2025 ஜூலை 17, வியாழக்கிழமை

தண்டனை விலக்கீடே நாட்டை அழிவை நோக்கி எடுத்துச் செல்கிறது

R.Tharaniya   / 2025 ஜூலை 16 , பி.ப. 05:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

எம்.எஸ்.எம். ஐயூப்

ஸ்ரீ ஜயவர்தனபுர மருத்துவமனையில் நரம்பியல் நிபுணராகக் கடமையாற்றிய வைத்தியர் மஹேஷி விஜேரத்ன கைது செய்யப்பட்டதை அடுத்து அரச மருத்துவமனைகளில் தட்டுப்பாடாக இருக்கும் மருந்துக்கள் அல்லது மருத்துவ கருவிகளை வெளியில் இருந்து கொண்டு வருமாறு நோயாளர்களுக்குப் பரிந்துரை செய்ய மருத்துவர்கள் தயங்குவதாக சில மருத்துவ சங்கங்கள் தெரிவித்துள்ளன.

அவ்வாறு பரிந்துரை செய்வதன் மூலம் தாமும் மருத்துவர் விஜேரத்னவைப் போல் கைது செய்யப்படலாம் என்று மருத்துவர்கள் அச்சமடைந்துள்ளதாக அச்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

இது நியாயமற்ற சந்தேகமாகும். அல்லது மேற்படி நரம்பியல் நிபுணர் கைது செய்யப்பட்டதற்குத் தெரிவிக்கும் ஒரு வித எதிர்ப்பாகவே 
இதனைக் கருத வேண்டியுள்ளது.

குறிப்பிட்டதோர் மருந்தையோ அல்லது மருத்துவ உபகரணத்தையே வெளியில் இருந்து கொண்டு வருமாறு பரிந்துரை செய்ததற்காக இந்த நரம்பியல் நிபுணர் கைது செய்யப்படவில்லை. அவர் மட்டுமல்லாது, மேலும் ஆயிரக் கணக்கான மருத்துவர்கள் வெளியில் இருந்து மருந்துகளையும் மருத்துவ உபகரணங்களையும் கொண்டு வருமாறு பரிந்துரை செய்கிறார்கள். அவர்கள் அனைவரும் கைது செய்யப்படவில்லை.

தமது அதிகாரத்தைப் பாவித்து ஜயவர்தனபுர மருத்துவமனைக்குப் போதியளவில் குறிப்பிட்டதோர் மருத்துவ உபகரணத்தைக் கொள்வனவு செய்வதைத் தடுத்து அம்மருத்துவமனையில் அந்த உகரணத்துக்கான தட்டுப்பாட்டைச் செயற்கையாக உருவாக்கி தமக்குத் தொடர்புள்ள

ஒரு மருந்தகமொன்றிலிருந்து மும்மடங்கு அல்லது நான்கு மடங்கு அதிக விலைக்கு நோயாளர்கள் அவ்வுபகரணத்தை கொள்வனவு செய்யும் நிலையை உருவாக்கி நியாயமற்ற முறையில் பணம் சம்பாதித்தார் என்பதே அந்நரம்பியல் நிபுணருக்கு 
எதிராக இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரிக்கும் ஆணைக்குழு சுமத்தியிருக்கும் குற்றச்சாட்டாகும்.

இதுவும் சாதாரணமாக மருத்துவர்கள் குறிப்பிட்டதோர் மருந்தகமொன்றை பரிந்துரை செய்யாது வெளியில் இருந்து மருந்துகளை அல்லது மருத்துவ உபகரணங்களைக் கொள்வனவு செய்து கொண்டு  வருமாறு கூறுவதும் ஒன்று 
அல்ல. எனவே, சாதாரணமாக வெளியில் இருந்து மருந்து அல்லது மருத்துவ உபகரணங்களைக் கொண்டு வருமாறு 

சிபாரிசு செய்யும் மருத்துவர்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை.
இது சில மருத்துவ சங்கங்கள் அநாவசியமாக மருத்துவர்கள் மத்தியில் பரப்பும் அச்சமாகும். அதேவேளை, அரச மருத்துவமனைகளில் தட்டுப்பாடாக இருக்கும் மருந்துகளை வெளியில் இருந்து கொண்டு வருவதை நிறுத்தப் போகும் ஒரு அச்சுறுத்தலும் மருத்துவ சங்கங்களின் இந்த அறிக்கையில் பொதிந்திருக்கிறது.

எனவே, இது இந்த நரம்பியல் நிபுணர் செய்ததாகக் கூறப்படும் குற்றத்தை நியாயப்படுத்த எடுக்கும் முயற்சியாகவும் சந்தேகிக்கலாம்.
எந்தவொரு சந்தேக நபரும் அவர் செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டு நிரூபிக்கப்படும் வரை சட்டப்படி நிரபராதியாகவே கருதப்படுவார்.

இந்த நரம்பியல் நிபுணர் விடயத்திலும் அதுவே விதியாகும். ஆயினும், அந்த விடயத்தில் அநாவசியமான நெருக்குதலை ஏற்படுத்துவது முறையாகாது. விசாரணை நடைபெறட்டும். தேவையாயின் மருத்துவ சங்கங்கள் நீதிமன்ற விசாரணையில் பங்களிக்கலாம்.

நாட்டில் நடக்கும் கொலை, கொள்ளை, பாலியல் துஷ்பிரயோகம், மற்றும் ஊழல் போன்ற குற்றங்களைச் செய்தவர்களுக்குத் தண்டனை வழங்குவதை அதிகாரத்தில் உள்ளவர்கள் தமது அரசியல் மற்றும் சமூக பலத்தைக் கொண்டு தடுப்பதானது இந்நாட்டில் சர்வ சாதாரண விடயமாகும்.

இலங்கையில் மனித உரிமை மீறல்கள் விடயத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படாது குற்றவாளிகள் விடயத்தில் தண்டனைத் தவிர்ப்பு சர்வசாதாரணமாகி விட்டதன் விளைவாகவே ஐ.நா. மனித உரிமை பேரவையும் உள்நாட்டு விவகாரங்களில் தலையிட வேண்டிய நிலை ஏற்பட்டது.

அரச படைகளுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான போரின் போது, இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக பொறுப்புக் கூறும் பொறிமுறையொன்றின் அவசியத்தை மனித உரிமை பேரவையும் பல மேற்குலக நாடுகளும்  தொடர்ந்து வலியுறுத்தி வந்தன. ஆனால், முன்னைய அரசாங்கங்கள் உலகை ஏமாற்றும் விதமாகவே நடந்து கொண்டன. அதனை அடுத்தே மனித உரிமை பேரவை இலங்கை தொடர்பாக வருடாந்தம் பிரேரணைகளை நிறைவேற்றி வருகிறது.

அந்தப் பிரேரணைகளிலும் 2012 மற்றும் 2013களில் நிறைவேற்றப்பட்ட பிரேரணைகளில் உள்ளக பொறிமுறையொன்றின் மூலம் மனித உரிமை மீறல்களுக்குப் பொறுப்புக் கூறப்பட வேண்டும் என்றே வலியுறுத்தப்பட்டது. 2012ஆம் ஆண்டு பிரேரணையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவால் 2010இல் நியமிக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் (LLRC) பரிந்துரைகளை அமுலாக்க வேண்டும் என்றே கூறப்பட்டது.

அந்தப் பிரேரணைகள் புறக்கணிக்கப்பட்ட நிலையிலேயே மனித உரிமை பேரலவை 2014இல் சர்வதேச பொறிமுறையை பரிந்துரைத்தது.

இலங்கையில் தண்டனை விலக்கீடு பல விதமாக மேற்கொள்ளப்படுகிறது. 
சில குற்றவாளிகளைப் பற்றி பொலிஸாரும் சட்ட மா அதிபர் திணைக்களமும் தெரிந்திருந்தும் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை. சிலருக்கு எதிராகப் பொருத்தமான முறையில் நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை.

சிலருக்கு எதிரான நீதிமன்ற வழக்குகளை சட்ட மா அதிபர் வாபஸ் பெறுகிறார். சில வழக்குகளில் குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டாலும் ஜனாதிபதி மன்னிப்பின் பேரில் அவர்கள் விடுதலை செய்யப்படுகின்றனர்.

உதாரணமாக, 2005இல் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை இடம்பெற்று 10 ஆண்டுகள் வரை அதற்காக எந்தவொரு சந்தேக நபரும் கைது செய்யப்படவில்லை. 2015இல் ஆட்சி மாறியதன் பின்னரே அக்கொலை தொடர்பாக முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் கைது செய்யப்பட்டார்.

பின்னர் 2019இல் மீண்டும் ஆட்சி மாறியதையடுத்து, எந்தவொரு காரணத்தையும் முன்வைக்காது சட்ட மா அதிபர் 2021ஆம் ஆண்டு பிள்ளையானுக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற்றார்.

அவ்வாறாயின், ஜோசப் பரராஜசிங்கத்தை கொன்றவர்கள் யார்? அதைப் பற்றி பொலிஸார் புதிதாக விசாரணைகளை ஆரம்பிக்கவும் இல்லை.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ்ஜின் கொலை தொடர்பாக பாதுகாப்புத் துறையைச் சேர்ந்த சிலர் கைது செய்யப்பட்டு வழக்கு தொடரப்பட்டது.

இறுதியில் தீர்ப்புக்காக சிங்களவர்களை மட்டும் அடங்கிய ஜூரர் குழுவொன்று நியமிக்கப்பட்டது. அக்குழு அச்சந்தேக நபர்கள் நிரபராதிகள் என்று தீர்ப்பு வழங்கியது. அவர்கள் நிரபராதிகள் 
என்றால், பொலிஸார் உண்மையான குற்றவாளிகளைக் கண்டறியப் புதிதாக விசாரணைகளை ஆரம்பிக்க வேண்டும். ஆனால், அது நடைபெறவில்லை.

2006ஆம் ஆண்டு திருகோணமலையில் 5 மாணவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அது தொடர்பான வழக்கிலும் இதுவே நடைபெற்றது.

மஹிந்த ராஜபக்‌ஷவின் ஆட்சிக் காலத்தில் தென் பகுதியில் பிரதேச சபைத் தலைவர் ஒருவரும் அவரது குண்டர்களும் பிரிட்டிஷ் பிரஜை ஒருவரைத் தாக்கி கொலை செய்து அவரது காதலியான ரஷ்யப் பெண்ணை கூட்டுப் பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கினர்.

அது பகிரங்கமாக இடம்பெற்ற போதிலும், ஒரு வருடம் செல்லும் வரை அதுவும் அப்போது இளவரசராக இருந்த தற்போதைய பிரிட்டிஷ் மன்னர் சார்ள்ஸ் தலையிடும் வரை அந்தப் பிரதேச சபைத் தலைவர் கைது செய்யப்படவில்லை.

மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீட்டு வசதிகளைச் செய்து கொடுப்பதற்காக அரசாங்கம் 2006ஆம் ஆண்டளவில் 20 கோடி ரூபாவை ராடா என்ற பெயரில் அப்போது இயங்கிய புனரமைப்பு மற்றும் அபிவிருத்தி நிறுவனத்திடம் வழங்கியது.

ராடாவின் தலைவராக இருந்த முன்னாள் அமைச்சர் டிரான் அலஸூம் புலிகள் அமைப்பின் நிதித்துறை பொறுப்பாளர் எனக் கூறப்பட்ட எமில் காநதனுமே இந்த வீடமைப்புத் திட்டத்துக்குப் பொறுப்பாக இருந்தனர்.

நிதி வழங்கப்பட்டாலும், வீடுகள் நிரமானிக்கப்படவில்லை. இதற்காக நல்லாட்சிக் காலத்தில் டிரானுக்கும் எமில் காந்தனுக்கும் எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. ஆயினும், 2019ஆம் ஆண்டு ஆட்சி மாறிய பின் 2020ஆம் ஆண்டு அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். 

 கொலைக் குற்றமொன்றுக்காக முன்னாள் அமைச்சர் மில்ரோய் பெர்னாண்டோவின் மனைவி மேரி ஜுலியட்டுக்கு 2005ஆம் ஆண்டு மரண தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால், 2009ஆம் ஆண்டு அவர் ஜனாதிபதியின் மன்னிப்பின் பேரில் விடுதலை செய்யப்பட்டார்.

2000ஆவது ஆண்டு மிருசுவிலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்ட எட்டு பொது மக்களைக் கொலை செய்ததற்காக இராணுவ சாரஜன் சுனில் ரத்நாயக்கவுக்கு 2015ஆம் ஆண்டு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

ஆனால் கொட்டாபய ராஜபக்‌ஷ ஜனாதிபதியாகிய பின்னர் 2020ஆம் ஆண்டு அவர் ஜனாதிபதி மன்னிப்பின் பேரில் விடுதலை செய்யப்பட்டார்.

இதேபோல, தமது காதலியை அடித்துக் கொன்ற ஒரு நபருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மன்னிப்பு வழங்கியதன் விளைவாக அவர் விடுதலை செய்யப்பட்டார்.

இலங்கை எவ்வாறான நாடு என்றால் தமது கட்சிக்காரர்களுக்கு எதிரான வழக்குகளை அனைத்தையும் இரத்துச் செய்து அவ்வழக்குகளைத் தாக்கல் செய்தவர்களில் குடியியல் உரிமையை இரத்துச் செய்வதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ ஆணைக்குழுவொன்றையும் நியமித்தார்.

அவ்வாணைக்குழுவின் பரிந்துரைகளை அமுலாக்க 2021ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ பாராளுமன்றத்தில் பிரேரணையொன்றையும் சமர்ப்பித்தார். ஆனால், உள்ளூரிலும் சர்வதேச ரீதியிலும் எழுந்த எதிர்ப்பின் காரணமாக அக்குழுவின் பரிந்துரைகள் அமுலாகவில்லை.

தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மட்டும் இது வரை இது போன்று சட்டத்தை அவமதிக்கவில்லை. எதிர்காலத்தைப் பொறுத்திருந்து தான் 
பார்க்க வேண்டும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X