2025 ஒக்டோபர் 10, வெள்ளிக்கிழமை

தண்டனைகளை விட வறுமையால் பிள்ளைகள் பாதிக்கப்படுகிறார்கள்

R.Tharaniya   / 2025 ஒக்டோபர் 02 , பி.ப. 03:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.ஐயூப்

இலங்கையில் சில சட்டங்கள் அரச சார்பற்ற நிறுவனங்களால் தயாரிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டு அமுலாக்கப்படுகின்றன என்று இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துரைகளைப் புலனாய்வு செய்வதற்கான  ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் முன்னாள் மேல் நீதிமன்ற நீதிபதி ரங்க திசாநாயக்க கூறியிருக்கிறார்.

அரச பாடசாலைகளின் அதிபர்களுக்கான கூட்டமொன்றில் உரையாற்றும் போதே அவர் இக்கருத்தைத் தெரிவித்து இருக்கிறார். சிறுவர்கள் தொடர்பில் அரசாங்கம் கொண்டு வரப்போகும் தண்டனைக் கோவை திருத்தத்தைத் அவர் குறிப்பிட்டுள்ளார் போலும் சிறுவர்களுக்கு உடல் ரீதியாகவோ, உள ரீதியாகவோ, தண்டனை வழங்குவதைத் தடை செய்வதற்காகவே இந்த திருத்தம் கொண்டுவரப் படப்போகிறது.

அதுவே தற்போது சமூகத்தில் பேசுபொருளாகவும் மாறி வருகிறது. சிறுவர்களுக்கு உடல் ரீதியாகவோ, உள ரீதியாகவோ, தண்டனை வழங்குவதை எதிர்க்க வேண்டும் என்று நீண்ட காலமாக அரச சார்பற்ற நிறுவனங்கள் கூறி வருகின்றன. எனவே தான் ரங்க திஸாநாயக்க இத்திருத்தத்தைக் குறி வைத்தே பேசுகிறார் என்று அதனால் தான் கூறுகிறோம்.

அதேபோல் அரச சார்பற்ற நிறுவனங்கள் மிக ஆர்வத்தோடு கையாளும் மற்றொரு விடயத்திலும் அரசாங்கம் அண்மையில் ஆர்வம் காட்டியிருந்தது. ஓரினச் சேர்க்கைப் போக்கு போன்ற பாலியல் நடைமுறையில் மாற்றமாக நடந்து கொள்வோரை (LGBTQ) மையமாக வைத்து உல்லாசப் பிரயாணத்துறை அபிவிருத்தி செய்ய வேண்டும் என்று அண்மையில் அரச அதிகாரி ஒருவர் கூறியிருந்தார். இது அரசாங்கத்தின் கொள்கையா என்பது தெரியவரவில்லை. ஆயினும் அரச தலைவர்கள் அதை எதிர்த்து எதையும் கூறவில்லை.

இக்கருத்துக்கள் சரியா, பிழையா என்று நாம் இங்கு கூற வரவில்லை. ஆனால், நாட்டில் எத்தனையோ முக்கிய பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் இருக்கும் போது 
இவற்றுக்கு முன்னுரிமை வழங்க வேண்டுமா? என்பதே கேள்வியாகும்.

சிறுவர்கள் வீட்டில் இருந்தாலும் பாடசாலையில் இருந்தாலும் பராமரிப்பு நிலையத்தில் இருந்தாலும் அவர்கள் பிழையாக நடந்து கொள்ளும் போது அவர்களைத் தடுத்து நல்வழி செலுத்துவதில் உடல் மற்றும் உள ரீதியிலான தண்டனைகள் எதுவும் வழங்கக் கூடாது என்றே புதிய தண்டனைக் கோவை திருத்த சட்டமூலம் கூறுகிறது.

இந்த சட்டமூலம் சில தினங்களுக்கு முன்னர் ஒரு நாள் பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு பிற்போடப்பட்டது.சிறுவர் விடயத்திலான தண்டனைகளை தடை செய்யும் இக்கொள்கை சர்வதேச ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது என்பது உண்மைதான்.

ஆயினும் இவ்விடயத்தோடு சம்பந்தப்பட்ட சமூகவியல் பின்னணிக் காரணிகளையும் இச்சட்டம் நிறைவேற்றப்பட்டதன் பின்னர் ஏற்படப் போகும் சமூகவியல் ரீதியிலான விளைவுகளையும் தீர ஆராய்ந்து அரசாங்கம் இச்சட்ட மூலத்தைத் தயாரித்ததா? என்ற சந்தேகம் எழுகிறது. 

 ஏனெனில், சட்டத்தைத் தயாரிக்கும் முன் கல்வி அமைச்சினதோ, சிறுவர் விவகார அமைச்சினதோ அதிகாரிகள், பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் பராமரிப்பு நிலைய பொறுப்பதிகாரிகள் போன்ற சம்பந்தப்பட்ட தரப்புகளுடன் கலந்துரையாடியதாகச் செய்திகள் வரவில்லை.

