Janu / 2025 டிசெம்பர் 28 , மு.ப. 08:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
முருகானந்தம் தவம்
இலங்கையில் பாராளுமன்ற உறுப்பினர்களாவதற்கு குறிப்பிட்டதொரு ''கல்வித்தகுதி'' அவசியமா, அவசியமில்லையா என்ற வாதப் பிரதிவாதங்கள் மேலெழுந்துள்ள நிலையில் ''கல்விமான்கள்''என்னும் அடையாளத்துடன் இருக்கும் சில அரசியல்வாதிகள் செய்யும் வேலைகள், வெளியிடும் கருத்துக்கள் அடி முட்டாள்தனமாகவே இருக்கின்றன . இதற்கு அண்மைய உதாரணமான அரசியல்வாதியாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான பொதுஜன பெரமுன கட்சியின் பொது செயலாளரும் முன்னாள் எம்.பி.யுமான ''சட்டத்தரணி''சாகர காரியவசம் அமைந்துள்ளார்.
தற்போதைய ஜனாதிபதியான அநுரகுமார திசாநாயக்கவுக்கு எதிராக ''குற்றப் பிரேரணை'' கொண்டுவரப்பட வேண்டும் என்ற கோரிக்கையை பொது வெளியில் பகிரங்கமாக முன்வைத்துள்ளதன் மூலமே ''இலங்கை அரசியல்வாதிகளில் படித்தவனும் படிக்காதவனும் ஒன்றுதான்''என்ற கருத்துக்கு ஒன்பதாவது பாராளுமன்றத்தில் 2020-08-10 முதல் 2024-09-24 வரை பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த அனுபவத்தைக் கொண்டதுடன் ஒரு பிரபல சட்டத்தரணியுமான ,சாகர காரியவசம் வலுச் சேர்த்துள்ளார்.
''பேரிடர் குறித்து முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இவ்வாறு தகவல் கிடைத்தும் அனர்த்தங்களால் ஏற்பட்ட இழப்புகளை கட்டுப்படுத்த முடியாமல் போயுள்ளது. இது விடயத்தில் தனது இயலாமை மற்றும் கவனயீனத்தை மூடி மறைப்பதற்கு அரசாங்கம் முயற்சித்து வருகின்றது.அத்துடன், அரசாங்க பலத்தை பயன்படுத்தி தமது தரப்பில் இழைக்கப்பட்ட தவறை மறைப்பதற்குரிய நடவடிக்கையும் முன்னெடுக்கப்படுகின்றது.எனவே, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு எதிராக குற்றப் பிரேரணையொன்றை முன்வைக்குமாறு பிரதான எதிர்க்கட்சியிடம் கோருகின்றோம். அவ்வாறு கொண்டுவந்தால் எங்கு தவறிழைக்கப்பட்டது என்பது உட்பட அனைத்து தகவல்களும் தெரியவரும்.தேசிய மக்கள் சக்தியில் மனசாட்சியின் பிரகாரம் செயல்படும் எம்.பிக்களும் அதனை ஆதரிக்கக்கூடும். அப்போது அரசாங்கத்தின் மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலமும் ஆட்டம் காணும்'' என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான பொதுஜன பெரமுன (மொட்டு கட்சி) தலைமையகத்தில் கடந்த 11 ஆம் திகதி நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது அக்கட்சியின் பொது செயலாளர் சாகர காரியவசம் குறிப்பிட்டிருந்தார்.
இலங்கை பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கல்வித்தகுதி அவசியமா இல்லையா என்ற கேள்வி நீண்டகாலமாக இருந்துவரும் நிலையில் ஒரு சட்டத்தரணி ஒரு பிரபல கட்சியின் பொது செயலாளர் என்ற கல்வித் தகுதி,பட்டம், பதவியுடன் இருக்கும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான இந்த சாகர காரியவசம்,ஜனாதிபதி ஒருவர் மீது எந்த எந்த அடிப்படையில் குற்றப்பிரேரணை கொண்டு வர முடியும் என்ற அடிப்படை அறிவு கூட இல்லாது ''டித்வா புயலுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை'' என்ற குற்றச்சாட் டை முன்வைத்து ஜனாதிபதிக்கு எதிராக குற்றப்பிரேரணை கொண்டுவர வேண்டுமென ஒரு ஊடகவியலாளர் மாநாட்டை நடத்திக் கூறியுள்ளார்.
