Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 01, வியாழக்கிழமை
Editorial / 2019 செப்டெம்பர் 16 , மு.ப. 06:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜனகன் முத்துக்குமார்
டிரம்ப் நிர்வாகம் தலிபானுடனான சமாதான ஒப்பந்தத்தை நிறுத்துவதாக அறிவித்து, தாலிபானுடனான அனைத்து பேச்சுவார்த்தைகளையும் நிறுத்துவதாக அறிவித்துள்ளது. சமாதான உடன்படிக்கையின் வரைவு இறுதி செய்யப்பட்டு, மிக விரைவில் கையெழுத்திடப்படவிருந்த இச்சந்தர்ப்பத்திலேயே டிரம்ப் அரசாங்கம் குறித்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதை நிறுத்தியுள்ளது. ஒபாமா அரசாங்கத்தின் காலத்தில் ஓமான் அரசாங்கத்தின் அனுசரணையுடன் மிகவும் ரகசியமாக மேற்கொள்ளப்பட அத்திவாரமிடப்பட்ட அமெரிக்க - தலிபான் பேச்சுவார்த்தையானது, டிரம்ப் அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்டு, அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கான தனது பிரச்சாரத்தைத் தொடங்குவதற்கு முன்பு இந்த ஒப்பந்தத்தில் கையொப்பமிட டிரம்ப் எண்ணியிருந்தும், குறித்த ஒப்பந்தம் இறுதிநேரத்தில் இரத்து செய்யப்பட்டமை அமெரிக்க அரசியல் ஆய்வாளர்கள் உட்பட பலரது புருவத்தை உயர்த்திச்சென்றது எனலாம்.
குறித்த சமாதான ஒப்பந்தத்தின் பிரகாரம், ஆப்கானிஸ்தானில் தலிபான் அமெரிக்க துருப்புக்கள் திரும்பப் பெறுவதற்கு பாதுகாப்பை வழங்கும் மற்றும் அவர்கள் கௌரவமாக வெளியேற உதவும் என்றும், பதிலுக்கு, ஒரு அரசாங்கத்தை உருவாக்க தலிபான்களுக்கு அமெரிக்க அரசியல் மற்றும் இராஜதந்திர ஆதரவு கிடைக்கும் என்றும், இதன் அடிப்படையில், அமைதியான மற்றும் நிலையான ஆப்கானிஸ்தானை உருவாக்க முடியும் என்றும் எதிர்ப்பார்த்திருந்த இந்நிலையில், மேலும், இதன் அடைப்படையில், சில மேற்குலக நாடுகள் போரினால் பாதிக்கப்பட்ட ஆப்கானிஸ்தானை ஒரு பெரிய வணிக வாய்ப்பாக புனரமைப்பதில் கவனம் செலுத்த தொடங்கியிருந்த இந்நிலையில், மற்றய நாடுகள் ஆப்கானிஸ்தான் அதன் பூகோள அமைவிடத்தின் அடிப்படையில் அண்டை நாடுகளிடையே வர்த்தக பாதைகளை எளிதாக்குவதோடு பொருளாதார நடவடிக்கைகளின் புதிய வழிகளை உருவாக்கக்கூடும் எனக்கருத்திய இந்நிலையிலேயே குறித்த ஒப்பந்தம் நிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சமாதான முன்னெடுப்புகளை ரத்து செய்வதற்கான வேர்கள் பல அம்சங்களுக்குச் செல்கின்றன. முதலாவதாக, இது ஜனாதிபதி ட்ரம்ப்பின் தனிப்பட்ட முன்முயற்சியாகும், இது தேர்தலுக்கான மதிப்பெண்களைப் பெறுவதை நோக்கமாகக் கொண்டிருந்தது. இருப்பினும், இராணுவத் தலைமையகத்தினதோ அல்லது டிரம்ப் அவர்களின் நிர்வாகத்திற்குள்ளோ இது பற்றி ஒத்த கருத்துக்கள் இருக்கவில்லை. குறிப்பாக அமெரிக்க சிறப்பு பிரதிநிதி சல்மெய்கலீசாத் மற்றும் வெளிவிவகார செயலாளர் பாம்பியோ ஆகியோர் கூட டிரம்ப் அவர்களின் முயற்சியை வரவேற்கவில்லை.
ஆப்கானிஸ்தானுக்குள் உள்நாட்டு முன்னணியில், தற்போதைய தலைவர் அஷ்ரப் கானி மற்றும் முந்தைய ஹமீத் கர்சாய் ஆகியோர் கூட தலிபான்களுடன் சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்கு மனச்சுத்தியுடன் வேலை செய்யவில்லை. அதற்கான காரணம், ஆப்கானிஸ்தானில் தலிபான் தலைமையிலான எதிர்கால அரசாங்கம் அமையும் பட்சத்தில் தங்களுக்கான அரசியல் எதிர்காலம் இல்லை என்பதேயாகும். ஆப்கானின் பாதுகாப்பில் செல்வாக்கு செலுத்தும் வடக்கு கூட்டணியும் (Northern Alliance) தலிபான் மேலாதிக்கத்தை ஏற்கவில்லை, என்பதுடன் தொடர்ச்சியாகவே இவ் அமைதிப் பேச்சுக்களை எதிர்த்திருந்தது.
ஆப்கானிஸ்தானில் அமைதிக்கு எதிராக சில சர்வதேச நாடுகளும் நகர்வுகளை செய்திருந்தன. ஆப்கானிஸ்தானின் ஸ்திரமின்மையை தொடர்ச்சியாகவே தங்களது மூலோபாய நலன்களுக்காக பயன்படுத்திய இஸ்ரேல் மற்றும் இந்தியா, தமது நிலைமைகளை விட்டுக்கொடுக்க முன்வராமை, அது தொடர்பில் அமெரிக்காவுக்கு அழுத்தங்களை வழங்கியமை மேலதிக காரணமாகவும் இருந்திருந்தது.
எது எவ்வாறாக இருப்பினும், சமாதான முன்னெடுப்புகளை ரத்து செய்வது ஒரு தற்காலிக கட்டம் மட்டுமே என்றே இப்பத்தியாளர் நம்புகிறார். இது சமீபத்தில் அமெரிக்க சிப்பாயைக் கொன்ற குண்டுவெடிப்பின் எதிர்வினை மட்டுமே என்று இப்போதைக்கு இதை கருதுவதற்கு காரணங்கள் இருக்கின்றன. அமெரிக்க நிர்வாகம் பகுத்தறிவுடன் ஒப்பிட்டு பார்க்குமாயின், ஆப்கானிஸ்தானில் செலவழித்த டிரில்லியன் டாலர் மற்றும் ஆப்கானிஸ்தானில் 18 ஆண்டுகால யுத்தத்தில் விலைமதிப்பற்ற உயிர்களை தியாகம் செய்தது வீணாகிப்போகாது இருப்பதற்கும் மேலதிக பேரழிவுகளைமிச்சப்படுத்தவும், அமெரிக்கா தொடர்ச்சியாகவே அப்பிராந்தியத்திலும், ஆப்கான் அரசியலிலும் தனது நிகழ்ச்சிநிரலை கொண்டுசெல்ல தாலிபானுடனான ஒப்பந்தம் என்பது அத்தியாவசியமானது. இதன் பிரகாரம், ஆப்கானிஸ்தான் அமைதிக்கு எதிர்ப்பை வழங்கும் அனைத்து காரணிகளையும் உள்ளடக்கிய ஒரு புதிய விரிவான முயற்சி விரைவில் தொடங்கப்படலாம் என்று இப்பத்தியாளர் நம்புகிறார். அதற்கு மேலதிகமான காரணமாக அமைவது, ஆப்கானிஸ்தானிய அமைதிக்கு சர்வதேசத்திடமிருந்து தொடர்ச்சியாக வரும் ஒருமித்த கருத்தே ஆகும். பிராந்திய சக்திகள் ஆப்கானிஸ்தானில் அமைதிக்கு முழு ஆதரவையும் அளித்து வரும் இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் அமைதியை அடைய இரு தரப்பும் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்கும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இருக்கமுடியாது.
இப்போதிருக்கின்ற ஒரேயொரு கேள்வி: இப்பேச்சுவார்த்தை மீண்டும் எப்போது ஆரம்பிக்கும் என்பதேயாகும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
28 minute ago
1 hours ago