புதிய சட்டமூலத்தில் இவ்வாறு குறிப்பிடப்படுகிறது,தண்டனை வழிமுறையொன்றாக அல்லது திருத்த முறையாக, உடல்சார் வலாற்காரம் பயன்படுத்தப்படும் செயலொன்றை, அத்தகைய செயல், சிறிதளவானதாக விருப்பினும், ஏதேனும் அளவினதான வலியை அல்லது அசௌகரியத்தை விளைவிக்கும் சாத்தியம் கொண்டதாகவிருக்குமென அறிந்து கொண்டு

அல்லது (ஆ) உடல் ரீதியிலல்லாத செயலொன்றை, சிறிதளவானதாக விருப்பினும் அது இழிவுபடுத்துதலை விளைவிக்கும் சாத்தியம் கொண்டதாகவிருக்குமென அறிந்து கொண்டு பதினெட்டு வயதுக்குக் குறைந்த எவரேனும் கட்டுக்கோப்பை, பொறுப்பை அல்லது பராமரிப்பைக் கொண்டுள்ளவரும் 

புரிந்தால், அவர் சரீரத் தண்டனை என்ற தவறைப் புரிகின்றார்.
சட்டமூலம் சில உதாரணங்கள் மூலம் இதனை மேலும் விவரிக்கிறது.

1) ஒருவர் தமது பிள்ளை படிக்கவில்லை என்பதற்காகப் பட்டியொன்றால் அடிக்கிறார்.

2) சிறுவர் பராமரிப்பு நிலையம் ஒன்றில் ஒரு சிறுவன் மற்றொரு சிறுவனை அடிக்கிறான். அதைக் கண்ட நிலைய பொறுப்பாளர் அடித்த சிறுவனுக்குத் தண்டனையாக அவனது உணவை சில மணி நேரம் தாமதப்படுத்துகிறார்.

3) பாடசாலையொன்றின் ஒரு பிள்ளை மற்றொரு பிள்ளையின் பென்சில் போன்ற எதையாவது திருடியதாகக் குற்றஞ்சாட்டி அதிபர் அல்லது ஆசிரியர் அப்பிள்ளையைப் பாடசாலை கூட்ட நேரத்தில் மேடைக்கு அழைத்து திருடன் என்ற கருத்தைக் கொடுக்கும் வகையில் எச்சரிக்கிறார்.

4) ஒரு மாணவன் பாடசாலையின் சீருடைக்குப் பொருத்தமற்ற வகையில் 
ஆடை அணிந்து பாடசாலைக்கு வருவதைக் கண்ட மாணவத் தலைவர் ஒருவர் அம்மாணவனை அறைகிறார்.

இவை புதிய சட்ட மூலத்தின் கீழ் குற்றமாகின்றன. இதனை அடுத்து சட்டமூலம் இக்குற்றங்களுக்காகப் பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் சிறுவர் பராமரிப்பு நிலைய பொறுப்பாளர்கள் ஆகியோருக்கு வழங்கப்படப்போகும் தண்டனைகளை விவரிக்கிறது.

சரீர தண்டனை தவறை புரிகின்ற எவரும் ஆறு மாதங்களுக்குக் குறையாததும் இரண்டு ஆண்டுகளை விஞ்சாததுமானதொரு காலத்திற்கான மறியற்றண்டனையினால் அல்லது ஒரு இலட்சம் ரூபாய் வரை நீடிக்கபடக் கூடிய குற்ற பணத்தினால் அல்லது மேற்படி இரண்டினாலும் தண்டிக்கப்படுதல் வேண்டும்.

என்பதுடன் எவ்வாள் தொடர்பில் தவறு புரியப்பட்டதோ அவ்வாளுக்கு ஏற்படுத்தப்பட்ட ஊறுக்காக அத்தகைய ஆளுக்கு 2023ஆம் ஆண்டின் 10 ஆம் இலக்க குற்றச் செயல்களுக்குப் பலியாக்கப்பட்டோருக்கும் சாட்சிகளுக்குமான உதவி மற்றும் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஸ்தாபிக்கப்பட்ட குற்றச் செயல்களுக்குப் பலியாக்கப்பட்டோரினதும் 

சாட்சிகளினதும் பாதுகாப்புக்கான தேசிய சபையினால் கோப்பிடப்பட்ட பலியாக்கப்பட்டவர் பற்றிய தாக்கக் கூற்றைக் கவனத்துட்கொண்ட 
பின்னர் நீதிமன்றத்தினால் தீர்மானிக்கப்படும் தொகையொன்றிலான நஷ்டஈட்டைச் செலுத்தும் படி கட்டளையிடவும் படலாம்.

அதாவது, மேற்கண்டவாறு குற்றமிழைத்த பெற்றோர் அல்லது ஆசிரியர் அல்லது பராமரிப்பு நிலைய பொறுப்பாளர் மீது சிறைத் தண்டனையோ அபராதமோ அல்லது அவ்விரண்டுமோ விதிக்கப்படலாம். அவர்கள் நஷ்டஈடு வழங்குமாறும் பணிக்கப்படலாம்.