இலங்கையில் 1978 ஆம் ஆண்டில்தான் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை உள்ளடக்கியஅரசியலமைப்பு உருவாக்கப்பட்டது. இன்றளவிலும் அந்த அரசியலமைப்பே அமுலில் உள்ளது. இதுவரையில் 22 தடவைகள் அரசியலமைப்பு மறுசீரமைக்கப்பட்டிருந்தாலும் ஜனாதிபதிக்கு எதிரான குற்றப் பிரேரணையை முன்வைப்பதற்கான நடைமுறையில் எந்தவொரு திருத்தமும் கொண்டு .வரப்படவில்லை.அந்த வகையில் ஒரு ஜனாதிபதிக்கு எதிராக குற்றப்பிரேரணை கொண்டுவரப்பட வேண்டுமானால் அதற்கான சில நியமங்கள், விதி,முறைகள், நிலையியல் கட்டளைகள் உண்டு
இலங்கை ஜனாதிபதிப் பதவி வெற்றிடமாகக் கூடிய சந்தர்ப்பங்கள் அரசியலமைப்பில் 38ஆவது உறுப்புரை 1ஆம் பந்தியில் குறிப்பிடப்பட்டுள்ளன.1- பதவிக்காலத்தில் இறத்தல்,2- தன் கைப்பட இராஜிநாமாவை சபாநாயகருக்கு சமர்ப்பித்தல்,3- இலங்கைப் பிரஜை என்ற அந்தஸ்தை இழத்தல்,4- பதவிக்காலம் தொடங்கி ஒரு மாதத்திற்குள் பதவி ஏற்காதுவிடல்,5- 38 (2) ல் ஏதேனும் குற்றச்சாட்டின்படி பதவி நீக்கம் செய்யப்பட்டால்,6-130 (அ) உறுப்புரைப்படி ஜனாதிபதியின் தெரிவு பிழையானது என உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கினால்,மேற்குறித்த நிலைகளில் ஜனாதிபதிப் பதவி வெற்றிடமாகும்,இதில் 38 (2) ல் ஏதேனும் குற்றச்சாட்டின்படி பதவி நீக்கம் செய்யப்பட்டால்,என்ற ஷரத்தை பயன்படுத்தவே சாகர காரிய வசம் ஜனாதிபதி அநுரகுமாராவுக்கு எதிராக குற்றப்பிரேரணை கொண்டு வர வேண்டும் என்கின்றார்
அந்த வகையில் பதவியில் உள்ள ஜனாதிபதி ஒருவர் உளரீதியான பாதிப்பு அல்லது உடல் அங்கவீனத்தால் ஜனாதிபதி பதவியை தொடர்ந்து முன்னெடுக்க முடியாமல் இருந்தால், அரசியலமைப்பை வேண்டுமென்றே மீறியிருந்தால், தேசத் துரோக செயலில் ஈடுபட்டிருந்தால், இலஞ்சம் வாங்கியிருந்தால், அதிகார துஷ்பிரயோகம் செய்திருந்தால் , துர்நடத்தையில் ஈடுபட்டிருந்தால்,ஊழலில் ஈடுபட்டிருந்தால், சட்டத்தைமீறி ஒழுக்கமற்ற விதத்தில் நடந்திருந்தால், மேற்படி காரணிகளில் ஏதேனும் ஒரு விடயத்தை அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட காரணிகளை முன்வைத்து, அது அல்லது அவை தொடர்பில் உயர்நீதிமன்றம் விசாரணை நடத்த வேண்டுமெனக் கோரி, பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரால் ஜனாதிபதிக்கு எதிரான குற்றப் பிரேரணையை சபாநாயகரிடம் சமர்ப்பிக்க முடியும்.
மேற்படி குற்றச் சாட்டுக்களில் ஏதாவது ஒன்றை முன்வைத்து குறித்த குற்றச்சாட்டுக்கள் எழுத்து மூலம் குறிக்கப்பட்டு பாராளுமன்ற உறுப்பினர்களில் 2 / 3 குறையாதோர் அதாவது 150 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு குறையாதோரின் கையொப்பத்துடன் சபாநாயகருக்கு சமர்ப்பிக்க வேண்டும். இக்கையொப்பம் 2 / 3 க்கு குறைவாக இருந்தால் குறித்த குற்றப் பிரேரணையை சபாநாயகரால் நிராகரிக்க முடியும்.இருப்பினும் குறித்த குற்றப் பிரேரணைக்குப் பாராளுமன்ற உறுப்பினர்களில் 113 பேருக்கு மேல் கையொப்பமிடப்பட்டிருப்பின், நியாயங்கள் காணப்படுமிடத்து உயர்நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என சபாநாயகர் திருப்திப்பட்டு பாராளுமன்றத்தில் 2 / 3 பெரும்பான்மையைப் பெற முடியுமென கருதினால் குறித்த குற்றப் பிரேரணையை பாராளுமன்ற நிகழ்ச்சி நிரலில் சபாநாயகரால் சேர்க்க முடியும்.
