற்செய்தி இது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .