2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

ஜனநாயக அரசாங்கத்தின் எதேச்சதிகாரம்: இந்தியா

Editorial   / 2019 டிசெம்பர் 30 , மு.ப. 10:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

- ஜனகன் முத்துக்குமார் 

சர்ச்சைக்குரிய குடியுரிமை திருத்த சட்டமூலம் தேசிய குடிமக்களின் பதிவேடு தொடர்பாக இந்தியா முழுவதும் பரவலான ஆர்ப்பாட்டங்கள் மூன்றாவது வாரமாக தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. ஆளும் அரசாங்கத்தின் சங்க பரிவார் என்ற கொள்கைக்கு நேரடி சவாலாக, லக்னோ, டெல்லி, பெங்களூர், அகமதாபாத், மும்பை, அசாம் போன்ற முக்கிய நகரங்களில் உள்ள கொள்கையளவில் மதச்சார்பற்ற ஜனநாயகமாக இருந்த இந்தியாவை காக்க, இந்திய அரசியலமைப்பால் அவர்களுக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்ட ஜனநாயக உரிமையான போராட்டங்களை நடாத்துதல் பொருட்டு மக்கள் வீதிகளில் இறங்கியுள்ள  நிலையில், ஒரு காலத்தில் ஜனரஞ்சக அரசாங்கமாக தன்னை வரித்துக்கொண்ட பாரதிய ஜனதாக் கட்சி (பா.ஜ.க) அரசாங்கம் வெகுவாகவே மக்கள் போராட்டங்களுக்கு முகம்கொடுக்க வேண்டிய நிலையில் உள்ளது.

 

குறித்த போராட்டங்களுக்கு குந்தகம் விளைவிக்க பொலிஸார் தீவிர நடவடிக்கைள் எடுத்தும், கலகமடக்கும் பொலிஸாரின் கைகளால் பல இந்தியர்கள் கொல்லப்பட்டமை அறிந்தும், மக்கள் தொடர்ச்சியாக இப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளமை - போராட்டங்கள் வன்முறையாக மாற்றம் பெற காரணமாயிற்று. இது, ஆளும் அரசாங்கத்தை நீண்டகாலமாக வகைப்படுத்திய இந்தியாவின் சிறுபான்மையினருக்கு எதிரான அக்கறையின்மை/வன்முறை/ ஒரவஞ்சகத்துக்கு எதிரான போராட்டமாகையால், இப்போராட்டம் தொடர்ச்சியாக நடைபெற சாத்தியங்கள் உள்ளமை ஒருபுறமிருக்க, மறுபுறம் உலகின் மற்றய ஜனநாயக நாடுகளில் இருந்து குறித்த அசாங்கத்தின் செயலுக்கு எந்தவித கடும் கண்டனங்கள் வராதிருப்பது, ஜனநாயக ஆர்வலர்களை கவலைக்குள்ளாக்கியுள்ளது.

இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடியின் பா.ஜ.க தலைமையிலான அரசாங்கம் இந்தியாவின் ஜனநாயகக் கொள்கைகளை ஜனரஞ்சக அரசியல் சாயத்துள் தொடர்ச்சியாக  மறுதலிக்கையில், குறித்த இந்நிலை இந்தியாவில் மட்டுமன்றி, ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் ஐக்கிய அமெரிக்கா, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர்  புட்டினின் ரஷ்யா,  துருக்கி ஜனாதிபதி றிசெப் தயீப் எர்டோவாவின் துருக்கி, பிரித்தானியப் பிரதமர் பொரிஸ் ஜோன்சனின் பிரித்தானியா, பிரேஸில்  ஜனாதிபதி ஜைர் பொல்சனாரோவின் பிரேஸில் என உலகின் பல ஜனநாயக நாடுகளில் சிறுபான்மையினருக்கு எதிரான அரசாங்கத்தின் நடவடிக்கைகள், மக்கள் மத்தியில் 2014/15 களில் ஆரம்பமான பெரும்பான்மையினருக்கான அரசாங்கம் என்ற தொனிப்பொருளை அங்கிகரிக்கின்ற அரசாங்கங்களின் மற்றுமொரு ஜனநாயத்தின் மீதான அழுத்தங்களாகவே பார்க்கப்பட வேண்டி உள்ளது.