அதன்படி வீட்டில் அல்லது பாடசாலையில் குழப்பமிழைக்கும், சண்டை பிடிக்கும் பிள்ளையைக் கட்டுப்படுத்த இச்சட்டத்தின் கீழ் அடிக்கவோ, அல்லது மிரட்டவோ, அதட்டவோ முடியாது. அடித்தால் அது உடல் ரீதியான பலாத்காரமாகவும் வலியை விளைவிக்கும் செயலாகவும் அமையும். பயமுறுத்தினால் அல்லது அதட்டினால் அது, இழிவுபடுத்துதலை விளைவிக்கும் செயலாகக் கருதப்படலாம். அதற்காகப் பெற்றோரோ அல்லது ஆசிரியரோ சிறைத் தண்டனை அனுபவிக்கவும் நேரிடலாம்.

வீடுகளில் அல்லது பாடசாலைகளில் நடைபெறும் சிறுவர்களுக்கான இத் தண்டனைகளைக் கண்காணிக்க எவரும் இல்லை தான். ஆயினும், அயலவர்கள் அல்லது சக மாணவர்கள் இத் தண்டனைகளைப் பற்றி பொலிஸாரிடமோ அல்லது கல்வி அதிகாரிகளிடமோ அல்லது சிறுவர் விவகார அமைச்சிடமோ முறைப்பாடு செய்யலாம். சிலவேளை அவர்கள் பொய்யான குற்றச்சாட்டுகளையும் சுமத்தலாம்.

அவ்வாறாயின் இவ்வாறான நிலைமைகளில் பெற்றோரும் ஆசிரியர்களும் பிள்ளைகளையும் மாணவர்களையும் கட்டுப்படுத்துவது எவ்வாறு என்பதை கல்வி அமைச்சோ அல்லது சிறுவர் விவகார அமைச்சோ பெற்றோருக்கோ ஆசிரியர்களுக்கோ அறிவிக்க வேண்டும்.

சிறுவர்கள் உடல் மற்றும் உள ரீதியாக சிறிதளவேனும் பாதிக்கப்படக் கூடாது என்ற இச் சட்டத்தின் நோக்கத்தைப் பாராட்டலாம். ஆனால் அது நடைமுறையில் எந்தளவு சாத்தியம் என்பதே கேள்விக்குறியாக இருக்கிறது.

இங்கு குறிப்பிடப்படும் குற்றங்களுக்காக ஒரு தந்தை சிறையில் அடைக்கப்பட்டால் சிலவேளை அக்குடும்பத்தின் பொருளாதாரமே முடங்கிவிடலாம். அக்குடும்பத்தவர்களுக்கு உணவுக்கே வழியில்லாமல் போகலாம். அது அத்தந்தையின் தண்டனையைப் பார்க்கிலும் அப்பிள்ளைக்குப் பன்மடங்கு வேதனையை நீண்ட காலமாக வழங்கும்.

பிள்ளைகளைக் கட்டுப்படுத்த அவர்களை அடித்தே தான் ஆக வேண்டும் என்று எவரும் கூறப்போவதில்லை. ஆனால், எந்த அளவு மென்மையான முறையில் அவர்களைக் கட்டுப்படுத்த போனாலும் அது அவர்களுக்கு உள ரீதியாகத் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்று வாதிடலாம். கட்டுப்படுத்தல் என்பதே பிள்ளை மீது நேரடி அல்லது மறைமுக ஆதிக்கத்தைச் செலுத்துவதாகும்.

பிள்ளையின் தவறான விருப்பத்துக்கு மாறாக, செயற்படுவதாகும் இதை எந்த அளவுக்குப் பிள்ளைக்குச் சிறிதளவேனும் மன வேதனை ஏற்படாதவாறு செய்ய முடியும் என்பதே இங்குள்ள பிரச்சினையாகும்.

பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் சிறுவர்களை மிக மோசமான முறையிலும் குரூரமான முறையிலும் தண்டிக்கும் சம்பவங்கள் இடம்பெறாமல் இல்லை. ஆனால், அவற்றுக்கான தண்டனைகள் தற்போது அமலில் உள்ள சட்டங்களில் இருக்கின்றன.

அதேவேளை, பெற்றோரினதும் ஆசிரியர்களினதும் தண்டனைகளால் பாதிக்கப்படுவதை பார்க்கிலும் சிறுவர்கள் தற்போது வறுமையால் பாதிக்கப்படுகிறார்கள்.

யுனிசெப் உள்ளிட்ட ஐ.நா. அமைப்புக்களின் அண்மைக்கால அறிக்கைகளின் படி இலங்கையில் இலட்சக் கணக்கான சிறுவர்கள் காலை உணவின்றி பாடசாலைக்கு வருகிறார்கள். இரவு உணவின்றி நித்திரைக்குச் செல்கிறார்கள். போஷாக்கின்மை நாட்டில் பாரதூரமான பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X