Janu / 2026 ஜனவரி 21 , பி.ப. 04:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
லக்ஸ்மன்
அரசியல் தலைவர்கள், கட்சிகள் வாய்ப்புக்களை உருவாக்கிக் கொள்வர். சில வேளைகளில் தாமாகவும் சந்தர்ப்பங்கள் உருவாகும். அவ்வாறான சந்தர்ப்பங்களை சரியாகப் பயன்படுத்துவதில் சாதக பாதகங்கள் இருந்து விடுகின்றன. ஈஸ்ட்ர் குண்டுத் தாக்குதல்கள், விவசாயத்தில் இயற்கை உரப் பாவனை போன்றவைகள் உருவாக்கிக் கொண்டவைகள். கொவிட் பெருந்தொற்று உலகளவில் தானாக ஏற்பட்டது. அவற்றினால் இலங்கை அரசியலில் ஏற்பட்ட சாதக பாதகங்களை அனைவரும் அறிவோம். ஆனால் தற்போது கடந்த வருட இறுதியில் ஏற்பட்ட 'டிட்வா' சூறாவளி அனர்த்தம்கூட சாதக பாதகங்களையே கொடுத்திருக்கிறது.
ஒருவகையில் சொன்னால், அரசியல் என்பது மக்களை ஏமாற்றும் வித்தையே. இதனை அரசியல்வாதிகள் ஒவ்வொருவரும் வெவ்வேறு விதமாக விளக்கத்துக்குட்படுத்துவர். தமிழர்கள், உழவர்கள் வாழும் நாடுகளில் கடந்த வாரம் தைப்பொங்கல் வாரம். இலங்கையைப் பொறுத்தவரையில் அந்த வாரம் பெரும் களேபரமான வாரமாகத்தான் கழிந்திருக்கிறது.
கடந்த வருடத்தின் இறுதியில் தித்வா சூறாவளியால் நாடு அல்லோல கல்லோலத்துக்குட்பட்டது. இன்னமும் மலையகத்தின் பல பகுதிகளில் சரியான அடிப்படைவசதிகள் ஏற்படுத்தப்படவில்லை. மக்களுக்கு பெரும் நெருக்கடிகள் காணப்படுகின்றன. சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் நாட்டில் ஏற்பட்ட இழப்புகள் குறித்து ஆராய வருகை தரவுள்ளனர். உலகின் பல நாடுகளின் உதவிகள் இன்னமும் சரியாக வந்து சேரவில்லை. இவ்வாறிருக்கையில் அதற்குள் ஒரு அரசியலைச் செய்து கொள்வதற்கான வேலைத்திட்டங்கள் இலங்கையில் நடந்தேறியிருக்கின்றன. இதனை அரசியல் தெரிந்த, கலாசாரம் தெரிந்த, இலங்கை அரசாங்கத்தின் சம்பிரதாயம், வழமையான பாரம்பரியம் தெரிந்த, யாருமே மறுக்கமாட்டார்கள்.
தித்வா சூறாவளியினால் நாடு பட்ட துயரத்தின் வலியை வெளிப்படுத்தும் வகையில் நாட்டிலுள்ள கிறிஸ்தவர்கள் தங்களது கிறிஸ்து பிறப்பு, நத்தார் ஒளி விழாக்களைக் கோலாகலமாக நடத்தவில்லை. புதுவருடப் பிறப்பினை களியாட்டமாகக் கொண்டாடவில்லை. வடக்கு கிழக்கு உள்ளிட்ட நாட்டின் ஏனைய பகுதிகளிலும் கொண்டாட்டங்களுக்கு உள்ளூராட்சி சபைகள் கூட அனுமதிகளை மறுத்திருந்தன. அதனால் உள்ளூராட்சி மன்றங்களின் முதல்வர்கள், தவிசாளர்கள், உறுப்பினர்கள் என அரசியல்வாதிகள் எதிர்ப்புகளைச் சம்பாதித்திருந்தனர். ஆனால், நாட்டில் தலைவர் தைப் பொங்கல் விழாவை தமக்கான, மக்கள் விடுதலை முன்னணிக்கான(ஜே.வி.பி.) தேசிய மக்கள் சக்திக்கான அரசியல் நடத்துவதற்காக வடக்கு மாகாணத்தில் கோலாகலமாக ஏற்பாடு செய்திருந்தார். (இது பொதுவான கருத்து)