 

மேற்கூறிய தலைவர்களின் தீவிர ஆதரவாளர்களைப் பொறுத்தவரைஅவர்களின் ஆதரவு அத்தலைவர்களுக்கு பெரும்பான்மையாக இருக்கின்றது. இதன் மூலம், குறித்த தலைவர்கள் மக்களின் தடையற்ற விருப்பத்தின் மூலம் கடந்துவந்த தேர்தல்களில் பெருவாரியான வெற்றியை பெற்றுக்கொள்கின்றனர். இது உண்மையில் ஒரு தீர்க்கமான ஜனநாயக வெற்றியன்று. மாறாக, இந்த போலியான வெற்றிகளுக்கான வெற்றிகரமான முகமூடிகள் என்னவென்றால், மேற்கூறிய ஒவ்வொரு தலைவர்களும் எவ்வாறு அரசியல் வாய்வீச்சின் மூலமாக - குறிப்பாக பெரும்பான்மையினரை இலக்கு வைத்து - சிறுபான்மையினருக்கு எதிராக கட்டவிழ்க்கும் பிரச்சாரங்கள் ஊடாக தமது வெற்றியை நிலை நாட்டுகின்றார்கள் என்பதே ஆகும். இன்னும் சொல்லப்போனால், குறித்த தலைவர்கள், தங்கள் வாக்காளர்களின் அடிப்படை அச்சங்கள், பாதுகாப்பற்ற தன்மைகளுடன் எதிரொலிக்கும் ஒரு வகையான கலப்பான முறையீட்டை உருவாக்குவதில் வெற்றிகாண்பதன் விளைவே, அவர்களின் ஜனநாயக வழி தேர்தல் வெற்றியாகும்.

ஜனாதிபதி ட்ரம்ப், பிரதமர் மோடி, பிரதமர் ஜோன்சன், ஜனாதிபதி பொல்சனரோ ஆகியோர் அவரவர் பிரதிநித்துவம் செய்யும் ஜனநாயகக் கட்சிகளை ஆபத்தான வழிமுறைகளுக்கு கொண்டு சென்று பெற்றுக்கொள்ளும் இவ்வெற்றிகள், ஜனநாயகத்தின் அடிப்படையான சட்ட ஆட்சியை புறக்கணித்தது ஒரு சர்வாதிகார தலைமைத்துவத்தை பிரதிநிதித்துவப்படுத்தலுக்கே வழிவகுக்கின்றன.

 

இத்தத்துவார்த்த அடிப்படையில் சிந்திக்கப்போனால், இந்தியப் பிரதமர், அரசாங்கத்தின் மேற்குறித்த செயல்பாடுகள், இந்திய முஸ்லிம்களை முறையாக ஓரங்கட்டுவது தொடர்பில் இந்திய அரசியலமைப்பில் வகுக்கப்பட்ட மதச்சார்பற்ற கொள்கைகளை தமது சுய சேவை அரசியல் நிகழ்ச்சி நிரலுக்காகத் தகர்த்தெறியும் ஒரு அப்பட்டமான முயற்சியாகவே பார்க்கப்படவேண்டியதாகும். காஷ்மிர், அஸாமின் சர்ச்சைக்குரிய எல்லைப் பகுதிகளிலோ அல்லது இந்திய நாட்டின் மய்யப்பகுதியில் உள்ள முக்கிய பெருநகரங்களிலோ, பிரதமர் மோடியின் இந்திய தேசியவாதம், நாட்டின் அடிப்படை கட்டமைப்பை மறுவடிவமைப்பதில் மேற்கொண்ட ஒருங்கிணைந்த முயற்சிகள் யாவுமே சமத்துவம், சுதந்திரம, நீதி ஆகிய ஜனநாயகக் கொள்கைகளுக்கு முரணானதே. நேரு மற்றும் காந்தி இருவரின் விருப்பங்களும் ஒரு பன்மைத்துவத்தை உள்ளடக்கிய சமூகத்தை நிறுவ வேண்டியதன் அவசியத்தை வரலாற்றின் வலியுறுத்தியிருந்தன.

இந்தியாவின் பிற ஸ்தாபகத் தலைவர்களும் காலனித்துவ ஒடுக்குமுறைக்கு ஒரே தீர்வாக ஜனநாயகம் மூலம் சுயராஜ்யத்தை வலியுறுத்தியிருந்தார். ஏழு தசாப்தங்களாக அவர்களின் கனவை பிரதிபலித்திருந்த (இந்திய அரசியலமைப்பில் பொதிந்துள்ள அதே) கொள்கைகள் இப்போது வேண்டுமென்றே அரசியல் சுயலாபங்களுக்காக மீறுதல், எவ்வாறு ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி தனது பதவியை அரசியல் லாபங்களுக்காக உக்ரேன் ஜனாதிபதியுடனான தொலைபேசி உரையாடலில் மீறிய குற்றச்சாட்டுக்கு ஐக்கிய அமெரிக்க காங்கிரஸால் பதவி நீக்கம் செய்யப்பட்டாரோ, அதே அளவில் - ஜனநாயக முறைமைக்கு விரோதமாகவே இந்திய அரசாங்கத்தின் குறித்த இம்முனைப்பும் பார்க்கப்படவேண்டியதாகும்.  இது ஒரு ஜனநாயகமாக தெரிவு செய்யப்பட்ட அரசாங்கத்தின் எதேச்சதிகாரத்தின் பிரதிபலிப்பாகவே பார்க்கப்பட வேண்டும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .