Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 03, சனிக்கிழமை
முகம்மது தம்பி மரைக்கார் / 2019 ஏப்ரல் 23 , மு.ப. 11:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
“தேர்தல் என்பது, ஜனநாயகத்தின் திருவிழாவாகும். ஜனநாயகத்தினுடைய பாதுகாப்பு அரணாகவும் தேர்தல்கள் உள்ளன” என்கிறார், தேர்தல் வன்முறைகளைக் கண்காணிப்பதற்கான நிலையத்தின் தேசிய இணைப்பாளர் மஞ்சுள கஜநாயக்க.
ஆனால், இந்தத் திருவிழாவுக்குச் செல்ல, அதிகாரத்திலுள்ள அரசியல்வாதிகள் பலரும் அஞ்சுகின்றனர். திருவிழாவில், தாங்கள் ‘தொலைந்து’ போய் விடுவோமோ என்பதுதான், அந்தப் பயத்துக்கான காரணமாகும்.
இருந்த போதும், இந்த வருடத்தில் ஏதாவதொரு தேர்தல் நடப்பதற்கு, அதிகபட்ச சாத்தியமுள்ளதாகக் கூறப்படுகிறது. அது ஜனாதிபதித் தேர்தலா, மாகாண சபைத் தேர்தலா என்பதுதான், இப்போதுள்ள கேள்வியாகும்.
கிழக்கு உள்ளிட்ட மூன்று மாகாண சபைகள், 2017ஆம் ஆண்டு கலைந்து விட்டன. அதேபோன்று, வடக்கு உள்ளிட்ட இரண்டு சபைகளின் ஆட்சிக் காலம், 2018ஆம் ஆண்டு நிறைவடைந்து விட்டன. இந்தநிலையில், இம்மாதம் 10ஆம் திகதியுடன், தென் மாகாண சபையும் நேற்று முன்தினத்துடன் (21) மேல் மாகாண சபையும் கலைந்து விட்டன. எனவே, மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்துவதே நியாயமாக அமையும்.
ஆனால், மாகாண சபைகளுக்கான தேர்தலைக் கலப்பு முறையில் நடத்துவதற்கான சட்டத் திருத்தமொன்று நிறைவேற்றப்பட்டுள்ளமையை நாம் அறிவோம். ஆனால், அந்தச் சட்டத்துக்கு அமைய, இன்னும் தொகுதி எல்லைகள் நிர்ணயம் செய்யப்படவில்லை என்பதால், புதிய முறையில் மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்துவதில் சிக்கல் உள்ளது.
இன்னொருபுறம், மாகாண சபைகளுக்கான தேர்தல் திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக, கைகளை உயர்த்திய முஸ்லிம் கட்சிகள், இப்போது பழைய முறையில்தான் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்கின்றன. அப்படியென்றால், இப்போதுள்ள திருத்தத்தை இரத்துச் செய்வதற்கு, நாடாளுமன்றத்தின் அங்கிகாரத்தைப் பெற வேண்டும் என்பது குறித்தும் நாம் அறிவோம்.
எவ்வாறாயினும் மாகாண சபைகளுக்கான தேர்தல்களை நடத்துவதற்கு முன்னர், ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கே, ஐக்கிய தேசியக் கட்சி விரும்புகிறது. ஏற்கெனவே நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில், ஐக்கிய தேசியக் கட்சிக்கு நல்ல முடிவு கிடைக்கவில்லை.
நாட்டிலுள்ள மொத்த உள்ளூராட்சி சபைகளில், மூன்றிலிரண்டு பங்கு சபைகளை, மஹிந்த ராஜபக்ஷ ஆதரவுடைய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கைப்பற்றிக் கொண்டமை, ஐக்கிய தேசியக் கட்சிக்கு பெரும் ‘அடி’யாக அமைந்தது.
எனவே, மாகாண சபைத் தேர்தல் இப்போது நடந்தால், அதிலும் மஹிந்த தரப்பு அல்லது மஹிந்த மற்றும் மைத்திரி இணைந்த கூட்டணியே, அதிக சபைகளைக் கைப்பற்றிக் கொள்ளும் என்கிற அச்சம், ஐக்கிய தேசியக் கட்சிக்கு உள்ளதாகத் தெரிகிறது. அதனால், ஜனாதிபதித் தேர்தலையே முதலில் நடத்த வேண்டுமென அந்தக் கட்சி விரும்புகிறது.
ஜனாதிபதித் தேர்தலில் வென்று, அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொண்டால், பிறகு மாகாண சபைத் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல்களில், வெற்றி பெற்று விடலாம் என்பது, ஐக்கிய தேசியக் கட்சியின் நம்பிக்கையாக இருக்கக் கூடும்.
இந்த நிலையில், ஜனாதிபதி பதவியின் ஆயுட்காலம் எப்போது நிறைவடையும் என்பது குறித்து, உயர்நீதிமன்றின் வியாக்கியானத்தைக் கோருவதற்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தரப்பு ஆயத்தமாவதாக, அரசியலரங்கில் பரவலாகப் பேசப்படுகிறது. அதாவது, அரசமைப்பின் 19ஆவது திருத்தத்தின் மூலம், ஜனாதிபதியொருவரின் பதவிக்காலம் ஆறு வருடங்களிலிருந்து ஐந்து வருடங்களாகக் குறைக்கப்பட்டமை பற்றி நாம் அறிவோம்.
இந்த நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆட்சிக்கு வந்த பின்னர்தான், 19ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டது என்கிற போதிலும், அதில் கூறப்பட்டுள்ள விடயங்கள், தற்போதைய ஜனாதிபதி மைத்திரிக்கும் செல்லுபடியாகும் என்று, ஏற்கெனவே நீதிமன்றம் வியாக்கியானம் வழங்கி விட்டது. அதாவது, தற்போதைய ஜனாதிபதியின் ஆட்சிக் காலம், ஐந்து வருடங்கள்தான் என்று நீதிமன்றம் தெரிவித்து விட்டது.
இந்நிலையில், அந்த ஐந்து வருட பதவிக்காலம் எப்போதிலிருந்து ஆரம்பிக்கிறது என்பதை, உயர்நீதிமன்றிடம் கோருவதற்கு, மைத்திரி தரப்புத் தயாராகி வருவதாகச் செய்திகள் வெளியாகின.
அதாவது, ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் வெளியானவுடன், தற்போதைய ஜனாதிபதியின் ஐந்து வருட ஆட்சிக்காலம் ஆரம்பிக்கின்றதா? அல்லது, 19ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்ட பின்னர், ஜனாதிபதியின் ஐந்து வருட பதவிக்காலம் ஆரம்பிக்கின்றதா என்பதற்கான வியாக்கியானத்தையே, மைத்திரி தரப்புக் கோரவுள்ளதாகப் பேசப்படுகிறது.
எது எவ்வாறாயினும், மாகாண சபைகளுக்கான தேர்தல்களை, முதலில் நடத்துவதுதான் நியாயமாக அமையும். 2017ஆம் ஆண்டு பதவிக்காலம் நிறைவடைந்த, மாகாண சபைகளுக்கான தேர்தல்களை இன்னும் நடத்தாமல் வைத்துக் கொண்டு, இன்னும் நிறைவடையாத ஜனாதிபதி பதவிக்குரிய தேர்தலை நடத்துவதற்காகக் காத்திருப்பதென்பது, அப்பட்டமான ஜனநாயக மீறலாகும்.
இந்த நிலையில், மாகாண சபைத் தேர்தலை நடத்தாமல் இழுத்தடித்துக் கொண்டு செல்கின்றமையை ஏற்றுக் கொள்ள முடியாது என்று, அண்மையில் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது. “அரசாங்கத்திடமும் பிரதமரிடமும் மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துமாறு, ஜனாதிபதியும் நாங்களும் பல தடவை கோரிக்கை விடுத்திருக்கிறோம்” என்றும், அவர் அதன்போது தெரிவித்திருந்தார்.
அதாவது, மாகாண சபைகளுக்கான தேர்தல்களை நடத்தாமல் இழுத்தடிக்கப்படுவதற்கு, அரசாங்கமும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுமே காரணம் என்பதை, ஆளுநர் ஹிஸ்புல்லா இதன்மூலம் தெளிவுபடுத்தியிருந்தார்.
தன்னை ஒரு கனவானாகவும் ஜனநாயகவாதியாகவும் எப்போதும் காட்டிக்கொள்கின்ற ரணில் விக்கிரமசிங்க, அனைத்துத் தேர்தல்களுக்கும் முன்னதாக, நியாயத்தின் அடிப்படையில் நடத்தப்பட வேண்டிய மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்தாமல், தனக்கான ‘காலம் ‘கனியும்’ வரையும் காத்திருக்க முயற்சித்தல் என்பது, ஜனநாயகத்தை நேசிப்போருக்கு ஏமாற்றமளிப்பதாகவே உள்ளது.
மறுபுறமாக, கடந்த ஒக்டோபர் மாதம் ஏற்பட்ட அரசியல் நெருக்கடியின் போது, ஜனநாயகத்தைப் பாதுகாக்கப் போராடுவதாகச் சொல்லிக் கொண்டு, ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாகச் செயற்பட்ட முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் மற்றும் த.தே.கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் உள்ளிட்ட எவரும், மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டுமென, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு அழுத்தம் கொடுத்து, மக்களுக்கான ஜனநாயகத்தைப் பெற்றுக் கொடுக்க முயற்சிக்கவில்லை என்பதையும் இங்கு சுட்டிக்காட்டுதல் பொருத்தமாகும்.
‘ஊருக்குத்தான் உபதேசம், உனக்கில்லையடி மகளே’ என்பதுபோல், ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்காகப் போராடுதல் என்பது, சிறுபான்மை அரசியல் தலைவர்களைப் பொறுத்தவரை, ‘ரணிலுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்துவதாக அமையக் கூடாது’ என்பது போலவே தெரிகிறது.
இன்னொருபுறம், ஜனாதிபதித் தேர்தல்தான் முதலில் நடத்தப்பட வேண்டும் என்பதில், ஆர்வமாக இருக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு, அந்தத் தேர்தல் வெற்றிகரமாக அமையும் என்பதற்கும் எந்தவித உத்தரவாதமும் கிடையாது.
ஐக்கிய தேசியக் கட்சிக்குள், ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது குறித்த முடிவுகள் இன்னும் எட்டப்படவில்லை. ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதி வேட்பாளராக நியமிப்பதற்கு, ஐக்கிய தேசியக் கட்சிக்குள்ளும், அந்தக் கட்சியின் கூட்டணிக் கட்சிகளுக்குள்ளும் முழுமையான ஆதரவு கிடைக்குமா என்பது பெரும் சந்தேகமாகும்.
ஐக்கிய தேசியக் கட்சி சார்பில், ஜனாதிபதி வேட்பாளராக ரணில் விக்கிரமசிங்க களமிறங்காமல் விட்டாலும் கூட, அவருக்குப் பதிலாக யாரை நியமிப்பது என்பதிலும், நிறையவே கருத்து முரண்பாடுகள் அந்தக் கட்சிக்குள் உள்ளன.
ஆனால், ஜனாதிபதித் தேர்தலில் தமது சார்பாகக் களமிறக்கப்படும் வேட்பாளர் யார் என்பதை, கிட்டத்தட்ட மஹிந்த ராஜபக்ஷ அடையாளம் காட்டி விட்டார்.
பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளரும், தமது இளைய சகோதரருமான கோட்டாபய ராஜபக்ஷதான் தனது சார்பாகவும், தாமரை மொட்டைச் சின்னமாகக் கொண்ட பொதுஜன பெரமுன கட்சி சார்பாகவும் களமிறக்கப்படுவார் என்பதை, மஹிந்த வெளிப்படுத்தி விட்டார்.
ஆக, அடுத்த ஜனாதிபதித் தேர்தலுக்கான தமது தரப்பு வேட்பாளராகக் களமிறக்குவதற்கு உத்தேசித்துள்ள கோட்டாவுக்கான ஆதரவைத் திரட்டும் வேலைத் திட்டங்களை, மஹிந்த தரப்பு ஆரம்பித்துள்ள நிலையில், ஐக்கிய தேசியக் கட்சிக்குள் யார் ஜனாதிபதி வேட்பாளர் என்பதே இன்னும் தீர்மானிக்கப்படவில்லை என்பதுதான் இப்போதைய கள நிலைவரமாகும்.
இந்த நிலையில், ஐக்கிய தேசியக் கட்சிக்குள் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வேண்டும் என்கிற கனவுகளுடன் காத்திருக்கும், அந்தக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸவும், அந்தக் கட்சியின் சிரேஷ்ட தலைவர்களில் ஒருவரான அமைச்சர் ரவி கருணாநாயக்கவும் மிக வெளிப்படையாக முட்டி மோதத் தொடங்கி இருக்கிறார்கள். “அப்பனின் பெயரை வைத்து, அரசியல் செய்வதை அனுமதிக்க முடியாது” என்று, சஜித் பிரேமதாஸவைக் குறிப்பிட்டு, ரவி கருணாநாயக்க பேசியமையையும், “மத்திய வங்கியைக் கொள்ளையடித்தவன்” என்று, ரவியைக் குறிப்பிடும் வகையில், சஜித் பேசியமையையும் கடந்த வாரம் அரசியலரங்கைச் சூடாக்கியிருந்தன.
ஐக்கிய தேசியக் கட்சிக்குள் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் சஜித் பிரேமதாஸவுக்கும் இடையில் ஒவ்வாமை உள்ளமையையும், ரவி கருணாநாயக்க என்பவர் ஐக்கிய தேசியக் கட்சிக்குள் ரணிலின் செல்லப் பிள்ளை என்பதையும் பலரும் அறிவர். இந்தப் பின்னணியில், சஜித் பிரேமதாஸ மீது, ரவி கருணாநாயக்க முட்டி மோதத் தொடங்கியிருப்பதன் பின்னணியில், ரணில் விக்கிரமசிங்க இருக்கக் கூடும் என்கிற சந்தேகங்கள் உள்ளமையையும் மறைத்து விட முடியாது.
எனவே, எந்தவொரு தேர்தல் நடந்தாலும் இப்போதைய நிலையில், ஐக்கிய தேசியக் கட்சிக்கு அதனை எதிர்கொள்வதற்கான பலமும் சக்தியும் குறித்து, கேள்வி எழாமல் இல்லை. அப்படியென்றால், அந்தக் கட்சியுடன் ஒட்டிக் கொண்டிருக்கும் சிறுபான்மைக் கட்சிகளின் நிலைப்பாடுகள் என்னவாக அமையும் என்கிற கேள்விகளும் உள்ளன.
இப்போது ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவாக இருந்து வரும் சிறுபான்மை கட்சிகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது, மஹிந்த தரப்புக்கு ஆதரவு வழங்குமா என்பது கேள்விக்குரியதாகும். ஆனால், ரணிலுடன் இருக்கும் முஸ்லிம் கட்சிகள், கடைசி நேரத்தில் ரணிலைக் கை கழுவும் சாத்தியங்கள் இருப்பதையும் மறுத்து விட முடியாது. ரணிலுக்கு இப்போது ஆதரவு வழங்கிக் கொண்டிருக்கும் முஸ்லிம் கட்சிகள், ஒரு காலத்தில் மஹிந்த ராஜபக்ஷவுடன் கைகோர்த்துக் கொண்டிருந்தவையாகும். எனவே, அந்த உறவு மீண்டும் மலரவும் கூடும்.
எது எவ்வாறாயினும், நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள சோகமான நிலைவரமானது, தேர்தல்கள் பற்றிய பேச்சுகளை இப்போதைக்கு இல்லாமல் செய்துள்ளது. நேற்று முன்தினம் (21) பரவலாக நடத்தப்பட்ட காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்களும் அதனால் ஏற்பட்டுள்ள இழப்புகளும், நல்ல மனமுடையோரிடையே பெரும் அதிர்வுகளையும் வலிகளையும் ஏற்படுத்தி இருக்கின்றன.
இப்போதைக்கு இத்தனை மனித உயிர்களைக் கொன்று குவிப்பதற்கு முன்னணியிலும், பின்னணியிலும் இருந்த அனைவரும் அடையாளம் காணப்பட்டு, தண்டிக்கப்பட வேண்டும் என்பதே, மனிதாபிமானமுடையோரின் கோரிக்கையாகும்.
ஜனாதிபதி மைத்திரியும் 19 எனும் ஜாதக பொருத்தமும்
இந்தநிலையில், மேலே ஆராயப்பட்ட சர்ச்சைக்கான சட்டத் தெளிவை, சட்டமுதுமாணி வை.எல்.எஸ். ஹமீட், பின்வருமாறு தௌிவுபடுத்தியுள்ளார்.
மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதியாகக் கடந்த 2015 ஜனவரி எட்டாம் திகதி தெரிவுசெய்யப்பட்டார். அப்பொழுது அவரின் பதவிக்காலம் ஆறு வருடமாக இருந்தது. 19ஆவது திருத்தத்தினூடாக அது ஐந்து வருடமாக குறைக்கப்பட்டது.
அரசமைப்புச் சட்டம் எப்போதும் prospective - முன்னோக்கியதாகும். அதாவது, அது அமுலுக்கு வந்த காலத்திலிருந்து, எதிர்காலத்துக்கே பொருந்தும். அது, retrospective - பின்னோக்கியதாக அமையாது என்பது பொதுவான கோட்பாடாகும்.
இதனடிப்படையில் 19ஆவது திருத்தம், அமுலுக்கு வருவதற்குமுன், ஜனாதிபதி தெரிவு செய்யப்பட்டு விட்டார். மக்களும் ஆறு வருடங்கள் அவர் பதவியில் இருப்பதற்கு ஆணை வழங்கிவிட்டனர். எனவே, புதிய திருத்தம், இந்த ஜனாதிபதிக்குப் பொருந்துமா? என அறிவதற்காக ஜனாதிபதி உயர்நீதிமன்றை நாடினார்.
இதற்கிணங்க, உயர்நீதிமன்றம் “ஆம், பொருந்தும்; பதவிக்காலம் ஐந்து வருடமே” எனப் பதிலளித்தது. உயர்நீதிமன்றம் பல சந்தர்ப்பங்களில் தெளிவுபடுத்திய நிலைப்பாடு என்னவென்றால், ‘மக்கள் ஆணை வழங்கிய காலப்பகுதியைக் குறைப்பதில் பிரச்சினையில்லை. ஏனெனில், அவர்கள் மீண்டும் ஆணை வழங்கிய அதே மக்களிடமே செல்கிறார்கள். ஆனால், மக்களின் அனுமதியை சர்வஜன வாக்கெடுப்பினூடாகப் பெறாமல், அனுமதி வழங்கிய காலப்பகுதிக்குமேல் நீடிக்க முடியாது’ என்பதாகும்.
அதேபோல், இந்தத் திருத்தம் இந்த ஜனாதிபதியையும் உள்ளடக்குகின்றது என்ற அடிப்படையில், ஐந்து வருடம் என்பது இந்த ஜனாதிபதிக்கும் பொருந்தும் என்பதாகும்.
இந்நிலையில், ஐந்து வருடம் என்பதைக் கேள்விக்குட்படுத்த முடியாது என்பதைப் புரிந்துகொண்ட ஜனாதிபதித் தரப்பு, இந்த ஐந்து வருடம் என்பது எப்போதிருந்து ஆரம்பிக்கின்றது என்றொரு கேள்வியை எழுப்ப முடியாதா? எனச் சிந்திக்கின்றது.
இங்கும் அரசமைப்பு சட்டம் prospective - முன்னோக்கியதே தவிர, retrospective- பின்னோக்கியதல்ல. எனவே, புதிதாக அமுலுக்குக் கொண்டுவரப்பட்ட ‘ஐந்து வருடம்’ என்பது, திருத்தம் அமுலுக்கு வந்ததிலிருந்துதானே ஆரம்பிக்க வேண்டும் என்ற ஒரு வாதத்தை முன்வைக்க முற்படுவதுபோல் தெரிகிறது.
மேலோட்டமாக பார்க்கும்போது, அவ்வாதம் நியாயமாகவே படுகிறது. ஆனால், 19ஆவது திருத்தம் என்பது , அரசமைப்புக்குக் கொண்டுவரப்பட்டதாகும். எனவே, அத்திருத்தம் என்ன சொல்கின்றது என்பதே இங்கு எழுகின்ற கேள்வியாகும்.
சரத்து 30(2), ஜனாதிபதியின் பதவிக்காலம் ஐந்து வருடம் என்கிறது. சரத்து 31(3)(d)(ii), ஜனாதிபதியின் பதவிக்காலமானது, தேர்தல் முடிவுகள் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டதிலிருந்து ஆரம்பிப்பதாகக் குறிப்பிடுகின்றது. அந்தவகையில் மைத்திரியின் பதவிக்காலம் 2015 ஜனவரி ஒன்பதாம் திகதி ஆரம்பமாகிறது.
இங்கு எழுகின்ற கேள்வி, “ தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட திகதி என்பது, இத்திருத்தம் அமுலுக்கு வந்ததன்பின் நடக்கப்போகின்ற ஜனாதிபதித் தேர்தலுக்குப் பொருந்தும்; திருத்தத்துக்கு முன் நடைபெற்ற தேர்தலுக்கு prospective ஆன அரசமைப்பின் சரத்து எவ்வாறு பொருந்தும்?” என்பதாகும். இதுவும் வலுவான கேள்விதான். அவ்வாறானால் இதற்குரிய விடை என்ன?
இதற்குரிய விடை 19வது திருத்தத்தின் Transitional provisions இல் (தற்காலிக சரத்துகள்) இருக்கிறது. அதாவது S 49(1)(b) இதற்கு விடை தருகிறது. அது சுருக்கமாகப் பின்வருமாறு கூறுகின்றது.
அதாவது, 2015, ஏப்ரல் 22ஆம் திகதிக்கு முன்னர், பதவியில் இருந்த ஜனாதிபதியும் பிரதமரும் திருத்தப்பட்ட அரசமைப்பின் சரத்துகளுக்கமைய பதவியில் தொடர்வார்கள்.
அதன்பிரகாரம், நாடாளுமன்றம் கலைந்தவுடன் பிரதமரின் பதவிக்காலம் முடிந்து, பின்னர் அவர் புதிய பிரதமராகப் பதவியேற்றார். ஆனால், ஜனாதிபதி ஏப்ரல் 22, 2015இற்கு முன்னர் பதவி வகித்த, அதே ஜனாதிபதியாகவே பதவியில் தொடர்கிறார். அந்த ஜனாதிபதிக்கு, மேலே குறிப்பிட்டதுபோல் இந்த இடைக்கால சரத்தின்படி இந்தத் திருத்தம் பொருந்தும்.
அதாவது, மேற்குறிப்பிட்ட இடைக்கால சரத்து, 2015 ஏப்ரல் 22 இற்கு முன் பதவி வகித்த ஜனாதிபதி, அரசமைப்பின் திருத்தங்களுக்கமைய பதவியில் தொடரலாம் எனக்கூறுகிறது.
எனவே, 19ஆவது திருத்தம் ஜனாதிபதிக்குச் செல்லுபடியாகின்றது. இது prospective, retrospective என்ற பதங்களுடன் தொடர்புபடவில்லை. நேரடியாகத் தற்காலிக ஏற்பாட்டின் சரத்தின் வியாக்கியானத்தோடுதான் தொடர்பு பட்டிருக்கின்றது.
அந்த அடிப்படையில் மேலே கூறப்பட்ட “ஜனாதிபதியின் பதவிக்காலம் தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட திகதியிலிருந்து ஆரம்பிக்கின்றது”என்பது, எதிர்கால ஜனாதிபதிகளுக்கு மாத்திரமல்ல, இந்த ஜனாதிபதிக்கும் பொருந்தும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
1 hours ago
4 hours ago
4 hours ago