புத்தசாசன காலாசார அலுவல்கள் அமைச்சின் கீழ் உள்ள இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஊடாக தேசிய தைப் பொங்கல் விழா பிரதமர் ஹரிணி அமரசூரிய தலைமையில் அலரி மாளிகையில் நடைபெற ஏற்பாடாகியிருந்த நிலையில், வட மாகாண தைப் பொங்கல் விழாவில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க கலந்து கொண்டிருக்கிறார். இது ஒரு தற்செயலான நிகழ்வல்ல. தேசிய பொங்கல் விழாவில் பங்குபெறாமல் ஜனாதிபதி ஏன் வடக்கு சென்றார் என்பதில்தான் அரசியல் இருக்கிறது. ஆனால், வடக்கு விஜயத்திற்குரிய திட்டமிடல்கள் ஏற்கெனவே முடிந்திருக்கின்றன. வடமாகாணத் தைப் பொங்கல் விழாவுக்கு மறுநாள் முழு நாடுமே ஒன்றாகத் தேசிய வேலைத் திட்டத்தை ஆரம்பித்து வைத்திருக்கிறார். போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கையானது, அரச அதிகாரிகளாலும், பொலிஸார் மற்றும் பாதுகாப்புத் தரப்பினராலும் கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்டே வந்தது. ஆனால், தற்போது சற்று அதிகமாக மேற்கொள்ளப்படுவதையே இந்த தேசிய வேலைத் திட்டமாக தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் காண்பிக்க முயற்சிக்கிறது என்கிற விமர்சனங்கள் உருவாகிவருகின்றது. அதே நேரத்தில், நாட்டில் இருக்கின்ற போதைப்பொருள் பிரச்சினைகளைத் தவிர, வேறு விடயங்கள் இல்லை போலும் என்ற மாயை ஒன்றும் உருவாக்கப்படுவதாகவும் உணரமுடிகிறது. இந்த மாயையானது மக்களுக்கு இருக்கின்ற அடிப்படையான பிரச்சினைகளை மறைத்து மேலோட்டமாக மக்களை நகர்த்தி தங்களது அரசியலை நிலை நிறுத்திக்கொள்ள ஜே.வி.பி. முனைந்து வருவது தெரிகிறது.
மற்றொன்று வறுமை ஒழிப்பு என்ற போர்வையில் பிரஜா சக்தி என்ற ஒரு திட்டத்தினை ஜே.வி.பி தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆரம்பித்துள்ளது. இந்தப் பிரஜா சக்தி செயற்பாடுகளுக்காக தமது கட்சியின் நேரடி உறுப்பினர்கள் மற்றும் விசுவாசிகள் நியமிக்கப்படுகின்றனர். ஒவ்வொரு உள்ளூராட்சி மன்றங்களின் வட்டாரங்களிலும் மேற்கொள்ளப்பட்டுவருகின்ற இந்த நடவடிக்கையானது, இவ்வருடத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள மாகாண சபைத் தேர்தல் மற்றும் ஏனைய தேர்தல்கள் இலக்காக் காணப்படுகின்றன. மற்றைய கட்சிகளைப் போலல்லாமல் கட்சியின் செயலாளர் அரசியலை மாத்திரம் மேற்கொள்ளும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ள ஜே.வி.பி. நீண்டகாலமாக மேற்கொண்டுவந்த தீவிர அரசியலை அரச அதிகாரத்துடன் தற்போது மேற்கொள்கின்றது என்றே சொல்லமுடிவதாக அரசியல்வாதிகள் கருத்துத் வெளியிடத் தொடங்கியிருக்கின்றனர்.
தங்களது கட்சியை வளர்ப்பதை நோக்காகக் கொண்டு ஜே.வி.பியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வாவின் எண்ணக்கருவில் உருவாக்கப்பட்டுள்ள பிரஜா சக்தியானது நாட்டின் பிரதேச செயலகங்களின் கீழுள்ள கிராம சேவகர்களே மேற்கொள்ளும் வகையில் கட்டமைக்கப்பட்டிருந்த கிராமத்திற்குத் தேவைகளான வீடு, காணி, உணவுத் தேவை, வறுமை, வாழ்வாதாரம் போன்ற விடயங்கள் இனிவரும் காலங்களில் பிரஜா சக்தி மேற்கொள்ளும். இது மிகவும் கட்டமைக்கப்பட்ட அரசியல் என்பது விமர்சனமாக இருக்கிறது. அரச கட்டமைப்புக்கு நிகரான இன்னுமொரு கட்டமைப்பாக பிரஜா சக்தியை உருவாக்கி அரசாங்க கட்டமைப்பைப் பலவீனப்படுத்தும் செயல்பாடாகவும் சொல்லப்படுகிறது. இந்த வகையில்தான் பிரஜா சக்தியை வடக்கு - கிழக்கில் அனுமதிக்க முடியாது என்கிற கோசம் வெளிவரத் தொடங்கியிருக்கிறது. அந்தவகையில்தான் இலங்கை தமிழரசுக் கட்சி பிரஜா சக்திக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யவுள்ள சந்தர்ப்பம் உருவாகியிருக்கிறது எனலாம்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில் சுனாமி ஆழிப் பேரலையால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கைச் சீர் செய்வதற்காக விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனுக்கும் முன்னாள் ஜனாதிபதியான சந்திரிகாவுக்குமிடையில் சுனாமி கட்டமைப்பு உருவாக்கம் தொடர்பில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்ற வேளையில், ஜே.வி.பியினர் ஒப்பந்த உருவாக்கத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்திருந்தனர். இதன்மூலம் சுனாமி கட்டமைப்பு உருவாக்கத்தினை தடுத்திருந்தனர். தடை செய்யப்பட்ட அமைப்பாக விடுதலைப் புலிகளை வடக்கு கிழக்கில் ஒரு அங்கீகாரத்துக்கான வாய்ப்பை வழங்குவதற்கு எதிராக இருந்த ஜே.வி.பி. தற்போது வடக்கு மக்களிடம் தமது அரசியலைச் செய்ய முனைவது அவர்களது அரசியலுக்காக என்பதனைக்கூட புரிந்து கொள்ளமுடியாத நிலை காணப்படுவதானது தமிழ் மக்களின் அரசியல் வறட்சியையே காட்டுகிறது.
இந்த இடத்தில்தான், 75 வருடங்களாக ஆயுத ரீதியிலும், அகிம்சை ரீதியிலும் போராடிய தமிழர்கள் முள்ளிவாய்க்காலில் அனைத்தையும் புதைத்துவிட்டு நாட்டையே கைப்பற்றிக் கொள்வதற்காக ஆயுத ரீதியாக போராடிய ஜே.வி.பியினரின் ஏமாற்று அரசியலில் வீழ்ந்து ஒன்றுமில்லாதவர்களாக, நிலைப்பாடுகளை மறந்தவர்களாக, சுயநிர்ணய உரிமைக் கோரிக்கையைக் கைவிட்டவர்களாகப் புதைந்து போன பின்னர் கவலையை மாத்திரம் மிகுதியாகப் பாதுகாக்கப்போகிறோமா என்பதே தமிழர்களின் கேள்வியாக இருக்கிறது.
ஆனால், ஆட்சிக்கு வரும் ஒவ்வொரு கட்சியினரும் தங்களுக்காக தங்களது எதிர்கால அதிகாரத்துக்காக அரசியலைச் செய்வதொன்றும் புதிதல்ல என்ற வகையில் போதைப் பொருள் தடுப்பு என்றவகையில் நடைபெறும் முழு நாடும் ஒன்றாகத் தேசிய வேலைத்திட்டம், திட்டமிட்டவகையில் மேற்கொள்ளப்படும் பிரஜா சக்தி வேலைத்திட்டம் வரவுள்ள இன்னும் பல வேலைத்திட்டங்களும் கண்டும் காணாமல் விடப்பட வேண்டியவைகளே.
எவ்வாறானாலும், மக்களுக்காகக் கடந்த காலங்களில் சரியான அரசியலைச் செய்ய மறந்தவர்கள் தற்காலத்தில் கவலைகொள்வதும் எதிர்ப்பு வெளியிடுவதும் வழக்கு தாக்கல் செய்வதும் இயலாதவர்களின் செயற்பாடு என்ற மக்களின் எதிர்வினையால் ஜே.வி.பிக்கே சாதகமாக மாறிப்போகும் என்பதே வெளிப்படை. அந்தவகையில், எல்லோரும் சொல்லும் மக்களை ஏமாற்றும் வித்தையான அரசியலைக் கவனமாக செய்யும் ஜே.வி.பியைப் பாராட்டத்தான் வேண்டும்.
ஜே.வி.பியின் அரசியல் வித்தை தொடரட்டும். அதில் சிக்கும் அரசியல் கட்சிகளின் பாடுகளை நாம் பார்க்கலாம்.
19.01.2026
22 Jan 2026
22 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 Jan 2026
22 Jan 2026