குறித்த குற்றப் பிரேரணையை சபாநாயகர் ஏற்றுக்கொண்டால் 3 படிமுறைகள் மேற்கொள்ளப்படல் வேண்டும்.1. குறித்த பிரேரணை பாராளுமன்ற விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும். விவாத முடிவில் நடத்தப்படும் வாக்கெடுப்பில் சமுகமளிக்காத உறுப்பினர் எண்ணிக்கை உட்பட 2 / 3 பெரும்பான்மை வாக்குகள் அதாவது 150 வாக்குகள் பெறப்படின் மேற்குறித்த குற்றப் பிரேரணை குறித்து விசாரணையை மேற்கொள்ளும்படி உயர்நீதிமன்றத்திடம் சமர்ப்பிக்கப்படும்.2. உயர்நீதிமன்றம் குறித்த குற்றப் பிரேரணையை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளும். இவ்விடத்தில் தான் குற்றவாளி அல்ல என நிரூபிக்கவும், தம்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை என நிரூபிக்கவும் ஜ =னாதிபதியால் அல்லது அவரின் சட்டத்தரணியால் சாட்சியமளிக்க யாப்பில் இடம் வழங்கப்பட்டுள்ளது. (129 (2) உறுப்புரைப்படி இந்த விசாரணை இரண்டு மாதங்களுக்குள் நிறைவு செய்யப்படல் வேண்டும்.)3. ஜனாதிபதி மீது தெரிவிக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் உண்மையானவை என உயர்நீதிமன்றம் சபாநாயகருக்கு அறிக்கை (தீர்ப்பு) சமர்ப்பிக்கப்படும் இடத்து மீண்டும் பாராளுமன்றத்தில் சமுகமளிக்காத உறுப்பினர் உட்பட 2 / 3 பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று ஜ னாதிபதியைப் பதவி நீக்கம் செய்ய முடியும்.
எனவே, ''டித்வா'' புயல் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் முன்கூட்டியே எச்சரித்ததாகவும், எனவே, பேரிடரால் ஏற்படும் இழப்பை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் மொட்டு கட்சி கூறிவருகின்றது.அதாவது இந்த விடயத்தை அக்கட்சி ''அதிகார துஷ்பிரயோகமாக அல்லது தேசத் துரோக நடவடிக்கையாக கருதுகின்றது போலுள்ளது .அவ்வாறு குற்றச்சாட்டு இருந்தாலும் குற்றப் பிரேரணையை முன்வைப்பதற்கு 150 எம்.பிக்களின் கையொப்பம் அவசியம்.ஆனால் ஒட்டுமொத்த எதிரணி வசம் 66 எம்.பிக்களே உள்ளனர். எனவே, குற்றப் பிரேரணையை கொண்டுவருவதற்குரிய ஆரம்பக்கட்ட வாய்ப்புகூட எதிரணிக்கு இல்லை. இவ்வாறு ஜனாதிபதி அநுரகுமாரவுக்கு எதிராக குற்றப் பிரேரணை கொண்டுவந்தால் மனச்சாட்சி உள்ள தேசிய மக்கள் சக்தி எம்.பிக்கள் ஆதரவளிப்பார்கள் எனவும் சாகரகாரிய வசம் முட்டாள்தனமாக கூறுகின்றார் அந்த கட்டத்துக்கு செல்வதற்கு முதலில் குற்றப் பிரேரணை கொண்டுவரப்பட வேண்டும். அதனை சபாநாயகர் ஏற்க வேண்டும்.அதற்குரிய ஆரம்பகட்ட ஏற்பாடுகள்கூட இல்லை.
இலங்கையின் அரசியல் வரலாற்றில் முதற்தடவையாக 1991ஆம் ஆண்டில் இலங்கையின் இரண்டாவது நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவுக்கு எதிராக குற்றப்பிரேரணை ஒன்று கொண்டு வரையப்பட்டது.இக்குற்றப் பிரேரணையில் 116 பாராளுமன்ற உறுப்பினர்கள் (அரை வாசிக்கு மேல்) கையொப்பமிட்டிருந்தனர் .சபாநாயகரினால் ஆரம்பத்தில் அக் குற்றப்பிரேரணை ஏற்றுக்கொள்ளப்பட்டபோதிலும் பின்னர் கையொப்பமிட்டுள்ள உறுப்பினர்களின் கையொப்பங்கள் பிழையானவை என காரணம் காட்டப்பட்டதினால் அந்தக் குற்றப் பிரேரணை எடுத்துக் கொள்ளப்படவில்லை.அதன் பின்னர் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவுக்கு எதிராக குற்றப் பிரேரணை கொண்டுவருவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி முயற்சித்தபோதும் எதிரணி வசம் ஆதரவு இருந்தும் அதனை நிறைவேற்றுவதற்குரிய நடைமுறை கடினமானது என்பதால் இதிலிருந்து ஐக்கிய மக்கள் சக்தி பின்வாங்கியது.
எனவே ஜனாதிபதி ஒருவருக்கு எதிராக ''குற்றப் பிரேரணை'' ஒன்று கொண்டு வர வேண்டுமானால் அதற்குரிய அடிப்படைகள், விதி முறைகள் , நிலையில் கட்டளைகள் கூட தெரியாதவராக சாகர காரியவசம் இந்தக்கருத்தை வெளியிட்டாரா அல்லது மக்களை உசுப்பேத்த எந்த கருத்தையும் அடித்து விடலாமென மென நினைத்தாரா அல்லது மக்களை அறிவற்றவர்கள் என நினைத்தாரா தெரியவில்லை. ஆனால் மல்லாக்க கிடந்து எச்சில் துப்பியுள்ளார் என்பது மட்டும் நன்றாகத் தெரிகின்றது.
5 minute ago
26 minute ago
50 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
26 minute ago
50 minute ago